குழந்தைப் போராளி - 41


மீண்டும் தப்பியோட்டம்

நிம்மதியற்ற, தூக்கமுமற்ற இரவுக்குப்பின் மீண்டும் நான் ஓடத் தொடங்கினேன். காலை ஐந்து மணிக்கே நான் எழுந்து உடைகளை அணிந்துகொண்டு புறப்பட்டபோது தம்பி ரிச்சட் அறையின் ஒரு மூலையில் உறங்கிக்கொண்டிருந்தான். வார்தைகளின்றி என் இருதயத்தால் அவனுக்கு நன்றி கூறினேன். சில விநாடிகளிலேயே பரந்த வானத்தின் கீழே நான் நின்றுகொண்டிருந்தேன். சூரியன் இன்னும் வெளியே வரவில்லை. நான் ஓட்டமும் நடையுமாகப் பிரதான வீதியை நோக்கிப் போனேன். வழியில் யாரையும் சந்தித்து விடக்கூடாது என்பதற்காகச் சாலையால் நடந்து செல்லாமல் காட்டுக்குள் இறங்கி நடந்தேன். அடர்ந்த பற்றைக்காடு என்னுள் ஒளிந்திருந்த பயத்தினைக் கிளறிவிட்டது. பயத்தின் காரணமாக மூளையற்ற முயலைப்போல நான் தாறுமாறாக ஓடாமலிருக்க என்னையே நான் பெரும் பிரயத்தனப்பட்டுக் கட்டுப்படுத்த வேண்டியிருந்தது.

பிரதான வீதிக்கு வந்து ஏதாவது வாகனம் வருமா என்று பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன். ஒரு சோமாலிய லொறிக்காரர் என்னை ஏற்றிகொண்டார். அவருக்குப் பெருமை பிடிபடவில்லை. என்னைப் போன்ற ஓர் இராணுவத்தினளுக்கு உதவுவதில் அவருக்கு ஒரு மகிழ்ச்சி, மிகவும் உற்சாகமாயிருந்தார். அவர் என்னையும் ஒரு சோமாலியப் பெண் என்றே நினைத்திருக்க வேண்டும். வழியில் பொலிஸாரால் ஏற்படும் தொல்லைகளிலிருந்து எனது இராணுவச் சீருடை அவரைப் பாதுகாக்கும்.

ஏற்கனவே மிகவும் களைத்துப் போயிருந்த சாரதி தான் தூங்கிவிடாதிருக்க என்னுடன் ஓயாது பேசிக்கொண்டேயிருந்தார். மனித நடமாட்டமேயற்ற பற்றைக் காடுகளுக்குள்ளாலும் வரண்ட நிலப்பரப்புகளுக்குள்ளாலும் லொறி ஓடிக்கொண்டிருந்தது. நேரமாக நேரமாகச் சூரியன் உச்சத்தில் தகிக்கத் தார்சாலை உருகி மிருதுவாய் மாறிவிட்டிருந்தது. அதோ 45வது படையணியின் தலைமையகம் தெரிகிறது; கூடவே என்னை எதிர்நோக்கியிருக்கும் ஆபத்தும் என் மனக் கண்ணில் தெரிகிறது. அப்பா இந்த விடயத்தை இலேசில் விடமாட்டார். அவர் இங்கு வந்து படைத் தலைமை அதிகாரியைச் சந்தித்து என்னை ஒரு திருடி எனக் குற்றம் சாட்டாமல் விடப்போவதில்லை. தலைமையகத்தில் இறங்காமல் தொடர்ந்து பயணித்துக் 'காபேலி'வரை சென்றேன். அங்கே உகண்டாவிற்கும் ருவாண்டாவிற்குமான எல்லையில் பணியிலிருந்த ஓர் இராணுவ அதிகாரியை எனக்குத் தெரியும்.அவர் எல்லையில் கள்ளக் கடத்தலைத் தடுக்கும் பொறுப்பிலிருந்தார்.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு