குழந்தைப் போராளி - 30




தோழிகளின் மரணம்


ஒரு மாலை நேரத்தில் நானும் எனது சகாக்களும் மர நிழலில் ஓய்ந்திருந்து 'பழைய கதைகளை'ப் பேசிக் கொண்டிருந்தபோது இரு குறிப்பிட்ட படை அலகுகளைத் தயார் நிலைக்கு வருமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டது. விதி விளையாடியது, இரண்டில் ஒரு குழுவில் நானும் அடங்கியிருந்தேன். மேற்கு உகண்டாவில் நிலைகொண்டிருந்த அரசின் சிம்பா படைப் பிரிவைத் தாக்குவதற்காக உருவாக்கப்படும் சிறப்புப் படையணிக்கு நாங்கள் அனுப்பி வைக்கப்பட்டோம் . அங்கே எனது உற்ற தோழிகளான முக்கோம்போஸியும் நரோன்கோவும் இருப்பதைக் கண்டேன். அவர்களின் சிரிப்பில் எனது கவலைகளெல்லாம் பறந்து போயின. எஙகிருந்தோ வந்து தன்நம்பிக்கை என்னில் தொற்றிக் கொண்டது. நாங்கள் குதூகலத்துடன் ஒருவரை ஒருவர் ஆரத் தழுவிக் கொண்டோம். இந்த இரு பெண்களும் இல்லாவிட்டால் நான் முற்றாகவே உடைந்து போயிருப்பேன். வெறுப்பும் சிடுசிடுப்புமாக நிற்கும் மனிதர்களிடையே போராளிக் குழந்தைகள் பரிவையும் அரவணைப்பையும் தேடியலைந்தார்கள். நான் பாக்கியசாலி! முக்கோம்போஸியும் நரோன்கோவும் எனக்கு அவற்றை வழங்கினார்கள்.

பொது வேலைகள் திணைக்களத்திலிருந்து எங்களால் கடத்தப்பட்ட கனரக வாகனங்கள் எங்களது படையணியின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்தன. நான் தோளில் எனது Uzi துப்பாக்கியைச் சுமந்து கொண்டு அணிவகுத்து நின்றேன். தாக்குதலுக்கு எங்களை உசுப்பிவிடும் உரையை எங்களது புதிய கட்டளைத் தளபதிகளில் ஒருவரான யூலியஸ் சிகண்டா நிகழ்த்தினார்.."மானமே பெரிது! எங்களின் மக்களுக்காகப் போரிடுவோம்" என்பதே நிகழ்த்தப்பட்ட உரையின் சாரமாயிருந்தது. உரைவீச்சு முடிந்தவுடன் வாகனங்களில் ஏறக் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. எங்களை உசுப்பிவிட எப்படிப் பேச வேண்டுமென்பது தளபதிகளுக்குத் தெரியும். தூண்டப்பட்ட துணிவைத் தொலைத்து விடாதிருக்க நாங்கள் பாடிக்கொண்டும் கூச்சலிட்டுக் கொண்டுமிருந்தோம். பயணம் தொடங்கி விட்டது. எங்களில் பலருக்கு அது திரும்பி வர முடியாத பயணமாக அமையும் என்பது எனக்குத் தெரியும். எங்களது படையணியின் இன்னொரு கட்டளைத் தளபதியாக பிரெட் ரொவியெமா இருந்தார். பிரெட் வசீகரமான தோற்றத்தைக் கொண்ட ஆற்றல் மிக்க போர்த் தளபதி. அவர் எங்களுக்கு 'மானம் காக்கவும் விடுதலைக்காகத் துணிச்சலுடன் போரிடவும்' சொல்வதோடு யுத்தத்திலிருந்து உயிருடன் மீள்வது எவ்வளவு முக்கியமானதென்று சொல்லவும் மறப்பதில்லை.

நாங்கள் நெடும் தூரம் பிரயாணம் செய்துகொண்டிருந்தோம். ஓடும் வாகனத்துள் மந்தைகள் போல நெருக்கியடித்துக் கொண்டு ஒருவருடன் ஒருவர் ஒட்டாத குறையாக நாங்கள் நின்றிருந்தோம். வழியில் எதிர்ப்பட்ட ஒரு சிறிய சோதனைச் சாவடியில் பொலிஸார் எங்களது துப்பாக்கிகளுக்கு வேலை வைக்காமல் தாங்களாகவே சரணடைந்து ஆயுதங்களை எங்களிடம் ஒப்படைத்தனர். இந்தச் சிறிய பரபரப்புக்குப் பிறகு மீண்டும் பயணம் தொடர்ந்தது. இரவு தங்குவதற்குப் பாதுகாப்பான ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து வாகனங்கள் நிறுத்தப்பட்டன. அந்தச் சுற்றுவட்டார மக்களில் ஏராளமானவர்கள் எங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அவர்கள் வெகுளித் தனமான அன்புடன் எங்களுடன் பேசினர். அவர்களில் பலர் உணவுவகைகள், பழங்கள், சிறிய பரிசுப் பொருட்கள் என்பவற்றை எங்களுக்காக எடுத்து வந்திருந்தனர். ஆனால் அவைகளைப் பெற்றுக்கொள்ள நாங்கள் அனுமதிக்கப்படவில்லை. அவர்களது பரிசுப் பொருட்களை நாங்கள் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்க அவர்கள் வாத்தியங்களை முழங்கி எங்களின் வரவைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். "எங்களது அன்பு என்றும் உங்களுக்குண்டு, எங்கள் விடுதலையின் நாயகர்கள் நீங்கள்" என அவர்கள் பாடினார்கள்.

காலையில் மீண்டும் நாங்கள் பயணிக்கத் தொடங்கினோம். முதல் தீட்டியிருந்த திட்டத்தின்படி நாங்கள் சில மணி நேரங்களுக்கு முன்பாகவே புறப்பட்டுச் சென்று எதிரிகளை உறக்கத்தில் வைத்தே தாக்கியிருக்க வேண்டும். முன்னைய திட்டம் ஏன் மாற்றப்படடது என்று எங்களுக்கு எதுவும் சொல்லப்படவில்லை. இப்போதோ நன்றாக விடிந்து விட்டிருந்தது. சூரியன் வானத்தில் உயரே ஏறிவரும் போது எங்கள் தாக்குதல் குழுக்கள் சிம்பா படைத்தளத்தைச் சூழ்ந்திருந்தன. இந்தப் படைத் தளம் பிரதான சாலையை ஒட்டியிருந்த ஓர் எச்சக் குன்றில் அமைந்திருந்தது. நாங்கள் படைத் தளத்தைச் சுற்றியிருந்த வேலியை அரவமில்லாமல் வெட்டிப் பாதை திறந்ததும் எங்களது துப்பாக்கிகள் இடையறாது வெடித்துக் கொண்டே முன்னேறின. எதிரிகளில் பெரும்பாலானோர் கொல்லப்பட்டனர். எஞ்சியிருந்தவர்கள் கட்டடங்களுக்குள் மறைந்திருந்து போரிட்டதால் ஒருவாறு தாக்குப் பிடித்துக்கொண்டிருந்தனர். இந்த வெற்றி எங்களை மயக்கிவிட்டது. சிலர் செத்துக் கிடந்த இராணுவத்தினரோடு துப்பாக்கிச் சண்டை போடுவது போல பாவனை செய்யத் தொடங்கி விட்டனர். அது நல்லத்தொரு பயிற்சி எனவும் கருதப்பட்டது. நானும் சில தோழர்களும் எங்கள் தரப்பு இழப்புக்களைக் கணக்கெடுக்கத் தொடங்கினோம்.

நாங்கள் இறந்து போன எங்களது சகாக்களுக்காக அழுது முடிக்க முன்னமே எதிர்பாராத தாக்குதல் குன்றின் கீழேயிருந்து எங்கள் மீது நடத்தப்பட்டது. இரு முனைத் தாக்குதல்களின் நடுவே நாங்கள் வசமாகச் சிக்கியிருந்தோம். வாழ்வா? சாவா? என்ற நிலை. இப்போது எங்கள் உயிர்களைக் காப்பாற்றிக்கொள்ள நாங்கள் வீரியத்துடன் போர் புரிய வேண்டியிருந்தது.ஆனாலும் எங்களது நிலைமை படு மோசமாகவேயிருந்தது. ஒரு பகுதிப் போராளிகள் சண்டையைக் கைவிட்டு ஓடத் தொடங்கினர். குண்டுகள் மழையாகப் பொழிந்து கொண்டிருந்தன. பல போரளிகள் ஓடும்போது முதுகில் குண்டடிபட்டனர். எனினும் எங்களில் பலர் உறுதியுடன் எதிர்த்துப் போராடினோம். நாங்கள் போரைக் கைவிடவில்லை, எங்கள் துணிவு அற்றுப் போய்விடவில்லை. பெண்கள் எல்லோரும் ஆண்களைப் போலப் போரிட்டோம்.

மூர்க்கத்துடன் போரிட்டுக்கொண்டிருந்த முக்கோம்பொஸி எதிரியின் குண்டடிபட்டு அவளது பிரியத்துக்குரிய RPGயோடு சுருண்டு விழுந்தாள்.அவளது அதீத துணிச்சலே அவளுக்கு எதிரியாய்ப் போனது. நரோன்கோ தனது தோழி விழுந்ததைக் கண்டதும் ஒரு மரத்தில் ஏறி பித்துப் பிடித்தவள் போல் கிளைக்குக் கிளை தாவிக்கொண்டிருந்தாள். அவளைக் கீழே இறங்குமாறு தளபதி பிறப்பித்த கட்டளை காற்றிலே போயிற்று. அவள் மரத்தை விட்டு இறங்கவேயில்லை. அவள் மரத்திலிருந்து கீழே விழுந்ததையும் யாரும் பார்க்கவில்லை. நாங்கள் அங்கிருந்து பின்வாங்கிய போது நரோன்கோ எங்களிடையே இல்லை.

எனது நேசத்துக்குரிய தோழிகள் இருவரையுமே யுத்தம் தின்று விட்டது. நான் யுத்தத்தைக் கைவிட்டு NRAயிலிருந்து ஓடிப்போய் விடலாமா என்று கூட நினைத்தேன். எனது கிராமம் இங்கிருந்து அதிக தொலைவில் இல்லை. ஆனாலும் நான் மனதை மாற்றிக் கொண்டேன். நாங்கள் இந்த நாட்டையே ஆட்சி செய்யும் காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. இராணுவச் சீருடையில் தோளில் துப்பாக்கியுடன் என்னைப் பார்த்தால் அப்பா என்ன செய்வார்? பயத்தில் அலறுவாரா? அல்லது மண்டியிட்டுக் கருணை காட்டுமாறு கெஞ்சுவாரா? இப்படி நினைப்பதே என் மண்டைக்குள் இன்பக் கிறுகிறுப்பை உண்டாக்கியது. ஓடிவிடுவதற்குப் பதிலாக இறுதிவரை போராடுவது என உறுதியெடுத்துக் கொண்டேன். வீடு திரும்புவதை விடப் போரிடுவதில் எனக்கு இழப்புக்கள் குறைவாகவேயிருக்கும் என நம்பினேன்.

எங்களில் பலர் அச்சத்தால் கைகால்கள் மரத்துப் போனவர்கள் போலக் காணப்பட்டனர். போரில் மாண்டு போன எங்களது சகாக்களின் இரத்தம் நாங்கள் பின்வாங்கிச் சென்ற பாதையில் எங்களைத் தொடர்ந்தது. அச்சத்தையும் கண்ணீரையும் மனவேதனையையும் முண்டி விழுங்குவதைத் தவிர எங்களால் வேறெதுவும் செய்யமுடியவில்லை. எங்களில் சிலர் நயாமிற்றங்காவுக்கு அழைக்கப்பட, மற்றவர்களுக்கு மீண்டும் சிம்பா முகாமைத் தாக்குவதற்கு ஆயத்தமாகுமாறு கட்டளையிடப்பட்டது.

பீகார்வே என்ற சிறு நகரத்தில் சில 'லொறி'களைக் கடத்திக்கொண்டு மீண்டும் நாங்கள் சாவைத்தேடி விரைந்து சென்றோம். எங்களில் சிலராலேயே பாடவோ, சிரிக்கவோ முடிந்தது. பெரும்பாலான போராளிகள் உள்ளுக்குள் ஒடுங்கிப் போயிருந்தார்கள். என்னைப் போலவே அவர்களும் தங்களது தலைகளுக்கு மேல் ஆடிக்கொண்டிருக்கும் மரணம் குறித்துச் சிந்தித்துக்கொண்டிருக்கலாம். வழியில் எனது கிராமத்தை நாங்கள் கடந்து சென்றோம். என்றாவது ஒருநாள் நான் இங்கு திரும்பி வருவேனா?

என்னுள் திரண்டு வந்த மரணபயம் என் கண்களின் வழியே வழிந்த போது நான் தடுமாறிப் போனேன். எனக்குத் தலை சுற்றத் தொடங்கியது. நான் ஓடும் வாகனத்துள் எழுந்து நிற்க முயற்சி செய்தேன். என் தேகம் உலாஞ்சியது. நான் அச்சத்தை என்னுள்ளிருந்து துரத்தியே ஆகவேண்டும். பத்து வயதுச் சிறுமியான நான் அச்சத்தைத் துரத்திவிட ஒரு குறுக்கு வழியைக் கண்டு பிடித்தேன். நான் எங்களின் வெற்றியைக் குறித்துப் பாடலொன்றைப் பாடத் தொடங்கினேன். "நானொரு துணிவான போராளி" என்று அந்தப் பாடல் ஆரம்பிக்கும்.விரைவில் மற்றவர்களும் என்னுடன் சேர்ந்து கொண்டனர். வாகனத்துள் இருந்த இறுக்கம் மெல்ல மெல்ல அவிழலாயிற்று. கனைப்பும் சிரிப்பும் எங்களிடையே பரவத் தொடங்கின.

வழியில் ஒரு சிறு நகரத்தில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. வாகனங்களிலிருந்து இறங்கிச் சில நிமிடங்கள் வரை நகரவாசிகள் எவருமே எங்கள் கண்களில் படவில்லை. தங்கள் நகரத்துக்கு வந்திருப்பவர்கள் NRA போராளிகளே என்பதை அறிந்து கொண்டதும் பதுங்கியிருந்த நகரவாசிகள் வெளியே வந்து உற்சாகத்துடன் எங்களைச் சூழ்ந்துகொண்டனர். குழந்தைகளாகிய எங்களுக்கு உணவும் பணமும் தர அவர்கள் முண்டியடித்தனர். ஆனால் NRA யின் விதிகளின்படி நாங்கள் அவற்றை வாங்கிக்கொள்ள இயலாது. தலைவர் முசேவெனி தனது போராளிகளை அரசபடையினரைப் போல வழி நடத்த விரும்பவில்லை. ஒரு பெண் எனக்குப் பணம் தர முற்பட்டபோது என்னால் மறுக்க முடியவில்லை. ஆனால் வெளிப்படையாக அந்தப் பணத்தை வாங்கிக்கொள்ளவும் நான் விரும்பவில்லை.அது என்னைப் பெரிய ஆபத்தில் கொண்டு போய்விடும். அந்தப் பெண்ணை ஒரு கட்டடத்தின் பின்னால் மறைவாக வரச் சொல்லிப் பணத்தை வாங்கி எனது உடைக்குள் மறைத்து வைத்துக்கொண்டேன். ஒன்றின் பின் ஒன்றாகத் தொடர்ந்து புகை பிடிக்கும் பழக்கம் எனக்குண்டு. சிகரெட்டுகள் வாங்க எனக்குப் பணம் தேவை. வலிய வரும் பணத்தை வேண்டாமென்று மறுக்குமளவிற்கு எனக்கு மனதில் உறுதியில்லை.

சிலமணி நேரங்களில், நாங்கள் ஏற்கனவே சிறைப் பிடித்து வைத்திருந்த அரச படையினர் சிலரை முன்னே நடக்கவிட்டு அவர்களை அரண்களாய் வைத்துக்கொண்டு மீண்டும் சிம்பா படைத் தளத்தை நோக்கி முன்னேறினோம். எங்களுக்கும் அரச படையினருக்குமிடையே சிறைப்பிடிக்கப்பட்ட அரச படையினரின் உயிர்கள் பணயமாக வைக்கப்பட்டிருந்ததால் சிம்பா படைத்தளத்தில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் எதிர்ப்பே காட்டாமல் பின்வாங்கிச் சென்றனர். இந்தத் தடவை எங்கள் தரப்பில் இழப்புக்கள் எதுவுமில்லாமலேயே சிம்பா படைத் தளம் எங்களிடம் வீழ்ந்தது.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு