குழந்தைப் போராளி - 18



சிற்றன்னையின் வெற்றி

ஹெலன் எங்களை விட்டுப் பிரிந்தும், அம்மாவைத் தேடிச் சென்றும் ஒரு வாரமாகிவிட்டது. அவளை மீண்டும் காண்பேனென்று நான் எண்ணியிருக்கவில்லை. ஆனால் அவள் மீண்டும் வந்து சேர்ந்தாள். அவள் அம்மாவைக் கண்டாளா? என்ற கேள்விக்கு அவள் முகத்திலேயே பதிலிருந்தது. தோல்வி துல்லியமாகவே அவளின் முகத்தில் தெரிந்தது. அவளின் முயற்சியும் பலனின்றிப் போயிற்று. பற்றிசியா நாட்டை விட்டு வெளியேறியிருந்தார். அவர் எப்போது திரும்பி வருவாரென்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஹெலன் முற்றோனுடனும் யூடித்துடனும் சிறிது காலம் பற்றிசியாவிற்காக் காத்திருந்துவிட்டுத் திரும்பி வந்திருக்கிறாள். இம் மறுமொழியைக் கேட்டதும் எனக்கு ஆத்திரம் பொங்கியது. "உதவி தேவையென்றால் கூனிக் குறுகிக்கொண்டு மீண்டும் வருவார்கள்" என்ற அப்பாவின் சொற்கள் என் நினைவில் வந்தன.

" நீ ஒரு நாயைப் போல இங்கே தான் சுற்றிச் சுற்றி வருவாய் என்பது எனக்குத் தெரியும்" என அப்பா ஹெலனைப் பழிக்க ஹெலன் தலையைக் குனிந்தவாறிருந்தாள். ஒரு துயரப் புன்னகை அவளின் உதடுகளில் நெளிந்தது. ஆனால் அப்பா இன்னும் தனது உரையை முடிக்கவில்லை.
"நீ எங்கும் போகலாம், ஆனால் எப்போதும் இங்கு தான் திரும்பி வரவேண்டும். உனக்கு வேறு கதியில்லை வீடென்று உனக்கிருப்பது இது ஒன்றுதான்." எனது சகோதரிகள் வீட்டை விட்டுப் போனால் அப்பாவிற்கு எந்தக் கவலையுமில்லை. ஆனால் அவர்கள் திரும்பி வந்தால் எந்த வழியிலாவது அவர்களைப் பழிவாங்கியே தீருவார்.

இரண்டு நாட்கள் எந்தவிதச் சச்சரவுகளுமின்றிக் கழிந்தன. மூன்றாவது நாள் ஒரு புகைப்படக்காரர் வீட்டிற்கு வந்திருந்தார். நான் ஹெலனிடம் நானும் அவளும் எனது சிற்றன்னை பெற்ற சகோதரிகளுமாகச் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்வோமா எனக் கேட்டேன். இதுவரை நான் புகைப்படமெடுத்துக் கொண்டதேயில்லை. படத்தில் நான் எவ்வாறு இருப்பேனென்று பார்க்கவும் எனக்கு ஆவலாயிருந்தது. ஆனால் நிலைமை வேறுமாதிரியாக இருந்தது. புகைப்படக்காரர் ஹெலனை மட்டுமே படம் பிடித்தார். புகைப்படக்காரர் போனதுமே அப்பா தனது நண்பரின் மகனொருவன் ஹெலனை மணக்க விரும்புவதாக ஒரு செய்தியைச் சொன்னார். என்னால் இந்தச் செய்தியின் உள்ளர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஹெலன் வீடு திரும்பியதையிட்டு அப்பா மகிழ்கிறாரா? அல்லது கூடிய சீக்கிரத்தில் அவளை வீட்டைவிட்டு விரட்ட முயல்கிறாரா? ஹெலனிடம் வீட்டுப்பாடத்தில் உதவி செய்யும்படி கேட்டேன். அப்போது தான் நாங்களிருவரும் நிம்மதியாகபேசிக்கொள்ள முடியும்.

"அப்பா சொன்னவனை உனக்குத் தெரியுமா?"

"நான் இதுவரை அவனைப் பார்த்ததில்லை"

"முன்பின் தெரியாத ஒருவனை மணந்து கொள்ள உனக்குப் பயமாக இல்லையா?"

