குழந்தைப் போராளி - 26



முன்னோக்கிப் பாய்தல்


ங்கள் படைப்பிரிவு 'ருவென்சோரி' க்கு அருகிலே நிலை கொண்டிருந்தது. இன்று ஓய்வு நாள். சில நாட்களாகவே சூரியன் கடுமையாகத் தகித்துக் கொண்டிருந்ததால் நாங்கள் வாடிப் போயிருந்தோம். பிற்பகல் மூன்று மணியளவில் தலைவரின் இளைய சகோதரன் ஸலிம் சலேம் - அவர் எங்கள் தளபதியும் கூட - பாசறைக்கு வந்தார். போரினைத் தீவிரப்படுத்தவும் எங்களுக்கு உற்சாகமளிக்கவும் உணர்ச்சிப் பெருக்கான உரை ஒன்றினையும் ஸலிம் சலேம் நிகழ்த்தினார். நாங்கள் அரசினை வீழ்த்துவதற்கும் மில்டன் ஒபோடேயின் கைகளிலிருந்து அதிகாரத்தைப் பிடுங்குவதற்குமான காலம் கனிந்து விட்டதென மீண்டும் மீண்டும் அவர் சொன்னார். இதைச் சொல்லும் போதெல்லாம் அவரது முகத்தில் புன்னகை துள்ளியது..

அவரது நம்பிக்கைக்குக் காரணம் இருந்தது. நாங்கள் முக்கியமான படைக்கலன்கள் பலவற்றை மில்டன் ஒபோடேயின் படையினரிமிருந்து கைப்பற்றியிருந்தோம். இதனால் இராணுவத்தினரின் மனவுறுதி சிதைந்து அவர்களின் போரிடும் திறன் குறைந்து போயுள்ளதாகச் ஸலிம் சலேம் எங்களிடம் கூறினார். அவரது வருகையும் உரையும் எங்கள் மத்தியில் உற்சாகத்தையும் போர் வெறியையும் கிளர்த்தின. சந்தோசக் கூச்சல்களும் பாட ல்களும் அவர் மேடையைவிட்டு இறங்கும் போது ஓங்கி ஒலித்தன.

அடுத்த தாக்குதலுக்கு ஆயத்தமாகுமாறு எங்களுக்கு உத்தரவு கிடைத்தது. தாக்குதல் நடவடிக்கை பற்றிய அறிவுறுத்தலும் தரப்பட்டது. நாங்கள் நாளைக்கு இங்கிருந்து நான்கு கிலோமீற்றர்கள் தொலைவில் அமைந்துள்ள இராணுவத் தளத்தைத் தாக்க வேண்டும். தாக்குதல் விபரங்கள் அறிவிக்கப்பட்டதும் மரணத்தைப் பற்றிய எந்த எண்ணத்தையும் அச்சத்தையும் என்னுள் எழவிடாமலிருக்க நான் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது.

பின்பு நான் பாசறையின் மற்றப் பக்கத்திற்குச் சென்று எனது துப்பாக்கியைச் சரி பார்த்துக்கொண்டேன். என்னுடைய துப்பாக்கி Uzi தானியங்கி வகையைச் சேர்ந்தது. இது AK47லும் சிறியது. எனது சீருடை மிகப் பெரிதாக இருந்ததால் கால் பக்கத்திலிருந்த பைகளைக் கிழித்தெடுத்து விட்டு உயரத்தினைக் குறுக்கித் தைத்துக் கொண்டேன். எனது சீருடையை மீண்டும் அணிந்தபோது அது எனக்குக் கச்சிதமாகப் பொருந்தியது. சரிபாதியாகப் பாரம் குறைந்திருந்த சீருடை எனது தன் நம்பிக்கையையும் உசுப்பி விட்டது. குறைந்த சுமை போரில் உயிரைக் காப்பாற்றுவதற்கான முதல் நிபந்தனை என நான் கற்றிருந்தேன். மற்றய சிறுவர் சிறுமியர்களைப் போலவே எனக்கும் போர் பற்றிய அச்சமிருந்தாலும் அதனை நான் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. அச்சத்தை ஓர் உணர்வாகவே நான் மதிக்க விரும்பவில்லை. வீட்டைப் போலவே இங்கும் உரக்கக் கத்தியும் சண்டையிட்டும் தான் அடி உதைகளிலிருந்து என்னைக் காப்பாற்றிக்கொள்ள முடிந்தது. பாசறையில் ஒருவரின் கருத்தை, உணர்வை இன்னொருவருடன் பரிமாறிக் கொள்ளுமளவிற்கு யாரும் யாரையும் நம்புவதில்லை. இந்த நிலை எனக்குப் புதியதல்ல. போதியளவு அனுபவம் என்னிடம் ஏற்கனவே கைவசம் இருந்தது.

தாக்குதலுக்கு முந்திய இரவில் பாசறைத் தீயைச் சுற்றி நாங்கள் வட்டமாக உட்கார்ந்திருந்தோம். பெண் போராளி ஒருத்தி எங்களைச் சிலமணி நேரங்கள் தூங்கும்படி கட்டளையிட்டாள். சாவுக்கான ஆயத்தம் போல படுக்கைக்குப் போன நாங்கள் மாற்ற முடியாத முடிவினைச் சிலமணி நேரங்களாவது தள்ளிப் போட்டோம். கொசுக்களின் தொல்லையா அல்லது எனது கவலைகளா என்னைத் தூங்கவிடாமல் தடுத்தது என என்னால் நிச்சயப்படுத்த முடியாதிருந்தது. படுக்கையில் அங்குமிங்குமாகப் புரண்டுகொண்டிருந்த என்னால் தூங்க முடியாதிருந்தது. தூங்கும் முயற்சியைக் கைவிட்ட நான் மல்லாந்து படுத்து நட்சத்திரங்கள் ஒளிரும் வானத்தைப் பார்த்துக் கொண்டே அந்த நீண்ட இரவினின் முடிவில் ஓடப்போகும் இரத்த ஆற்றை எண்ணி உளைச்சலில் கிடந்த என் மனதை ஒருநிலைப் படுத்த முயன்றேன்.

விடிவதற்கு முன்னாகவே நிலவும் நட்சத்திரங்களும் எங்கள் பாதையினை ஒளி ஊட்டிக் கொண்டிருக்க பற்றைக் காடுகளை ஊடறுத்துக் கொண்டு இராணு முகாமை நோக்கி நகர்ந்து நிலையெடுத்துக் கொண்டோம்.தாக்குதலைத் தொடங்குவதற்கான சமிக்ஞையை எதிர் நோக்கிக் காத்திருந்தோம். அடுத்த அரைமணி நேரம் வரை நுளம்புகளின் கடியைத் தாங்கிக்கொண்டு அவைகளுக்கு இரத்ததானம் செய்ய வேண்டியிருந்தது. நுளம்புகள் கடிக்கும் வலியைச் சமாளிக்க மூடிய வாயினுள் எனது பற்களைத் தான் நான் கடித்துக் கொள்ள முடிந்தது. அமைதி காக்க வேண்டிய கட்டாயம்.

மரங்கள் எங்களுக்குப் பாதுகாப்பாக இருந்தன. எங்களுக்கு மிக அருகாமையில் எங்களின் எதிரி. முகாமினுள் தூங்கும் எதிரியை எங்களால் பார்க்க முடிந்தது. இராணுவ முகாமும் எவ்விதச் சத்தமுமின்றி அமைதியாகவே இருந்ததது. நான் மூச்சைப் பிடித்துக் கொண்டே இரவின் அமைதியைக் கலைக்கப் போகும் அந்த ஒற்றைத் துப்பாக்கி வேட்டிற்காகக் காத்திருந்தேன். அதுதான் எங்களுக்கான சமிக்ஞை. முகாமினுள் புகுந்து இராணுவத்தினர் ஒவ்வொருவரையும் அழித்தொழிப்பதற்கான் அறைகூவல்.

நிசப்தத்தைக் கிழித்துக்கொண்டு ஒற்றை வேட்டுப் பறந்தது.ஆண்களும் பெண்களும் இராணுவ முகாமை விட்டு வெளியே நிர்வாணமாக ஓடி வந்தனர். வந்த வேகத்திலேயே இரத்தக் கோளமாய் அவர்களின் உடல்கள் தரையில் குவிந்தன. இன்னும் அவர்களது உடைகளை அவர்களது கைகள் பிடித்திருந்தன. துப்பாக்கி வேட்டுக்கள் ஆடு மாடுகளையும் எழுப்பிவிட்டிருந்தன. அவைகளின் கதறல், பறவைகளின் இரைச்சல், மனிதர்களின் வெறிக் கூச்சல், மரண ஓலம் என ஒரு விநோதமான ஒலிக்கலவை மூன்று - நான்கு மணி நேரங்கள் எங்களைத் தொடர்ந்து சூழ்ந்திருந்து பின் மெல்ல மெல்ல அடங்கியது.

