குழந்தைப் போராளி - 37


கொலை வெறி

நான் கம்பாலாவிலிருந்து எனது ஊரை நோக்கி ஒரு மினி பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருந்தேன். ஏறக்குறைய ஊரை நெருங்கும் தறுவாயில் 'மொபாராறா' நெடுஞ்சாலையிலிருந்த NRAயின் சோதனைச் சாவடியில் மினிபஸ் நிறுத்தப்பட்டது. அந்தச் சோதனைச் சாவடியின் பொறுப்பதிகாரியாக யூலியஸ் புரூஸ் அங்கே நின்றுகொண்டிருந்தார். என்னை உடனடியாகவே அடையாளம் கண்டுகொண்ட யூலியஸ் முகம் மலர்ந்து "அட சைனா! நீ எங்கே போய்க்கொண்டிருக்கிறாய்?" எனக் கேட்க நான் பதிலெதுவும் சொல்லாமல் புன்னகைத்துக் கொண்டேயிருந்தேன். யூலியஸ் என்னை மினிபஸ்ஸை விட்டு இறங்கச் சொன்னார். நான் இறங்கியதும் மினிபஸ் அங்கிருந்து நகரத் தொடங்கியது. அருகிலிருக்கும் உணவு விடுதிக்குச் சென்று ஏதாவது குடிப்போமா? என யூலியஸ் கேட்க நான் சிரித்துக்கொண்டே அவரின் அழைப்பை ஏற்றுக்கொண்டேன். நான் விடுதியின் கழிப்பறைக்குள் சென்று எனது பையிலிருந்த பணத்தை எண்ணிப் பார்த்துக்கொண்டேன். எனது தாயென நான் நினைத்தவளிடம் போவதற்கு அது போதுமானதாயிருந்தது. நானும் யூலியஸும் முன்னிரவு வெகுநேரம் வரை அந்த விடுதியில் உட்காந்திருந்தோம். சாப்பிட்டுக்கொண்டும் குடித்துக்கொண்டும் போர் பற்றியும் போரில் மடிந்துபோன எங்களது தோழர்களைப் பற்றியும் நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டிருந்தோம். நாங்கள் முகாமுக்குத் திரும்பி வந்தபோது அங்கே எனக்குப் படுப்பதற்கு ஓர் இடம் ஒதுக்கித் தரப்பட்டது.

என்னால் தூங்க முடியவில்லை.மீண்டுமொரு முறை நான் எனது தகப்பனுக்கு மிக அருகாமையில் இருக்கிறேன். எனது பழிக்குப் பழிவாங்கும் திட்டத்தையே எனது மனம் உருப்போட்டுக்கொண்டு கிடந்தது. அப்பா என்னிடம் நடந்துகொண்ட முறையை என்னால் மன்னிக்கவே முடியாது. நான் அவரைப் பழி தீர்த்தக்கொள்வது சரியானதே! போர்முனையில் இருந்தபோது பழி வாங்குவதற்கான திட்டத்தைச் செதுக்குவதற்கு எனக்குப் போதிய நேரமிருந்தது. இது திட்டத்தைச் செயற்படுத்துவதற்கான தருணம். நாளைக் காலையில் நான் அதற்கான நடவடிக்கையில் இறங்கியாக வேண்டும்.

துப்பாக்கி தோளில் ஆட எனது பழைய பாடசாலை வரை நடந்து சென்று அங்கிருந்து அப்பாவின் வீட்டை நோக்கிப் பார்வையை எறிந்தேன். அவரது வீடு இன்னமும் சிறு குன்றின் மீது நின்று கொண்டிருந்தது. எனது அடி வயிறு பற்றி எரியத் தொடங்கக் கொலை வெறியில் பற்களை நற நறவெனக் கடித்துக்கொண்டேன். பீறிட்டெழுந்த வன்மம் என்னை ஆட்டி வைத்தது. எனது அப்பாவையோ, சிற்றன்னையையோ நினைத்தபோதெல்லாம் எனது சுட்டு விரல் துப்பாக்கியின் விசையைத் தன்னிச்சையாக வருடியது. நீதி வெல்லும் நேரம் வந்துவிட்டது! இறுதித் தடவையாக நான் குன்றின் மேலேறிச் சென்று அப்பாவையும் அவரது மனைவியையும் கொல்ல வேண்டும். குன்றினை நோக்கி என் கால்களை நகர்த்த அவை மரத்துப் போனவை போல அசைய மறுத்தன. நான் அசைய முடியாமல் உறைந்து போய் நின்று ஆத்திரத்தில் குழறியழுதேன். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வரை அந்த இடத்தையே கண்ணீரால் கழுவிவிட்டு முகாமிற்குத் திரும்பினேன்.

முகாமின் ஒவ்வொரு மூலையிலும் என்னைத் தேடிக்கொண்டிருந்த யூலியஸ் என்னைக் கண்டதும் என்னிடம் நேராக வந்தார். கண்ணீராலும் என் கோபத்தை அவிக்க முடியவில்லை. எனது கையாலாகாத்தனம் என்னை மேலும் கோபமூட்டியது. நான் மூசிக்கொண்டே நான் எங்கு சென்றிருந்தேன் என்பதையும் எனது பழி வாங்கும் திட்டத்தைப் பற்றியும் யூலியஸிடம் சொன்னேன்.எனது வாயால் புறப்பட்ட ஒவ்வொரு சொல்லும் எனக்கு நேராகவே திரும்பி ஒரு குத்துச் சண்டை வீரனின் ஆக்ரோசமான குத்துக்களைப் போல என் இதயத்தை நோகடித்தன. யூலியஸ் அமைதியாக எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தார். நான் பேசி ஓய்ந்த போது அவர் தனது கையை எனது தோளின் மேல் வைத்தார். இருவருமே முகாமைவிட்டுச் சிறிது தூரம் நடந்து சென்று புல்வெளியில் அமர்ந்து கொண்டோம். யூலியஸ் என்னிடம் மென்மையாகப் பேசத் தொடங்கினார்.
"எனது தகப்பனும் ஒரு முரட்டுப் பிறவிதான்.ஆனால் அதற்காக நான் அவரைக் கொன்றுவிட நினைக்கவில்லை..."
"ஏன் கொல்லத் தேவையில்லை?" நான் இடைமறித்தேன்.
"ஏனெனில் எனக்கும் அவருக்கும் வித்தியாசமே இல்லாமற் போய்விடும், நானும் என் தந்தையைப் போலவே கெட்டவனாக மாற விரும்பவில்லை."
யூலியஸின் வாயிலிருந்து விழும் ஒவ்வொரு சொல்லையும் நான் ஆவலாகப் பருகினேன். அவருடனான உரையாடலின் முடிவில் என் உள்ளத்தில் தெளிவு பிறந்தது. நான் எனது தந்தையைப் போலில்லை. அவரைப் போல ஆகவும் எனக்கு விருப்பமில்லை. எனது பழி வாங்கும் திட்டத்தை நான் இங்கேயே இப்போதே குழி தோண்டிப் புதைத்துவிட்டேன் என யூலியஸிடம் சொன்னேன். அவரிடமிருந்து ஒரு துயரப் புன்னகை எனக்குப் பதிலாகக் கிடைத்தது.

நாளை நான் எனது தாயைத் தேடிச் செல்லப் போவதாகச் சொன்னேன். எனது முயற்சியில் வெற்றி பெற அவர் தன் வாழ்த்துக்களைக் கூறினார். உண்மையில் அவர் என்ன நினைத்தார் என்பதை என்னால் கண்டு கொள்ளமுடியவில்லை அவரது கண்கள் எப்போதுமே பூமிக்குத் தாழ்ந்திருந்தன.

குழந்தைப் போராளி - 36



நாயகிகளின் நாயகி

ம்பாலாவை நெருங்க நெருங்க எனது கால்களில் வேகம் கூடியது. மனித நடமாட்டமே இல்லாத வீதிகளில் நான் வியர்த்துக் களைத்து நடந்துகொண்டிருந்தேன். ஒரு மதிற் சுவரின் நிழலில் களைப்பை ஆற்றிக்கொள்வதற்காக உட்கார்ந்தேன். இந்த உயர்ந்த மதில்கள் வேண்டப்படாத விருந்தாளிகளைத் தடுத்து நிறுத்தக் கட்டப்பட்டிருந்தன போலும். இப்போது நான் தங்குவதற்கு ஓர் இடத்தைக் கண்டுபிடித்தேயாக வேண்டும் என்ற யோசனையுடன் நான் உட்கார்ந்திருந்தபோது ஒரு கார் என் முன்னே மெதுவாக வந்து நின்றது. நான் மெதுவாக எழுந்து நடக்கத் தொடங்கினேன். காரின் ஓட்டுனர் இருக்கையில் நடுவயதுடைய ஒரு 'முகண்டா' பெண் இருந்தாள். அவளின் பார்வை என் மீதேயிருந்தது. நான் நடையை வேகமாக்கியபோது அவள் காரிலிருந்து 'ஹோர்ன்' அடித்தாள். நான் திரும்பி 'என்னையா அழைக்கிறாய்?' எனச் சைகையால் கேட்டேன். அவள் 'ஆம்' எனத் தலையசைத்தாள். நான் உடனடியாக அந்தக் காரினுள் ஏறினேன். நான் காரின் கண்ணாடி ஜன்னல் வழியே குண்டு வீச்சக்களால் சிதிலமான கட்டடங்களையும் தெருக்களையும் பார்த்துக்கொண்டிருந்தேன். பின் மெதுவாக அந்தப் பெண்ணைக் கவனிக்கத் தொடங்கினேன். அவள் ஓர் அழகியல்ல, கசகசவென வியர்த்த முகமும் தொந்தியும் தொப்பையுமாக அவள் இருந்தாள். வெயில் அவளைக் கடுமையாக வறுத்திருந்தது.

திடீரென அந்தப் பெண் -எந்தப் பீடிகையும் போடாமல்- தான் என்னை காதலிப்பதாகச் சொன்னாள். இதைக் கேட்டதும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. தனது காதலைச் சொன்ன அவள் நான் தனது வீட்டில் தங்கியிருக்க எந்தத் தடையுமில்லை எனக் கூறினாள். "இந்தப் பெண்ணிற்குப் பைத்தியம் பிடித்திருக்கவேண்டும்" என என் தலைக்குள் அசரீரி ஒலித்தது. ஆனால் எனக்கும் இப்போது ஒரு தங்குமிடம் தேவை. சரி, அவளின் காதல் அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்! நான் அவளுக்கு நன்றி சொல்லி அந்த அழைப்பினை ஏற்றுக் கொண்டேன். பின்விளைவுகளைப் பற்றிச் சிந்திக்கும் நிலையில் நானில்லை.

அவளின் வீட்டில் ஒரு 'குஷன்' இருக்கையில் உட்கார்ந்துகொண்டு அந்த அறையை நிறைத்திருந்த ஆடம்பரங்களை நான் நோட்டமிட்டேன். என்னைப் பொறுத்தவரை ஒரு நாட்டின் தலைவருக்குத் தேவையானளவு ஆடம்பரம் அங்கே கொட்டிக் கிடந்தது. தனது உடையை மாற்றிக்கொண்டு வந்த அவள் தன்னுடன் கடைவீதிக்கு வர விருப்பமா? எனக் கேட்டாள். நான் ஒரு விநாடியும் தாமதிக்காமல் குதித்தெழுந்து எனது பயணப் பையைத் திறந்தேன். பையினுள் எனது ஆயுதம் குண்டுகள் நிரப்பப்பட்டுத் தயாராகயிருந்தது; இது பற்றி அவளுக்குத் தெரியத் தேவையில்லை. நானும் எனது உடைகளை மாற்றிக்கொண்டு வெளியே புறப்படத் தயாரானேன். அந்தப் பெண் தான் ஒரு பெரிய துணிக்கடைக்குச் சொந்தக்காரியென்றும் தனது கடையில் இரண்டு அழகிய இளம் பெண்கள் விற்பனையாளர்களாக வேலை பார்ப்பதாகவும் சொன்னாள். சிறிது நேரத்தில் நாங்கள் அவளது கடையிலிருந்தோம். என் முன்னே விலையுயர்ந்த அழகிய ஆடைகள் குவிக்கப்பட்டன. அவளின் கடையிலிருந்த விற்பனைப் பெண்கள் கூட என்னைக் கண்களாலேயே விழுங்கிவிடுவது போல ஆசையுடன் பார்த்தனர்.

நாங்கள் மீண்டும் அந்தப் பணக்காரப் பெண்ணின் வீட்டிற்குச் சென்றோம். அந்தப் பெண் என்னிடம் "நாங்கள் மதுவருந்துவோம், கொஞ்ச நேரம் இசை கேட்டுத் தனிமையில் மகிழ்ந்திருப்போம், அதற்குள் பணிப் பெண்கள் உணவைத் தயார் செய்து விடுவார்கள்" என்றாள். அவள் என்னிடம் எதை எதிர்பார்க்கிறாள் என்பது எனக்குப் புரிந்து விட்டது. நான் இப்போது ஏதாவது ஒரு சாக்குப் போக்கைச் சொல்லி அவளுக்கும் எனக்குமான இடைவெளியை நீடித்துக் கொள்ளவேண்டும். எனது முந்தைய 'லூக்கயா' நகரத்து அனுபவம் இப்போது எனக்குக் கை கொடுத்தது. பொருத்தமான தருணத்தில்தான் நான் எனது பொய் மூட்டையை அவிழ்க்க வேண்டும். இதோ மெல்ல மெல்ல என்னை நெருங்கிய அந்தப் பெண் என்மேல் படுத்துக்கொண்டாள். என் பொய் மூட்டையை அவிழ்ப்பதற்கு இதுதான் சரியான சமயம்.

"போர் முனையிலிருந்து வைத்திய சிகிச்சை பெறுவதற்காகவே ஒரு சில நாட்களுக்கு நான் இங்கு அனுப்பப்பட்டுள்ளேன். இங்கு நான் சிகிச்சை பெற வேண்டியுள்ளது. எனது - அந்த இடத்தில் - வாழைப்பழத்தில் சிறிது பிரச்சினையுள்ளது. நுனித் தோலைச் சிறிதளவு அகற்றினால்தான் பிரச்சினை சரியாகும் என வைத்தியர் சொல்லியுள்ளார்."

உணவு தயாராவதற்காகக் காத்திருந்த நாங்களிருவரும் கொஞ்சம் அதிகமாகவே பியரைக் குடித்திருந்தோம். எனக்குத் தலை இலேசாகக் கிறுகிறுத்துக்கொண்டிருந்தது. சாப்பிடும் போது நாங்கள் ஓரிரு வார்த்தைகளுக்கு மேல் எதுவும் பேசவில்லை. ஆனால் உணவை முடித்துக் கொண்ட போது அவள் என்மேல் அதிருப்தியாய் இருப்பது தெரிந்தது. என்னால் அவளது பாலியல் விருப்பத்தை நிறைவேற்ற முடியாதெனச் சொல்லிய பின்பும் என்னுடன் படுத்துக் கொள்வதிலேயே அவள் குறியாயிருந்தாள். அவள் என்னை இலேசில் விடுவதாயில்லை. எங்களது விவாதம் தள்ளுமுள்ளில் எங்களைக் கொண்டுபோய் விட்டபோது நான் மெல்ல எனது பயணப் பையைத் திறந்து ஆயுதத்தைக் கையிலெடுத்தேன். பணிப்பெண்கள் அலறத் தொடங்கினர்.

"வாயை மூடுங்கள்" எனக் குரலில் கடுமையை வரவழைத்துக்கொண்டே உறுமிய நான் "ம்! பணத்தை எடு!" எனக் கத்திக்கொண்டே வீட்டுக்காரியின் குரல் வளைக்குத் துப்பாக்கியை நிமிர்த்தினேன். அவள் தன் மார்பைப் பிடித்துக்கொண்டே தடதடவென ஓடிச்சென்று ஒரு சிறிய மேசையின் இழுப்பறையைத் திறந்து கை நிறையப் பணத்தை அள்ளி என் முன்னே நீட்டினாள். அவளது கையிலிருந்து பணத்தை ஒத்திப் பறித்துக்கொண்ட நான் அதன் பின்பு என்ன செய்வதென்று தெரியாமல் நின்றிருந்தேன். அவளைக் குறி பார்த்துத் துப்பாக்கியைப் பிடித்துக்கொண்டேயிருந்த நான் சற்று நேரத்தின் பின்பு அங்கிருந்து வெளியேற முடிவெடுத்தேன்.

"நான் விடியம் வரைக்கும் இங்கே வெளியில் தான் காவலிருப்பேன், எவராவது என்னைக் கோபப்படுத்தினால், இதோ! இது தான் பதில் சொல்லும்!" என சொல்லித் துப்பாக்கியைத் தூக்கிக் காட்டி விட்டு வாசற் கதவைத் திறந்து வெளியே வந்தேன். சிறிது நேரம் அங்கேயே நின்றுகொண்டு ஓரிரு தடவைகள் செருமி நான் அங்கேயே இருப்பதாக அவர்களுக்குக் காட்டிக்கொண்டேன். மெதுவாக வெளிப் படலையின் மேல் ஏறித் தெருவில் குதித்து நகரத்தினை நோக்கி நடந்தேன். யாராவது எனக்குக் குறுக்கே வந்தால், என்னை இடையூறு செய்தால் துப்பாக்கியைப் பிரயோகிக்கவும் தயாராகவே இருந்தேன். போராளி வாழ்கையிலிருந்து இயல்பு வாழ்க்கைக்கு மாறுவது என்பது எல்லாவற்றையும் விடக் கடினமானது.

குழந்தைப் போராளி - 35


யுத்தக் களைப்பு

ம்பாலாவிலிருந்து பின்வாங்கிச் சென்ற எதிரிகளை உகண்டாவின் வடக்குப் பகுதிக்குத் துரத்தியடிக்க வேண்டுமென்ற கட்டளை ஐந்தாவது படையணிக்குப் பிறப்பிக்கப்பட்டது. இந்தக் கட்டளை எங்கள் எல்லோரையும் உற்சாகமிழக்கச் செய்து ஏமாற்றத்துள் தள்ளியது. கசிலிங்கி தனது ஐந்தாவது படையணியின் கட்டளைத் தளபதிப் பொறுப்பை யூலியஸ் அயினேயிடம் கையளித்துவிட்டார். யூலியஸ் அயினே தலைவர் முசேவெனி போலவே 'கீமா' இனக் குழுவைச் சேர்ந்தவர். அவர் உண்மையிலேயே மதிநுட்பம் வாய்ந்த மிகத் திறமையான தளபதி. அவர் தனது போராளிகளை முட்டாள்த்தனமாகச் சாகக் கொடுப்பதில்லை. 'கீமா' இனக்குழு ருவாண்டாவில் ஆழமான வேர்களைக் கொண்டது. உகண்டாவில் 'கீமா' இனக்குழுவினர் தமது கால்களை ஆழமாகப் பதித்திருக்கவில்லை.

கசிலிங்கி இஸ்லாமியர், NRAயை உருவாக்கியவர்களில் ஒருவர், மக்களிடம் அழியாத புகழைப் பெற்றவர். உறுதியான, ஒரு சிங்கத்தைப் போலக் கம்பீரம் கொண்ட கசிலிங்கி 'பகண்டா' இனக் குழுவினரிடம் அபரிதமான செல்வாக்கைப் பெற்றிருந்தார். அவரின் மெய்காப்பாளர்கள் எல்லோருமே அதே இனத்தைச் சேர்ந்தவர்கள் தான். கம்பாலாவின் வீழ்ச்சிக்குப் பின் போர் வடக்கு நோக்கி நகரத் தொடங்கியது. மில்டன் ஒபோடே 'லாங்கோ' இனக் குழுவைச் சேர்ந்தவர். அவர் நாட்டின் வடபகுதியைச் சேர்ந்தவராதலால் வடக்கில் குறிப்பிடத்தக்க செல்வாக்குடையவர். வடக்கிற்குச் செல்லும் வீதிகள் மிக மோசமாயிருந்தன. எங்களின் முன்னாள் ஜனாதிபதி தனது உறவுக்காரர்களை எப்போதாவது வடக்கிற்குப் போய்ப் பார்த்தாரா என எங்களுக்குச் சந்தேகமாகயிருந்தது. எது எப்படியிருப்பினும் இந்த மோசமான வீதிகள் தான் எங்களது அடுத்த போர்க்களம்

'கபு'ப் பாலத்தின் மீது நாங்கள் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராத தாக்குதலொன்று எங்கள் மீது தொடுக்கப்பட்டது. எனது தைரியமெல்லாம் சடுதியில் எங்கோ பறந்து போய்விட்டது. இந்த முறை நான் எதிரியின் குண்டுகளிடமிருந்து தப்பிக்கப் போவதில்லை என நினைத்துக்கொண்டேன். அச்சத்தால் என் மேனி சில்லிட்டுப் போனது. கற்றோங்காப் போர்முனையின் அவலம் சுமந்த நினைவுகள் தூக்கத்தில் கூட என்னை விட்டகலவில்லை. சில நாட்களாகக் 'கபு'ப் பாலத்தின் மீது நடந்த உக்கிரமான சமரின் முடிவில் எதிரிகளை முறியடித்த நாங்கள் 'கறூமா'ப் பாலம் வரை எதிர்ப்பின்றிச் சென்றோம். கம்பாலா அரசினை வீழ்த்தினால் குழந்தைப் போராளிகள் போரிலிருந்து விடுவிக்கப்படுவோம், புதியதொரு ஒளிமயமான வாழ்வு எங்களிடம் கையளிக்கப்படும் என பற்பல வாக்குறுதிகளைக் குழந்தைகளான எங்களுக்கு NRA தலைமை வழங்கியிருந்தது. ஆனால் கம்பாலா அரசு வீழ்த்தப்பட்டு இத்தனை நாட்கள் ஆகியும் எந்தக் குழந்தையும் போரிலிருந்து விடுவிக்கப்படவுமில்லை எவரும் பாடசாலைக்கு அனுப்பப்படவுமில்லை. நாங்கள் ஒரு யுத்தமுனையிலிருந்து மறு யுத்தமுனைக்கு விரட்டப்பட்டுக் கொண்டேயிருந்தோம்.

'கறூமா'வின் இயற்கை வனப்பில் நான் மனம் சொக்கிப்போனேன். போரின் கரங்களால் இதுவரை தீண்டப்படாத, சித்திரம் போன்ற அழகிய பாலம் தன்னைச் சுற்றிப் பசுமையைப் போர்த்திக் கொண்டு ஏகாந்தமாகக் கிடந்தது. கரை புரண்டோடும் நுரை பொங்கும் ஆறு பாலத்தின் கால்களைத் தழுவிச் சுழித்தோடிக்கொண்டிருந்தது. அங்கேயிருந்த அமைதி என் உள்ளத்திலும் புகுந்துகொண்டு ஏதோவோரு கணத்தில் அது போர் மீதான வெறுப்பாக மாறியது. இரத்த ஆறுகளைப் போதியளவு நான் பார்த்துவிட்டேன். இனியும் என்னால் இரத்த ஆறுகளைக் கடக்க முடியாது. நான் புதியதொரு வாழ்க்கையைத் தேடிக்கொள்ள வேண்டும். அமைதியைக் கண்டடைவதற்கு நான் முயற்சிக்க வேண்டும். இந்தத் தொடர் சிந்தனைகளின் முடிவில் நான் போராளி வாழ்க்கையிலிருந்து தப்பியோடத் திட்டமிட்டேன்.

போர்முனைக்கு அனுப்பப்படாமலிருக்க வேண்டுமாயின் நான் நோய்வாய்ப்பட வேண்டும். ஒரு சிகரட்டை உதிர்த்து வாயில் போட்டு விழுங்கிவிட்டு எனது சார்ஜனை நோக்கி ஓடிப்போய் அவரது காலடியிலேயே நான் வாந்தியெடுத்தேன். அவருக்கு எனது வாந்தியைப் பார்த்ததும் வயிற்றைப் புரட்டி அவரும் வாந்தியெடுத்தார். இருவரும் வாந்தி எடுத்து முடித்த பின்பு நான் சார்ஜனிடம் "மலேரியாக் காய்ச்சல் பரவுகிறது என்று நினைக்கிறேன்" எனச் சொன்னேன். அது சொந்தச் செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதையாக முடிந்தது. உடல் வெப்பமானியை எடுத்துத் தனது உடல் வெப்பநிலையை அளந்துகொண்ட சார்ஜன் எனது வெப்ப நிலையையும் அளந்து பார்த்தார். எனது உடலில் காய்ச்சலுக்கான எந்த அறிகுறியும் காணப்படாததால் சார்ஜன் என் கண்களை உற்றுப் பார்த்துக்கொண்டே "நீ பொய் சொல்கிறாய்...தலைமை முகாமிற்குத் திருப்பி அனுப்பப்படுவாய் என்ற எண்ணத்தில் நீ இந்தப் பொய்யைச் சொல்லியிருந்தால் அது நடக்கப் போவதில்லை" என்றார்.

ஆனால் நானும் எளிதில் எனது காய்ச்சல் நாடகத்தை விட்டு விடுவதாக இல்லை. சிறு தந்திரங்களிலும் ஏமாற்றுக்களிலும் திறமையான ஒரு தோழனின் உதவியை நான் நாடிச் சென்றேன். அவன் என்னிடம் ஒருவர் தனது மூத்திரத்தைத் தானே குடிப்பதன் மூலம் காய்ச்சலை வருவித்துக் கொள்ளலாமெனச் சொன்னான். இவன் என்னைக் கேலி செய்கின்றான் என நினைத்துக்கொண்டே அவனது முகத்தைக் கூர்ந்து கவனித்தேன். அவனின் முகத்தில் எந்தக் குறும்பும் தெரியவில்லை. யுத்தமுனைக்கு எக்காரணத்தைக் கொண்டும் செல்லக் கூடாது என்பதில் நான் மிக உறுதியாயிருந்தேன்.எனவே இந்த அருவருப்பான உபாயத்தையும் ஒருமுறை முயன்று பார்த்து விடுவதென முடிவெடுத்தேன். ஒரு சிறு பாத்திரத்துடன் மறைவிடத்திற்குப் போனேன். அதனை நிரப்புவது பெரிய பிரச்சனையல்ல, இனித்தான் சிக்கலேயிருக்கிறது. முதலாவது மிடறு குடித்ததுமே மீண்டும் வாந்தி எடுத்தேன். இதை எப்படிக் குடிப்பதாம்? இது ஏமாற்று வேலை! அவன் என்னை ஒரு மடைச்சியாக்கி விட்டான்! அவனைத் துண்டு போடும் கோபத்துடன் அவனைத் தேடினேன்.அவன் மீது பாய்ந்து பற்களால் கடித்தும் நகத்தால் பிறாண்டியும் அவனைத் தாக்கினேன். அது பார்வையாளர்களுக்கு மிகவும் விறுவிறுப்பான காட்சி. இறுதியில் மூத்த போராளி ஒருவர் எங்களை விலக்கி விட்டார். எனது இரண்டாவது பிழையையும் நான் அழுதுகொண்டே செய்தேன். அவன் என்னை என்ன செய்யச் சொன்னான் என்பதைச் சபையில் சொன்னேன். எல்லோரும் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்க எனக்காக நானே வெட்கப்பட நான் தனியிடம் தேடிச் சென்றேன். அங்கேயும் அந்த ஏமாற்றுக்காரன் என்னைத் தேடி வந்து "நாங்கள் மீண்டும் நண்பர்களாகவே இருப்போமா?" எனக் கேட்டான். இவனை மன்னிப்பதா இல்லையா என்ற யோசனையுடன் நான் தரையைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவன் பல தடவைகள் மன்னிப்புக் கேட்டதுடன் இந்தப் பிரச்சினை முடிவிற்கு வந்தது.

அடுத்த நாள் காலையில் ஒரு லொறி கறூமாவிலிருந்து கம்பாலாவிற்குச் செல்வதாகக் கேள்விப்பட்டேன். அந்தச் சந்தர்ப்பத்தினை நழுவ விடாது லொறிச் சாரதியைத் தேடிப் பிடித்து அவருக்கு எனது நிலையைத் தெரிவித்தேன். எனது நல்ல நேரம் போலும் அவரும் எனக்கு உதவுவதாக வாக்களித்தார். அடுத்த நாள் காலையில் முகாமிற்குச் சற்றுத் தொலைவில் அவருக்காகக் காத்திருந்தேன். லொறியைக் கண்டதும் அதனுள் ஒரே பாய்ச்சல், ஏதோ சொர்க்கத்தையே நோக்கிப் பயணிப்பது போல ஆனந்தத்துடன் நான் கம்பாலா நோக்கிப் பயணித்தேன். NRA யில் சேர்ந்ததிலிருந்து இன்றுவரை என்னுடன் கூடவேயிருந்த உயிர் குறித்த அச்சம் இப்போது என்னுள் முற்றாகத் தணிந்திருந்தது. சொர்க்கத்தில் கூடக் கெட்ட கனவுகள் வரும்போலும், நான் தூக்கத்தில் உளறியிருக்க வேண்டும். யாரோ எனது தலையை மென்மையாக வருடினார்கள். முதுகில் கனத்த என் சுமையுடன் லொறியிலிருந்து சடுதியிற் கீழே குதித்தேன். மீண்டும் தனியாக வீதியில் நடக்கத் தொடங்கினேன்.

குழந்தைப் போராளி - 34


கம்பாலா வீழ்ந்தது


ற்றோங்காவின் இரத்த ஆறு காய்வதற்கு முன்னமே மீண்டும் ஓர் இரத்த ஆற்றை சிருட்டிப்பதற்காக நாங்கள் பிரதான சாலை வழியாக "நடத்தி"ச் செல்லப்பட்டோம். கண்கொண்டு பார்க்குமிடமெல்லாம் குருதி வெள்ளம். எதிரிகளின் பிரேதங்களை நாய்கள் சுவைத்துக்கொண்டிருந்தன. இந்தக் காட்சி என் மனதில் அப்போது எந்தவிதச் சலனத்தையோ இரக்கத்தையோ அருவருப்பையோ ஏற்படுத்தவில்லை. இந்த இராணுவத்தினர் தானே எனது தோழர்களை கொன்றவர்கள் என நினைத்துக்கொண்டேன். என்டபே சர்வதேச விமான நிலையத்தையும் கம்பாலாவையும் இணைக்கும் நெடுஞ்சாலையைக் கைப்பற்ற எங்களின் படை நகர்ந்துகொண்டிருந்த போது அரச படையினரின் எறிகணை வீச்சுக்கள் எங்களைச் சற்றே வழி மறித்தன. அவர்களின் மோட்டார்த் தாக்குதலை முறியடிக்க நாங்கள் 37 கலிபர் ஆட்டிலரியால் ஓர் எறிகணை மழையே பொழிந்தோம். ஆட்டிலரித் தாக்குதலுக்கு முன்னால் நின்று பிடிக்க முடியாத எதிரி இராணுவம் நிலை குலைந்து விக்ரோறியா ஏரிப்பக்கம் சிதறி ஓடிற்று.

தொடர்ந்து போரிட்டுக்கொண்டிருந்த எங்களால் இந்தப் போர் எப்போது முடிவுறும் என்பதை அனுமானிக்க முடியவில்லை. இன்னும் சில கிலோ மீற்றர்கள் தொலைவை நாங்கள் வெற்றிகரமாகக் கடந்து விட்டால் கம்பாலா எங்களிடம் வீழ்ந்து விடும் என்ற புதிய நம்பிக்கை எங்களை இயக்கிக்கொண்டிருந்தது. எங்களின் எதிர்காலமென அவர்கள் வாக்களித்த பூமி எங்களின் கையெட்டும் தொலைவில் தானிருந்தது. என்டபே - கம்பாலா நெடுஞ்சாலையில் நிலைகொண்ட எங்கள் படையணி சர்வதேச விமான நிலையத்திற்கும் கம்பாலாவிற்குமான அரச படையினரின் போக்குவரத்தைத் துண்டித்து விட்டது. எதிரியும் நாங்களும் இன்னொரு முறை நேருக்கு நேராகச் சந்தித்துக் கொள்ள வெகு நேரமாகவில்லை. தொடர் தோல்விகளால் வெகுண்டிருந்த எதிரிகளின் மொத்தப் பலமும் எங்கள் எதிரே குவிக்கப்பட்டிருந்தன. அசைந்து வரும் ஆயுதக் கிடங்காக எதிரி இராணுவம் அணிவகுத்து வந்துகொண்டிருந்தது. நாங்களும் எங்கள் உயிர்களைப் பணயம் வைத்து யுத்தம் செய்ய ஆயத்தமாயிருந்தோம். எங்களது கட்டளைத் தளபதி கசிலிங்கி இன்னும் சில NRA படையணிகளிடம் உதவியைக் கோரிச் செய்தி அனுப்பியிருந்தார். அந்தப் படையணிகள் இன்னும் போர் முனைக்கு வந்து சேரவில்லை. பின் நாட்களில் கசிலிங்கியுடன் எனக்குக் கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டிருந்தாலும் அன்று அவர் சொன்ன வார் த்தைகளுக்கு இன்றும் நான் நன்றியுடையவள். "உங்களில் ஒருவர் தன்னும் இந்தப் போரில் இறப்பதை நான் விரும்பவில்லை துணிவுடன் போரிடுங்கள், ஆனால் உங்கள் உயிர்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்" என்றார் கசிலிங்கி. நாங்கள் எல்லோருமே பல சண்டைகளிலிருந்து உயிருடன் மீண்டிருந்தாலும் இந்தச் சமரிலிருந்து உயிர் தப்பிப் பிழைத்தோமானால் அது பேரதிசயமாகவே இருக்கும்.


சில வாரங்கள் தொடர்ந்த போரின் முடிவில் எதிரியின் வலுவான படைகள் எங்களின் உக்கிரமான தாக்குதல்கள்களால் சின்னாபின்னமாகின. எங்கள் முகங்களில் மகிழ்வும் பெருமிதமும் பொங்கி வழிந்தன. கம்பாலாவை நோக்கிய எங்களது வெற்றி அணிவகுப்பில் எந்தத் தடைகளுமில்லை. செல்லும் கடை வீதிகளில் எல்லாம் நாங்கள் எதை எடுத்தாலும் கேட்பார் யாருமில்லை. ஆனாலும் நாங்கள் யாருமே எதையுமே எங்களுக்கென்று எடுத்துக்கொள்ளவில்லை. இனி முழுக் கம்பாலா நகரமுமே எங்களுடையது தானே! கம்பாலா நோக்கிய பயணத்தில் நான் எப்படி மகிழ்ச்சியில் தத்தளித்தேன் என்பது எனக்கு இன்னும் நன்றாக நினைவிருக்கிறது. நிரந்தரமான வீடும் தரமான கல்வியும் ஒளிமயமான எதிர்காலமும் எனக்காகக் கம்பாலாவில் காத்திருக்கலாம். இவையெல்லாம் நிச்சயமாகவே எங்களுக்குக் கிட்டுமென முசேவெனி எங்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தார்.

அரச இராணுவத்தினரின் அட்டூழியங்களை நினைத்துப் பார்த்துக் கொண்டேன். இந்நகரத்தின் குடிமக்கள் இராணுவத்தினரால் எத்தனை தடவைகள் அடித்து உதைக்கப்பட்டிருப்பார்கள்! ஒவ்வொருவரும் மூன்று முறை இறப்பதற்குச் சமனாகச் சித்திரவதைப்பட்டிருப்பார்கள். அடி
உதைகளின் பின்னால் மக்கள் நாய்களுக்கு உணவாகத் தெருக்களில் வீசி எறியப்பட்டனர். இன்றோ தெருக்களில் அரச படையினரின் மரண ஓலம் இடைவிடாமல் ஒலித்துக்கொண்டிருக்கிறது. வீதிகள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தன. உயிருடன் பிடிபட்ட எதிரிகளின் கழுத்துக்களில் எரிந்துகொண்டிருக்கும் 'ரயர்'கள் மாலைகளாக அணிவிக்கப்பட்டன. நான் எனது கண்களையும் காதுகளையும் 'மூடி'க்கொண்டு நடந்தேன்.

கம்பாலா பூவுலகின் சொர்க்கம் என எங்களுக்குச் சொல்லப்பட்டிருந்தது. அந்த வனப்புக்கள் எங்குதான் போயின? ஏமாற்றங்களைப் பெரிதுபடுத்த எங்களுக்கு நேரமிருக்கவில்லை. நகரின் மத்தியினை நாங்கள் அடைந்தபோது கம்பாலா இனி எங்களது நகரம், எவராலும் எங்களை இங்கிருந்து அசைக்க முடியாது என்பதை உறுதி செய்யும் சம்பவங்கள் நிகழலாயின. மக்கள் ஆயிரக்கணக்கில் எங்களை வரவேற்பதற்காகக் கூடியிருந்தனர். அவர்கள் கண்ணீர் விட்டழுதும் முழந்தாளிட்டும் குழந்தைகளான எங்களுக்குத் தங்களது நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர். மூத்த போராளிகளுக்கும் அவர்களது வாழ்த்துக்கள் கிடைத்தன. உகண்டாவிலேயே முதல் முறையாக ஆயுதங்களை ஏந்திய பெண்கள் ஆண்களுக்கு இணையாகக் கம்பீரமாக அணிவகுத்து வந்துகொண்டிருந்த காட்சி மக்களைப் பரவசமடையச் செய்திருந்தது. பல போராளிகளின் முகங்களில், குறிப்பாகக் குழந்தைப் போராளிகளின் முகங்களில் இப்போது மூர்க்கமோ அச்சமோ தென்படவில்லை. எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கைகள் அவர்களது ஆன்மாக்களை நிரப்பியிருந்தன.

நானோ எல்லாவற்றிலும் சந்தேகமுறப் பழகியிருந்தேன். எல்லாம் முடிந்து விட்டதென என்னால் நிம்மதியடைய முடியவில்லை. ஆபத்தும் துயரமும் என்னைத் தொடர்ந்து கொண்டேயிருக்குமென என் உள்ளுணர்வு சொல்லிற்று. எனது பட்டறிவு என்னை எப்போதும் கைவிட்டதில்லை.

குழந்தைப் போராளி - 33




எரிந்து கொண்டிருக்கும் நேரம்

ருநாள் காலை அணிவகுப்புடன் எங்களின் விடுமுறை முடிவுக்கு வந்தது. அணிவகுப்பின் முடிவில் நாங்கள் மீண்டும் யுத்த முனைகளுக்குச் செல்ல வேண்டும் என்பது எங்களுக்கு நினைவுபடுத்தப்பட்டது. அணிவகுப்பு முடிவடைந்ததும் போராளிகள் குழுக்களாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். நாங்கள் கடந்து வந்த யுத்த களங்களைப் பற்றி நாங்கள் பேசினோம். இப்படிப் பேசிப் பேசியே எங்களது அச்சத்தை வெல்ல முயன்றோம். ஒருவருக்கு மற்றவர் தைரியத்தைச் சொல்லிக்கொண்டோம். நாங்கள் சந்தித்த கடைசிப் போர்தான் நடந்தவைகளுக்குள் மிகவும் கடுமையான போர் என்பதாய் நாங்கள் சொல்லிக்கொள்வோம். அந்தப் போரிலேயே உயிர் தப்பிய நாங்கள் நடக்கவிருக்கும் சிறிய யுத்தமான 'கற்றோங்கா' போரில் உயிர் தப்புவது நிச்சயமென ஒரு தருக்கத்தைக் கற்பித்துக்கொண்டோம்.

கற்றோங்கா தாக்குதலை யார் நெறிப்படுத்துவது என்பதை ஒன்றில் முசேவெனி அல்லது ஸலிம் சலேம் அறிவிக்க வேண்டும். ஐந்தாவது படைப்பிரிவின் தலைமை அதிகாரியும் போர் அனுபவங்கள் நிறைந்தவருமான அகமட் கசிலிங்கியிடம் எங்களது படையை வழி நடத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. கற்றோங்காவை நோக்கி நகர்ந்து அங்கிருந்து சர்வதேச விமான நிலையமான 'என்டபே'யைக் கைப்பற்ற அவர் முசேவெனியால் பணிக்கப்பட்டார். யுத்த முனைக்குப் புறப்படுமாறு எங்களுக்கும் கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

குழந்தைப் போராளிகளெல்லாம் தயார் நிலையில் அணிவகுத்து நின்ற்னர். குழந்தைப் போராளிகளின் முன் வரிசையில் நான் எனது Uzi துப்பாக்கியுடன் நின்றிருந்தேன். எங்ளிடமிருந்த சுறுசுறுப்பு வளர்ந்தவர்களிடம் இருக்கவில்லை. வாகனம் ஓட்டுவோர் அங்குமிங்குமாக அலைந்து கொண்டு வாகனங்களைச் சரி பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் விடியற் காலையிலேயே மூக்கு முட்டக் குடித்திருக்கிறார்கள் எனபது அவர்களின் கண்களிலே தெரிந்தது. அதிகாரிகளோ அப்போதுதான் துயில் கலைந்திருந்தனர். எழுந்த வீச்சிலேயே அவர்களும் மதுவை நன்றாகக் குடித்திருந்தனர். முஸ்லிம்கள், முஸ்லிம் அல்லாதவர்களென்ற பாகுபாடுகள் இல்லாமல் எல்லோருமே குடி வெறியில் இருந்தனர். நாங்கள் கற்றோங்காவை நோக்கி நகரத் தொடங்கினோம்.

நாங்கள் இலக்கை வந்தடைந்த பின்பும் எங்களால் தாக்குதலை ஆரம்பிக்க முடியவில்லை. மதுவின் சாரம் தளபதிகளின் தலைகளிலிருந்து இறங்கும் வரை நாங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.எங்களுக்கும் எதிரிகளுக்கும் இடையில் 'கற்றோங்கா' ஆறு அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றின் குறுக்காகக் கட்டப்பட்டிருந்த பாலத்தின் மறு முனையில் அரச படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். எங்களது வரவை எதிர்பார்த்து அவர்களின் பீரங்கிகளின் வாய்கள் பாலத்தை நோக்கி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.பீரங்கிகளின் வாய்களுக்கு நேராக குழந்தைப் போராளிகளின் படைப் பிரிவை எங்களின் தளபதிகள் நிறுத்தி வைத்திருந்தனர்.

சில மணி நேரங்களில் துப்பாக்கிச் சண்டை ஆரம்பமாகிவிட்டது. பாலத்தின் ஒரு முனையில் நாங்களும் மறு முனையில் இராணுவமுமாகப் போரிட்டுக் கொண்டிருந்தோம். ஆனால் யாருமே அந்தச் சிறிய பாலத்தைக் கடப்பதற்கான முயற்சியை எடுக்கவில்லை. அது உண்மையிலேயே தற்கொலைக்குச் சமமானது. நான்கு மாதங்களாகப் போர் எவருக்கும் வெற்றி தோல்வியில்லாமல் தொடர்ந்துகொண்டிருந்தது. நான்காவது மாதத்தின் முடிவில் உடனடியாகப் பாலத்தைக் கைப்பற்றித் தொடர்ந்து முன்னேறுமாறு எங்களின் படைத் தளபதி அகமட் கசிலிங்கிக்குத் தலமைப் பீடத்திலிருந்து கட்டளையிடப்பட்டது.

இந்தக் கட்டளை பிறப்பிக்கப்பட்டதை அறிந்ததும் அந்தச் செய்தியை என்னால் நம்பவே முடியாமலிருந்தது. ஆனாலும் அந்தச செய்தி முற்றிலும் உண்மைதான். தலைவர் முசேவெனி அல்லது அவரது சகோதரருக்குத்தான் இந்தக் கட்டளையைப் பிறப்பிக்கும் அதிகாரம் இருந்தது. நாங்கள் எவ்வாறான ஒரு பொறிக்குள் சிக்கியிருக்கிறோம் என்பதை அவர்கள் இருவரும் நன்றாகவே தெரிந்து வைத்திருந்தார்கள். எங்களின் உயிர்களைப் பற்றி அவர்களுக்கு என்ன கவலை? வெற்றிக்காக எத்தனை குழந்தைகளை வேண்டுமானாலும் நரபலி கொடுக்க அவர்கள் ஆயத்தமாயிருந்தார்கள்.
பாலத்தைக் கைப்பற்றுவதற்கான சமர் ஆரம்பமாயிற்று. நாங்கள் பீரங்கிகளின் வாய்களுக்குள் நுழைந்து புறப்பட்டோம். என்னைச் சுற்றி மனிதர்கள் ஈசல்களாய் எரிந்து வீழ்ந்தனர். பிணங்களின் நடுவில் நின்று எங்களின் தளபதி "முன்னேறு!- எல்லோரும் முன்னோக்கிச் செல்லுங்கள்!" என உறுமிக் கொண்டிருந்தார். துப்பாக்கி குண்டுகள் சரமாரியாகப் பறந்து கொண்டிருக்க கிரனேட்டுகள் அதிர்ந்து வெடித்துக்கொண்டிருந்தன. என் தோழனொருவன் வெடி வாங்கி விழுந்ததை நான் கண்டேன். அவனை நாங்கள் "ஸ்ரிக் கொமாண்டோ" என அழைப்போம். அவன் உதவி கேட்டுக் கெஞ்சியது எல்லோரது காதுகளிலும் விழுந்தது. எங்களில் ஒருவரால் கூட அவனுக்கு உதவ முடியவில்லை. "முன்னேறு" என்ற கட்டளை எங்களது பிடரிகளைப் பிடித்துத் தள்ளியது.

ஆச்சரியம்! எதிரியைப் பின்வாங்க வைத்துவிட்டோம்! ஆனால் எவ்வளவு உயிர்களைப் பறிகொடுத்து விட்டோம்! இறந்து கிடந்த எதிரிகளின் உடல்களை எனது தோழர்கள் கைகளால் அறைந்தும் கால்களால் உதைத்தும் கத்திகளால் கீறியும் தங்களது ஆத்திரங்களைத் தணித்துக்கொண்டிருந்தனர். எதிரிகளைப் போலவே எனது தோழர்களும் பெருமளவில் இறந்து போயிருந்தார்கள். ஆனாலும் நான் அழ மறுத்தேன். எனது உணர்சிகளை நான் எனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். ஒரு துளி கண்ணீர் கூட என்னை முற்றாக நிலை தடுமாறச் செய்து விடலாம். எனது விழிகளிலிருந்து கண்ணீர் விழவில்லை என்றாலும் எனது உணர்வுகள் எனது தோழர்களைப் போலவே மரித்துப் போய்விடவில்லை.

பெரும்பாலான குழந்தைப் போராளிகள் கொலைகளைச் செய்வதிலும் சித்திரவதைகளைப் புரிவதிலும் இன்பம் காண்பவர்களாகத் தங்களை மாற்றிக் கொண்டதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஒரு கொடூரமான சித்திரவதையுடன் கூடிய மரண தண்டனையை நிறைவேற்றிய பின் குழந்தைப் போராளிகள் கூடி நின்று ஒன்றுமே நடவாதது போல சர்வ சாதாரணமாகப் பேசிச் சிரித்துக்கொண்டிருப்பார்கள். தங்களுள்ளேயே 'ரம்போ' ,'சொக் நொறிஸ்' எனப் பட்டங்களையும் வழங்கிக் கொள்வார்கள். இந்தப் போக்கு எனக்கு ஒத்து வருவதாயில்லை. மற்றவர்கள் மீது இரங்கும் எனது குணம் எனக்கே என் மேல் கோபத்தை வருவிக்கும். எதிரிகள் மேற் கூட இரக்கம் காட்டும் எனது குணத்தைப் பற்றி நான் ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டியிருந்தது. ஏனெனில் எனது தோழர்கள் என்னைச் சூழவர இறந்து கிடந்தனர். ஒன்றில் எனது தனி மனித உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்கும் தூய சிறுமியாக நானிருக்க வேண்டும். அல்லது முற்று முழுவதாக உணர்வுகள் மரத்துப் போன ஒரு மனித வெடிகுண்டாக நானிருக்க வேண்டும். இந்த இரண்டில் நான் எந்த நிலையை எடுப்பது? இப்படியானதொரு நிலையில் என் போன்ற ஒரு சிறுமிக்கு சரியாக முடிவெடுக்கும் பக்குவம் இருக்குமா?

இபோதெல்லாம் AK 47 துப்பாக்கியுடன் ஒவ்வொரு குழந்தையும் மூன்று ரவைக் கூடுகளை அணிந்து கொள்கிறார்கள். சிலர் ஆறு ரவைக் கூடுகளைக் கூடக் கட்டியிருப்பார்கள். இந்தச் சுமையைப் பற்றி எங்களுக்கும் கவலையில்லை. எங்கள் தலைவர்களுக்கும் கவலையில்லை. எந்தப் பாரத்தைச் சுமந்தாவது என்ன வித்தை காட்டியாவது தலைமையின் கவனத்தைப் பெற்று விடுவதில் குழந்தைகள் கண்ணும் கருத்துமாயிருந்தார்கள். கனமான இந்தத் துப்பாக்கிகள் எங்களுக்குத் தாயின் அரவணைப்பைப் போன்றன. நாங்கள் உயிரை விட்டாலும் விடுவோமே தவிர ஒரு கணமும் துப்பாக்கியை விட்டுப் பிரிய மாட்டோம். துப்பாக்கி இல்லாத நாங்கள் முழுமையற்ற பிறவிகள். உங்களின் இந்த அவல நிலை குறித்து உங்கள் தளபதிகள் கொஞ்சமேனும் கவலை கொள்வதில்லையா? என நீங்கள் கேட்கக் கூடும். அவர்கள் முசேவெனியின் விருப்பங்களைப் பிழை படாமல் நிறைவேற்றும் கவலைகளில் மூழ்கிக் கிடந்தார்கள்.

குழந்தைப் போராளிகள் முசேவெனியின் கண்டுபிடிப்பு. அவர் தனது மந்திரக்கோலை ஆகாயத்தை நோக்கி நிமிர்த்திப் பிடித்து "போர்" எனக் கட்டளையிடுவார். குழந்தைப் போராளிகளும் போரிடுவர். மீண்டும் மீண்டும் அவரின் கறுப்பு வெள்ளை மந்திரக்கோல் ஆகாயத்தை நோக்கி உயர்ந்து கொண்டிருந்தது. "குழந்தைகளே உங்களால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை எனக்குக் காட்டுங்கள்" என எங்களின் தலைவர் புன்னகைப்பார்.

குழந்தைப் போராளி - 32


போரும் விடுப்பும்

துவரை யுத்தம் - மரணம் - அழிவு ஆகியவற்றைப் பற்றி நிறையவே சொல்லிவிட்டேன். எனினும் என் கதையில் இடையிடையே ரசமான சம்பவங்களும் நடைபெறாமலில்லை. நாங்கள் ஆயுதங்களைத் தாங்கி மரணத்தைத் தேடிச் சென்றுகொண்டிருக்கும் தருணங்களில் கூடப் பகடி சேட்டைகள் செய்யத் தவறுவதில்லை. இந்தப் பகடிச் சம்பவம் நாங்கள் லுக்காயா எனும் சிறு நகரத்தில் தங்கியிருந்தபோது நிகழ்ந்தது.

யுத்தத்துக்கு நடுவே, சில நாட்களுக்கு அரிதாகக் கிடைத்திருந்த ஒய்வை அந்தச் சிறு நகரத்தில் நாங்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடிக்கொண்டிருந்தோம். சாலையோரத்து மர நிழலில் நானும் தோழர்களும் குந்தியிருந்து சாலையில் போய் வருபவர்களைக் கவனித்துக்கொண்டிருந்தோம். அப்போது பருத்த தேகங்களைக் கொண்ட மூன்று பெண்கள் எங்களை நெருங்கி எங்களை மதுவருந்த வருமாறு அழைத்தனர். என்னையும் ஓர் ஆண் என்றே அவர்கள் நினைத்திருந்தனர். ஒர் ஆணாகத் தோற்றமளிப்பதில் எனக்கும் மகிழ்சியாகவேயிருந்தது. எனது தோழர்களிடம் இது பற்றி ஒன்றும் பேச வேண்டாமெனக் கேட்டுக்கொண்டேன். அவர்களும் நமட்டுச் சிரிப்புடன் தங்கள் வாய்களை மூடிக்கொண்டார்கள்.
மதுச்சாலையில் மேசை மேல் எதை வைத்தாலும் நாங்கள் குடித்துக் கொண்டேயிருந்தோம். மது அருந்துவது அதுதான் எங்களுக்கு முதல் முறை. மதுச்சாலையில் இருந்தவர்களுக்கும் எங்களை நன்றாகப் பிடித்துக்கொண்டது. எங்களிடம் சிரிப்புக்குப் பஞ்சமே இல்லை. அங்கிருந்தவர்கள் போட்டி போட்டுக் கொண்டு எங்களுக்கு மதுவை வாங்கிக் கொடுத்துக் கொண்டேயிருந்தனர். போதை ஏறுவதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. எங்கள் மேலதிகாரிக்கு நாங்கள் அஞ்ச வேண்டியதில்லை. எங்களைக் கண்காணிப்பதை விட அவருக்கு வேறு 'முக்கியமான' வேலைகளிருந்தன.

போதை தலைக்கேறிய நிலையில் எங்களைக் கூட்டி வந்த பெண்கள் எங்களைத் தடவத் தொடங்கினர். என்னைத் தடவிக் கொண்டிருந்த பெண் 'உண்மை'க்குப் பக்கத்தில் வருவதற்கு முன்னமே நான் அவளின் கையைத் தட்டி விடுவேன். அவள் சிரித்துக்கொண்டே "பெண்களைக் கண்டு நீ பயப்பிடுகிறாய்" எனச் சொன்னாள். எனது தோழர்கள் குழாமோ விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தது. அவர்களது நிலைமையும் அவ்வளவு நன்றாக இருக்கவில்லை. ஆனாலும் நாங்கள் பொறுமையுடன் சமாளித்துக்கொண்டிருந்தோம்.

பெண்களோ பொறுமையை இழந்துகொண்டிருந்தனர். அவர்களால் எங்கள் தொடைகளுக்கு நடுவே தடவாமல் இருக்க முடியவில்லை. நாங்களும் பொறுமையிழந்து விட்டோம். ஆத்திரம் தலைகளுக்கேற எழுந்து துப்பாக்கிகளை நீட்டி எங்களைத் தொந்தரவு செய்யக் கூடாதென அந்தப் பெண்களை மிரட்டினோம். அந்தப் பெண்கள் வெலவெலத்துப் போய்விட்டனர். இந்த நேரத்தில் ஒரு மூத்த போராளி மதுச்சாலைக்குள் நுழைந்தார். அவரது வாய் ஆச்சரியத்தில் திறந்து மூடிக் கொண்டதை என்னால் கவனிக்க முடிந்தது. வந்த வேகத்தில் திரும்பிக் கீழே தடுக்கி விழுந்து எழுந்து சென்ற அவர் ஒரு நொடியில் ஒரு அதிகாரியையும் அழைத்துக்கொண்டு மீண்டும் மதுச்சாலைக்குத் திரும்பி வந்தார். அதிகாரியோ முழு மப்பில் இருந்தார். அவர் தள்ளாடிக்கொண்டே "பொது மக்களுக்கு இடைஞ்சல் செய்யாதீர்கள்" என எங்களுக்கு அறிவுரை சொல்ல எங்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
மதுச்சாலைக்கு வெளியே எங்களை அழைத்து வந்த அதிகாரி "என்ன நடந்தது?" என விசாரித்தார். "அந்தப் பெண்கள் எங்களைப் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர்" என்றோம். அதை அவர் அப்படியே நம்பி விட்டார். அவரால் எங்களது செய்கையைப் புரிந்து கொள்ள முடிந்தது. "ஒரு குழந்தைக்குத் தைரியத்தையும் தன்நம்பிக்கையையும் ஆயுதம் மட்டுமே வழங்கும்" எனச் சொன்னவர் திடீரென வீதியின் நட்ட நடுவாகக் குந்திக்கொண்டு அடக்க மாட்டாமல் சிரிக்கத் தொடங்கினார். என்னைக் காட்டிக்கொண்டே "சைனாவையும் பலாத்காரம் செய்ய முயன்றார்களா?" எனக் கேட்டார்.

வீதிப் புழுதியில் விழுந்து கிடந்து சிரித்த அவரின் சிரிப்பு அடங்கியதும் நாங்கள் இன்னொரு மதுச் சாலையினுள்ளே போனோம் . திரும்பவும் அதே கதை தான். பல பெண்கள் எங்களைத் தேடி ஓடி வந்தனர். இங்கே என்னை வளைக்க முயன்ற புதிய பெண் வெகு அவசரக்காரியாக இருந்தாள். "உனது கவர்ச்சியான சிரிப்பு என்னை மயக்குகிறது, நீ என் அன்புக்குரிய பையன்" என்றெல்லாம் அவள் என்னிடம் புலம்பத் தொடங்கிவிட்டாள். எங்களுடன் கூடவே வந்திருந்த அதிகாரி அவளின் அலம்பலைக் கவனித்துவிட்டு நான் ஆணல்ல என்ற உண்மையை அவளின் தலையில் போட்டு உடைத்து விட்டார். அதன் பின்பு அங்கே நடந்தது நாங்கள் களத்தில் எதிரியைத் தாக்கும் வேகம், தீவிரம் என்பவற்றை ஒத்திருந்தன. அவள் எழுந்து சுற்றிச் சுற்றி நடந்து மேலும் கீழுமாக என்னை வெறித்துப் பார்த்தாள். பிடரியைச் சிலிர்த்துக்கொண்டு தாக்குதலுக்குத் தயாரான சிங்கம் ஒன்றைப் போல அவள் நின்றாள். ஆத்திரத்தில் அவள் துள்ளியபோது அவளது கனத்த முலைகள் மேலும் கீழுமாகத் துள்ளி விழுந்தன. அவளது வலிய தேகத்துக்குள் சிக்கி நான் நசுங்காமலிருக்க வேண்டுமானால் நான் இப்போது ஓட வேண்டும். அவளது ஆங்காரம் தோய்ந்த கர்ச்சனை என் முதுகுப்புறத்திலிருந்து கேட்டது. அவளது கூச்சலில் மதுச்சாலையின் கண்ணாடிகள் கூட உடைந்திருக்கலாம். என்னால் எவ்வளவு வேகமாக ஓடமுடியுமோ அவ்வளவு வேகமாக வெளியே ஓடினேன். என்னைத் துரத்தி வந்த அவள் தன்னிலும் பார்க்கத் தனது இரை வேகமாக ஓடும் வல்லமையுள்ளது என்பதைப் புரிந்துகொண்டிருக்க வேண்டும்.அவளின் கூச்சல் தேயத் தொடங்கியது. அவள் தனது திசையை மாற்றிக்கொண்டு வீதியில் ஒதுக்குப்புறமாயிருந்த இன்னொரு மதுச்சாலைக்குள் புகுந்து கொண்டாள்.

திடீரென எனது உற்சாகம் வடிந்து என்னுள் சினம் மூண்டது. இந்தச் சம்பவம் இன்னுமொரு பெண்ணைக் குறித்து என்னைச் சிந்திக்க வைத்தது. எனது தாயும் இப்படிச் செய்வாளா? கோபம் என் தலைக்கேறியது. எனது துப்பாக்கியால் எல்லோரது வாயினுள்ளும் சுட வேண்டுமென்ற வெறி வந்தது. என்னை நானே அடக்கிக்கொண்டேன். இந்தக் கொண்டாட்டங்களும் கூச்சல்களும் காதில் விழாத ஓர் இடத்தைத் தேடி ஒரு மரத்தினடியில் சாய்ந்து கொண்டேன். அந்த இரவில் எல்லோருமே தங்களுக்குத் துணைகளைத் தேடிக் கொண்டதாகவே எனக்குப் பட்டது. எனக்கோ தனிமை துணையிருந்தது.

குழந்தைப் போராளி - 31


மசாக்கா போர்முனை

ஒன்றோ இரண்டோ நாட்கள் கழிந்த பின்பு ஸலிம் சலேமின் தலைமையிலான பெரும் படைப் பிரிவுடன் எங்களது தாக்குதல் குழு இணைந்து கொண்டது. இப்போது எங்களது தாக்குதல் இலக்கு மசாக்கா படைமுகாம். மசாக்காச் சண்டை நாங்கள் எதிர்பார்த்திருந்ததைக் காட்டிலும் உக்கிரமாயிருந்தது. ஆயுத பலம் அதிகமுள்ள எங்கள் எதிரிகள் எங்களை மூர்க்கத்துடன் திருப்பியடித்தார்கள். அவர்கள் கடைசித் துளி இரத்தம் இருக்கும் வரை போராடக் கூடியவர்கள் என்பதை அந்தக் களம் சொல்லிக் காட்டியது. போர் தொடங்கிய சிறிது நேரத்திலேயே இரு தரப்பிலும் பாரிய இழப்புகள். எதிரி ஆவேசமாகப் போரிட்டுத் தான் எங்களிலும் குறைந்தவனல்ல என நிரூபித்துக்கொண்டிருந்தான். அவர்களது முகாம் ஒரு சிறிய மலை உச்சியில் அமைந்திருந்ததால் அவர்களுக்கு எங்களை இலக்கு வைத்துச் சுடுவது எளிதாயிருந்தது. யாருடைய பார்வை வட்டம் பெரிதாக இருக்கிறதோ அவர்களுக்கே துப்பாக்கியால் சுடுவதும் இலகுவாயிருக்கும். என்னில் கந்தகப் புகை கவிந்து கிடக்க ஒன்றை மட்டும் எனக்கு நானே சொல்லி கொண்டேன். எக் காரணத்தைக் கொண்டும் நான் நின்று கொண்டு போரிடப் போவதில்லை. என்னைத் துப்பாக்கிக் குண்டுகள் அணுகாது என நான் இனியும் நம்பத் தயாரில்லை. பாதுகாப்பான இடங்களைத் தேடிப் பதுங்கிய நான் எப்போதும் தரையில் படுத்திருந்த நிலையிலேயே சுட்டேன். ஓர் எதிரி விழும்போது அவன் எனது குண்டடிபட்டுத்தான் விழுகிறான் என நம்ப முயன்றேன். சண்டை எதிர் பார்த்ததைவிட அதிக நேரம் நீடித்தது. எதிரியின் தாக்குதல் பலமாக இருந்ததால் சிதறடிக்கப்பட்ட எங்களது படையணிகள் கடைசியில் களத்திலிருந்து பின்வாங்கிச் சென்றன.

சில மணி நேரங்கள் கழித்து, ஏற்கனவே பேசிவைத்திருந்த இடத்தில் நாங்கள் ஒன்று கூடினோம். தலைவரின் சகோதரரும் சிறப்புத் தளபதியுமான ஸலிம் சலேம் எங்களிடையே உணர்ச்சிப் பெருக்கான உரையொன்றை ஆற்றினார். "நன்றாகக் கேட்டுக்கொள்ளுங்கள்! நாங்கள் இந்த முகாமைக் கைப்பற்றும் வரையில் ஓயாது போரிட வேண்டும். நாங்கள் மீண்டும் தாக்குதலை நடத்துவோம்! இம்முறை நாங்கள் என்ன விலை கொடுத்தேனும் முகாமைக் கைப்பற்றியே தீரவேண்டும். நாட்டின் முக்கியமான இராணுவ நிலைகளையும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளையும் நமது படையணிகள் ஏற்கனவே கைப்பற்றி விட்டன. அதிபர் மில்டன் ஒபோடே இன்னும் சில நாட்களுக்குள்ளேயே NRAயால் அதிகாரத்திலிருந்து இறக்கப்படுவார். இறுதி வெற்றி எங்களுக்கே" என்று ஸலிம் சலேம் முழங்கினார்.

கற்றோங்கா பாலத்தைக் கைப்பற்ற NRA திட்டமிட்டது. இந்த அதி முக்கியமான இராணுவ நடவடிக்கைக்காக முதலாவது, ஐந்தாவது படைப் பிரிவுகளோடு இணைந்து போரிட நானிருந்த தாக்குதல் குழுவும் செல்ல வேண்டும் எனக் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. இதை கேட்டதுமே என்னை உற்சாகம் பற்றிக்கொண்டது. எனது சிநேகிதர்கள் பலரை மீண்டும் நான் சந்திக்கலாம்.

ஐந்தாவது படையணியினருடன் நாங்கள் இணைந்து கொண்டபோது எனது உற்சாகம் முற்றாக வடிந்து போயிற்று. எனது நண்பர்களில் ஒருவரைத் தன்னும் அங்கே என்னால் சந்திக்க முடியவில்லை. எல்லோருமே காணாமற் போயிருந்தனர். மீண்டும் என்னுள் நம்பிக்கை துளிர் விட்டது. ஐந்தாவது படைப் பிரிவின் தளபதி ஸ்டீபன் கசாக்காவின் மெய்ப் பாதுகாவலர்களாகத் தெரிவு செய்யப்பட்டிருந்த எனது இரு தோழர்களையாவது நான் சந்திக்க வாய்புண்டு. ஆனால் கசாக்கா போரிலிருந்து விலகி விட்டார் என்ற செய்திதான் எனக்குக் கிடைத்தது. அவர் படையணியிலிருந்து வெளியேறித் தனது தந்தையைக் கொன்றவர்களைப் பழிவாங்கப் போய்விட்டார் எனக் கேள்விப்பட்டேன். அது அவரது தனிப்பட்ட முடிவு. ஆனால் என் தோழர்கள் எங்கே? எவருக்கும் தெரியாது.

ஐந்தாம் படையணிக்கு அகமட் கசிலிங்கி புதிய கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். முசேவெனியே இவரை நேரடியாக நியமனம் செய்திருந்தார். கசிலிங்கி முன்யங்கோலி இனக் குழுவைச் சேர்ந்தவர். ஒரு காலத்தில் இடி அமீனுடன் கூடயிருந்தவர். போரில் பழுந்த அனுபவம் வாய்ந்தவரும் நிர்வாகம் செய்வதில் கைதேர்ந்தவருமான கசிலிங்கி மிகவும் உயரமான தோற்றத்தைக் கொண்டவர். ஓர் ஒட்டகச் சிவிங்கியின் கண்களை நேருக்கு நேராக பார்க்கக் கூடிய உயரம் அவருடையது. அவருடைய சிறிய தாடி 'கலேவூ' என்றொரு செல்லப் பெயரையும் அவருக்கு பெற்றுக் கொடுத்திருந்தது. 'கலேவூ' என்றால் 'ஆட்டுத் தாடி' என அர்த்தம். அவரது துணிவும் சாதுரியமும் பெரும் புகழ் பெற்றவை. அவரது தீரச் செயல்களைப் பற்றிப் பல கதைகள் உண்டு. முசேவெனியும் மில்டன் ஒபோடேயும் சேர்ந்து இடி அமீனின் அரசைக் கவிழ்த்த போது கசிலிங்கி கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டார். அவர் உகண்டாவிலேயே அதி உயர் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கொண்ட 'லூசிரா' சிறைச்சாலையிலிருந்தே தப்பித்துச் சென்றவர். கசிலிங்கிக்கு இராணுவ வட்டாரங்களில் பெரும் மதிப்பும் மரியாதையுமுள்ளன. இராணுவ அதிகாரிகள் அவருக்குக் 'கொமாண்டோ' என்ற பட்டத்தையும் வழங்கியிருந்தனர்.

மிகத் திறமையான தலைமையும் சிறந்த போராளிகளையும் கொண்டிருந்த ஐந்தாவது படைப்பிரிவு பெரிய புகழை அடைந்திருந்தது. இன்றும் என்னால் சில பெயர்களை ஞாபகப்படுத்திப் பார்க்க முடிகிறது. மோசேஸ் டிராகோ - யூலியஸ் புரூஸ்- கனாபி இவர்கள் மூவரும் பகாண்டா இனக் குழுவைச் சேர்ந்தவர்கள். இவர்களை மரணம் மாத்திரம் தான் பிரிக்க முடியுமென்பது போல மூவரும் எப்போதும் சேர்ந்தேயிருப்பார்கள். எனது பிரியம் மோசேஸ் டிராகோ மேல். அவர் அன்புள்ளம் படைத்த இளம் தளபதி. நான் ஐந்தாவது படைப்பிரிவில் அவரின் நிழலின் கீழேயே அணிவகுத்துச் சென்றேன்.

ஐந்தாவது படைப்பிரிவு சண்டைக்கு ஆயத்தமானது. கூடிய கதியில் நாங்கள் கற்றோங்கா பாலத்தைக் கைப்பற்ற வேண்டும். இது ஒரு சிறிய ஆனால் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள பாலம். இந்தப் பாலம் தலைநகர் கம்பாலாவிலிருந்து இரண்டு கிலோ மீற்றர்கள் தூரத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந்திருந்தது. எங்கள் படையணிகள் பாலத்தை இலக்கு வைத்து நகரத் தொடங்கின. வெற்றிக்கான சாத்தியங்கள் எங்களுக்கே அதிகளவில் இருந்ததால் மிக விரைவில் தலைநகரும் எங்களின் கைகளுள் வீழ்ந்து விடும் என நாங்கள் நம்பினோம். இரண்டு பெரிய களங்களிலிருந்து நான் உயிர் தப்பியிருப்பதால் கம்பாலாவைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கலாமென நான் நினைத்துக் கொண்டேன். குழந்தைப் போராளிகளுக்குக் கம்பாலா என்பது ஒரு இனிய கனவாகவே இருந்தது. பலருக்கு அது நிறைவேறாத கனவாகவும் போயிற்று.

கற்றோங்கா நோக்கிய நகர்வில் எங்களுக்கு இன்னுமொரு அதிர்ஷ்டமும் வாய்த்தது. சில புத்தம் புதிய வாகனங்கள் எங்களுக்குத் தரப்பட்டன. ஏற்கனவே எங்களின் தளபதிகளும் உயரதிகாரிகளும் நவீனரக ஜீப்புகள், பென்ஸ் கார்கள் எனக் கொடி கட்டித்தான் பறந்து கொண்டிருந்தார்கள். சில விடயங்கள் எனக்குப் புரியவில்லை. NRA எப்போது பணத்தில் மிதக்கத் தொடங்கியது? நாங்கள் எதற்காகப் போராடுகிறோம்? இந்த வெற்று ஆடம்பரங்களுக்காகவா நாங்கள் உயிரைக் கொடுத்துப் போராடுகிறோம்? இந்தக் கேள்விகள் தளபதிகளும் உயரதிகாரிகளும் பெண்களுடன் சல்லாபிப்பதைப் பார்த்ததும் குறிப்பாக என்னுள் எழுந்தன. திடீரென NRA போராளிகள் மீது நாட்டிலுள்ள பெண்களுக்கு ஈர்ப்புக் கூடியிருந்தது. நாட்கணக்காகக் குளிக்காத போராளிகளின் நாற்றம் கூட அந்தப் பெண்களுக்குப் பெரிதாகப் படவில்லை.

குழந்தைப் போராளி - 30




தோழிகளின் மரணம்


ஒரு மாலை நேரத்தில் நானும் எனது சகாக்களும் மர நிழலில் ஓய்ந்திருந்து 'பழைய கதைகளை'ப் பேசிக் கொண்டிருந்தபோது இரு குறிப்பிட்ட படை அலகுகளைத் தயார் நிலைக்கு வருமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டது. விதி விளையாடியது, இரண்டில் ஒரு குழுவில் நானும் அடங்கியிருந்தேன். மேற்கு உகண்டாவில் நிலைகொண்டிருந்த அரசின் சிம்பா படைப் பிரிவைத் தாக்குவதற்காக உருவாக்கப்படும் சிறப்புப் படையணிக்கு நாங்கள் அனுப்பி வைக்கப்பட்டோம் . அங்கே எனது உற்ற தோழிகளான முக்கோம்போஸியும் நரோன்கோவும் இருப்பதைக் கண்டேன். அவர்களின் சிரிப்பில் எனது கவலைகளெல்லாம் பறந்து போயின. எஙகிருந்தோ வந்து தன்நம்பிக்கை என்னில் தொற்றிக் கொண்டது. நாங்கள் குதூகலத்துடன் ஒருவரை ஒருவர் ஆரத் தழுவிக் கொண்டோம். இந்த இரு பெண்களும் இல்லாவிட்டால் நான் முற்றாகவே உடைந்து போயிருப்பேன். வெறுப்பும் சிடுசிடுப்புமாக நிற்கும் மனிதர்களிடையே போராளிக் குழந்தைகள் பரிவையும் அரவணைப்பையும் தேடியலைந்தார்கள். நான் பாக்கியசாலி! முக்கோம்போஸியும் நரோன்கோவும் எனக்கு அவற்றை வழங்கினார்கள்.

பொது வேலைகள் திணைக்களத்திலிருந்து எங்களால் கடத்தப்பட்ட கனரக வாகனங்கள் எங்களது படையணியின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்தன. நான் தோளில் எனது Uzi துப்பாக்கியைச் சுமந்து கொண்டு அணிவகுத்து நின்றேன். தாக்குதலுக்கு எங்களை உசுப்பிவிடும் உரையை எங்களது புதிய கட்டளைத் தளபதிகளில் ஒருவரான யூலியஸ் சிகண்டா நிகழ்த்தினார்.."மானமே பெரிது! எங்களின் மக்களுக்காகப் போரிடுவோம்" என்பதே நிகழ்த்தப்பட்ட உரையின் சாரமாயிருந்தது. உரைவீச்சு முடிந்தவுடன் வாகனங்களில் ஏறக் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. எங்களை உசுப்பிவிட எப்படிப் பேச வேண்டுமென்பது தளபதிகளுக்குத் தெரியும். தூண்டப்பட்ட துணிவைத் தொலைத்து விடாதிருக்க நாங்கள் பாடிக்கொண்டும் கூச்சலிட்டுக் கொண்டுமிருந்தோம். பயணம் தொடங்கி விட்டது. எங்களில் பலருக்கு அது திரும்பி வர முடியாத பயணமாக அமையும் என்பது எனக்குத் தெரியும். எங்களது படையணியின் இன்னொரு கட்டளைத் தளபதியாக பிரெட் ரொவியெமா இருந்தார். பிரெட் வசீகரமான தோற்றத்தைக் கொண்ட ஆற்றல் மிக்க போர்த் தளபதி. அவர் எங்களுக்கு 'மானம் காக்கவும் விடுதலைக்காகத் துணிச்சலுடன் போரிடவும்' சொல்வதோடு யுத்தத்திலிருந்து உயிருடன் மீள்வது எவ்வளவு முக்கியமானதென்று சொல்லவும் மறப்பதில்லை.

நாங்கள் நெடும் தூரம் பிரயாணம் செய்துகொண்டிருந்தோம். ஓடும் வாகனத்துள் மந்தைகள் போல நெருக்கியடித்துக் கொண்டு ஒருவருடன் ஒருவர் ஒட்டாத குறையாக நாங்கள் நின்றிருந்தோம். வழியில் எதிர்ப்பட்ட ஒரு சிறிய சோதனைச் சாவடியில் பொலிஸார் எங்களது துப்பாக்கிகளுக்கு வேலை வைக்காமல் தாங்களாகவே சரணடைந்து ஆயுதங்களை எங்களிடம் ஒப்படைத்தனர். இந்தச் சிறிய பரபரப்புக்குப் பிறகு மீண்டும் பயணம் தொடர்ந்தது. இரவு தங்குவதற்குப் பாதுகாப்பான ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து வாகனங்கள் நிறுத்தப்பட்டன. அந்தச் சுற்றுவட்டார மக்களில் ஏராளமானவர்கள் எங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அவர்கள் வெகுளித் தனமான அன்புடன் எங்களுடன் பேசினர். அவர்களில் பலர் உணவுவகைகள், பழங்கள், சிறிய பரிசுப் பொருட்கள் என்பவற்றை எங்களுக்காக எடுத்து வந்திருந்தனர். ஆனால் அவைகளைப் பெற்றுக்கொள்ள நாங்கள் அனுமதிக்கப்படவில்லை. அவர்களது பரிசுப் பொருட்களை நாங்கள் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்க அவர்கள் வாத்தியங்களை முழங்கி எங்களின் வரவைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். "எங்களது அன்பு என்றும் உங்களுக்குண்டு, எங்கள் விடுதலையின் நாயகர்கள் நீங்கள்" என அவர்கள் பாடினார்கள்.

காலையில் மீண்டும் நாங்கள் பயணிக்கத் தொடங்கினோம். முதல் தீட்டியிருந்த திட்டத்தின்படி நாங்கள் சில மணி நேரங்களுக்கு முன்பாகவே புறப்பட்டுச் சென்று எதிரிகளை உறக்கத்தில் வைத்தே தாக்கியிருக்க வேண்டும். முன்னைய திட்டம் ஏன் மாற்றப்படடது என்று எங்களுக்கு எதுவும் சொல்லப்படவில்லை. இப்போதோ நன்றாக விடிந்து விட்டிருந்தது. சூரியன் வானத்தில் உயரே ஏறிவரும் போது எங்கள் தாக்குதல் குழுக்கள் சிம்பா படைத்தளத்தைச் சூழ்ந்திருந்தன. இந்தப் படைத் தளம் பிரதான சாலையை ஒட்டியிருந்த ஓர் எச்சக் குன்றில் அமைந்திருந்தது. நாங்கள் படைத் தளத்தைச் சுற்றியிருந்த வேலியை அரவமில்லாமல் வெட்டிப் பாதை திறந்ததும் எங்களது துப்பாக்கிகள் இடையறாது வெடித்துக் கொண்டே முன்னேறின. எதிரிகளில் பெரும்பாலானோர் கொல்லப்பட்டனர். எஞ்சியிருந்தவர்கள் கட்டடங்களுக்குள் மறைந்திருந்து போரிட்டதால் ஒருவாறு தாக்குப் பிடித்துக்கொண்டிருந்தனர். இந்த வெற்றி எங்களை மயக்கிவிட்டது. சிலர் செத்துக் கிடந்த இராணுவத்தினரோடு துப்பாக்கிச் சண்டை போடுவது போல பாவனை செய்யத் தொடங்கி விட்டனர். அது நல்லத்தொரு பயிற்சி எனவும் கருதப்பட்டது. நானும் சில தோழர்களும் எங்கள் தரப்பு இழப்புக்களைக் கணக்கெடுக்கத் தொடங்கினோம்.

நாங்கள் இறந்து போன எங்களது சகாக்களுக்காக அழுது முடிக்க முன்னமே எதிர்பாராத தாக்குதல் குன்றின் கீழேயிருந்து எங்கள் மீது நடத்தப்பட்டது. இரு முனைத் தாக்குதல்களின் நடுவே நாங்கள் வசமாகச் சிக்கியிருந்தோம். வாழ்வா? சாவா? என்ற நிலை. இப்போது எங்கள் உயிர்களைக் காப்பாற்றிக்கொள்ள நாங்கள் வீரியத்துடன் போர் புரிய வேண்டியிருந்தது.ஆனாலும் எங்களது நிலைமை படு மோசமாகவேயிருந்தது. ஒரு பகுதிப் போராளிகள் சண்டையைக் கைவிட்டு ஓடத் தொடங்கினர். குண்டுகள் மழையாகப் பொழிந்து கொண்டிருந்தன. பல போரளிகள் ஓடும்போது முதுகில் குண்டடிபட்டனர். எனினும் எங்களில் பலர் உறுதியுடன் எதிர்த்துப் போராடினோம். நாங்கள் போரைக் கைவிடவில்லை, எங்கள் துணிவு அற்றுப் போய்விடவில்லை. பெண்கள் எல்லோரும் ஆண்களைப் போலப் போரிட்டோம்.

மூர்க்கத்துடன் போரிட்டுக்கொண்டிருந்த முக்கோம்பொஸி எதிரியின் குண்டடிபட்டு அவளது பிரியத்துக்குரிய RPGயோடு சுருண்டு விழுந்தாள்.அவளது அதீத துணிச்சலே அவளுக்கு எதிரியாய்ப் போனது. நரோன்கோ தனது தோழி விழுந்ததைக் கண்டதும் ஒரு மரத்தில் ஏறி பித்துப் பிடித்தவள் போல் கிளைக்குக் கிளை தாவிக்கொண்டிருந்தாள். அவளைக் கீழே இறங்குமாறு தளபதி பிறப்பித்த கட்டளை காற்றிலே போயிற்று. அவள் மரத்தை விட்டு இறங்கவேயில்லை. அவள் மரத்திலிருந்து கீழே விழுந்ததையும் யாரும் பார்க்கவில்லை. நாங்கள் அங்கிருந்து பின்வாங்கிய போது நரோன்கோ எங்களிடையே இல்லை.

எனது நேசத்துக்குரிய தோழிகள் இருவரையுமே யுத்தம் தின்று விட்டது. நான் யுத்தத்தைக் கைவிட்டு NRAயிலிருந்து ஓடிப்போய் விடலாமா என்று கூட நினைத்தேன். எனது கிராமம் இங்கிருந்து அதிக தொலைவில் இல்லை. ஆனாலும் நான் மனதை மாற்றிக் கொண்டேன். நாங்கள் இந்த நாட்டையே ஆட்சி செய்யும் காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. இராணுவச் சீருடையில் தோளில் துப்பாக்கியுடன் என்னைப் பார்த்தால் அப்பா என்ன செய்வார்? பயத்தில் அலறுவாரா? அல்லது மண்டியிட்டுக் கருணை காட்டுமாறு கெஞ்சுவாரா? இப்படி நினைப்பதே என் மண்டைக்குள் இன்பக் கிறுகிறுப்பை உண்டாக்கியது. ஓடிவிடுவதற்குப் பதிலாக இறுதிவரை போராடுவது என உறுதியெடுத்துக் கொண்டேன். வீடு திரும்புவதை விடப் போரிடுவதில் எனக்கு இழப்புக்கள் குறைவாகவேயிருக்கும் என நம்பினேன்.

எங்களில் பலர் அச்சத்தால் கைகால்கள் மரத்துப் போனவர்கள் போலக் காணப்பட்டனர். போரில் மாண்டு போன எங்களது சகாக்களின் இரத்தம் நாங்கள் பின்வாங்கிச் சென்ற பாதையில் எங்களைத் தொடர்ந்தது. அச்சத்தையும் கண்ணீரையும் மனவேதனையையும் முண்டி விழுங்குவதைத் தவிர எங்களால் வேறெதுவும் செய்யமுடியவில்லை. எங்களில் சிலர் நயாமிற்றங்காவுக்கு அழைக்கப்பட, மற்றவர்களுக்கு மீண்டும் சிம்பா முகாமைத் தாக்குவதற்கு ஆயத்தமாகுமாறு கட்டளையிடப்பட்டது.

பீகார்வே என்ற சிறு நகரத்தில் சில 'லொறி'களைக் கடத்திக்கொண்டு மீண்டும் நாங்கள் சாவைத்தேடி விரைந்து சென்றோம். எங்களில் சிலராலேயே பாடவோ, சிரிக்கவோ முடிந்தது. பெரும்பாலான போராளிகள் உள்ளுக்குள் ஒடுங்கிப் போயிருந்தார்கள். என்னைப் போலவே அவர்களும் தங்களது தலைகளுக்கு மேல் ஆடிக்கொண்டிருக்கும் மரணம் குறித்துச் சிந்தித்துக்கொண்டிருக்கலாம். வழியில் எனது கிராமத்தை நாங்கள் கடந்து சென்றோம். என்றாவது ஒருநாள் நான் இங்கு திரும்பி வருவேனா?

என்னுள் திரண்டு வந்த மரணபயம் என் கண்களின் வழியே வழிந்த போது நான் தடுமாறிப் போனேன். எனக்குத் தலை சுற்றத் தொடங்கியது. நான் ஓடும் வாகனத்துள் எழுந்து நிற்க முயற்சி செய்தேன். என் தேகம் உலாஞ்சியது. நான் அச்சத்தை என்னுள்ளிருந்து துரத்தியே ஆகவேண்டும். பத்து வயதுச் சிறுமியான நான் அச்சத்தைத் துரத்திவிட ஒரு குறுக்கு வழியைக் கண்டு பிடித்தேன். நான் எங்களின் வெற்றியைக் குறித்துப் பாடலொன்றைப் பாடத் தொடங்கினேன். "நானொரு துணிவான போராளி" என்று அந்தப் பாடல் ஆரம்பிக்கும்.விரைவில் மற்றவர்களும் என்னுடன் சேர்ந்து கொண்டனர். வாகனத்துள் இருந்த இறுக்கம் மெல்ல மெல்ல அவிழலாயிற்று. கனைப்பும் சிரிப்பும் எங்களிடையே பரவத் தொடங்கின.

வழியில் ஒரு சிறு நகரத்தில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. வாகனங்களிலிருந்து இறங்கிச் சில நிமிடங்கள் வரை நகரவாசிகள் எவருமே எங்கள் கண்களில் படவில்லை. தங்கள் நகரத்துக்கு வந்திருப்பவர்கள் NRA போராளிகளே என்பதை அறிந்து கொண்டதும் பதுங்கியிருந்த நகரவாசிகள் வெளியே வந்து உற்சாகத்துடன் எங்களைச் சூழ்ந்துகொண்டனர். குழந்தைகளாகிய எங்களுக்கு உணவும் பணமும் தர அவர்கள் முண்டியடித்தனர். ஆனால் NRA யின் விதிகளின்படி நாங்கள் அவற்றை வாங்கிக்கொள்ள இயலாது. தலைவர் முசேவெனி தனது போராளிகளை அரசபடையினரைப் போல வழி நடத்த விரும்பவில்லை. ஒரு பெண் எனக்குப் பணம் தர முற்பட்டபோது என்னால் மறுக்க முடியவில்லை. ஆனால் வெளிப்படையாக அந்தப் பணத்தை வாங்கிக்கொள்ளவும் நான் விரும்பவில்லை.அது என்னைப் பெரிய ஆபத்தில் கொண்டு போய்விடும். அந்தப் பெண்ணை ஒரு கட்டடத்தின் பின்னால் மறைவாக வரச் சொல்லிப் பணத்தை வாங்கி எனது உடைக்குள் மறைத்து வைத்துக்கொண்டேன். ஒன்றின் பின் ஒன்றாகத் தொடர்ந்து புகை பிடிக்கும் பழக்கம் எனக்குண்டு. சிகரெட்டுகள் வாங்க எனக்குப் பணம் தேவை. வலிய வரும் பணத்தை வேண்டாமென்று மறுக்குமளவிற்கு எனக்கு மனதில் உறுதியில்லை.

சிலமணி நேரங்களில், நாங்கள் ஏற்கனவே சிறைப் பிடித்து வைத்திருந்த அரச படையினர் சிலரை முன்னே நடக்கவிட்டு அவர்களை அரண்களாய் வைத்துக்கொண்டு மீண்டும் சிம்பா படைத் தளத்தை நோக்கி முன்னேறினோம். எங்களுக்கும் அரச படையினருக்குமிடையே சிறைப்பிடிக்கப்பட்ட அரச படையினரின் உயிர்கள் பணயமாக வைக்கப்பட்டிருந்ததால் சிம்பா படைத்தளத்தில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் எதிர்ப்பே காட்டாமல் பின்வாங்கிச் சென்றனர். இந்தத் தடவை எங்கள் தரப்பில் இழப்புக்கள் எதுவுமில்லாமலேயே சிம்பா படைத் தளம் எங்களிடம் வீழ்ந்தது.

குழந்தைப் போராளி - 29



நூற்றுக்கு இருநூறு

சில நாடகள் கழித்து நானும் இன்னும் ஐந்து தோழர்களும் ஐந்தாவது விசேட படைப் பிரிவுக்கு அனுப்பப்பட்டோம். ஐந்தாவது விசேட படைப் பிரிவின் கட்டளைத் தளபதியான ஸ்டீபன் கசாக்கா என்னுடன் வந்திருந்த இரண்டு தோழர்களைத் தனது மெய்ப் பாதுகாப்பாளார்கள் அணிக்குத் தேர்வு செய்துகொண்டார். தலைவர்களும் தளபதிகளும் உயரதிகாரிகளும் தங்கள் மெய்ப் பாதுகாவலர்களாகப் பெரும்பாலும் குழந்தைப் போராளிகளையே தேர்ந்தெடுப்பார்கள். குழந்தைப் போராளிகள் கேள்விகளைக் கேட்பதில்லை. நல்லது கெட்டதைப் பகுத்துணர முடியாத, மூளைகள் மழுங்கடிக்கப்பட்டிருந்த அந்தக் குழந்தைகள் நூற்றுக்கு இருநூறு வீதம் விசுவாசத்தைக் கொண்டவர்களாயிருப்பார்கள்.

குழந்தைப் போராளிகள் எல்லாவித அட்டூழியங்களிலும் பங்கெடுத்துக் கொள்வார்கள்.பல குழந்தைகளுக்குக் கொலையும் சித்திரவதையும் மிகப் பிடித்தமான வேலைகள். கொலைகளாலும் சித்திரவதைகளாலும் தங்களது தளபதிகளின் நன்மதிப்பைக் குழந்தைகளால் சீக்கிரமே பெற்றுவிட முடியும். போர் கைதிகளையும் உளவாளிகள், துரோகிகள் எனக் குற்றம் சுமத்தப்பட்டவர்களையும் குரூரமாகச் சித்திரவதை செய்தும், புதை குழிகளுக்கு அனுப்பியும் ஒரே நாளில் இராணுவப் படிநிலைகளை ஒரே தாவாகத் தாவி உயரே சென்று விடக் குழந்தைகளால் முடியும். போர்க் கைதிகளுக்கு நாங்கள் இழைக்கும் உச்சபட்சச் சித்திரவதைகள் எதிர் காலத்தில் எங்கள் உளவியலை எவ்வாறு பாதிக்கப் போகின்றன என்பதை அறியாத குழந்தைகளாக நாங்களிருந்தோம். அந்தக் கொடூரம் வாழ்நாள் முழுவதும் எங்களை வதைத்துக் கொண்டேயிருக்கும்.

நாங்கள் தலைவரின் பெயரால் அவரை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக வகை தொகையின்றி அட்டூழியங்களைச் செய்தோம். பதிலுக்கு அவர் எங்கள் மீதேறிச் சவாரி விட்டார். நாங்கள் தலைவரால் சாவதற்கென்றே வளர்க்கப்பட்டோம். நாங்கள் கற்பூரத்தால் வார்க்கப்பட்ட பறவைகள்.எங்களைப் போன்ற சபிக்கப்பட்ட குழந்தைகளிடம் இயல்பான மன வளர்ச்சியை எதிர்பார்க்க முடியுமா?

வெளிப் பார்வைக்கு நாங்கள் குழந்தைகள். ஆனால் எங்களின் மறுபக்கமோ முற்றிலும் வேறுபட்டது. எந்த மானுட விழுமியங்களுக்குள்ளும் அடங்காத குழந்தைகள் நாங்கள். எப்போது எங்கு பற்றும்? எந்தத் திசையில் திரும்பும்? எனக் கணிக்க முடியாத காட்டுத் தீ போல நாங்கள் நெருப்பெடுத்து நின்றோம். எங்களிடம் மிக அடிப்படை உணர்வுகளான பசி, தாகம், குளிர், வெப்பம் ஆகியவற்றைத் தவிர மற்றெல்லா உணர்வுகளும் மரத்துப் போயிருந்தன. நாங்கள் மனித இயந்திரங்கள் போலத் தலைமையின் கட்டளைகளைக் கேள்விகளே கேட்காது நிறைவேற்றிக்கொண்டிருந்தோம். சிந்தனைகள் மழுங்கடிக்கப்பட்ட, மரத்துப் போன நிலையிலிருந்து நாங்கள் இம்மியளவேனும் விடுபடுவதாகத் தளபதி கருதுவேரானால் நாங்கள் உடனடியாகப் போர்முனைக்குச் சாவதற்காக அனுப்பப்படுவோம். ஏனெனில் நாங்களில்லாவிடில் தளபதியின் தவறுகளுக்கும் குற்றங்களுக்கும் சாட்சிகளும் இல்லை.

எங்களில் பலர் இப்படிப் போர்முனைகளுக்கு அனுப்பப்பட்டு அழிந்து போனார்கள். எங்களது தலைவருக்கும் தளபதிகளுக்கும் அடிமட்டப் போராளிகளைப் பற்றி உண்மையிலேயே அக்கறையுண்டா? அல்லது நாங்கள் எக்கேடு கெட்டுப் போனாலும் இவர்களுக்குக் கவலையில்லையா? என்ற கேள்விக்கான பதிலை நான் தேடிக்கொண்டிருந்தேன். தலைமைப் பொறுப்புக்களிலிருந்தவர்களில் ஏறத்தாழ எல்லோருமே அதீத சுயநலப் பிராணிகளாகயிருந்தார்கள். தங்களுடைய நலன்களைத் தவிர வேறொன்றைப் பற்றியும் அவர்களுக்கு அக்கறையில்லை. நாட்டின் அதிகார மையத்தை விரைந்து கைப்பற்றிக் கொள்வதும் அதன் மூலம் கொழுத்த பணக்காரர்களாகி விடுவதுமே அவர்களின் ஒரே குறிக்கோளாகயிருந்தது. அவர்கள் மீது அசைக்க முடியாத விசுவாசத்தைக் கொண்டிருந்த போராளிக் குழந்தைகளுக்கு அவர்களது இதயத்தில் எந்த இடமுமில்லை. எங்களின் மேதகு தலைவர் யோவேரி முசேவெனியின் இதயத்தில் கூட எங்களுக்கிடமில்லை. எந்தச் சர்வாதிகாரிக்கு எதிராகப் போரிட்டாரோ அந்தச் சர்வாதிகாரியைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு சர்வாதிகாரியாக எதிர்காலத்தில் யோவேரி முசேவெனி மாறுவார் என்பதை அன்று நான் கற்பனை கூடச் செய்து பார்த்ததில்லை.

குழந்தைப் போராளி - 28



குழந்தைகளே என்னிடம் வாருங்கள்

தொடர்ந்து நகர்ந்து கொண்டேயிருந்த எங்கள் படைப் பிரிவு மழை நீர் தேங்கி நின்ற ஒரு குட்டையை வந்தடைந்தது. அங்கே சிறிது ஓய்வெடுப்பதென முடிவாயிற்று. நாங்கள் தரையில் உட்காருவதற்கு முன்னேயே பற்றைக்காடு சலசலத்தது. அங்கிருந்து எங்களை நோக்கித் தலைவர் யோவேரி முசேவெனி ஒரு படைப் பிரிவுடன் வந்து கொண்டிருந்தார். முசேவெனி இராணுவ உடையிலிருந்தார். அவரது கையில் கறுப்பு - வெள்ளை முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட சிறியதொரு கோலை வைத்திருந்தார். இந்தக் குறுந் தடியின்றி முசேவெனி எங்குமே போவதில்லை. 'கிம' இனக் குழுவைச் சேர்ந்த மந்திரவாதி ஒருவரிடமிருந்து முசேவெனி பெற்றுக்கொண்ட இந்தக் குறுந்தடி மந்திர சக்தி வாய்ந்ததெனப் பரவலாக நம்பப்பட்டது. தலைவர் குழந்தைகள் எல்லோரையும் தன் அருகாமையில் வரும்படி அழைத்தார். அவரது வார்த்தைகளில் வசியமிருந்தது.

" NRA எமது மக்களின் விடுதலைக்காகவும் உகண்டாவின் இனக்குழுக்களுக்குள் அய்க்கியத்தை ஏற்படுத்தவும் உறுதியோடு போராடிக் கொண்டிருக்கிறது. அரசினால் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எந்தக் குற்றமுமே புரியாத நமது மக்களை விடுதலை செய்வதற்காக நாமெல்லோரும் ஒற்றுமையுடன் இறுதி வரை போரிட வேண்டும்"

உண்மையிலேயே எங்கள் தலைவரால் நன்றாகப் பேச முடியும். ஆபிரிக்கக் கிளர்ச்சித் தலைவர்களிலேயே எங்கள் தலைவர் தான் முதன் முதலாகக் குழந்தைப் போராளிகளைக் களத்தில் இறக்கியவர். விரைவிலேயே மற்றவர்களும் இந்த "முற்போக்கான" சிந்தனையைப் பின்பற்றத் தொடங்கினர். இந்த வகையில் ஒபோடே முசேவெனி குழந்தைப் போராளி முறைமையின் தந்தை. பெரும்பாலான குழந்தைப் போராளிகளுக்குக் காணாமற் போன அவர்களது பெற்றோர்களுக்குக்கு என்ன நடந்ததெனத் தெரியாது. முசேவெனியோ அவர்களை அரச இராணுவம்தான் கொன்றொழித்தது எனச் சாதித்தார். அது மட்டுமல்லாது அவர் இன்னொரு துருப்புச் சீட்டையும் அடித்தார்." உங்களின் தாய் தந்தையர்களில் சிலர் சிறையில் இன்னும் உயிருடன் இருக்கலாம், நீங்கள் போய்ச் சிறை மீட்பதற்காக அவர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்" எனக் குழந்தைகளின் மண்டையைத் தலைவர் மேலும் மேலும் கழுவினார்.

தலைவரின் உரையின் முடிவில் நாங்கள் எல்லோரும் எழுந்து நின்று எங்கள் துப்பாக்கிகளை வானத்தை நோக்கித் தூக்கிப் பிடித்து "முன்னோக்கிச் செல்வோம்! ஒரு நாளும் ஓய மாட்டோம்!" என முழக்கமிட்டோம். தலைவர் சிரித்துக்கொண்டே தனது கறுப்பு வெள்ளை மந்திரக்கோலை ஆகாயத்தை நோக்கி உயர்த்தினார். தாய் தந்தையர் சிறையில் உயிரோடு இருக்கிறார்கள் என்ற வார்த்தை பல குழந்தைகளைத் தொடர்ந்து போரிடவும் தங்கள் உயிரைத் தியாகவும் செய்யவும் உருவேற்றும். எனது நிலையோ வேறு மாதிரியானது. எனது பெற்றோர்கள் எங்கேயிருக்கிறார்கள் என எனக்குத் தெரியும். நான் உயிருடன் இருக்க விரும்புவதற்கு அவர்களின் இருப்பு மட்டுமே காரணமாயிருக்கிறது.. என்றோ ஒரு நாள் நான் வீடு திரும்பி என் அப்பாவையும் சிற்றன்னையையும் கொல்ல வேண்டும். இதுதான் எனது இலட்சியம். எனது தந்தையும் சிற்றன்னையும் எனக்களித்த துயரங்களுக்காகத் தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும். அவர்களின் செயல்களுக்கு மன்னிப்பே கிடையாது.மனிதர்களைக் கொல்வதும் கொல்வதற்குத் திட்டமிடுதலும் எனது அன்றாடச் செயற்பாடாகவே ஆகிவிட்டது.

முசேவெனி ஏன் திடீரென வந்தார்? எங்கள் தோழர்களை நாங்கள் சாகக் கொடுத்த போது எங்களிடம் மின்னி மறைந்த அச்சமும் விரக்தியும் கலந்த உணர்வை எங்கள் தளபதிகள் கண்டு கொண்டார்களோ? குழந்தைப் போராளிகள் களத்திலிருந்து பின்வாங்கினால் தாங்களே போர்க் களத்தின் முன்னரங்கத்தில் நிற்க வேண்டி வரும் எனத் தளபதிகளுக்குப் பயம் வந்துவிட்டதா? குழந்தைகளான நாங்கள் துணிவானவர்கள்! மிகத் துணிச்சலானவர்கள்! விட்டுக் கொடுக்காத போராளிகள்! தலைவர் எங்களை விட்டுச் செல்ல நாங்கள் காய்ந்த பருப்பையும் சோளத்தையும் சமைக்க ஆயத்தமானோம்.

எங்களில் சிலர் மரங்களில் சாய்ந்து கொண்டும் மற்றவர்கள் புற்தரையில் மல்லாந்து படுத்துமிருந்தோம். எல்லோருக்குமே தூக்கக் கலக்கம். எல்லோரது கண்களும் வீங்கிச் சிவந்திருந்தன. உணவு வேகும் வரை காத்துக்கொண்டிருந்த நாங்கள் யாருமே அடுப்பிலிருக்கும் கிடாரத்திலிலிருந்து கண்களை எடுக்கவில்லை. திடீரென ஓர் அலறல். எல்லோரும் திடுக்கிட்டுத் திரும்பி எங்கள் விருந்தினர் யாரெனப் பார்த்தோம். எதிரி சத்தமில்லால் எங்களுக்கு மிக அருகிலேயே வந்து விட்டான் என அடித் தொண்டையால் குழறிக்கொண்டே ஒரு தோழன் தலை தெறிக்க ஓடிவந்தான். மரணம் சில மீற்றர்கள் தொலைவில் அணிவகுத்து வருகிறது. எங்களில் சிலர் அடுப்பில் கொதிக்கும் கிடாரத்தினுள் கைகளை விட்டு வெந்தும் வேகாத பருப்பை அள்ள முயன்றோம். நாங்கள் எங்களது அடுத்த வேளை உணவுக்காக இனிச் சில நாட்கள் கூடக் காத்திருக்க வேண்டியிருக்கலாம். கைகளிலும் நாவுகளிலும் சுடுநீர் வழிய வழிய நாங்கள் எங்களால் தூக்கக் கூடியவைகளைத் தூக்கிகொண்டு தப்பி ஓடினோம். மரங்களின் மறைவில் தரையில் படுத்துக்கொண்டோம். ஒரு நல்ல பாதுகாப்பான இடத்திற்கு வந்து சேர்ந்ததும் தான் எங்களால் நிதானிக்க முடிந்தது. எங்கள் தோழர்களில் சிலர் காணாமற் போயிருந்தார்கள். அவர்களின் பசி அவர்களை பருப்புக் கிடாரத்தைக் கைவிட்டு எங்களுடன் ஓடிவர அனுமதிக்கவில்லைப் போலும்

பல வாலிப வயதுப் போராளிகளால் நாங்கள் போரில் வெற்றி பெறுவோமென நம்பமுடியவில்லை. தங்கள் தோழர்கள் ஒருவர் பின் ஒருவராக மரணிப்பதை அவர்கள் கண்டார்கள். அவர்களின் முறை வருவதற்காகச் சாவு காத்துக்கொண்டிருப்பதும் அவர்களுக்குத் தெரியும். சாவின் நிழல் அவர்களின் தலைகள் மீதும் கவிந்திருந்தன. அவர்களில் பலர் NRAயிலிருந்து தப்பிபோடுவதற்கான தருணங்களுக்காகக் காத்திருந்தனர். குழந்தைப் போராளிகளின் கதையோ வேறு மாதிரியானது. எங்களால் அப்போது நாங்கள் எதிர் கொண்டிருந்த ஆபத்துக்களின் பரிமாணங்களைச் சரிவரப் புரிந்து கொள்ள முடியவில்லை. தவிரவும் குழந்தைப் போராளிகளின் விசுவாசம் எல்லையற்றது. இறுதி வெற்றி குறித்து அவர்கள் கண்மூடித்தனமான நம்பிக்கையை வைத்திருந்தார்கள். எங்களிடம் இழப்பதற்கு எதுவுமில்லை. எங்களுக்கு NRAயை விட்டால் போக்கிடமுமில்லை. போர் முனைகளில் ஏற்படக் கூடிய ஆபத்துக்களைப் பற்றிப் பெரியவர்களுக்கு முழுமையாகத் தெரிந்திருந்தது. அவர்கள் களங்களில் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவே தங்களது முழுச் சக்தியையும் செலவழித்தார்கள். எதிரிக்குப் பதில் சொல்வதற்குக் குழந்தைப் போராளிகள் நாங்களே களங்களில் முன் வரிசையில் நிறுத்தப்பட்டடோம்.

குழந்தைப் போராளி - 27



உரசிச் சென்ற மரணம்
கிராமத்தை நோக்கி நடக்கையில் நிலைமை சுமுகமாகவில்லை என எங்கள் உள்ளுணர்வு கூறிற்று. அந்தக் கிராமவாசிகளில் ஏறத்தாழ எல்லோருமே NRAயின் ஆதரவாளர்கள் தான். நாங்கள் சுற்றுப்புறத்தினைக் கூர்ந்து கவனித்துக்கொண்டே நகர்ந்தோம். கிராமத்தை நெருங்க நெருங்கத் துர் நாற்றம் அதிகரித்துக் கொண்டே வந்தது.

கிராமத்தினுள் நுழைந்தபோது நாங்கள் கண்ட கோரக் காட்சி மனதை உலுக்கிப் போட்டது. எங்கள் தோழர்களின், ஆதரவாளர்களின் பிரேதங்கள் அங்கே சிதறிக் கிடந்தன. அவர்களின் உடலிலிருந்து குருதியும் நிணமும் வழிந்து கொண்டிருந்ததன. என் கண் முன்னே விரிந்து கிடந்த உண்மையை ஜீரணிக்க முடியாமல் நான் திணறிப்போனேன். இது ஒரு ஆரம்பம் மட்டுமே என எனது உள்ளுணர்வு சொல்லிக்கொண்டது. இனி எது வந்தாலும் போனாலும் எனது நிலைமை மாறப்போவதில்லை. எனது வாழ்க்கையில் சில விடயங்கள் என்றுமே மாறப் போவதில்லை. தப்பியோடுவதற்கு இடமே இல்லை. தப்பியோடிய சில வாலிப வயதுப் போராளிகளும் NRAயால் உடனடியாகவே கண்டு பிடிக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டு எல்லோரது கண் முன்னேயும் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். அந்தச் சாவொறுப்புகள் இயக்கக் கட்டுப்பாட்டைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளாம். இதனால் எந்தக் குழந்தையுமே தப்பியோட முயலவில்லை.

என்னைப் போலவே மற்றக் குழந்தைகளும் அதிர்ச்சி தரும் அந்த இழவுக் கிராமத்தைப் பார்த்துத் திடுக்கிட்டுப் போய் மரணம் பற்றிய அச்சத்தில் மூழ்கியிருந்தனர். என்ன நடந்திருக்கலாமென நாங்கள் ஆராய்ந்து கொண்டிருக்கும் போதே வானத்தில் உலங்கு வானூர்திகளின் இரைச்சல் எழுவதைக் கேட்டுப் பதறிப் போனோம். நாங்கள் தரையில் விழுந்து படுத்துக்கொள்ள வேண்டும். பாதுகாப்பான இடங்களைத் தேட வேண்டும். அல்லது வானம் இடிந்து தலையில் விழும். உலங்கு வானூர்திகள் ஆகாயத்திலிருந்து மூர்க்கமான தாக்குதல் ஒன்றை நிகழ்த்திவிட்டு வந்த வேகத்திலேயே திரும்பிப் போயின. எல்லோரும் எழுந்து நின்று உலங்கு வானூர்திகளின் தாக்குதலிலிருந்து தாங்கள் காயமின்றித் தப்பித்தார்களா எனப் பார்த்துக்கொண்டனர். நானும் எனக்குக் காயமேதும் படவில்லை என உறுதிப்படுத்திய பின் தோழர்களுக்கு என்ன நடந்தது என ஓடியோடிப் பார்த்தேன். ஒரு தோழன் தரையிலிருந்து எழ மனமில்லாதவன் போலக் கிடந்தான். நான் அவனருகில் சென்று பார்த்தபோது தூங்குபவன் போல அவன் சலனமில்லாமல் கிடந்தான். மற்றய தோழர்களும் வந்து வீழ்ந்து கிடந்தவனைச் சூழக் கண்களைத் தாழ்த்திக்கொண்டு நின்றார்கள்.எங்கள் எல்லோருக்கும் நேசமான, எப்போதும் உற்சாகமாகக் காணப்படும் சிறுவனவன். எந்த நேரமும் அவனிடம் ஆறுதல் வார்த்தைகள் தயாராகயிருக்கும். நாங்கள் துணிச்சலானவர்களாக இருக்க வேண்டும், அச்சத்தை எங்களிடம் அணுகவே விடக்கூடாதென அவன் எப்போதும் சொல்லிக் கொண்டேயிருப்பான்.

எங்களை அழைத்துச் செல்ல வந்த எங்களது சார்ஜன் அந்தச் சிறுவன் இறந்து விட்டான் எனச் சொன்னார். இறந்தவனுக்காகக் கண்ணீர் விட அவகாசமில்லை. எங்களது படைப் பிரிவோடு போய் இணைந்து கொள்வதற்காக நாங்கள் உடனடியாகவே புறப்பட வேண்டும். அவனுக்காக என்னிடமிருந்த கண்ணீரைச் சிந்துவதற்குக் கூட நிலைமைகள் என்னை அனுமதிக்கவில்லை. இறந்த எங்கள் தோழர்களின் நினைவுகள் எங்களின் பசியையும் தாகத்தையும் மறக்கடிக்கச் செய்துவிட்டன. மீண்டும் மீண்டும் உயிரற்ற உடல்கள் என் கண்களுக்குள்ளேயே நின்றன. ஒரு நாளில்லாவிட்டாலும் ஒரு நாள் என் கதையும் இப்படித்தான் முடியுமென நினைத்துக்கொண்டேன்.

குழந்தைப் போராளி - 26



முன்னோக்கிப் பாய்தல்


ங்கள் படைப்பிரிவு 'ருவென்சோரி' க்கு அருகிலே நிலை கொண்டிருந்தது. இன்று ஓய்வு நாள். சில நாட்களாகவே சூரியன் கடுமையாகத் தகித்துக் கொண்டிருந்ததால் நாங்கள் வாடிப் போயிருந்தோம். பிற்பகல் மூன்று மணியளவில் தலைவரின் இளைய சகோதரன் ஸலிம் சலேம் - அவர் எங்கள் தளபதியும் கூட - பாசறைக்கு வந்தார். போரினைத் தீவிரப்படுத்தவும் எங்களுக்கு உற்சாகமளிக்கவும் உணர்ச்சிப் பெருக்கான உரை ஒன்றினையும் ஸலிம் சலேம் நிகழ்த்தினார். நாங்கள் அரசினை வீழ்த்துவதற்கும் மில்டன் ஒபோடேயின் கைகளிலிருந்து அதிகாரத்தைப் பிடுங்குவதற்குமான காலம் கனிந்து விட்டதென மீண்டும் மீண்டும் அவர் சொன்னார். இதைச் சொல்லும் போதெல்லாம் அவரது முகத்தில் புன்னகை துள்ளியது..

அவரது நம்பிக்கைக்குக் காரணம் இருந்தது. நாங்கள் முக்கியமான படைக்கலன்கள் பலவற்றை மில்டன் ஒபோடேயின் படையினரிமிருந்து கைப்பற்றியிருந்தோம். இதனால் இராணுவத்தினரின் மனவுறுதி சிதைந்து அவர்களின் போரிடும் திறன் குறைந்து போயுள்ளதாகச் ஸலிம் சலேம் எங்களிடம் கூறினார். அவரது வருகையும் உரையும் எங்கள் மத்தியில் உற்சாகத்தையும் போர் வெறியையும் கிளர்த்தின. சந்தோசக் கூச்சல்களும் பாட ல்களும் அவர் மேடையைவிட்டு இறங்கும் போது ஓங்கி ஒலித்தன.

அடுத்த தாக்குதலுக்கு ஆயத்தமாகுமாறு எங்களுக்கு உத்தரவு கிடைத்தது. தாக்குதல் நடவடிக்கை பற்றிய அறிவுறுத்தலும் தரப்பட்டது. நாங்கள் நாளைக்கு இங்கிருந்து நான்கு கிலோமீற்றர்கள் தொலைவில் அமைந்துள்ள இராணுவத் தளத்தைத் தாக்க வேண்டும். தாக்குதல் விபரங்கள் அறிவிக்கப்பட்டதும் மரணத்தைப் பற்றிய எந்த எண்ணத்தையும் அச்சத்தையும் என்னுள் எழவிடாமலிருக்க நான் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது.

பின்பு நான் பாசறையின் மற்றப் பக்கத்திற்குச் சென்று எனது துப்பாக்கியைச் சரி பார்த்துக்கொண்டேன். என்னுடைய துப்பாக்கி Uzi தானியங்கி வகையைச் சேர்ந்தது. இது AK47லும் சிறியது. எனது சீருடை மிகப் பெரிதாக இருந்ததால் கால் பக்கத்திலிருந்த பைகளைக் கிழித்தெடுத்து விட்டு உயரத்தினைக் குறுக்கித் தைத்துக் கொண்டேன். எனது சீருடையை மீண்டும் அணிந்தபோது அது எனக்குக் கச்சிதமாகப் பொருந்தியது. சரிபாதியாகப் பாரம் குறைந்திருந்த சீருடை எனது தன் நம்பிக்கையையும் உசுப்பி விட்டது. குறைந்த சுமை போரில் உயிரைக் காப்பாற்றுவதற்கான முதல் நிபந்தனை என நான் கற்றிருந்தேன். மற்றய சிறுவர் சிறுமியர்களைப் போலவே எனக்கும் போர் பற்றிய அச்சமிருந்தாலும் அதனை நான் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. அச்சத்தை ஓர் உணர்வாகவே நான் மதிக்க விரும்பவில்லை. வீட்டைப் போலவே இங்கும் உரக்கக் கத்தியும் சண்டையிட்டும் தான் அடி உதைகளிலிருந்து என்னைக் காப்பாற்றிக்கொள்ள முடிந்தது. பாசறையில் ஒருவரின் கருத்தை, உணர்வை இன்னொருவருடன் பரிமாறிக் கொள்ளுமளவிற்கு யாரும் யாரையும் நம்புவதில்லை. இந்த நிலை எனக்குப் புதியதல்ல. போதியளவு அனுபவம் என்னிடம் ஏற்கனவே கைவசம் இருந்தது.

தாக்குதலுக்கு முந்திய இரவில் பாசறைத் தீயைச் சுற்றி நாங்கள் வட்டமாக உட்கார்ந்திருந்தோம். பெண் போராளி ஒருத்தி எங்களைச் சிலமணி நேரங்கள் தூங்கும்படி கட்டளையிட்டாள். சாவுக்கான ஆயத்தம் போல படுக்கைக்குப் போன நாங்கள் மாற்ற முடியாத முடிவினைச் சிலமணி நேரங்களாவது தள்ளிப் போட்டோம். கொசுக்களின் தொல்லையா அல்லது எனது கவலைகளா என்னைத் தூங்கவிடாமல் தடுத்தது என என்னால் நிச்சயப்படுத்த முடியாதிருந்தது. படுக்கையில் அங்குமிங்குமாகப் புரண்டுகொண்டிருந்த என்னால் தூங்க முடியாதிருந்தது. தூங்கும் முயற்சியைக் கைவிட்ட நான் மல்லாந்து படுத்து நட்சத்திரங்கள் ஒளிரும் வானத்தைப் பார்த்துக் கொண்டே அந்த நீண்ட இரவினின் முடிவில் ஓடப்போகும் இரத்த ஆற்றை எண்ணி உளைச்சலில் கிடந்த என் மனதை ஒருநிலைப் படுத்த முயன்றேன்.

விடிவதற்கு முன்னாகவே நிலவும் நட்சத்திரங்களும் எங்கள் பாதையினை ஒளி ஊட்டிக் கொண்டிருக்க பற்றைக் காடுகளை ஊடறுத்துக் கொண்டு இராணு முகாமை நோக்கி நகர்ந்து நிலையெடுத்துக் கொண்டோம்.தாக்குதலைத் தொடங்குவதற்கான சமிக்ஞையை எதிர் நோக்கிக் காத்திருந்தோம். அடுத்த அரைமணி நேரம் வரை நுளம்புகளின் கடியைத் தாங்கிக்கொண்டு அவைகளுக்கு இரத்ததானம் செய்ய வேண்டியிருந்தது. நுளம்புகள் கடிக்கும் வலியைச் சமாளிக்க மூடிய வாயினுள் எனது பற்களைத் தான் நான் கடித்துக் கொள்ள முடிந்தது. அமைதி காக்க வேண்டிய கட்டாயம்.

மரங்கள் எங்களுக்குப் பாதுகாப்பாக இருந்தன. எங்களுக்கு மிக அருகாமையில் எங்களின் எதிரி. முகாமினுள் தூங்கும் எதிரியை எங்களால் பார்க்க முடிந்தது. இராணுவ முகாமும் எவ்விதச் சத்தமுமின்றி அமைதியாகவே இருந்ததது. நான் மூச்சைப் பிடித்துக் கொண்டே இரவின் அமைதியைக் கலைக்கப் போகும் அந்த ஒற்றைத் துப்பாக்கி வேட்டிற்காகக் காத்திருந்தேன். அதுதான் எங்களுக்கான சமிக்ஞை. முகாமினுள் புகுந்து இராணுவத்தினர் ஒவ்வொருவரையும் அழித்தொழிப்பதற்கான் அறைகூவல்.

நிசப்தத்தைக் கிழித்துக்கொண்டு ஒற்றை வேட்டுப் பறந்தது.ஆண்களும் பெண்களும் இராணுவ முகாமை விட்டு வெளியே நிர்வாணமாக ஓடி வந்தனர். வந்த வேகத்திலேயே இரத்தக் கோளமாய் அவர்களின் உடல்கள் தரையில் குவிந்தன. இன்னும் அவர்களது உடைகளை அவர்களது கைகள் பிடித்திருந்தன. துப்பாக்கி வேட்டுக்கள் ஆடு மாடுகளையும் எழுப்பிவிட்டிருந்தன. அவைகளின் கதறல், பறவைகளின் இரைச்சல், மனிதர்களின் வெறிக் கூச்சல், மரண ஓலம் என ஒரு விநோதமான ஒலிக்கலவை மூன்று - நான்கு மணி நேரங்கள் எங்களைத் தொடர்ந்து சூழ்ந்திருந்து பின் மெல்ல மெல்ல அடங்கியது.

நாங்கள் முகாமைக் கைப்பற்றிய போது பரிதாபமான காட்சியொன்று என் கண் முன்னே விரிந்து கிடந்தது. ஆடுகளும், கோழிகளும், இராணுவத்தினரது பிரேதங்களும் அவர்களது மனைவிமார்களது பிரேதங்களும் தரையெங்கும் பரவிக் கிடந்தன. வழமை போலவே ஆயுதங்களையும் உணவுப் பொருட்களையும் நாங்கள் துரிதமாகச் சேகரித்தோம். இவைகளைச் சிறுவர் சிறுமிகளான நாங்கள் தான் சுமந்து செல்லவேண்டும். பிடிபட்டிருந்த கைதிகளும் வழமை போலவே முதுகுகளின் பின்னால் கைகளைச் சேர்த்துக் கட்டப்பட்டிருந்தனர். எங்கள் பாசறைக்கு ஓட்டிச் செல்லப்பட்ட இவர்கள் தங்களின் சவக்குழிகளைத் தாங்களே வெட்ட நிர்பந்திக்கப்பட்டனர். அதுவும் வழமை தான். எங்கள் தளபதிகளில் சிலர் குழந்தைகளான எங்களிடம் சிறைப் பிடிக்கப்பட்டவர்களின் கண்களுக்குள் காறி உமிழச் சொன்னார்கள். நாங்களும் உடனடியாகக் கட்டளையை நிறைவேற்றினோம். அதுவும் மெல்ல மெல்ல வழமையாக மாறிற்று. 'நாங்கள் துப்பாக்கிக் குண்டுகளை விரயம் செய்யப் போவதில்லை' என்ற செய்தி கைதிகளுக்குச் சொல்லப்பட்டது. கைதிகளின் சவக்குழிகளைக் கைதிகளே தோண்டிய பின்பு எங்களது படைப்பிரிவில் பலசாலிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்கள் 'அக்கும்பி'யால் கைதிகளின் மண்டைகளைப் பிளப்பார்கள். 'அக்கும்பி' என்றால் குண்டந்தடி. எதிரியை அவனே தோண்டிய குழியின் விளிம்பில் நிற்கவைத்து எதிரி குழியினுள் செத்து அல்லது குற்றுயிராக விழும்வரை பிடரியிலும் தலையிலும் மாறிமாறி அடித்துக் கொண்டேயிருப்பார்கள்.

இந்தச் சடங்குகள் முடிந்ததும் நகர்வுக்கான நேரமாகிவிடும். நாங்கள் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கவேண்டும் . இல்லாவிட்டால் ஆயுத பலம் வாய்ந்த எதிரிகள் எங்களைச் சுலபமாக அழித்து விடுவார்கள். சில சமயங்களில் தாக்குதல்களின் பின்பு ஒரு நாள் முழுவதும் நாங்கள் தொடந்து நடந்து கொண்டேயிருக்க வேண்டியிருக்கும். ஓய்வுக்கோ தூக்கத்துக்கோ அங்கே இடமில்லை. அரச படையினரின் உலங்கு வானூர்திகள் எங்கள் தலைகளின் மேல் சதா உறுமிக் கொண்டே இருக்கும். இவைகளில் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டிருக்கும். நாங்கள் உடனடியாகச் சரணடைய வேண்டுமென்றும் இல்லாவிட்டால் முற்றாக அழிக்கப்படுவோமென்றும் எச்சரிக்கைகளை ஒலிபரப்புவார்கள். ஆனால் எங்களால் அப்படிச் சரணடைந்து விட முடியாது. ஏனெனில் நாங்கள் ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி வந்தாயிற்று. இறுதி இலட்சியத்தை அடையும் வரை விடாமல் போர் புரிவதென உறுதிப் பிரமாணமும் செய்திருந்தோம். யாருமே ஒரு குழந்தையைப் போல விசுவாசமாக இருக்க முடியாது. அதிலும் ஓர் அநாதைக் குழந்தையைப் போல விசுவாசமாக இருக்க முடியாது. யாருக்காக நாங்கள் விட்டுக் கொடுக்க வேண்டும்? நாங்கள் எங்கு தப்பியோட முடியும்? எங்களது ஒரே சிந்தனை வெயில் தகிக்கும் இந்தப் பற்றைக் காட்டில் பெரியவர்களுடைய வேகமான நடைக்கு ஈடு கொடுத்து வேகமாக நடந்து செல்வதிலேயே இருந்தது. வெயிலில் வதங்கிப் போன குழந்தைகள் தாகத்தால் தவித்தோம். என்னால் இனி மேலும் தாகத்தைப் பொறுக்க முடியாதென்ற நிலை. நல்ல வேளையாக எங்களது தளபதி அடுத்து வரும் கிராமத்தில் தண்ணீர் எடுப்பதென்று முடிவெடுத்தார்.

குழந்தைப் போராளி - 25


இது குழந்தைகளின் விளையாட்டல்ல

ரச இராணுவத்தின் மிகப் பெரிய படையணி ஒன்றை நாங்கள் சில நாட்களிலேயே எதிர் கொண்டோம். எங்களுக்கிடப்பட்ட கட்டளைப்படியே நாங்கள் மணலில் "ஒன்றுமறியாது" விளையாடிக்கொண்டிருந்தோம். வந்துகொண்டிருந்த அரச படையினரின் வாகனத் தொடரணி விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளைக் கண்டதும் நிறுத்தப்பட்டது. படையினர் வாகனங்களிலிருந்து கீழே குதித்தனர். அதுதான் நாங்கள் விரித்திருந்த வலையில் அரச படையினர் விழுந்ததற்கான அடையாளம். நாங்கள் எங்கள் படைப் பிரிவினர் பதுங்கியிருந்த திசையை நோக்கி ஓட்டம் பிடித்தோம். நாங்களெல்லோரும் பாதுகாப்பான இடத்திற்கு ஓடிப் போனதும் மற்றவர்கள் அரச படையினரைத் தாக்கத் தொடங்க வேண்டும். ஆனால் திட்டமிட்டபடி காரியங்கள் நடக்கவில்லை. துப்பாக்கிகள் நாங்கள் பதுங்குமிடத்திற்குப் போய்ச் சேர்வதற்கு முன்னதாகவே வெடித்ததால் நாங்கள் மரங்களின் பின்னால் பதுங்கிக் கொண்டோம். வீதியும் அதன் மேலிருந்த எல்லாமும் துண்டு துண்டாக வெடித்துச் சிதறின. வெடிச் சத்தங்கள் காதைச் செவிடுபடுத்தின. இதுவரை இவ்வாறான ஒரு அனுபவமுமே இல்லாத எனக்கு ஈரற் குலை நடுங்கியது. இது விளையாட்டாகத் தெரியவில்லை. நான் எழுந்து செல்ல எத்தனிக்க என் தோழனொருவன் என்னைப் பிடித்திழுத்து மரத்தின் பின்னே அமுக்கி வைத்திருந்தான்.

சண்டை முடிவடைந்து எங்கள் படைப்பிரிவு தாக்குதலில் வெற்றி பெற்றது. கொல்லப்பட்ட இராணுவத்தினரின் உடைகளும் காலணிகளும் இடம் மாறி அவற்றின் புதுச் சொந்தக்காரர்களை அலங்கரித்தன. எனக்கோ தலை சுற்றியது. இதுதானா விடுதலை? இதைத் தானா நாங்கள் விடுதலைப் போராட்டம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்? இப்படியானவர்களுடன் நான் சேர்ந்திருப்பதையும் இறந்த உடல்களிலிருந்து பொருட்களை அபகரிப்பதையும் என்னால் ஒரு கெட்ட கனவில் கூட ஏற்றுக்கொள்ள முடியாது. காயமடைந்தவர்கள் வீதியில் கிடப்பதையும் உதவி கோரி அலறுவதையும் பார்த்த எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர்களைப் பகைவர்களாகப் பார்க்க என் மனம் இடம் கொடுக்கவில்லை. சரணடைந்த இராணுவத்தினரின் கைகள் அவர்களின் முதுகுகளிற்குப் பின்னால் வளைத்துக் கட்டப்பட்டிருந்தன. அவர்கள் வலியால் துடித்துகொண்டிருந்தனர். எனது தோழர்கள் சரணடைந்த இராணுவத்தினரைச் சித்திரவதைகள் செய்துகொண்டிருந்தனர். தங்களது அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டோரைத் துன்புறுத்துவதும் சித்திரவதை செய்வதும்தான் மனிதனுக்கு எல்லாவற்றையும் விட அதிக இன்பத்தைக் கொடுக்கும் என்ற எனது கருத்திற்குப் பலம் சேர்ப்பதாகவே நிகழ்வுகள் அமையலாயின. இந்தக் கோணத்தில் பார்த்தால் எனது புதிய "குடும்பம்" பழைய குடும்பத்திற்குக் கிட்டவே நிற்கமுடியாது.

பிடிபட்டவர்கள் உதைக்கப்பட்டும் முகத்தில் காறி உமிழப்பட்டும் முகாமிற்குக் கொண்டுவரப்பட்டர்கள். அங்கு அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். எங்களின் பெருந் தலைவர் யோவேரி முசேவெனி எங்களுக்காக முகாமில் காத்துக்கொண்டிருந்தார். அவர் எங்களை ஒரு புகழுரையுடன் வரவேற்றார். அவரின் பேச்சின்படி நாங்கள் சிறுபொழுது மண்ணில் விளையாடியே பெரிய விடுதலை வீரர்களாகியிருந்தோம். அன்று இரவுணவிற்காகத் தலைவருடன் ஒரே மேசையில் அமரும் 'பாக்கியமும்' எங்களுக்குக் கிட்டியது.

இரவுணவு முசேவெனியின் பிரத்தியோகக் குடிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முடிவில் எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பரிசு தரப்பட்டது. மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இராணுவ அதிகாரிகளின் சீருடைகளும் காலணிகளுமே எங்கள் பரிசுப் பொதியினுள் இருந்தன. அன்றிரவு எங்களக்கு காவற் கடைமை தரப்படவில்லை நீண்ட நேரம் தூங்க அனுமதி கிடைத்தது.

அடுத்த நாள் காலையில் நாங்கள் எங்கள் பாசறையை ஒரு புதிய இடத்தை நோக்கி நகர்த்தும் ஆயத்தங்களில் இறங்கினோம். ஒரு தாக்குதலின் பின்பும் அதே இடத்தில் தொடர்ந்து நிலை கொண்டிருந்தால் இராணுவத்தினர் ஆட்டிலரிப் படைகளுடனும் உலங்கு வானூர்திகளுடனும் எங்களைச் சுற்றிவளைத்து விடக்கூடும்.

உயரே கயிற்றிலாடும் ஒரு 'சேர்க்கஸ்' கலைஞனின் லாவகத்தோடு எங்கள் படை நகரத் தொடங்கியது. காலணிகள் முழங்கால்கள் வரை உயர்ந்திருக்க அளவில் மிகப் பெரிய சீருடைகள் எங்களை முற்றாகவே விழுங்கிவிட்டிருந்தன. இந்தக் கோலத்துடன் காட்டுப் பாதையில் அணிவகுத்துச் செல்வதென்பது இலேசான காரியமல்லவே. குழந்தைகள் எல்லோரும் களைத்துப் போயிருந்தனர். நல்ல வேளையாக ஒரு பெண் போராளி தலைவருடன் துணிச்சலாக வாதிட்டு ஒரு சிறிய ஓய்விற்கும் உண்பதற்கும் அனுமதி வாங்கினாள். வழமையைப் போலவே பயறும் சோளமும் தான் சாப்பாடு. குழந்தைகள் நீரைத் தேடியும் நெருப்பிற்கு விறகு தேடியும் போகத் தலைவர் தனது தளபதிகள் புடைசூழ மர நிழலில் இளைப்பாறிக்கொண்டிருந்தார்.

தளபதிகள் குழாமில் ஒரு சிறுமியுமிருந்தாள். 'முக்கோம்போஸி' என இவள் அழைக்கப்பட்டாள். இதன் கருத்து 'விடுவிக்கப்பட்டவள்' என்பதாகும். அரச படையினர் இவளது குடும்பத்தை அழித்தொழித்தபோது NRA இவளைச் சுவீகரித்துக் கொண்டது. இராணுவத்திடமிருந்து இவள் தப்பித்தது ஏறத்தாழ ஒரு அதிசயம் தான். இராணுவத்தினரே இவளது உயிரைக் "காப்பாற்றியதாகவும்" பேசப்படுவதுண்டு. படையினர் தாக்கப்படும் ஒவ்வொரு முறையும் அவர்கள் இவளை ஜீப்பின் முன்னால் கட்டிவைப்பார்களாம். NRAயின் ஒரு வெற்றிகரமான தாக்குதலில் இராணுவத்தினர் கொல்லப்பட இவள் காப்பாற்றப்பட்டாள். வெடி குண்டுகளின் சத்தத்தில் அவள் தனது பெயரைக் கூட மறந்து போயிருந்தாள் . 'முக்கோம்போஸி' இரண்டு விடயங்களுக்காக எங்களிடையே பிரபலமா கியிருந்தாள். அவள் அசாத்தியமான நெஞ்சுரம் கொண்டவள். அடிபாட்டின் போது அவள் RPGயைத் தாங்கித் துணிச்சலுடன் போரிடுவாள். அவள் சிறிய ஆயதங்களைச் சீண்டுவதே கிடையாது. RPG ஒரு 'பஸூக்கா'அளவிற்குப் பெரியது.

முக்கோம்போஸி - நரோன்கோ இருவரும் உயிர்த் தோழிகள். நரோன்கோ முகண்டா பழங்குடியைச் சேர்ந்தவள். ருவேரோ மாவட்டத்திலிருந்து இவளைப் போல பலர் NRAயில் சேர்ந்திருந்தார்கள். ஓர் இரவு பாசறையில் நாங்கள் நெருப்பைச் சுற்றி உட்கார்ந்திருந்தபோது நரோன்கோ தான் ஏன் NRAயில் போரிடுகிறாள் என்று கூறினாள். NRA யினரைத் தேடி இராணுவத்தினர் இவளது வீட்டைச் சோதனையிட்டனர். இவளது கணவன் இராணுவத்தினரால் உதைக்கப்பட்டும் சித்திரவதை செய்யப்பட்டும் கைகள் முதுகின் பின்னே கட்டப்பட்ட நிலையில் வீட்டின் முன்னே சுட்டுக் கொல்லப்பட்டான். நரோன்கோவின் கண் முன்னேயே அவளது இரட்டைக் குழந்தைகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். தனது கணவனையும் குழந்தைகளையும் கொன்றவர்களுக்குத் தான் தண்டனை வழங்கப் போவதாக அவள் வெஞ்சினத்துடன் சங்கற்பம் செய்து கொண்டாள். அவள் தனது புதிய கணவனாக AK 47ஐ வரித்துக் கொண்டாள். அவள் தனது சங்கற்பத்தை என்றுமே மறந்ததில்லை. குழந்தைப் போராளிகளின் பெயரால் நான் கூறுகின்றேன், அவளது அன்பான நடத்தையை என்னால் என்றுமே மறக்கமுடியாது,

குழந்தைப் போராளி - 24



இரண்டாவது பகுதி:


---------------------------------------------------------------
நான் குழந்தைப் போராளி
--------------------------------------------------------------


போராளி சைனா

நான் புகையிரதத்தை விட்டு இறங்கியபோது இன்னும் விடிந்திருக்கவில்லை. புகையிரத நிலையத்தில் ஆட்கள் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தனர். ஒரு வீடு கூட அந்தச் சுற்று வட்டாரத்தில் இல்லை. ஒன்றுமே யோசிக்காது நடக்கத் தொடங்கினேன். தூரத்தில் ஒரு வெளிச்சம் தெரிந்தது. நான் வெளிச்சத்தை நோக்கி நடந்தேன். ஒரு மனிதனின் முரட்டுக் குரல் என்னைத் தடுத்து நிறுத்தியது.
"நில்! யார் நீ?"
"நான்தான்" வெகுளித்தனமாகப் பதில் சொன்னேன்.
"கிட்டே வா" அந்த முரட்டுக் குரல் கட்டளையிட்டது. நான் இன்னும் சில அடிகளை முன்னே வைத்தேன்.
"நடுச் சாமத்தில் இங்கே என்ன செய்து கொண்டிருக்கின்றாய்?"
"நான் எனது அம்மாவைத் தேடுகின்றேன்"
"உனது அப்பா எங்கே?" கேட்டபடியே அந்த மனிதர் தன் கையிலிருந்த 'டோர்ச்'விளக்கை என் முகத்திற்குப் பிடித்தார்.
"அவர் இறந்து விட்டார்" நான் பொய் சொன்னேன்.

நான் அவரது கேள்விக்குப் பதிலளித்துக் கொண்டிருக்கும்போதே துப்பாக்கிகளுடன் பலர் புதர்களினுள்ளிருந்து வெளியே வந்தனர். அவர்களது உடைகள் அழுக்காகவும் கிழிந்துமிருந்தன. அவர்கள் தங்களுக்குள்ளே என்னைப் பற்றிக் கதைத்துக்கொண்டே ஆள் மாறி ஆள் என் முகத்தை உற்றுப் பார்த்தார்கள். என் கால்கள் நடுங்க தொடங்கின. இவர்கள் என்னை என்ன செய்யப் போகிறார்கள்? அவர்களில் ஒருவர் எனது மொழியிலேயே என்னை விசாரணை செய்தார். அது எனக்குச் சற்று ஆறுதலாக இருந்தது, எனது மறுமொழிகளும் அவர்களுக்குத் திருப்தியாக இருந்தன. அவர் என்னைத் தூங்கும்படி சொன்னார். என்னால் அவர் சொன்னதை விளங்கிக் கொள்ளமுடியவில்லை. ஏனெனில் தூங்குவதற்கு வீடெங்கே? கட்டிலெங்கே? அவர் சிரித்துக்கொண்டே தும்பாய்க் கிழிந்திருந்த இரண்டு போர்வைகளை நிலத்தில் விரித்து விட்டு அதில் படுத்துக்கொள்ளும்படி சொன்னார். போர்வைகளில் துர் நாற்றம் வீசியது. கொசுக்களின் தொல்லையிலிருந்து தப்பிக்க வேறு வழியின்றிக் கால் முதல் தலைவரை இழுத்துப் போர்த்திக்கொண்டேன்.

" லெப்ட்-ரைட்- லெப்ட்-ரைட்" என்ன இது காதைக் கிழிக்கும் சத்தம்? யார் கத்துகிறார்கள்? விடிகாலையிலேயே ஏன் என்னைக் கூச்சலிட்டு எழுப்புகிறார்கள்? தலையைத் தூக்கிப் பார்த்தேன். இராணுவச் சீருடைகளில் சிறுவர்களும் சிறுமிகளும் அணிவகுத்துச் சென்றனர். கனவு காண்கிறேனா அல்லது எனக்குத்தான் மூளை கலங்கி விட்டதா? கடந்த இரவு நடந்தவற்றைப் பற்றி யோசிக்கையில் நான் நிலைமையை மெதுவாகப் புரிந்து கொள்ளத் தொடங்கினேன்.இவர்கள் என்னையும் இந்த விளையாட்டில் சேர்த்துக் கொள்வார்களென நம்பினேன். நேற்றிரவு எனக்குப் போர்வைகளைக் கொடுத்த மனிதர் புன்னகையுடன் என்னிடம் வந்தார். நானும் அந்தச் சிறுவர்களுடன் சேர்ந்து லெப்ட்-ரைட் போடலாமா என நான் கேட்க எனது கால்கள் வீங்கியிருப்பதால் என்னைச் சிறிது ஓய்வெடுத்துக் கொள்ளும்படி அந்த மனிதர் கூறினார்.

சிறிது நேரத்தின் பின்பு பொருட்களையெல்லாம் தூக்கிக்கொண்டு வேறொரு இடத்திற்கு அந்தப் பாசறையை நகர்த்திச் சென்றார்கள். அங்கு என்ன நடக்கிறதென்று எனக்குப் புரியவேயில்லை. யாரும் எனக்கு விளக்கம் சொல்லிப் புரிய வைக்கவுமில்லை. மூன்று நாட்களின் பின் மற்றக் குழந்தைகளுடன் விளையாடுவதற்கு எனக்கு அனுமதி கிடைத்தது. எனக்குப் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. நான் அவர்களுடன் அணிவகுத்துச் சென்றேன். அணிவகுப்பு நடை இரண்டு மணி நேரங்கள் நீண்டு சென்றது. பின்பு பதினைந்து நிமிடங்கள் ஓய்வு வழங்கப்பட்டது. ஓய்வின் போது குழந்தைகள் ஒரு குழுவாகவும் பெரியவர்கள் ஒரு குழுவாகவும் அமர்ந்திருந்தோம்.

அங்குள்ள குழந்தைகளை நான் உன்னிப்பாகக் கவனித்தேன். பலர் அந்தச் சூழ் நிலைக்குப் பழக்கப்பட்டவர்களென்பது அவர்களின் முகங்களிலேயே தெரிந்தது. என்னைப் போல புதியவர்களும் அங்கிருந்தனர். அவர்களுடன் என்னால் சரிவரப் பேச முடியாமலிருந்தது. பெரும்பாலான குழந்தைகள் அந்நிய மொழி பேசுபவர்களாக இருந்தனர். பதினைந்து நிமிட ஓய்வின் பின் பன்னிரெண்டு சிறுவர்கள் துப்பாக்கிப் பயிற்சிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒவ்வொருவருக்கும் ஒரு AK 47 தரப்பட்டது. கட்டளையிடப்பட்ட உடனேயே அந்தக் குழந்தைகள் துப்பாக்கிகளை அக்கு வேறு ஆணி வேறாகக் கழற்றிச் சில விநாடிகளிலேயே அவற்றை மீண்டும் முழுமையாகப் பொருத்தினார்கள். நான் வாயைப் பிளந்தவாறே அந்தக் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

இடைவிடாத இராணுவப் பயிற்சிகளின் மூலம் அவர்கள் என்னை ஆயுதப் போராளியாக உருவாக்கத் தொடங்கினார்கள். மூன்றாவது நாள் நான் சிறுவர் சிறுமியர்களுடன் காலைப் பயிற்சிக்காக மைதானத்தில் நின்றிருந்த போது போது எனது பயிற்சியாளர் என் முன்னே வந்து நின்றார். அவர் ஓங்கு தாங்கான உடலமைப்பைக் கொண்ட கண்டிப்பான மனிதர். அவர் தன் கண்களால் என் இருதயத்தை ஊடுருவ முயன்றார். என்னிடம் பல கேள்விகளைக் கேட்டார். கடைசியாக நான் எனது பெயரைக் கூற வேண்டும். அவர் வட உகண்டாவிலிருந்து வந்திருந்ததால் எனது பெயரை உச்சரிப்பது அவருக்குக் கடினமாக இருந்தது. அவருடைய இயலாமை என் மீது கோபமாய்த் திரும்பியது. நான் தலையைத் தாழ்த்திக் கொண்டேன்.

"ஏய் உன்னைத்தான், சீனர்களைப் போல இடுங்கிய கண் உள்ளவளே என்னை நிமிர்ந்து பார்!" அவர் உறுமினார்.

சடுதியில் நான் தலை உயர்த்திப் பார்த்தேன். என் நாடி நரம்புகள் புடைத்துக்கொண்டன. என்னை வரிசையிலிருந்து முன்னே வரச் சொன்னவர் "சைனா லெப்ட்-ரைட்- சைனா லெப்ட்-ரைட்" என எனக்குக் கட்டளையிட்டார். நான் எல்லோர் கண் முன்னும் தண்டனையை அனுபவிக்க வேண்டியிருந்தது. 'சைனா' என்ற புதிய விநோதமான பெயர் எனக்கு ஒரு பிரபல்யத்தை எனது சக போராளிகளிடம் பெற்றுத் தந்தது. பல குழந்தைகள் என்னுடன் சிநேகிதம் பாராட்டத் தொடங்கினர். பாஷை இடம் கொடுத்த வரைக்கும் நாங்கள் பேசிக்கொண்டோம்.

'கிகாண்டா', 'சுவாஹிலி' ஆகிய இரண்டு மொழிகளையும் நான் வேகமாகப் பயில வேண்டியிருந்தது. எனது மொழியான 'கினியான்கோலே'யை வெகுசிலராலேயே இங்கு புரிந்து கொள்ள முடிந்தது. இங்கு அதிகமான குழந்தைகள் 'பகண்டா' இனக்குழுவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் 'கிகாண்டா' மொழி பேசுபவர்கள். 'சுவாஹிலி' ஓர் இனக்குழுவின் மொழியல்ல. முசேவெனி என்பவர் இதனை உகண்டாவின் தேசிய மொழியென அறிவித்திருந்தார். இதற்கு இரண்டு காரணங்களை அவர் முன்வைத்தார். ஒன்று பொது மொழியை நிறுவுவது, மற்றது இனக்குழு அடையாளங்களை இல்லாதொழிப்பது. அவர் இனக் குழுக்களுக்கு இடையிலான வித்தியாசங்களை மக்களிடமிருந்து அகற்றிவிட முயன்றார். "நாங்கள் எல்லோரும் ஒரு பொதுவான விடயத்திற்காக - எங்கள் விடுதலைக்காக மட்டுமே- போராட வேண்டும் " என்பதே முசேவெனியின் முழக்கமாயிருந்தது.

சைனா என்ற சிறுமி நீண்ட காலம் இராணுவப் பயிற்சியைப் பெறவில்லை. அவள் போராளிச் சிறுமியாகக் குறிப்பிடத்தக்களவு திறமையைக் காட்டியதற்காகவோ அல்லது மிக விரைவாகத் தனது பயிற்சிகளில் தேர்ச்சி பெற்றாள் என்பதற்காகவோ அல்லாமல் NRA யின் போர் முனைகளில் போராளிகள் அவசரமாகத் தேவைப்பட்டார்கள் என்ற காரணத்தினாலேயே போர் முனைக்கு அனுப்பப்பட்டாள். AK 47 துப்பாக்கியையே இன்னும் சரிவரத் தூக்க முடியாத சிறுமிகளில் ஒருத்தியான நான் ஒரு படைத் தளபதியின் பிரத்தியேக ஆயுத உபகரணங்களையும் பொருட்களையும் தூக்கிச் செல்லும் பணிக்கு நியமிக்கப்பட்டேன். நான் தளபதியின் ரவைக் கூடுகளையும் அவரின் சமையல் பாத்திரங்களையும் சுமந்து போர்முனைக்குச் செல்ல வேண்டியிருந்தது.

குழந்தைப் போராளி - 23


அம்மா

நாங்கள் நீண்ட தூரம் நடந்ததன் பின்பாக இரண்டு பெண்கள் தூரத்தில் நடந்து வருவது தெரிந்தது. " ஆஹா நல்லது! அங்கே வருபவர்களில் ஒருத்தி உனது அம்மா" என எனது பஸ் நண்பர் சத்தமிட்டார். நான் அதிர்ந்து போய் வந்த வழியே திரும்பி ஓடிவிடலாமா என நினைத்தேன். அந்தப் பெண்கள் எங்கள் பக்கத்தில் வந்துவிட்டார்கள். எனது நண்பர் அவர்களில் ஒரு பெண்ணிடம் என்னைக் காண்பித்து நான் அவரைத்தான் தேடி வந்திருப்பதாகச் சொன்னார்.

நானும் அந்தப் பெண்ணும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். அவரின் பார்வையில் நான் உறைந்து போனேன். பற்றீசியா படத்தில் காட்டிய பெண்ணிற்கும் இவருக்கும் சம்பந்தமே இல்லாத வித்தியாசமான தோற்றம். வயது வேறு அதிகமாயிருந்தது. உனது அப்பாவின் பெயர் என்ன? உனது சகோதரர்களின் பெயர்கள் என்ன? என அவர் கேள்விகளை அடுக்கினார். எனது மறுமொழிகளுக்கு ஒவ்வொரு முறையும் அவர் தனது புருவங்களை தூக்கினாரே தவிர வேறொன்றும் சொல்லவில்லை. என்னுடன் வந்தவரை அவர் அனுப்பிவிட எத்தனிக்க எனக்குப் பயம் பிடித்துக்கொண்டது. நான் அந்த மனிதருடனேயே திரும்பிப் போய்விடலாமா என யோசித்துக் கொண்டு நிற்கச் சிரித்தபடியே அந்தப் பெண் எனது கைகளைப் பிடித்துக்கொண்டார். தனது பெண் குழந்தைகளில் தனக்கு முன்னால் நின்று கொண்டிருப்பவள் எந்தக் குழந்தையென அவருக்கு நிச்சயமாகவே தெரிந்திருக்கவில்லை. அவரின் முகத்தில் அணு அணுவாய் மகிழ்ச்சி தொற்றி அது அவர் முகமெங்கும் பூரணமாய்ப் படர்ந்தது. அவர் எனது கையை வாஞ்சையுடன் பிடித்துக்கொண்டே நடக்கத் தொடங்கினார்.

"அந்த நாய் எனது குழந்தைகளை ஒருமுறை தன்னும் பார்க்க என்னை அனுமதிக்கவில்லை என்னால் உன்னை அடையாளமே கண்டுகொள்ள முடியவில்லை மகளே" அப்பாவைக் குற்றம் சாட்டியவாறே அவர் வேகமாக நடந்தார். நான் அமைதியாக அவருடன் நடந்தேன். இவர் எனது தாய். நான் உண்மையாகவே எனது அம்மாவைக் கண்டுபிடித்துவிட்டேன்.
மலர்களும் நிழல் தரும் மரங்களும் நிறைந்த பெரிய தோட்டத்தின் மத்தியிலிருந்த பெரிய வீடொன்றிற்கு நாங்கள் வந்து சேர்ந்தோம். அம்மா வேலையாட்களைக் கூப்பிட்டுக் கன்றொன்றை வெட்டி விருந்து சமைக்குமாறு உத்தரவிட்டார். அதன் பின்பு என்னைத் தனியாக விட்டுவிட்டு வந்த வழியிலேயே அம்மா திரும்பிச் சென்றார். வீட்டினுள் நுழைவதற்கு முன்பாக வீட்டை ஒருமுறை சுற்றி வந்தேன். வீட்டினுள் நுழைந்து அம்மாவின் கணவர் இருக்கின்றாரா என ஒவ்வொரு அறையாக எட்டிப் பார்த்தேன். வீட்டினுள் யாருமே இருக்கவில்லை. ஒரு அறையினுள் சென்றபோது மேசை மேல் பணம் கிடப்பதைப் பார்த்தேன். சில நிமிடங்கள் பணத்தைப் பார்த்துக்கொண்டே நின்றேன். திரும்பிப்போக எத்தனிக்கையில் 'ஏதாவது பிரச்சனைகள் வந்தால் பணம் உதவி செய்யும்' என எனது உள்மனம் சொல்லியது. கொஞ்சம் பணத்தினை எடுத்து வைத்துக்கொண்டேன்.

சிறிது நேரத்தில் அம்மா ஆண்களும் பெண்களுமாக ஒரு கூட்டத்தையே அழைத்து வந்தார். பெண்கள் பானைகளுடன் தங்கள் வேலையை ஆரம்பிக்க ஆண்கள் நெருப்பை மூட்டத் தொடங்கினர். அம்மா என நம்பப்பட்ட அந்தப் பெண் கூட்டத்தினரிடையே செல்வதும் ஓடி ஓடிக் கதைப்பதுமாகயிருந்தார். அந்தக் கூட்டத்தினிடையே என் பெயர் பலமாக அடிபட்டது.மெதுவாக இருள் பரவத் தொடங்கியது. விருந்தினர்களில் சிலர் மேசையில் உட்கார்ந்தனர். எஞ்சியவர்கள் தோட்டத்தில் உட்கார்ந்திருந்தனர். எல்லோருமே என்னைப் பார்த்துச் சிநேகிதமாகச் சிரித்தனர். ஆனாலும் அச்சம் என்னைவிட்டு அகன்றதாகயில்லை. இவர்கள் என்னைப் பார்த்து மகிழ்கின்றார்களா? அல்லது என்னையே தின்றுவிடப் போகிறார்களா? குழந்தைகளைச் சாப்பிடும் மனிதர்கள் இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கின்றேன். மறுபுறத்தில் பார்தால் மேசை மீது இருக்கும் உணவை அவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருப்பது தெரிந்தது. எல்லோருக்கும் போதுமான அளவு உணவு வகைகள் மேசையில் குவிந்து கிடப்பதால் தற்சமயத்துக்குக் கவலையில்லை.

விருந்து முடிவடைந்து எல்லோரும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச்செல்ல இரவு வெகு நேரமாயிற்று. இப்போது இந்தப் பெண்ணுடன் நான் தனிமையில் விடப்பட்டுள்ளேன். இவர் தான் எனது அம்மா என உறுதியாகவே நம்பலாம். அம்மா என்னைப் படுக்கைக்குக் கொண்டுவந்து விட்டுவிட்டுத் தனது படுக்கை அறைக்குச் சென்றார். படுக்கையில் படுத்துக்கொண்டே விருந்துக்கு வந்திருந்த மனிதர்களைப் பற்றியும் அவர்கள் திரும்பி வந்து என்னைச் தின்பார்களோ என்றும் சிந்தித்தவாறே படுக்கையில் புரண்டுகொண்டிருந்தேன். வீட்டில் கேட்கும் சிறிய சத்தங்களை எல்லாம் கூர்ந்து கவனித்தேன். யாரோ கத்தியைத் தீட்டுவது போலல்லவா சத்தம் கேட்கிறது? தோட்டத்தில் காலடிச் சத்தமா கேட்கிறது? எல்லாச் சத்தங்களும் அடங்கியும் என் பதற்றம் குறையவில்லை. அது வரவரக் கூடிக்கொண்டே போயிற்று. ஒரு கணத்தில் சத்தம் போடாமல் எழுந்து மெதுவாகத் தோட்டத்தினுள் சென்றேன். பிறகு விறுவிறுவென வெளியே நடக்கத் தொடங்கினேன்.

எந்த வழியால் சென்றால் நேற்றிரவு சந்தித்த அந்த முதியவரின் வீட்டிற்குச் செல்லலாம்? பிரதான சாலையை நினைவில் கொண்டுவந்தேன்.அவருக்கு என் கதை முழுவதையும் சொல்லி அவரின் வீட்டிலேயேயே நான் நிரந்தரமாகத் தங்கிவிடலாம். அவருக்கான பணிவிடைகளையும் வீட்டு வேலைகளையும் என்னால் செய்ய முடியும். அந்த இரவில், அந்த அந்நியமான வழியில் நிலவும் நட்சத்திரங்களும் தான் எனக்கு நம்பிக்கை அளித்தன. தெருவிளக்குகளிலும் பார்க்க நட்சத்திரங்கள் தான் பிரகாசமாயிருந்தன. அவைகள் எனக்குத் துணைவரும் என நம்பிக்கொண்டு நடந்தேன். சிறிது நேரம் நடந்த பின்பு நான் போகும் வழி சரியானதல்ல எனத் தோன்றியது. அந்த முதியவரின் வீடு இன்னும் வரவில்லை. திரும்பி வந்த வழியே போவது நல்லதா? அல்லது இரவென்றபடியால் இடம் வேறுமாதிரித் தெரிகிறதா? நான் தொடர்ந்தும் நடந்தேன். களைப்பு என்னைத் தெளிவாகச் சிந்திக்கவிடவில்லை. கடந்த இரண்டு நாட்களாக ஒரு பெரிய பெண்ணப் போல வேசம் கட்ட வேண்டியிருந்தது. இப்போதோ ஒரு சோம்பேறியைப் போல இலக்கின்றி அலைந்து கொண்டிருக்கிறேன். நான் எங்கு செல்லவேண்டும்? மயக்க மருந்தை உட்கொண்டதைப் போலத் தலை சுற்றியது. ஆனால் நான் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கவேண்டும்.

கடைசியில் தொடருந்து நிலையமொன்றை வந்தடைந்தேன். ஏறும் தளத்தில் நின்று கொண்டு அடுத்ததாக என்ன செய்யலாமென யோசித்தேன். ஒன்றுமே புலப்படாததால் அடுத்து வந்த ரயிலில் ஏறிக்கொண்டேன். அது எங்கு போகிறது? நான் எங்கு போகிறேன்?எதுவுமே எனக்குத் தெரியவில்லை. ஒரு பயணச் சீட்டை வாங்கியபின் தூங்கிப் போனேன். புகையிரதம் ஒரு தரிப்பிடத்தில் நின்ற போது எனது தூக்கம் மெல்லக் கலைந்தது.

குழந்தைப் போராளி - 22



அம்மாவைத் தேடி

னக்கு மெதுவாக உடல் தேறி வந்தது. அதுகூட அப்பாவின் மனைவிக்குப் பிடிக்கவில்லைப் போலும். அவர் புயலுக்குப் பின் தோன்றும் கொடூரமான அமைதி போல அலைந்து கொண்டிருந்தார். அப்பாவும் அமைதியாகவே இருந்தார். என்னுடன் சிறிது அன்பாகக் கூடயிருந்தார். அவர் எனது முறிந்த விரல்கள் குணமாகும் வரை காத்திருந்தார் போலும். விரைவிலேயே பாடசாலை விடுமுறை வந்தது. நாள் முழுதும் வீட்டிலிருப்பதை நினைக்கவே பயமாயிருந்தது.

விடுமுறைக்கு முந்தைய நாளில் மகிழ்வும் துக்கமும் கலந்த உணர்வுடன் பாடசாலைக்குச் சென்றேன். எல்லோரும் பாடசாலை மண்டபத்தில் கூடியிருந்தனர். மாணவர்களின் பெற்றோர்களும் அங்கு வந்திருந்தனர். என்னருகில் யாருமில்லை. மாணவர்களின் பெறுபேறுகள் அறிவிக்கப்படத் தொடங்கும் போது என் மனதை அச்சம் படிந்த நம்பிக்கை சூழ்ந்திருந்தது. நான் வகுப்பின் முதன் மாணவியானால் எனக்கும் பரிசு கிடைக்கும். தலைமையாசிரியர் மேடையிலேறி முதலாம் இடங்களைப் பிடித்திருந்த மாணவ மாணவிகளுக்கு நன்றி கூறினார். தராதர அறிக்கை வாசிக்கும் நேரமும் வந்தது. இரண்டு பெயர்கள் அறிவிக்கப்பட்டன. மூன்றாவதாக எனது பெயரும் வாசிக்கப்பட்டது. எனக்குப் பாடப்புத்தகங்கள், வண்ணம் தீட்டும் பென்ஸில்கள் பரிசாகக் கிடைத்தன.

தலைமைசிரியர் விடுமுறையை அறிவித்ததும் நாங்கள் மரபான விளையாட்டொன்றைத் தொடங்கினோம். ஒவ்வொருவரும் ஒரு மரக் கிளையைத் தேடி எடுத்துக்கொண்டோம். எங்களுக்குப் பிரியமில்லாத ஒவ்வொருவருக்காவும் ஒரு சிறிய கிளையை மண்ணில் நாட்ட வேண்டும். அடுத்த பருவ காலத்தை மாணவர்கள் மன்னித்தல் மறத்தலுடன் தொடங்குவதே இந்த விளையாட்டின் நோக்கம். அது முடிவடைந்ததும் எனது தோழிகளுடன் கதைத்துக் கொண்டே வீட்டை நோக்கிச் சென்றேன். வழியில் என்னை இடைமறித்த சோபியா சிற்றன்னையும் அவரது தாயாரும் வீட்டின் முன்னால் தெருவில் கோபத்துடன் எனக்காகக் காத்திருப்பதாகவும் நான் வீட்டிற்கு நேரங் கழித்துச் செல்வதால் அவர்கள் அப்பாவிடம் சொல்லி என்னைத் தண்டிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் என்னிடம் சொன்னாள்.

சிறிது நேரம் கண்ணீருடன் போராடிய நான் செய்வதறியாது எனது உண்மையானத் தாயைத் தேடிப் பற்றீசியாவின் வீட்டை நோக்கிப் போனேன். வழி முழுவதையும் எனது கண்ணீரால் நனைத்தபடியே நடந்து சென்றேன். பற்றீசியாவும் அவரது இரண்டு மகள்களும் வீட்டின் முன் புறத்தில் நின்றிருந்தனர். என்னைக் கண்டதும்
"நீ இங்கு வந்தது உனது அப்பாவிற்குத் தெரியுமா?" என்பதே பற்றீசியாவின் முதற் கேள்வியாக இருந்தது. இல்லையெனத்
தலையை அசைத்துக்கொண்டே எனது முறிந்த விரல்களை அவருக்குக் காட்டி "என்னை எனது உண்மையான அம்மாவிடம் கூட்டிச் செல்லுங்கள்" எனப் பற்றீசியாவிடம் மன்றாடினேன். பற்றீசியா தலையைக்குனிந்து கொண்டே "இல்லை ...என்னால் முடியாது உனது அப்பாவை நினைத்தால் எனக்கு அச்சமாயிருக்கிறது. நீ உடனடியாக உன் வீட்டுக்குத் திரும்பிப் போய்விடு" என்றார்.
"என்னை அங்கு திருப்பி அனுப்பினால் விசம் குடிப்பேன்" என்று உறுதியான குரலில் சொன்னேன். பற்றீசியாவின் மகள்கள் என்னைத் தங்கள் அறைக்கு அழைத்துச் சென்றனர். இரவுணவு முடிந்ததும் பற்றீசியா எனது அம்மாவின் படத்தைக் காட்டினார். நான் தோற்றத்தில் அம்மாவையே உரித்து வைத்திருப்பதாகக் கூறி அம்மாவிடம் எப்படிச் செல்ல வேண்டுமென்று வழியையும் விபரித்தார்.

1984ம் ஆண்டு, அப்போது எனக்குப் பத்து வயது, பற்றீசியா பேருந்து நிலையம் வரை என்னுடன் வந்து பயணச் சீட்டொன்றும் வாங்கித் தந்து என்னை வழியனுப்பி வைத்தார். ஓடும் பஸ்சினுள் இருந்து கொண்டு கடைசித் தரிப்பிடத்தில் அம்மா எனக்காகக் காத்திருப்பது போலக் கற்பனை பண்ணிக்கொண்டேன். என் கண்ணீரை என்னால் நிறுத்தமுடியவில்லை.
நடு வழியில் பஸ் இராணுவச் சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டது. எல்லாப் பயணிகளும் பஸ்சிலிருந்து இறங்கி வரிசை கட்டி நின்றோம். என்னைப் பயம் பிடித்துக் கொண்டது. இராணுவத்தினர் பயணிகளைச் சோதனையிடத் தொடங்கினர். கைப்பைகளும் பயணப் பொதிகளும் சோதனைக்குள்ளாயின. சில பயணிகள் துப்பாக்கியின் பின் புறத்தால் அடிக்கப்பட்டனர். யாரிடம் அடையாள அட்டை இல்லையோ அவர் பயங்கரவாதி எனக் குற்றம் சாட்டப்பட்டுப் பற்றைகளின் பின்னால் இழுத்துச் செல்லப்பட்டார். பயங்கரவாதிகள் எல்லாப் பொதுப் போக்குவரத்து வாகனங்களையும் கடத்தத் திட்டமிட்டிருப்பதால் அந்தப் பாதையில் போக்கு வரத்துத் தடை செய்யப்படுவதாக இராணுவத்தினர் அறிவித்தார்கள். பஸ் சாரதி எல்லோருக்கும் பயணக் கட்டணத்தைத் திருப்பிக் கொடுக்கத் தொடங்கினார். இந்த அமளிக்குள் நான் எனது பயணச் சீட்டைத் தொலைத்துவிட்டிருந்தேன். எவ்வளவு கெஞ்சிக்கேட்டும் எனது பணத்தைத் திருப்பித் தர பஸ் சாரதி மறுத்துவிட்டார்.

எனது பக்கத்தில் நின்றிருந்த மனிதர் நான் ஏன் அழுகின்றேன் எனக் கேட்டார். நான் அவருக்கு அம்மாவைத் தேடிப் புறப்பட்டதைப் பற்றிச் சொன்னேன்." உனது அம்மாவின் வீடு எங்கேயுள்ளது என உனக்குத் தெரியுமா?" என அவர் கேட்க நான் ஆம் எனத் தலையசைத்தேன். அவர் எனது அம்மாவின் பெயரைக் கேட்டார். நான் அம்மாவின் பெயரை உச்சரித்ததும் எனக்கொரு ஆச்சரியம் காத்திருந்தது. ஆம்! அந்த மனிதருக்கு என் அம்மாவைத் தெரிந்திருந்தது. அம்மாவின் கணவர் நகரசபையில் முக்கிய பதவியை வகிப்பவரென்றும் மிகவும் செல்வாக்கான மனிதரென்றும் அவர் கூறினார். அம்மாவின் கணவர் செல்வாக்கு மிக்கவராயின் அம்மா அதனைப் பயன்படுத்தி ஏன் தனது குழந்தைகளைக் காப்பற்றிக்கொள்ளவில்லை? எனக்கு எரிச்சலாக இருந்தது.

சில மணித்தியாலங்கள் நடந்ததன் பின்பாக சந்தை போன்ற ஓர் இடத்தினை அடைந்தோம். எனது புதிய நண்பர் என்னை வெளியே விட்டுவிட்டு உணவு விடுதி ஒன்றில் புகுந்து கொண்டார். எனக்கும் பசியாக இருந்தது. எனவே பசியை மறக்கப் பராக்குப் பார்க்கலாமெனப் புறப்பட்டேன். சிறிது தூரத்திலேயே காவல் நிலையமொன்றும் சில கட்டடங்களுமிருந்தன. பற்றீசியா சொன்ன அடையாளங்களை அவை ஒத்திருந்தன. காவல் நிலையத்தின் முன்னால் இரண்டு பெண்கள் நின்று கொண்டிருந்தனர். நான் அவர்களிடம் அம்மாவைப் பற்றி விசாரித்தேன். அவர்களுக்கு அம்மாவைத் தெரிந்திருக்கவில்லை. எனவே மீண்டும் சந்தையடிக்கே திரும்பினேன். என்னை விட்டுவிட்டுச் சாப்பிடச் சென்ற புதிய நண்பருக்காகக் காத்திருந்தேன்.

சிறிது நேரத்தின்பின் பஸ்ஸில் பயணம் செய்த மற்றப் பிரயாணிகளும் அங்கு வந்து சேர்ந்தனர். அங்கிருந்து பற்றைக் காடுகள் வழியாக நடக்கத் தொடங்கினோம். அதுதான் குறுக்குப் பாதை எனச் சொல்லப்பட்டது. அந்தப் பாதை முடிவின்றி நீண்டுகொண்டே சென்றது. ஆங்காங்கே சில பற்றைகள், சில மரங்கள், வெறுமை என எங்கள் பயணம் சலிப்பூட்டியது. இந்த நடைப் பயணத்தில் எனது மனமும் உடலும் தளர்ந்து போயின. நான் நீண்ட தூரம் நடந்திருந்ததால் எனது கால்களில் வலியெடுத்தது. வேகமாக நடக்கமுடியாது மற்றவர்களிடமிருந்து பின் தங்கத் தொடங்கிய நான் ஒரு கட்டத்தில் முற்றாகத் தளர்ந்து போய்த் தரையில் உட்கார்ந்து கொண்டேன். எனது புதிய நண்பர் என்னை எழவைக்க முயற்சிகள் செய்து களைத்துப் போய் என் கன்னத்தில் பளீரென ஒர் அறை விட்டார். அந்த அடி எனக்கு வழிகாட்ட நான் தொடர்ந்து நடக்கத் தொடங்கினேன். எனது கால்களின் வலியைப் பொருட்படுத்தாது தொடர்ந்து நடக்க என்னை நானே கட்டாயப்படுத்திக் கொண்டேன். ஒரு 'ரோபோ'வைப் போல ஒருகால் மாறி ஒருகாலென நடந்து சென்றேன்.


இருளில் ஒரு வீட்டின் முன்னால் வந்து நின்றோம். என்னுடன் வந்தவர் நான் அங்கு இரவைக் கழிக்கலாமெனக் கூறினார். அந்த வீடு ஒரு முதியவருக்குச் சொந்தமானது. அவர் அங்கே தனியாக வசிக்கிறாராம். எனக்குச் சரியாக ஒன்றும் விளங்கவில்லை. களைப்பு எனது சிந்தனையை மழுங்கடித்துவிட்டிருந்தது.அந்த முதியவரும் என்னிடம் ஒரு வார்த்தை தன்னும் பேசவில்லை. அவர் மேசையில் உணவை வைத்தார். இருவருமே அமைதியாகச் சாப்பிட்டோம். இந்த அமைதி எனக்கு நிம்மதியாக இருந்தது. சாப்பிட்டதும் என் கண்கள் சொக்கிப் போயின. நான் அந்த நிமிடத்திலேயே தூங்கிவிட்டேன்.

அடுத்த நாள் காலையில் நான் புத்துணர்ச்சியுடன் இருந்தேன். அந்த முதியவரைக் கவனமாகப் பார்த்தேன். குள்ளமான உருவமுடைய அவர் ஆடைகளைத் தாறுமாறாக அணிந்திருந்தார். அவரின் தலை வழுக்கையாக இருந்தது. அவரின் எஞ்சியிருந்த முடிகள் நரையோடிக் கிடந்தன. நாங்கள் காலையுணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது கதவு தட்டும் சத்தம் கேட்டது. என்னை இங்கு அழைத்து வந்திருந்த மனிதர் உள்ளே வந்தார். முதியவருக்கும் அவரின் உபசரிப்புக்கும் நன்றி கூறி நான் எனது வழிகாட்டியுடன் புறப்பட்டேன். பழத் தோட்டங்களினூடாகப் பிரதான வீதிக்கு நடந்து செல்லும்போது அந்த முதியவருக்கு என் இருதயத்தால் நன்றிகளைச் சொல்லிக் கொண்டே நடந்தேன்.