'பொஸ்' என நாங்கள் அழைக்கும் கிழவன் முன்பு என்னிடம் முறை தவறி நடந்து கொண்டதை நான் நினைத்துக்கொண்டேன்.

"ஹெலன் ஆண்கள் நல்லவர்களல்ல, அவர்களை நம்பமுடியாது. நீ அவனைக் கல்யாணம் செய்துகொண்டால் நடக்கக் கூடாதவை எல்லாம் நடக்கலாம்." என்னை ஒருமுறை உற்றுப் பார்த்துவிட்டு

"எக்காரணம் கொண்டும் நான் அவனை மணந்துகொள்ளப் போவதில்லை" எனக் ஹெலன் சொன்னாள்.
அப்பாவிடமும் இதே பதிலைத்தான் ஹெலன் சொன்னாள். அதிலிருந்து அப்பா எந்த நேரமும் அவளுடன் எரிந்து விழுந்து கொண்டும் அவளைத் துன்புறுத்துவதுமாகவே இருந்தார்.
ஹெலனின் வேலைப்பழு ஏறிக்கொண்டே போனது. ஓர் ஒட்டகம் மாதிரி அவள் வேலை செய்து கொண்டிருந்தாள். நான் பாடசாலை முடிந்து வந்ததும் என்னாலான உதவிகளை அவளுக்குச் செய்தேன். அப்பா வேலையால் திரும்பி வந்ததுமே ஹெலனை உணவு தயாரிக்கச் சொல்வார். எனக்குத் தெரிந்தளவில் கணவன் மனைவியைத் தான் சமையல் செய்யச் சொல்லவேண்டும். பிள்ளைகள் தண்ணீரோ தேனீரோ தரலாம். அவரது நடத்தை ஏதோ அவரின் மனைவி செத்து விட்டாள் என்பது போலிருந்தது. துரதிர்ஷ்டவசமாக அவரின் மனைவி உயிருடன் தான் இருந்தார்.

ஒரு நாள் ஹெலன் பக்கத்து வீட்டுப் பெண்களுடன் எங்கேயோ வெளியே போயிருந்தாள். இரவுணவு தயாரிக்கும் நேரமாகியும் அவள் வீட்டுக்கு வரவில்லை. சிற்றன்னையே அன்றிரவில் முணுமுணுத்துக் கொண்டு சமையல் செய்தார். ஹெலன் திரும்பி வந்ததுமே அவர் தனது கோபத்தைக் காட்டினார். " பிசாசே எங்கே ஊர் மேயப் போனாய்?" எனச் சிற்றன்னை கொக்கரிக்க ஹெலன் கட்டுக்கடங்காத ஆத்திரத்துடன் சிற்றன்னையுடன் மோதினாள்.
"உனது கணவனுக்கு நீ தான் சமைத்துக் கொடுக்க வேண்டும். நான் அவரது மகள்... ஏன் நான் ஒவ்வொரு நாளும் அவரின் உணவைத் தயாரிக்க வேண்டும்? வாயைப் பொத்திக்கொண்டு போவதுதான் உனக்கு நல்லது." ஹெலனின் சீற்றம் சிற்றன்னையின் அகங்காரத்தைக் குறைக்காவிடினும் ஹெலன் சொல்வது ஓரளவு உண்மை எனபது அவருக்குப் புரிந்திருக்க வேண்டும்.

அப்பா வாசற்படியில் கால் வைத்திருக்கமாட்டார், சிற்றன்னை கண்ணீருடன் ஓடிப்போய் அவர் முன்னே நின்று முறையிட்டுப் புலம்பத் தொடங்கினார். நடந்ததற்கும் அவர் முறையிட்டுப் புலம்பியதற்கும் சம்பந்தமே இல்லை. அப்பா என்னைப் பார்த்து என்ன நடந்ததெனக் கேட்டார்.' நடந்த உண்மையைச் சொன்னால் நீ படாத பாடுகளைப் படுவாய்' எனச் சிற்றன்னையின் அனல் பறத்தும் கண்கள் என்னை எச்சரித்தன. இந்தச் சிக்கலிலிருந்து நான் தப்பிப்பதற்கான ஒரே வழி பொய் சொல்வதுதான். நான் இவர்களது சண்டையைப் பார்க்கவே இல்லையெனச் சாதித்தேன். இப்போது அப்பா ஹெலனைக் கூப்பிட்டார். அவளுக்குத் தண்டனை கொடுப்பதே அவரின் நோக்கம். ஹெலனோ கோபத்தின் அரசியாக நின்றிருந்தாள். ஒரு கூட்டம் தேனீக்களை உயிருடன் விழுங்கியவள் போல அவள் துடித்துக்கொண்டிருந்தாள்.
"நீ உனது மனைவியின் பொய்களை மாத்திரமே நம்புகின்றாய், நீ எப்படிப்பட்ட தகப்பன்? பிள்ளைகளைப் பற்றிய எந்தக் கவலையோ பரிவோ உனக்கில்லை, ஆனால் அடிப்பதற்கும் வதைப்பதற்கும் மாத்திரம் நீ என்றுமே பின் நிற்பதில்லை."
ஹெலனின் துணிவு என்னைப் பயத்தால் நடுங்கச் செய்தது. என்னால் நிமிர்ந்து பார்க்கவே முடியவில்லை. ஹெலனின் சீற்றத்திற்குப் பின் பெருமழை பெய்து ஓய்ந்தது போல அங்கே அமைதி நிலவியது. எனக்கு - ஏன் எல்லோருக்குமே - ஹெலன் உண்மையைத் தான் பேசிக்கொண்டிருக்கிறாள் என்பது புரிந்தது. ஒரு மாதிரியாகத் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நான் பார்வையை அப்பாவிடம் உயர்த்தினேன். அப்பாவின் முகம் ஆத்திரத்தில் உப்பி வீங்கியிருந்தது. அதுவே அந்த இடத்திலிருந்து என்னைத் துரத்தப் போதுமானதாயிருந்தது. நான் மெதுவாக அங்கிருந்து நழுவ முற்பட்ட போது ஹெலன் அப்பாவை நோக்கி
" என்னை அடிப்பதற்கு மட்டும் நினைக்காதே! நான் இன்னும் சிறு பிள்ளையல்ல, நீ என்னை அடித்தால் நானும் உன்னைத் திருப்பி அடிப்பேன். இனி எப்போதும் என்னை அடிப்பதை நினைத்தும் பார்க்காதே!" எனச் சவால் செய்தாள்.

அப்பாவின் இருண்ட பக்கத்தை என் சகோதரியைத் தவிர வேறொருவரும் வெளிச்சம் போட்டுக் காட்டத் துணிந்ததில்லை. அப்பாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. வெகு நேரமாக வெட்கத்துடன் போராடிக் கடைசியில் அவர் ஹெலனை வீட்டைவிட்டு வெளியேறும்படி கத்தினார். ஹெலனோ " முடியாது, நான் இங்கேதான் இருப்பேன். என்னைக் கொல்ல விரும்பினால் இப்போதே நீ என்னைக் கொல்லலாம்... நீ ஏன் என்னைப் பெற்றாய்? நீ எனது உண்மையான தந்தை இல்லையா? நீ எனது உண்மையான தந்தை இல்லையென்றால் எனக்கு மகிழ்ச்சி தான். நீ உண்மையான தந்தையாய் இருந்தால் நான் இங்கிருந்து போகப்போவதில்லை" எனப் பதிலுக்குக் கத்தினாள்.

அப்பா அவளைத் இழுத்துத் தரையில் வீழ்த்த முயற்சித்தார்.ஹெலன் அப்பாவை விடப் பலசாலியாயிருந்ததால் திமிறிக்கொண்டு நின்றாள். அவளைக் கீழே தள்ளிவிடும் முயற்சியில் தோல்வியுற்ற அப்பா அவளை அடிக்கத் தொடங்க அவளும் திருப்பி அடித்தாள். இருவருமாக மாறிமாறி ஆவேசத்துடன் அடித்துக்கொண்டார்கள். அதிலும் ஹெலன் பலசாலிதானென்பதை அப்பாவிற்கு கூடுதலாக அடிப்பதன் மூலம் நிரூபித்துக் கொண்டிருந்தாள். "நான் உயிருடன் இருக்கும் வரை நீ என்னை அடிப்பதற்கு நான் அனுமதிக்கப்போவதில்லை" எனச் சொல்லிச் சொல்லி அவள் அப்பாவை அடித்தாள்.

அடுத்த நாள் அப்பா ஹெலனிற்குச் சில நிபந்தனைகளை விதித்தார். அவள் அவரது மனைவியின் சொல்கேட்டு நடக்க வேண்டும். முடியாதென்றால் அவள் வீட்டிலிருக்கக் கூடாது! அத்துடன் அவரது நண்பனின் மகனைத் திருமணம் செய்துகொள்ளவும் வேண்டும். ஹெலன் முகத்திலடித்தது போல அப்பாவிற்குப் பதில் சொன்னாள்:

"உனது மனைவியின் சொல்கேட்டு நடக்க நான் தயாரில்லை, உனது நண்பரின் மகன் அவ்வளவு நல்லவனாக இருந்தால் உனது மனைவிக்கே அவனைக் கட்டி வை."

வெளியே என்னைக் கூட்டி வந்த ஹெலன் அப்பாவின் பெயர் எழுதப்பட்டிருந்த கடித உறையொன்றை என்னிடம் தந்தாள். நான் கவலையுடனும் அக் கடிதத்துடனும் வாழைத் தோட்டத்தை நோக்கி நடந்தேன். கண்ணீர் விட்டு அழுதுகொண்டே நான் அக்கடிதத்தை வாசித்து முடித்தேன். என் ஞாபக அடுக்குகளில் இவ்வாறாக அக் கடிதம் பதிவாகியிருக்கிறது:
அப்பா,
நீ எனக்குத் தந்த குழந்தைப் பருவம் மகிழ்ச்சியற்றது, அதற்கான தண்டனையை நீ பெறுவாய்.அப்பா! உலகில் இலக்கின்றி நான் அலையப் போகிறேன். அன்பே காட்டாத நீ என்னை உனது இரத்தமும் சதையுமெனச் சொல்கிறாய். நீ தானா எனது தகப்பனென்ற சந்தேகத்தை நீ என்னுள் விதைத்துவிட்டாய். நான் துயரத்துடன் தான் மரிப்பேன். ஆனால் அப்போது கூட நான் உன் பெயரை உச்சரிக்கப் போவதில்லை. நீ என்னதான் செய்தாலும் மீண்டும் என்னை நீ காணப்போவதுமில்லை. நீ இறக்கும் போது கூட உன் குற்றங்களையும் தவறுகளையும் ஒருமுறை தன்னும் கேள்விக்குள்ளாக்காமலேயே இறப்பாய். நீ எனக்களித்த வலியினை நீயும் உன் வாழ்வில் கட்டாயம் அனுபவிப்பாய்.

-- ஹெலன்

கடிதத்தை வாசித்து முடித்தவுடன் அப்பாவிடம் இதைச் சேர்ப்பிப்பதா இல்லையா என யோசித்தேன். கடிதத்தைச் சுக்கு நூறாகக் கிழிப்பதென முடிவெடுத்தேன்.
காட்டிக்கொடுப்பவள் என்று என்னால் பழிக்கப்பட்டவளே இப்போது என் மனதில் வீராங்கனையாக உயர்ந்து நிற்கிறாள். அவளின் கடிதம் என் மனதில் வரி வரியாகப் பதிந்துவிட்டது. நான் இறக்கும் வரை துயர் கொப்புளிக்கும் அந்தச் சொற்கள் அங்கே அலைந்து கொண்டேயிருக்கும். அவளின் போராட்டம் எனக்கான போராட்டமாயும் இருந்தது. ஹெலன் தனது வாழ்க்கையில் பல இன்னல்களையும் துன்பங்களையும் அனுபவித்தாலும் அவள் வீட்டுக்குத் திரும்பி வரவேயில்லை. இறுதிவரை அப்பாவிடம் எந்த உதவியும் கேட்காத அவள் திரும்பி வரும்போது இறப்பதற்காகத்தான் வந்திருந்தாள்.

நான் மீண்டும் தனித்துப் போனேன். மீண்டுமொரு சகோதரி தொலைந்து போனாள். என்னுடன் இருந்த கொஞ்ச நஞ்ச மகிழ்ச்சியும் என்னை விட்டுப் போய்விட்டது.அவள் எங்கு போனாள்? எங்கே அவளைத் தேடுவது? இதெல்லாம் எங்கே போய் முடியப்போகின்றது? அவள் மாதிரியே நானும் வீட்டை விட்டு ஓடிப்போய் விடலாமா எனத் தீவிரமாகச் சிந்தித்தேன். என்னால் ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. நாட்கள் கழிந்து கொண்டிருந்தன. என் துயரங்களும் பெருகிக்கொண்டே போயின.

ஒரு நாள் காலையில் பால்காரர் வரவில்லை. எனவே நான் பால் விற்குமிடத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. அப்பாவிடம் பணம் வாங்கிக் கொண்டேன். பால் வாங்குவதற்குச் செல்லும் வழியில் என் பாடசாலையின் அருகே இராணுவத்தினர் நின்று கொண்டிருந்தனர். எனக்குப் பயம் பிடித்துக்கொண்டது. பயத்தில் என்ன செய்வதென்று தெரியாது வேகமாக அவர்களைக் கடந்து ஓடினேன். பால் விற்பனை நிலையத்தை நான் மூச்சிரைக்க வந்தடைந்த போது நான் கொண்டு வந்த பணம் தொலைந் திருந்தது. மீண்டும் வந்த வழியே பணத்தைத் தேடிச் சென்றேன். நான் வராத பாதைகளில் கூடப் பணத்தைத் தேடினேன், கிடைக்கவேயில்லை. வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது எனது சகோதரி முன்பொரு தடவை பணத்தைத் தொலைத்ததற்காக அப்பாவிடம் எப்படி அடிபட்டாள் என்பது என் நினைவில் வந்தது. வீட்டை நோக்கிச் செல்லும் பாதையில் எனக்கு முன்னால் அச்சம் நடந்து போயிற்று.

நான் வீடு திரும்பிய போது அப்பா வேலைக்குச் சென்றிருந்தார். சிற்றன்னை பணம் தொலைந்து போனதை அறிந்ததும் "அப்பா வந்ததும் நீயாகவே அவரிடம் விசயத்தைச் சொல்லிவிட வேண்டும்" எனக் கட்டளையிட்டார். பாடசாலைக்குச் சென்ற நான் நேரத்தைக் கவனித்துக்கொண்டே இருந்தேன். அப்பா காரிலோ பஸ்ஸிலோ அடிபட்டு வீட்டிற்கே வராமல் இருக்கவேண்டுமென வேண்டிக்கொண்டேன். ஆனால் அவர் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார். சிற்றன்னை என்னை முந்திக்கொண்டாள்.

"முட்டாளே எப்படிப் பணத்தைத் தொலைத்தாய்?" நான் இராணுவத்தினரைப் பற்றிச் சொன்னேன். அப்பாவிற்கோ இராணுவம் என்ற பேச்சை எடுத்தாலே பயம். அவர் என்னை நம்பவில்லை. என்னைப் பாடசாலையிலிருந்து நிறுத்திவிடப் போவதாகச் சொன்னார். இம்முறை நான் என் கண்களைத் தாழ்த்தவேயில்லை. அவரது கண்களை நேருக்கு நேராகப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன். இப்படியே இருவரும் சில நிமிடங்கள் பார்த்துக் கொண்டே நின்றோம். கண்கள் ஆன்மாவின் வாசல்கள் என்பார்கள். ஆனாலும் எனது முட்டாள் அப்பாவால் இந்தச் சிறுமியின் ஆன்மாவைக் காண முடியவில்லைப் போலும்.

நான் படுக்கையில் கிடந்தபோது கண்ணீர் வர வேண்டுமென எதிர்பார்த்தேன். கண்ணீர் வரவே யில்லை. அப்பா தனது கல்வியைப் பெற்றுக் கொண்டார். யாரோ அவருக்காக இரங்கினார்கள். ஆனால் அவரோ எனக்கு அதைத் தர விரும்பவில்லை. நானே எனது வாழ்வை முடித்துக் கொள்வதா? அல்லது அப்பாவே தொடரும் சித்திரவதைகளுடாக அதனைச் செய்து முடிக்கும் வரை நான் காத்திருப்பதா? இந்தக் கேள்விகளின் ஆழத்தில் வாழ்வதற்கான எனது வேட்கை ஒளிந்திருந்தது.

1 மறுமொழிகள்:

Blogger hosuronline.com மொழிந்தது...

படிப்பதற்கு விருவிருப்பாக இருந்தாலும் சாரம் இல்லை

Mon Jul 24, 04:42:00 PM 2006  

Post a Comment

<< முகப்பு