குழந்தைப் போராளி - 21




இருளில் ஓர் ஒளிக்கீற்று

ருவாரம் கழிந்தது, அப்பா திரும்பி வரவேயில்லை, சிற்றன்னையுமில்லை. பண்ணையில் எங்களது ஆட்சி தான். பாட்டி வழமைக்கு மாறாக அமைதியாக இருந்தார். நாங்கள் என்ன செய்கிறோமென அவர் கவனிக்கவில்லை. ஒருநாள் நாங்கள் வேட்டை முடிந்து திரும்புகையில் மாஹியை வழியில் சந்தித்தோம். தனது ஆடைகளுக்காகவும் சில மிட்டாய்களுக்காகவும் எங்களது காசைக் கரியாக்கிய எங்கள் சகோதரி. இம்முறையும் அவள் மிட்டாய்களைக் கொண்டு வந்திருந்தாள். இம்முறை தான் அழகாக இருக்கிறாளா என அவள் எங்களிடம் கேட்கவில்லை. அப்பா கைது செய்யப்பட்டதைப் பற்றி அவளுக்குச் சொல்வதற்கு நாங்கள் மிக ஆர்வமாயிருந்தோம். அப்பாவிற்கு நடந்ததைச் சொல்லி முடித்த போது அவள் "அப்பா பெரியதொரு குற்றத்தைச் செய்திருக்கிறார் அதனால் அவர் நீண்ட நாட்கள் சிறையிலிருப்பார்" எனச் சொன்னாள். நாங்கள் பாடசாலையிலிருந்து அப்பாவால் நிறுத்தப்பட்டதை அறிந்ததும் "சிற்றன்னையின் குழந்தைகளும் பாடசாலையிலிருந்து நிறுத்தப்பட்டனரா?" என மாஹி கேட்க இல்லையென்று தலையசைத்தேன். கொத்துவதற்கு முன்பு பாம்பு சீறுமே! அதேபோல மாஹி சீறினாள். அவளின் கண்கள் கோபத்தில் மின்னின. மாஹி எங்களை மீண்டும் நகரத்திற்கு அழைத்துச் சென்றாள். சில நாட்களிலேயே மறுபடியும் எங்களைப் பாடசாலைக்கு அனுப்பிவைக்க அவளால் முடிந்தது.

மாஹி அப்பாவைப் பார்க்க விரும்பினாள். நான் அவளுடன் கூடச் செல்ல வேண்டும். அப்பா சிறையில் எப்படியிருக்கிறார் என்று பார்த்து விடுவதற்கு எனக்கு மிக மிக ஆசையாயிருந்தது. சிறை வாயிலில் நின்றிருந்த காவலர்கள் எங்களைக் கூர்ந்து கவனித்தனர். காவலர்களில் ஒருவன் மாஹியைக் கூப்பிட்டான். நான் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தேன். மாஹியோ தயக்கமேயில்லாது அவனை நோக்கி அன்ன நடை போட்டுச் சென்றாள். தனது கவர்ச்சியான சிரிப்பால் அவனை மயக்கி நாங்கள் உள்ளே செல்வதற்கு லஞ்சமே கொடுக்காது அனுமதியும் வாங்கினாள்.

சில நிமிடங்களில் ஒரு காவலாளி அப்பாவை அழைத்து வந்தான். சாம்பல் நிற அரைக் காற்சட்டையும் அதே நிறத்தில் கட்டைக் கைச் சட்டையும் உடுத்தியிருந்த அப்பாவின் தலை மொட்டையடிக்கப்பட்டிருந்தது. தரையில் உட்காரச் சொல்லி அப்பாவிற்கு காவலாளி கட்டளையிட்டான். அப்பா வெட்கம் பிடுங்கித் தின்னக் கூனிக் குறுகியபடி தரையில் உட்கார்ந்தார். நாங்கள் அவருடன் இருந்த முழு நேரமும் அவர் தன் தலையைக் குனிந்தவாறே இருந்தார். அவர் என்னுடன் இரண்டொரு வார்தைகள் மட்டுமே பேசினார். மாஹியிடம் தான் அவர் கூடுதலாகப் பேசினார். அப்பா மாறியிருக்கின்றாரா எனக் கண்டு பிடிப்பதிலேயே என் கவனம் முழுவதுமிருந்தது. ஆனால் நான் அவரின் முகத்தில் ஒரு இறுக்கமான சிரிப்பைத் தவிர வேறெதையும் கண்டு பிடிக்கவில்லை. பேச்சு எங்கள் பாடசாலை, படிப்பு என வந்ததும் அப்பாவும் மாஹியும் கடுமையான வாய்த் தர்க்கத்தில் இறங்கினார்கள். எனக்கு அப்பாவைப் பார்க்க பரிதாபமாயிருந்ததால் நான் மாஹியை இந்த விவாதத்தை நிறுத்தச் சொல்லிக் கேட்டும் அவள் அடங்கவில்லை. காவலாளி அப்பாவை அவரது சிறைக் கூண்டுக்குத் திரும்பச் சொல்லிக் கட்டளையிட்டான். இதனால் அவரிடம் சரியாக விடைபெறக் கூட என்னால் முடியவில்லை. என் கண்களில் பொங்கி வந்த நீர் மாஹியின் கோபத்துக்குக் கட்டுப்பட்டு நின்றது.

மாஹி கம்பலாவிற்குச் சென்று விட்டாள். சிற்றன்னை என்னை வேண்டா வெறுப்பாக பாடசாலைக்குச் செல்ல அனுமதித்துக்கொண்டிருந்தார். ஆனால் தம்பி ரிச்சட் பண்ணைக்குத் திருப்பி அனுப்பப்பட்டான். புதுப் பாடசாலை சுவாரஸ்யமாக இருந்தது. எனது பழைய பாடசாலையின் ஆசிரியர்களைவிட இங்கே ஆசிரியர்கள் புரிந்துணர்வு உள்ளவர்களாக இருந்தார்கள். சிறிது காலத்திலேயே நான் வகுப்பின் முதன்மை மாணவியானேன். ஆனால் சக மாணவர்களுடனான உறவில் சிக்கலுக்கு மேல் சிக்கல் ஏற்பட்டது. அவர்கள் எனது இனக் குழுவைத் தீவிரமாக வெறுத்தார்கள்.எனது முகவெட்டும் உதடுகளின் அமைப்பும் வெளிறிய தோலும் என்னைச் சக மாணவர்களிடமிருந்து புறம்பானவளாக - ஒரு துற்சியென - அடையாளம் காட்டிக்கொண்டேயிருந்தன.

மாஹி வீட்டைவிட்டு போன பின்பு சிற்றன்னை கிழமைக்கு ஒன்றாக மாடுகளை விற்கத் தொடங்கினார். எனது பாடசாலைக் கட்டணத்தைக் கட்டுவதற்கு பணம் தேவைப்படுகிறது என்பது அவரது வாதம். அவரின் சகோதரிகள் அடிக்கடி எங்களின் வீட்டுக்கு வந்து போகத் தொடங்கினார்கள். அப்பாவால் விரட்டியடிக்கப்பட்ட சிற்றன்னையின் தாய் ஜேனும் சிற்றன்னையின் சகோதரி கிறிஸ்ரினாவும் ஒவ்வொரு மாலையும் வீட்டிற்கு வரத் தொடங்கினர். எங்களின் பணத்தைத் தாராளமாக அவர்கள் தின்றார்கள். கடைசியில் கிறிஸ்ரினா எங்கள் வீட்டிலேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டாள்.

சிற்றன்னை எப்போதாவது ஒருமுறை தான் சிறைச்சாலைக்குச் சென்று அப்பாவைப் பார்த்து வந்தாள். அப்பா சிறையிலிருந்து விடுதலையாகாமலேயே போகலாம், அதே போல சிற்றன்னை அப்பாவின் பணம் முழுவதையும் அபகரித்துக்கொண்டு என்னை வீட்டைவிட்டும் விரட்டியடிக்கலாம். அப்பா ஒரு தீய மனிதர். அவர் சிறையிருப்பது நியாயமானது. அது அவராகவே தேடிக்கொண்டதும்தான். ஆனால் சிற்றன்னையிடமிருந்தும் 'தட்டிச் சுத்தும்' சிற்றன்னையின் குடும்பத்திடமிருந்தும் என்னைக் காப்பாற்றக் கூடியவரும் அவர்தான்.

பாடசாலையில் நான் சிரமப்படத் தொடங்கினேன். எனக்குப் பாடங்களில் கவனம் செலுத்துவது இயலாத காரியமாக இருந்தது. படிப்பில் மற்ற மாணவர்களிடமிருந்து நான் பின் தங்கினேன். ஆசிரியர்கள் எனது நிலை பற்றி விசாரித்தபோது என்னால் அவர்களுக்குப் பதிலெதையும் தரமுடியவில்லை.

ஒருநாள் பாடசாலையிலிருந்து திரும்பி வந்தபோது, நான் மாஹி வந்துகொண்டிருப்பதைக் கண்டேன். அவளை வரவேற்கக் கூட மறந்து எனது பாடசாலைப் பையை வீசி எறிந்துவிட்டு எல்லோரிடமும் அவளது வரவை மகிழ்வாகச் சத்தமிட்டு அறிவித்தேன். எனது எதிரிகளுக்கும் அவள் வரவு தெரியவந்தது. மாஹி பலம் பொருந்தியவள், உறுதியானவள், பல தடவைகள் என்னைச் சிற்றன்னையிடமிருந்து காப்பாற்றியவள். அன்று இரவுக்குள்ளாகவே மாஹி சிற்றன்னையுடன் தனது தர்ம யுத்தத்தைத் தொடங்கி விட்டாள். மாடுகளை விற்பதைச் சிற்றன்னை நிறுத்தாவிட்டால் அவளை அடிக்கப் போவதாகச் சிற்றன்னையை மாஹி எச்சரித்தாள். அவள் அதைச் செய்யக் கூடியவளும் கூட. மாஹி வீட்டு நிர்வாகத்தைத் தனது கைகளில் எடுத்துக்கொண்டாள்.

சில வாரங்களின் பின் அப்பா சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். சிறைச்சாலையிலிருந்து அப்பாவை மாஹிதான் கூட்டி வந்தாள். மறுபடியும் நான் பாடசாலைக்குச் செல்வது தடைப்படலாம் என எனக்குப் பயம் பிடித்துக்கொண்டது. ஆனால் வீட்டிற்கு வந்த அப்பா ஒரு நல்ல தகப்பனாக இருக்க உண்மையிலேயே முயன்றார்.


அவரது வேலை பறிபோயிருந்தது. புதிதாக வேலை எதுவும் அவருக்குக் கிடைக்கவில்லை. அப்பா மிதமிஞ்சிக் குடிக்கத் தொடங்கிச் சதா காலமும் போதையிலேயே கிடந்தார். ஒரு இரவில் எங்கள் எல்லோரையும் தன்னருகில் கூட்டி வைத்துப் போதையில் எங்களது எதிர்காலம் பற்றிய தனது 'தீர்க்க தரிசனத்தை'உரைத்தார். "எல்லோரும் என்னை நன்றாகப் பாருங்கள்... நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள்" அவரால் சரியாகக் கூட நிற்கமுடியவில்லை. சகோதரன் ரேயில் தொடங்கிய அவர் " மகனே நீ ஒரு வைத்தியனாவாய், பமிலா நீ தாயாவாய், இம்மானுவேல் நீ தகப்பனாவாய்" சிறிது நேரம் பேசாமலிருந்த அவர் பின்பு என்னைப் பார்த்து "நீ விமான ஓட்டியாவாய் மகளே" என்றார்.

ஒருநாள் அப்பா தான் சிறையிலிருந்த நேரத்தில் சிற்றன்னை பக்கத்து வீட்டிலிருந்த இளைஞனுடன் உடலுறவு வைத்துக்கொண்டதாகச் சிற்றன்னையைக் குற்றம் சாட்டினார். "வீடு முழுவதும் விந்துக்களின் நாற்றமாயிருக்கிறது" எனக் கத்திக்கொண்டே சிற்றன்னையப் பிடித்து வெளியே இழுத்துச் சென்று தோட்டத்தில் வைத்து அடிக்கத் தொடங்கினார். ஒரு வாரத்தில் பழைய வேலை அவருக்குத் திரும்பவும் கிடைத்ததும் குடிப்பதை அவர் நிறுத்தினார்.

சிற்றன்னை மீண்டும் தனது பழைய தந்திரத்தை உபயோகிக்கத் தொடங்கினார். இன்று இரவுணவை நான் தயாரிக்க வேண்டுமாம், அவர் திருமதி டெரிக்கைப் பார்க்க வெளியே போகிறாராம். நான் அவர் தயாரிக்கும் மஞ்சள் நிறமான ஆணத்தைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினேன். அந்த ஆணம் மிகவும் ருசியானது. நான் வேலையைக் காட்ட ஆரம்பித்தேன். மீன் கொழுப்புடன் சுவையான மசாலாத் தூள் சிறிதளவு சேர்த்தேன். உப்பைக் கவனமாகக் கையாண்டேன். திரும்பி வந்த சிற்றன்னை சமையலறைக்குச் சென்று பார்வையிட்டார். அவர் குறை எதுவுமே சொல்லவில்லை. எனக்குப் பெருமை பிடிபடவில்லை. எல்லோரும் மேசையில் கூடியிருந்தோம். நான் சமைத்தது பற்றிச் சிற்றன்னை யாருக்கும் எதுவுமே சொல்லவில்லை. உணவு பரிமாறப்பட்டது.

"இது என்ன மயிர்ச் சாப்பாடு?" மனைவியைப் பார்த்து அப்பா கேட்டார்.

"உனது மகளைக் கேள்" இது சிற்றன்னையின் பதில்.

"ஏன் மகளைக் கேட்க வேண்டும்? நீ தானே எனது மனைவி"

"நான் என் சிநேகிதி வீட்டிற்குச் சென்றிருந்த போது உன் மகள் நான் சொல்லாமலேயே சமையலறையில் தன் கைப் பக்குவத்தைக் காட்டியிருக்கிறாள்" சிற்றன்னை கூசாமற் பொய் சொன்னார். அதைக் கேட்டதும் அப்பா என் பக்கம் திரும்பி "உன்னை யார் சமைக்கச் சொன்னது?" என்று கத்தினார். நான் தரையைப் பார்த்துக்கொண்டு மெளனமாக அமர்ந்திருந்தேன். அப்பா ரேயிடம் தோட்டத்திற்குச் சென்று மிளகாய் பிடுங்கி வரும்படி சொன்னார். மிளகாய்களை அந்த ஆணத்துடன் கலந்து சாப்பிடச் சொல்லி எனக்குக் கட்டளையிட்டார்.

நான் சாப்பிட்டாலும் சாப்பிடாவிட்டாலும் உதை கிடைக்கப்போவது நிச்சயம். "சாப்பிடு!" என்ற கட்டளை உரக்கவும் பயமுறுத்தும் விதத்திலும் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டது. நான் கல்லுப் போல அசையாமல் அமர்ந்திருந்தேன். அப்பா தனது அறையிலிருந்து பிரம்பை எடுத்து வந்தார். என்னைத் தரையில் படுக்கும்படி அப்பா உத்தரவிட்டார். நானோ நாற்காலியிலேயே அசையாது உட்கார்ந்திருந்தேன். அப்பா தனது கைகள், கால்கள், பிரம்பு, சமையலறைப் பாத்திரங்கள் என எல்லாவற்றையும் என்னைத் தாக்குவதற்குப் பிரயோகித்தார். நான் கைகளால் எனது கண்களைப் பாதுகாக்கப் போராடிக்கொண்டே ஓலமிட்டு அழுதேன்."அப்பா அவளை விட்டுவிடுங்கள் நீங்கள் அவளைக் கொன்றுவிடப் போகிறீர்கள்" எனச் சிற்றன்னையின் பிள்ளைகள் அப்பாவைக் கெஞ்சினார்கள். உடனடியாகவே அவர்களைப் படுக்கைகளுக்குச் செல்லுமாறு அப்பா உத்தரவிட்டார். நான் சமையலறையில் தனியாக விடப்பட்டேன். சற்று நேரங் கழித்து ரேயும் பமிலாவும் வந்து எனது இரத்தத்தைக் கழுவ உதவி செய்து என்னைப் படுக்கைக்கு அழைத்துச் சென்றனர். பமிலா என்னுடன் படுத்துக் கொள்வதாகச் சொன்னது எனக்குச் சற்று நிம்மதியைக் கொடுத்தது. இருவருமே நீண்ட நேரமாக அப்பாவைப் பற்றியும் சிற்றன்னையைப் பற்றியும் பேசிக்கொண்டோம். அவர்கள் இருவரையும் தானும் தீவிரமாக வெறுப்பதாகப் பமீலா என்னிடம் சொன்னாள்.

அடுத்த நாள் காலையில் நான் பாடசாலைக்குப் புறப்படுகையில் "பாடசாலையில் உன் காயங்களைப் பற்றிக் கேட்டால் மரத்திலிருந்து தவறி விழுந்ததாக நீ சொல்ல வேண்டும்" என அப்பா என்னை எச்சரித்தார். மறுத்தால் மீண்டும் உதை கிடைப்பது நிச்சயம். நான் மெல்ல மெல்லத் தத்தித் தத்திப் பாடசாலைக்குச் சென்றேன். எல்லாப் பிள்ளைகளும் என்னைச் சுற்றி நின்று எனக்கு என்ன நடந்ததெனக் கேட்டனர். என்னால் சொல்ல எதுவும்முடியவில்லை. கண்ணீர் என் கன்னங்களில் வழிந்தோடியது. அவர்கள் ஓர் ஆசிரியரை என்னிடம் கூட்டி வந்தனர். அவரும் என்ன நடந்ததென்பதை அறிய விரும்பினார். எனது மரத்தால் விழுந்த கதையை அவர் நம்பவில்லை. அவர் தலைமை ஆசிரியரிடம் என்னைக் கூட்டிச் சென்றார். தலைமை ஆசிரியர் "இந்த விசாரணை ஓர் இரகசியமான விசாரணை, நீ சொல்வது எதுவும் இநத அறையை விட்டு வெளியே போகாது" எனச் சொல்லியும் நான் மெளனமாகத் தலையைக் குனிந்தவாறே நின்றிருந்தேன். தலைமையாசிரியரும் விடுவதாகயில்லை. இறுதியில் நான் நடந்ததைக் கூறினேன். தலைமையாசிரியர் உடனடியாகவே ஒரு கடிதமெழுதி அதை அப்பாவிடம் சேர்ப்பிக்குமாறு என்னிடம் கொடுத்தார். வீட்டுக்குத் திரும்பிய நான் அப்பாவிடம் கடிதத்தைக் கொடுத்ததுமே அப்பா உறுமத் தொடங்கினார். நான் அச்சத்துடன் தோட்டத்திலேயே காத்திருந்தேன். அப்பா பதில் கடிதமெழுதித் தலைமையாசிரியரிடம் கொடுக்கும்படி என்னிடம் தந்தார். என்னைத் தனது வீட்டிலேயே வைத்திருந்து படிப்பிக்க விரும்புவதாகத் தான் எனது அப்பாவிற்கு கடிதம் எழுதியிருந்ததாகத் தலைமையாசிரியர் என்னிடம் சொன்னார்.

1 மறுமொழிகள்:

Blogger Santhosh மொழிந்தது...

இது ஏதோ மிகைப்படுத்தப்பட்ட கதை போல் தோன்றுகிறது என்ன தான் ஒரு மனிதன் கொடூரன் என்றாலும் தனிமை அவனை சிந்திக்க வைத்துவிடும். இதில் என்னடா என்றால் சில நேரம் இவரின் தந்தை நல்லவன் போலவவும் சில நேரங்களில் வெறி பித்தவன் போலவும் இந்த இரண்டுக்கும் மிடையே ஆனா ட்ரன்சிடிஒன் கால அளவு நம்பும்படியும் இல்லை மனைவியின் மீது சந்தேகம் கொண்ட ஒருவன் ம்னைவி சொல்லுவதை நம்பி உடனே தன்னுடைய குழந்ட்டகிந்தையை அடிக்கிறான் என்றால் அது மிகைப்படுதப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது. இது மொழி மாற்றல் செய்யப்படும் பொழுது ஏற்பட்ட தவறா இல்லை ஆசிரியரே இவ்வாறு கூறியுள்ளாரா என்று தெரியவில்லை.மேலும் இந்த கதையில் வரும் கதாப்பாத்திரம் சில நேரங்களில் சிறுமி போன்ற ஒரு எண்ணமே இல்லாது போகிறது. ஜோடித்த கதை போன்ற உணர்வே மிஞ்சுகிறது :(

Wed Jan 03, 01:00:00 AM 2007  

Post a Comment

<< முகப்பு