நாங்கள் முகாமைக் கைப்பற்றிய போது பரிதாபமான காட்சியொன்று என் கண் முன்னே விரிந்து கிடந்தது. ஆடுகளும், கோழிகளும், இராணுவத்தினரது பிரேதங்களும் அவர்களது மனைவிமார்களது பிரேதங்களும் தரையெங்கும் பரவிக் கிடந்தன. வழமை போலவே ஆயுதங்களையும் உணவுப் பொருட்களையும் நாங்கள் துரிதமாகச் சேகரித்தோம். இவைகளைச் சிறுவர் சிறுமிகளான நாங்கள் தான் சுமந்து செல்லவேண்டும். பிடிபட்டிருந்த கைதிகளும் வழமை போலவே முதுகுகளின் பின்னால் கைகளைச் சேர்த்துக் கட்டப்பட்டிருந்தனர். எங்கள் பாசறைக்கு ஓட்டிச் செல்லப்பட்ட இவர்கள் தங்களின் சவக்குழிகளைத் தாங்களே வெட்ட நிர்பந்திக்கப்பட்டனர். அதுவும் வழமை தான். எங்கள் தளபதிகளில் சிலர் குழந்தைகளான எங்களிடம் சிறைப் பிடிக்கப்பட்டவர்களின் கண்களுக்குள் காறி உமிழச் சொன்னார்கள். நாங்களும் உடனடியாகக் கட்டளையை நிறைவேற்றினோம். அதுவும் மெல்ல மெல்ல வழமையாக மாறிற்று. 'நாங்கள் துப்பாக்கிக் குண்டுகளை விரயம் செய்யப் போவதில்லை' என்ற செய்தி கைதிகளுக்குச் சொல்லப்பட்டது. கைதிகளின் சவக்குழிகளைக் கைதிகளே தோண்டிய பின்பு எங்களது படைப்பிரிவில் பலசாலிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்கள் 'அக்கும்பி'யால் கைதிகளின் மண்டைகளைப் பிளப்பார்கள். 'அக்கும்பி' என்றால் குண்டந்தடி. எதிரியை அவனே தோண்டிய குழியின் விளிம்பில் நிற்கவைத்து எதிரி குழியினுள் செத்து அல்லது குற்றுயிராக விழும்வரை பிடரியிலும் தலையிலும் மாறிமாறி அடித்துக் கொண்டேயிருப்பார்கள்.

இந்தச் சடங்குகள் முடிந்ததும் நகர்வுக்கான நேரமாகிவிடும். நாங்கள் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கவேண்டும் . இல்லாவிட்டால் ஆயுத பலம் வாய்ந்த எதிரிகள் எங்களைச் சுலபமாக அழித்து விடுவார்கள். சில சமயங்களில் தாக்குதல்களின் பின்பு ஒரு நாள் முழுவதும் நாங்கள் தொடந்து நடந்து கொண்டேயிருக்க வேண்டியிருக்கும். ஓய்வுக்கோ தூக்கத்துக்கோ அங்கே இடமில்லை. அரச படையினரின் உலங்கு வானூர்திகள் எங்கள் தலைகளின் மேல் சதா உறுமிக் கொண்டே இருக்கும். இவைகளில் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டிருக்கும். நாங்கள் உடனடியாகச் சரணடைய வேண்டுமென்றும் இல்லாவிட்டால் முற்றாக அழிக்கப்படுவோமென்றும் எச்சரிக்கைகளை ஒலிபரப்புவார்கள். ஆனால் எங்களால் அப்படிச் சரணடைந்து விட முடியாது. ஏனெனில் நாங்கள் ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி வந்தாயிற்று. இறுதி இலட்சியத்தை அடையும் வரை விடாமல் போர் புரிவதென உறுதிப் பிரமாணமும் செய்திருந்தோம். யாருமே ஒரு குழந்தையைப் போல விசுவாசமாக இருக்க முடியாது. அதிலும் ஓர் அநாதைக் குழந்தையைப் போல விசுவாசமாக இருக்க முடியாது. யாருக்காக நாங்கள் விட்டுக் கொடுக்க வேண்டும்? நாங்கள் எங்கு தப்பியோட முடியும்? எங்களது ஒரே சிந்தனை வெயில் தகிக்கும் இந்தப் பற்றைக் காட்டில் பெரியவர்களுடைய வேகமான நடைக்கு ஈடு கொடுத்து வேகமாக நடந்து செல்வதிலேயே இருந்தது. வெயிலில் வதங்கிப் போன குழந்தைகள் தாகத்தால் தவித்தோம். என்னால் இனி மேலும் தாகத்தைப் பொறுக்க முடியாதென்ற நிலை. நல்ல வேளையாக எங்களது தளபதி அடுத்து வரும் கிராமத்தில் தண்ணீர் எடுப்பதென்று முடிவெடுத்தார்.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு