குழந்தைப் போராளி - 29



நூற்றுக்கு இருநூறு

சில நாடகள் கழித்து நானும் இன்னும் ஐந்து தோழர்களும் ஐந்தாவது விசேட படைப் பிரிவுக்கு அனுப்பப்பட்டோம். ஐந்தாவது விசேட படைப் பிரிவின் கட்டளைத் தளபதியான ஸ்டீபன் கசாக்கா என்னுடன் வந்திருந்த இரண்டு தோழர்களைத் தனது மெய்ப் பாதுகாப்பாளார்கள் அணிக்குத் தேர்வு செய்துகொண்டார். தலைவர்களும் தளபதிகளும் உயரதிகாரிகளும் தங்கள் மெய்ப் பாதுகாவலர்களாகப் பெரும்பாலும் குழந்தைப் போராளிகளையே தேர்ந்தெடுப்பார்கள். குழந்தைப் போராளிகள் கேள்விகளைக் கேட்பதில்லை. நல்லது கெட்டதைப் பகுத்துணர முடியாத, மூளைகள் மழுங்கடிக்கப்பட்டிருந்த அந்தக் குழந்தைகள் நூற்றுக்கு இருநூறு வீதம் விசுவாசத்தைக் கொண்டவர்களாயிருப்பார்கள்.

குழந்தைப் போராளிகள் எல்லாவித அட்டூழியங்களிலும் பங்கெடுத்துக் கொள்வார்கள்.பல குழந்தைகளுக்குக் கொலையும் சித்திரவதையும் மிகப் பிடித்தமான வேலைகள். கொலைகளாலும் சித்திரவதைகளாலும் தங்களது தளபதிகளின் நன்மதிப்பைக் குழந்தைகளால் சீக்கிரமே பெற்றுவிட முடியும். போர் கைதிகளையும் உளவாளிகள், துரோகிகள் எனக் குற்றம் சுமத்தப்பட்டவர்களையும் குரூரமாகச் சித்திரவதை செய்தும், புதை குழிகளுக்கு அனுப்பியும் ஒரே நாளில் இராணுவப் படிநிலைகளை ஒரே தாவாகத் தாவி உயரே சென்று விடக் குழந்தைகளால் முடியும். போர்க் கைதிகளுக்கு நாங்கள் இழைக்கும் உச்சபட்சச் சித்திரவதைகள் எதிர் காலத்தில் எங்கள் உளவியலை எவ்வாறு பாதிக்கப் போகின்றன என்பதை அறியாத குழந்தைகளாக நாங்களிருந்தோம். அந்தக் கொடூரம் வாழ்நாள் முழுவதும் எங்களை வதைத்துக் கொண்டேயிருக்கும்.

நாங்கள் தலைவரின் பெயரால் அவரை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக வகை தொகையின்றி அட்டூழியங்களைச் செய்தோம். பதிலுக்கு அவர் எங்கள் மீதேறிச் சவாரி விட்டார். நாங்கள் தலைவரால் சாவதற்கென்றே வளர்க்கப்பட்டோம். நாங்கள் கற்பூரத்தால் வார்க்கப்பட்ட பறவைகள்.எங்களைப் போன்ற சபிக்கப்பட்ட குழந்தைகளிடம் இயல்பான மன வளர்ச்சியை எதிர்பார்க்க முடியுமா?

வெளிப் பார்வைக்கு நாங்கள் குழந்தைகள். ஆனால் எங்களின் மறுபக்கமோ முற்றிலும் வேறுபட்டது. எந்த மானுட விழுமியங்களுக்குள்ளும் அடங்காத குழந்தைகள் நாங்கள். எப்போது எங்கு பற்றும்? எந்தத் திசையில் திரும்பும்? எனக் கணிக்க முடியாத காட்டுத் தீ போல நாங்கள் நெருப்பெடுத்து நின்றோம். எங்களிடம் மிக அடிப்படை உணர்வுகளான பசி, தாகம், குளிர், வெப்பம் ஆகியவற்றைத் தவிர மற்றெல்லா உணர்வுகளும் மரத்துப் போயிருந்தன. நாங்கள் மனித இயந்திரங்கள் போலத் தலைமையின் கட்டளைகளைக் கேள்விகளே கேட்காது நிறைவேற்றிக்கொண்டிருந்தோம். சிந்தனைகள் மழுங்கடிக்கப்பட்ட, மரத்துப் போன நிலையிலிருந்து நாங்கள் இம்மியளவேனும் விடுபடுவதாகத் தளபதி கருதுவேரானால் நாங்கள் உடனடியாகப் போர்முனைக்குச் சாவதற்காக அனுப்பப்படுவோம். ஏனெனில் நாங்களில்லாவிடில் தளபதியின் தவறுகளுக்கும் குற்றங்களுக்கும் சாட்சிகளும் இல்லை.

எங்களில் பலர் இப்படிப் போர்முனைகளுக்கு அனுப்பப்பட்டு அழிந்து போனார்கள். எங்களது தலைவருக்கும் தளபதிகளுக்கும் அடிமட்டப் போராளிகளைப் பற்றி உண்மையிலேயே அக்கறையுண்டா? அல்லது நாங்கள் எக்கேடு கெட்டுப் போனாலும் இவர்களுக்குக் கவலையில்லையா? என்ற கேள்விக்கான பதிலை நான் தேடிக்கொண்டிருந்தேன். தலைமைப் பொறுப்புக்களிலிருந்தவர்களில் ஏறத்தாழ எல்லோருமே அதீத சுயநலப் பிராணிகளாகயிருந்தார்கள். தங்களுடைய நலன்களைத் தவிர வேறொன்றைப் பற்றியும் அவர்களுக்கு அக்கறையில்லை. நாட்டின் அதிகார மையத்தை விரைந்து கைப்பற்றிக் கொள்வதும் அதன் மூலம் கொழுத்த பணக்காரர்களாகி விடுவதுமே அவர்களின் ஒரே குறிக்கோளாகயிருந்தது. அவர்கள் மீது அசைக்க முடியாத விசுவாசத்தைக் கொண்டிருந்த போராளிக் குழந்தைகளுக்கு அவர்களது இதயத்தில் எந்த இடமுமில்லை. எங்களின் மேதகு தலைவர் யோவேரி முசேவெனியின் இதயத்தில் கூட எங்களுக்கிடமில்லை. எந்தச் சர்வாதிகாரிக்கு எதிராகப் போரிட்டாரோ அந்தச் சர்வாதிகாரியைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு சர்வாதிகாரியாக எதிர்காலத்தில் யோவேரி முசேவெனி மாறுவார் என்பதை அன்று நான் கற்பனை கூடச் செய்து பார்த்ததில்லை.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு