குழந்தைப் போராளி - 31


மசாக்கா போர்முனை

ஒன்றோ இரண்டோ நாட்கள் கழிந்த பின்பு ஸலிம் சலேமின் தலைமையிலான பெரும் படைப் பிரிவுடன் எங்களது தாக்குதல் குழு இணைந்து கொண்டது. இப்போது எங்களது தாக்குதல் இலக்கு மசாக்கா படைமுகாம். மசாக்காச் சண்டை நாங்கள் எதிர்பார்த்திருந்ததைக் காட்டிலும் உக்கிரமாயிருந்தது. ஆயுத பலம் அதிகமுள்ள எங்கள் எதிரிகள் எங்களை மூர்க்கத்துடன் திருப்பியடித்தார்கள். அவர்கள் கடைசித் துளி இரத்தம் இருக்கும் வரை போராடக் கூடியவர்கள் என்பதை அந்தக் களம் சொல்லிக் காட்டியது. போர் தொடங்கிய சிறிது நேரத்திலேயே இரு தரப்பிலும் பாரிய இழப்புகள். எதிரி ஆவேசமாகப் போரிட்டுத் தான் எங்களிலும் குறைந்தவனல்ல என நிரூபித்துக்கொண்டிருந்தான். அவர்களது முகாம் ஒரு சிறிய மலை உச்சியில் அமைந்திருந்ததால் அவர்களுக்கு எங்களை இலக்கு வைத்துச் சுடுவது எளிதாயிருந்தது. யாருடைய பார்வை வட்டம் பெரிதாக இருக்கிறதோ அவர்களுக்கே துப்பாக்கியால் சுடுவதும் இலகுவாயிருக்கும். என்னில் கந்தகப் புகை கவிந்து கிடக்க ஒன்றை மட்டும் எனக்கு நானே சொல்லி கொண்டேன். எக் காரணத்தைக் கொண்டும் நான் நின்று கொண்டு போரிடப் போவதில்லை. என்னைத் துப்பாக்கிக் குண்டுகள் அணுகாது என நான் இனியும் நம்பத் தயாரில்லை. பாதுகாப்பான இடங்களைத் தேடிப் பதுங்கிய நான் எப்போதும் தரையில் படுத்திருந்த நிலையிலேயே சுட்டேன். ஓர் எதிரி விழும்போது அவன் எனது குண்டடிபட்டுத்தான் விழுகிறான் என நம்ப முயன்றேன். சண்டை எதிர் பார்த்ததைவிட அதிக நேரம் நீடித்தது. எதிரியின் தாக்குதல் பலமாக இருந்ததால் சிதறடிக்கப்பட்ட எங்களது படையணிகள் கடைசியில் களத்திலிருந்து பின்வாங்கிச் சென்றன.

சில மணி நேரங்கள் கழித்து, ஏற்கனவே பேசிவைத்திருந்த இடத்தில் நாங்கள் ஒன்று கூடினோம். தலைவரின் சகோதரரும் சிறப்புத் தளபதியுமான ஸலிம் சலேம் எங்களிடையே உணர்ச்சிப் பெருக்கான உரையொன்றை ஆற்றினார். "நன்றாகக் கேட்டுக்கொள்ளுங்கள்! நாங்கள் இந்த முகாமைக் கைப்பற்றும் வரையில் ஓயாது போரிட வேண்டும். நாங்கள் மீண்டும் தாக்குதலை நடத்துவோம்! இம்முறை நாங்கள் என்ன விலை கொடுத்தேனும் முகாமைக் கைப்பற்றியே தீரவேண்டும். நாட்டின் முக்கியமான இராணுவ நிலைகளையும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளையும் நமது படையணிகள் ஏற்கனவே கைப்பற்றி விட்டன. அதிபர் மில்டன் ஒபோடே இன்னும் சில நாட்களுக்குள்ளேயே NRAயால் அதிகாரத்திலிருந்து இறக்கப்படுவார். இறுதி வெற்றி எங்களுக்கே" என்று ஸலிம் சலேம் முழங்கினார்.

கற்றோங்கா பாலத்தைக் கைப்பற்ற NRA திட்டமிட்டது. இந்த அதி முக்கியமான இராணுவ நடவடிக்கைக்காக முதலாவது, ஐந்தாவது படைப் பிரிவுகளோடு இணைந்து போரிட நானிருந்த தாக்குதல் குழுவும் செல்ல வேண்டும் எனக் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. இதை கேட்டதுமே என்னை உற்சாகம் பற்றிக்கொண்டது. எனது சிநேகிதர்கள் பலரை மீண்டும் நான் சந்திக்கலாம்.

ஐந்தாவது படையணியினருடன் நாங்கள் இணைந்து கொண்டபோது எனது உற்சாகம் முற்றாக வடிந்து போயிற்று. எனது நண்பர்களில் ஒருவரைத் தன்னும் அங்கே என்னால் சந்திக்க முடியவில்லை. எல்லோருமே காணாமற் போயிருந்தனர். மீண்டும் என்னுள் நம்பிக்கை துளிர் விட்டது. ஐந்தாவது படைப் பிரிவின் தளபதி ஸ்டீபன் கசாக்காவின் மெய்ப் பாதுகாவலர்களாகத் தெரிவு செய்யப்பட்டிருந்த எனது இரு தோழர்களையாவது நான் சந்திக்க வாய்புண்டு. ஆனால் கசாக்கா போரிலிருந்து விலகி விட்டார் என்ற செய்திதான் எனக்குக் கிடைத்தது. அவர் படையணியிலிருந்து வெளியேறித் தனது தந்தையைக் கொன்றவர்களைப் பழிவாங்கப் போய்விட்டார் எனக் கேள்விப்பட்டேன். அது அவரது தனிப்பட்ட முடிவு. ஆனால் என் தோழர்கள் எங்கே? எவருக்கும் தெரியாது.

ஐந்தாம் படையணிக்கு அகமட் கசிலிங்கி புதிய கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். முசேவெனியே இவரை நேரடியாக நியமனம் செய்திருந்தார். கசிலிங்கி முன்யங்கோலி இனக் குழுவைச் சேர்ந்தவர். ஒரு காலத்தில் இடி அமீனுடன் கூடயிருந்தவர். போரில் பழுந்த அனுபவம் வாய்ந்தவரும் நிர்வாகம் செய்வதில் கைதேர்ந்தவருமான கசிலிங்கி மிகவும் உயரமான தோற்றத்தைக் கொண்டவர். ஓர் ஒட்டகச் சிவிங்கியின் கண்களை நேருக்கு நேராக பார்க்கக் கூடிய உயரம் அவருடையது. அவருடைய சிறிய தாடி 'கலேவூ' என்றொரு செல்லப் பெயரையும் அவருக்கு பெற்றுக் கொடுத்திருந்தது. 'கலேவூ' என்றால் 'ஆட்டுத் தாடி' என அர்த்தம். அவரது துணிவும் சாதுரியமும் பெரும் புகழ் பெற்றவை. அவரது தீரச் செயல்களைப் பற்றிப் பல கதைகள் உண்டு. முசேவெனியும் மில்டன் ஒபோடேயும் சேர்ந்து இடி அமீனின் அரசைக் கவிழ்த்த போது கசிலிங்கி கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டார். அவர் உகண்டாவிலேயே அதி உயர் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கொண்ட 'லூசிரா' சிறைச்சாலையிலிருந்தே தப்பித்துச் சென்றவர். கசிலிங்கிக்கு இராணுவ வட்டாரங்களில் பெரும் மதிப்பும் மரியாதையுமுள்ளன. இராணுவ அதிகாரிகள் அவருக்குக் 'கொமாண்டோ' என்ற பட்டத்தையும் வழங்கியிருந்தனர்.

மிகத் திறமையான தலைமையும் சிறந்த போராளிகளையும் கொண்டிருந்த ஐந்தாவது படைப்பிரிவு பெரிய புகழை அடைந்திருந்தது. இன்றும் என்னால் சில பெயர்களை ஞாபகப்படுத்திப் பார்க்க முடிகிறது. மோசேஸ் டிராகோ - யூலியஸ் புரூஸ்- கனாபி இவர்கள் மூவரும் பகாண்டா இனக் குழுவைச் சேர்ந்தவர்கள். இவர்களை மரணம் மாத்திரம் தான் பிரிக்க முடியுமென்பது போல மூவரும் எப்போதும் சேர்ந்தேயிருப்பார்கள். எனது பிரியம் மோசேஸ் டிராகோ மேல். அவர் அன்புள்ளம் படைத்த இளம் தளபதி. நான் ஐந்தாவது படைப்பிரிவில் அவரின் நிழலின் கீழேயே அணிவகுத்துச் சென்றேன்.

ஐந்தாவது படைப்பிரிவு சண்டைக்கு ஆயத்தமானது. கூடிய கதியில் நாங்கள் கற்றோங்கா பாலத்தைக் கைப்பற்ற வேண்டும். இது ஒரு சிறிய ஆனால் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள பாலம். இந்தப் பாலம் தலைநகர் கம்பாலாவிலிருந்து இரண்டு கிலோ மீற்றர்கள் தூரத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந்திருந்தது. எங்கள் படையணிகள் பாலத்தை இலக்கு வைத்து நகரத் தொடங்கின. வெற்றிக்கான சாத்தியங்கள் எங்களுக்கே அதிகளவில் இருந்ததால் மிக விரைவில் தலைநகரும் எங்களின் கைகளுள் வீழ்ந்து விடும் என நாங்கள் நம்பினோம். இரண்டு பெரிய களங்களிலிருந்து நான் உயிர் தப்பியிருப்பதால் கம்பாலாவைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கலாமென நான் நினைத்துக் கொண்டேன். குழந்தைப் போராளிகளுக்குக் கம்பாலா என்பது ஒரு இனிய கனவாகவே இருந்தது. பலருக்கு அது நிறைவேறாத கனவாகவும் போயிற்று.

கற்றோங்கா நோக்கிய நகர்வில் எங்களுக்கு இன்னுமொரு அதிர்ஷ்டமும் வாய்த்தது. சில புத்தம் புதிய வாகனங்கள் எங்களுக்குத் தரப்பட்டன. ஏற்கனவே எங்களின் தளபதிகளும் உயரதிகாரிகளும் நவீனரக ஜீப்புகள், பென்ஸ் கார்கள் எனக் கொடி கட்டித்தான் பறந்து கொண்டிருந்தார்கள். சில விடயங்கள் எனக்குப் புரியவில்லை. NRA எப்போது பணத்தில் மிதக்கத் தொடங்கியது? நாங்கள் எதற்காகப் போராடுகிறோம்? இந்த வெற்று ஆடம்பரங்களுக்காகவா நாங்கள் உயிரைக் கொடுத்துப் போராடுகிறோம்? இந்தக் கேள்விகள் தளபதிகளும் உயரதிகாரிகளும் பெண்களுடன் சல்லாபிப்பதைப் பார்த்ததும் குறிப்பாக என்னுள் எழுந்தன. திடீரென NRA போராளிகள் மீது நாட்டிலுள்ள பெண்களுக்கு ஈர்ப்புக் கூடியிருந்தது. நாட்கணக்காகக் குளிக்காத போராளிகளின் நாற்றம் கூட அந்தப் பெண்களுக்குப் பெரிதாகப் படவில்லை.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு