குழந்தைப் போராளி - 13


காட்டிக்கொடுப்பு

எங்களில் பெரியவளான ஹெலனால் அடி உதைகளைத் தாங்க முடியாது போயிற்று. அவள் வாளிப்பான உடலமைப்பைக் கொண்டவள் . வெளுத்த சருமத்துடனும் மின்னும் பெரிய பழுப்புநிறக் கண்களுடனும் ஒரு மான்குட்டி போலக் கவர்ச்சியாக இருப்பாள். தன்னை அடி உதைகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக அவள் எங்கள் சிற்றன்னையின் உளவாளியாக மாறிப் போனாள். குழந்தைகள் என்ன செய்கிறோம், என்ன பேசிக் கொள்கிறோம் என்றெல்லாம் சிற்றன்னைக்கு உளவு சொல்லத் தொடங்கினாள். அடி உதைளுக்காக அஞ்சிய ஹெலன், எங்களில் ஒருவருக்கெதிராக மற்றவரைத் தூண்டிவிடச் சிற்றன்னையால் தான் பயன்படுத்தப்படுகிறாள் என்பதைக் கண்டு கொள்ளவில்லை. சிற்றன்னை எவ்வாறு எங்களின் எல்லா இரகசியங்களையும் தெரிந்து கொள்கிறாரென்பதை எங்களால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. மாஹி என்னைச் சந்தேகத்துடன் பார்த்தாள். நான் ஹெலனைக் கூர்ந்து கவனிக்கும் போதெல்லாம் படபடப்பில் அவளின் கண்கள் துடிக்கத் தொடங்கின. அந்த உளவாளி சிற்றன்னையின் இளைய மகளாக இருக்கலாமென்று மாஹி சொன்னாள்.


ஒருநாள் குசினியிலிருந்த நன்றாகக் கனிந்த வாழைப்பழங்கள் மீது என் கண் விழுந்தது. வயிறு புடைக்க எப்படி வாழைப்பழங்களைச் சாப்பிடுவதென்ற சிந்தனையே காலையிலிருந்து மாலை வரை என்னை அலைக்கழித்துக் கொண்டிருந்தது. சிற்றன்னையிடம் வாழைப்பழம் கேட்க முடியது. அவர் கட்டாயம் மறுத்துவிடுவார். இரவு உணவிற்காக நாங்கள் உணவருந்தும் அறையில் கூடியிருந்தோம்.அங்கேயும் வாழைப்பழங்களைக் 'கிளப்புவது' குறித்தே நான் சிந்தித்துக்கொண்டிருந்தேன்.. மற்றவர்கள் சாப்பிட்டு முடிப்பதற்குள் நான் குசினிக்குச் சென்று விறகுக் குவியலில் கிடந்த நீளமான தடியென்றை எடுத்துக்கொண்டேன். உயரத்தில் கட்டியிருந்த வாழைக்குலையைத் தடியின் உதவியுடன் உலுக்கி நான்கு வாழைப்பழங்களை எடுத்துக்கொண்டேன். வீட்டிற்குப் பின்புறம் வானம் நிறைய நட்சத்திரங்கள் கண் சிமிட்டிக்கொண்டிருந்தன.

தனிமையான ஒர் இடத்தில் இருந்து கொண்டு வாழைபழங்களைச் சாப்பிட்டபடி நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஏதோ உலகத்திற்கு வெளியேயே போய்விட்ட மாதிரி ஓர் அழகிய உணர்வு. இந்த மகிழ்வில் ஹெலன் அங்கு வந்ததை நான் கவனிக்கவில்லை. மின்னல் வானத்தில் இருந்து ஒரு கணத்தில் கீழிறங்குவது போல அவளங்கு நின்றுகொண்டிருந்தாள். சன்னமான குரலில் என் பெயரைக் கூப்பிட்டவள் "அங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்?" எனக் கேட்டாள். நான் மறைப்பதற்கு எந்தப் பிரயத்தனமும் எடுக்காமல் "உனக்கும் ஒரு வாழைப்பழம் வேண்டுமா?" எனக் கேட்டேன்.
"இங்கு என்ன செய்கின்றாய்" - ஹெலன்
"நான் வாழைப்பழம் சாப்பிடுகிறேன்"
"அப்பாவிடம் சொல்லப் போகிறேன்"
ஹெலன் என்னைப் பயமுறுத்துகிறாள் என நினைத்து நான் சிரிக்கத் தொடங்கினேன். மீண்டும் சொன்னதையே அவள் திருப்பி திருப்பிச் சொல்ல உண்மையிலேயே அப்பாவிடம் சொல்லப் போகிறாள் என்பது உறுதியாயிற்று. அடிவானத்தில் இடி முழக்கம் கேட்டது. அல்லது அது ஒரு காட்டுமிருகத்தின் ஓலமாகவும் இருக்கலாம்.


"ஹெலன் நீயும் நானும் ஒரே தாயின் பிள்ளைகள், கொஞ்சம் கருணை காட்டு இதையெல்லாம் நீ அப்பாவிற்குச் சொல்லக் கூடாது"
கடைசியாக அவளின் கையைப் பிடித்துக் கொஞ்சினேன்.. என் கன்னங்களில் கண்ணீர் வழியத் தொடங்கியது. அவளோ அசைந்து கொடுக்கவில்லை. என்னை இறுகப் பிடித்தாள். ஒரு கையைச் சுவரில் பற்றிப் பிடிக்க முயற்சித்த என்னைக் காட்டிக்கொடுக்கும் சகோதரி மறுபக்கம் இழுக்க என் கையில் வலுவில்லாது போனது. ஹெலன் ஒரு கையில் என்னையும் மறு கையில் நான் சாப்பிடத் தொடங்கியிருந்த வாழைப்பழத்தையும் பிடித்திருந்தாள். இறுதியில் அப்பாவின் முன்னால் நின்றேன். சிற்றன்னை தனது மாய்மாலக் கண்ணீரை வடித்துக் கொண்டே தான் எவ்வளவு செய்தாலும் அதை யாரும் மதிப்பதில்லை எனத் தொடங்கி முடிவுறாமல் பொய்களையும் கண்ணீரையும் உதிர்த்துக்கொண்டிருந்தார். பொய்களும் கண்ணீரும் தொடர அப்பாவின் கோபமும் அதைபோல ஏறத் தொடங்கியது. நன்றாகக் கோபம் தலைக்கேறிய நிலயில் அப்பா என்னைத் தரையில் தள்ளிக் காலால் மிதித்தார். "வாழைப்பழத்தை ஏன் திருடினாய்?" என்று கேட்டுக் கேட்டு மிதித்தார். நான் வாயைத் திறக்கவேயில்லை. நான் ஏதாவது மறுமொழி சொல்ல அதைத் தொட்டு சிற்றன்னை அப்பாவின் கோபத்தை மேலும் ஏற்றிவிடக் கூடும். பேசாமலிருப்பதே உத்தமம். எனக்கு விழும் ஒவ்வொரு அடியையும் சிற்றன்னை வெகுவாக ரசித்துக்கொண்டிருந்தார். அப்பாவும் அதைக் கவனித்திருக்கக் கூடும். பார்வையை ஒருகணம் சிற்றன்னை பக்கம் திருப்பினார். பின்பும் அடிகள் தொடர்ந்து விழுந்தன. பின்பு அப்பா படுக்கையறைக்குச் சென்று தனது நீள அங்கியைக் கொண்டுவந்தார். எனது கட்டிலின் மேல் அதனை விரித்தார். இது வழமையாக நடப்பதுதான், அன்றிரவு நான் அந்த அங்கிக்கு மேல் தான் படுத்துத் தூங்கவேண்டும்.

எப்போதும் செய்ய முடியாதவைகளைச் செய்ய நிர்பந்திக்கப்படுவதற்காகவும் அவர் என்னைச் சோதித்துப் பார்ப்பதற்காவும் அழுதேன். மெதுவாக எனக்குள்ளே பாடிக்கொண்டேன். தூக்கத்தை விரட்ட வேண்டியிருந்தது. காலை எழுந்தபோது இருதயம் கழுத்துவரை வந்து விட்டது. அங்கி ஈரமாகத் தெரிந்தது. தொட்டுப்பார்தேன் குளிர்ந்தது. தொட்டவிரலை மூக்கினருகில் வைத்துப்பார்தேன். நேற்றைய தண்டனையின் இரத்தவாடை எழுந்தது. எங்காவது ஓடிப்போய்விடலாமா? காயங்கள் என் ஆன்மாவிலும் உடலிலும் மீண்டும் மீண்டும் திறந்து கொண்டன.

ஹெலனை வரவேற்பறையில் பார்த்ததும் வெறுப்பும் ஆத்திரமும் என்னுள் தீயாக எரியத்தொடங்கியது. வெளியே அப்பாவின் வருகைக்காகக் காத்திருக்கத் தொடங்கினேன். நீண்ட நேரக் காத்திருப்பிற்குப் பின் வெளியே வந்த அவரிடம் ஒன்றுமே சொல்லாது அங்கியை நீட்டினேன். பல நிமிடங்களாகக் கையும் களவுமாகப் பிடிபட்ட திருடனை போல அவர் கண்களைத் தாழ்த்தித் தரையைப் பார்த்துக்கொண்டு நின்றார். கடைசியில் யாரையாவது கூப்பிட்டுப் பிரம்பை எடுத்து வரத்தான் சொல்லப் போகிறார். நான் எனது பார்வையைத் தாழ்த்தவே இல்லை. அவரது கண்களை நேராகப் பார்த்தேன். என் கண்களில் கண்ணீர் துளிகளாக உருண்டன. நான் அவரைக் கோபப்படுத்த முயற்சிக்கவில்லை. ஆனால் அப்பா என்னை ஒரு குழந்தையாகப் பார்க்கவும் ஒரு குழந்தையாக ஏற்கவும் வேண்டுமென்றும், அவர் என்ன செய்கின்றார் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டுமென்றும் அவருக்கு மெளனமாக உணர்த்த முயன்றேன். அவரின் கண்களில் குற்ற உணர்வையும் வெட்கத்தையும் நான் கண்டேன். அவருக்கு அப்போது அழுவதா சிரிப்பதா என்று தெரியாது இருந்திருக்கவேண்டும். அதனால் தான் அப்பா தன் கண்களை உருட்டிக் கொண்டிருக்கிறாரோ? அவரது கண்களில் என்ன செய்வதென்று அறியாத குழப்ப உணர்வு மறைந்து மறுபடியும் கோபம் தெரியும்வரை என் கண்களை அவரின் கண்களிலிருந்து நான் எடுக்கவே இல்லை. நான் சொன்ன சேதி அவருக்கு விளங்கியிருக்குமா? அல்லது உறைந்திருந்த என் இரத்தம் அவருக்கு அருவருப்பை ஊட்டியிருக்குமா?

அன்று மதியம் கழிந்த பின் நான் ஹெலனையும் மாஹியையும் வழமையாக நாங்கள் சந்திக்குமிடத்திற்கு வரச் சொன்னேன். மாஹி ஹெலனுக்குப் புரியவைக்க முயன்றாள்: "நாம் எதைத்தான் செய்தாலும் நாங்கள் ஒருபோதும் சிற்றன்னையின் ஆழமான வெறுப்பிலிருந்து தப்பிக்கப் போவதில்லை. நாமெல்லோருமே ஓரே தோணியில் தான் பயணம் செய்கின்றோம். நாம் ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுத்தால் அது சிற்றன்னைக்குத்தான் மகிழ்வைக் கொடுக்கும். அவள் எங்களைப் பார்த்துக் கேலியாகச் சிரிக்கத்தான் அது உதவும்".
ஹெலன் அழத் தொடங்கினாள். நாங்கள் அவளை விட்டுவிட்டு வத்தாழைக் கிழங்குப் பாத்திகளைத் தேடிக் கிழங்குகள் பிடுங்கச் சென்றோம். சிறிது நேரத்தில் அங்கு வந்த ஹெலன் இனித்தான் ஒருவரையும் காட்டிக் கொடுக்கப்போவதில்லை என எங்களுக்குச் சத்தியங்கள் செய்து கொடுத்தாள்.

நகர வீட்டில் வாழ்க்கை இவ்வாறு நகர்ந்து கொண்டிருந்தது. ஒருநாள் இறைச்சி வாங்கப் போன ஹெலன் வெறுங்கையுடன் திரும்பி வந்தாள். காசு தொலைந்து போய்விட்டதென்று அழுதுகொண்டே ஹெலன் மாஹியிடம் சென்றாள்.இன்னும் சிற்றன்னைக்கு விசயம் தெரியாது. என்ன செய்வதென்று தெரியாத நிலை. மாஹி ரிச்சட்டையும் என்னையும் சேர்த்துக் கொண்டு தீவிர ஆலோசனை நடத்தினாள். ரிச்சட் வீதியில் பிச்சை எடுக்கலாமென்று முன்மொழிய நாங்கள் பிச்சையெடுக்கச் சென்றோம். பல மணி நேரங்கள் சென்றும் போதியவளவு பணம் சேரவில்லை. கூனிக் குறுகிக் கொண்டு எல்லோரும் வீடுவந்து சேர்ந்தோம். ஹெலன் சிற்றன்னையிடம் விசயத்தைச் சொல்ல அவர் "என்னால் ஒன்றுமே செய்ய முடியாது அப்பா வரும் வரை காத்திரு" எனச் சொல்லி விட்டார். மாலை, அப்பா வந்ததும் ஹெலன் அவர் முன்னே போய் நடுங்கியபடியே நிற்க முகத்தில் அறைகள் விழுந்தன. அவள் தொலைத்த பணம் அவளின் பாடசாலைக் கட்டணத்திற்குச் சமனாயிருந்தது. எனவே அவளை இனிப் பாடசாலை அனுப்ப முடியாது என அப்பா முடிவாகச் சொல்லி விட்டார். ஹெலன் தரையில் முழந்தாளிலிருந்து அப்பாவிடம் மன்னிப்புக்காக மன்றாடினாள். எந்த மன்றாட்டத்தாலும் அப்பாவின் முடிவை அசைக்க முடியாது போயிற்று. நாளையிலிருந்து அவள் வாழைத்தோட்டத்தில் வேலை செய்ய வேண்டும். நாங்கள் பாடசாலை செல்ல பரபரப்பாக இருக்க அவள் மண்வெட்டியைத் தேடி ஓடிக்கொண்டிருந்தாள்.

நீண்டகாலமாக இந்த நிலை மாறவே இல்ல. ஹெலன் வேலை செய்தேயாக வேண்டியிருந்தது. காற்றப் போல அவள் வீட்டிலிருப்பது தெரியாமலே இருந்தது. ஒருநாள் நான் பள்ளியிலிருந்து வீடு திரும்பிய போது ஹெலன் வீட்டை விட்டு ஓடிப்போயிருந்தாள். அப்பாவின் முகம் எந்த உணர்வையும் காட்டவில்லை. "எல்லோரும் நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள் உங்கள் அம்மா மாதிரியே உங்களது சகோதரியும் ஒரு முட்டாள்". இது ஹெலன் வீட்டைவிட்டு சென்றதற்கான அவரது விளக்கம். தொடர்ந்து அவர் சொன்னார், "நீங்களெல்லோருமே வீட்டை விட்டுப் போனாலும் எனக்குக் கவலையில்லை". எனக்கு ஒன்று தெளிவானது, எங்களது தந்தை எங்கள் அம்மாவை வெறுப்பது போலவே குழந்தைகள் எங்களையும் கடுமையாக வெறுக்கிறார். வாழ்க்கை எங்களுக்கு எதனைத் தரப்போகிறது? அது எங்களை எங்கே கொண்டுபோய் நிறுத்தப்போகிறது? எங்களது எதிர்காலம் எவ்வாறு இருக்கப் போகிறது? ஒன்றுமட்டும் நிச்சயம், எங்கள் எல்லோரது வாழ்க்கைப் பாதையும் ஒன்றாகத்தான் இருக்கும்.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு