குழந்தைப் போராளி - 37


கொலை வெறி

நான் கம்பாலாவிலிருந்து எனது ஊரை நோக்கி ஒரு மினி பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருந்தேன். ஏறக்குறைய ஊரை நெருங்கும் தறுவாயில் 'மொபாராறா' நெடுஞ்சாலையிலிருந்த NRAயின் சோதனைச் சாவடியில் மினிபஸ் நிறுத்தப்பட்டது. அந்தச் சோதனைச் சாவடியின் பொறுப்பதிகாரியாக யூலியஸ் புரூஸ் அங்கே நின்றுகொண்டிருந்தார். என்னை உடனடியாகவே அடையாளம் கண்டுகொண்ட யூலியஸ் முகம் மலர்ந்து "அட சைனா! நீ எங்கே போய்க்கொண்டிருக்கிறாய்?" எனக் கேட்க நான் பதிலெதுவும் சொல்லாமல் புன்னகைத்துக் கொண்டேயிருந்தேன். யூலியஸ் என்னை மினிபஸ்ஸை விட்டு இறங்கச் சொன்னார். நான் இறங்கியதும் மினிபஸ் அங்கிருந்து நகரத் தொடங்கியது. அருகிலிருக்கும் உணவு விடுதிக்குச் சென்று ஏதாவது குடிப்போமா? என யூலியஸ் கேட்க நான் சிரித்துக்கொண்டே அவரின் அழைப்பை ஏற்றுக்கொண்டேன். நான் விடுதியின் கழிப்பறைக்குள் சென்று எனது பையிலிருந்த பணத்தை எண்ணிப் பார்த்துக்கொண்டேன். எனது தாயென நான் நினைத்தவளிடம் போவதற்கு அது போதுமானதாயிருந்தது. நானும் யூலியஸும் முன்னிரவு வெகுநேரம் வரை அந்த விடுதியில் உட்காந்திருந்தோம். சாப்பிட்டுக்கொண்டும் குடித்துக்கொண்டும் போர் பற்றியும் போரில் மடிந்துபோன எங்களது தோழர்களைப் பற்றியும் நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டிருந்தோம். நாங்கள் முகாமுக்குத் திரும்பி வந்தபோது அங்கே எனக்குப் படுப்பதற்கு ஓர் இடம் ஒதுக்கித் தரப்பட்டது.

என்னால் தூங்க முடியவில்லை.மீண்டுமொரு முறை நான் எனது தகப்பனுக்கு மிக அருகாமையில் இருக்கிறேன். எனது பழிக்குப் பழிவாங்கும் திட்டத்தையே எனது மனம் உருப்போட்டுக்கொண்டு கிடந்தது. அப்பா என்னிடம் நடந்துகொண்ட முறையை என்னால் மன்னிக்கவே முடியாது. நான் அவரைப் பழி தீர்த்தக்கொள்வது சரியானதே! போர்முனையில் இருந்தபோது பழி வாங்குவதற்கான திட்டத்தைச் செதுக்குவதற்கு எனக்குப் போதிய நேரமிருந்தது. இது திட்டத்தைச் செயற்படுத்துவதற்கான தருணம். நாளைக் காலையில் நான் அதற்கான நடவடிக்கையில் இறங்கியாக வேண்டும்.

துப்பாக்கி தோளில் ஆட எனது பழைய பாடசாலை வரை நடந்து சென்று அங்கிருந்து அப்பாவின் வீட்டை நோக்கிப் பார்வையை எறிந்தேன். அவரது வீடு இன்னமும் சிறு குன்றின் மீது நின்று கொண்டிருந்தது. எனது அடி வயிறு பற்றி எரியத் தொடங்கக் கொலை வெறியில் பற்களை நற நறவெனக் கடித்துக்கொண்டேன். பீறிட்டெழுந்த வன்மம் என்னை ஆட்டி வைத்தது. எனது அப்பாவையோ, சிற்றன்னையையோ நினைத்தபோதெல்லாம் எனது சுட்டு விரல் துப்பாக்கியின் விசையைத் தன்னிச்சையாக வருடியது. நீதி வெல்லும் நேரம் வந்துவிட்டது! இறுதித் தடவையாக நான் குன்றின் மேலேறிச் சென்று அப்பாவையும் அவரது மனைவியையும் கொல்ல வேண்டும். குன்றினை நோக்கி என் கால்களை நகர்த்த அவை மரத்துப் போனவை போல அசைய மறுத்தன. நான் அசைய முடியாமல் உறைந்து போய் நின்று ஆத்திரத்தில் குழறியழுதேன். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வரை அந்த இடத்தையே கண்ணீரால் கழுவிவிட்டு முகாமிற்குத் திரும்பினேன்.

முகாமின் ஒவ்வொரு மூலையிலும் என்னைத் தேடிக்கொண்டிருந்த யூலியஸ் என்னைக் கண்டதும் என்னிடம் நேராக வந்தார். கண்ணீராலும் என் கோபத்தை அவிக்க முடியவில்லை. எனது கையாலாகாத்தனம் என்னை மேலும் கோபமூட்டியது. நான் மூசிக்கொண்டே நான் எங்கு சென்றிருந்தேன் என்பதையும் எனது பழி வாங்கும் திட்டத்தைப் பற்றியும் யூலியஸிடம் சொன்னேன்.எனது வாயால் புறப்பட்ட ஒவ்வொரு சொல்லும் எனக்கு நேராகவே திரும்பி ஒரு குத்துச் சண்டை வீரனின் ஆக்ரோசமான குத்துக்களைப் போல என் இதயத்தை நோகடித்தன. யூலியஸ் அமைதியாக எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தார். நான் பேசி ஓய்ந்த போது அவர் தனது கையை எனது தோளின் மேல் வைத்தார். இருவருமே முகாமைவிட்டுச் சிறிது தூரம் நடந்து சென்று புல்வெளியில் அமர்ந்து கொண்டோம். யூலியஸ் என்னிடம் மென்மையாகப் பேசத் தொடங்கினார்.
"எனது தகப்பனும் ஒரு முரட்டுப் பிறவிதான்.ஆனால் அதற்காக நான் அவரைக் கொன்றுவிட நினைக்கவில்லை..."
"ஏன் கொல்லத் தேவையில்லை?" நான் இடைமறித்தேன்.
"ஏனெனில் எனக்கும் அவருக்கும் வித்தியாசமே இல்லாமற் போய்விடும், நானும் என் தந்தையைப் போலவே கெட்டவனாக மாற விரும்பவில்லை."
யூலியஸின் வாயிலிருந்து விழும் ஒவ்வொரு சொல்லையும் நான் ஆவலாகப் பருகினேன். அவருடனான உரையாடலின் முடிவில் என் உள்ளத்தில் தெளிவு பிறந்தது. நான் எனது தந்தையைப் போலில்லை. அவரைப் போல ஆகவும் எனக்கு விருப்பமில்லை. எனது பழி வாங்கும் திட்டத்தை நான் இங்கேயே இப்போதே குழி தோண்டிப் புதைத்துவிட்டேன் என யூலியஸிடம் சொன்னேன். அவரிடமிருந்து ஒரு துயரப் புன்னகை எனக்குப் பதிலாகக் கிடைத்தது.

நாளை நான் எனது தாயைத் தேடிச் செல்லப் போவதாகச் சொன்னேன். எனது முயற்சியில் வெற்றி பெற அவர் தன் வாழ்த்துக்களைக் கூறினார். உண்மையில் அவர் என்ன நினைத்தார் என்பதை என்னால் கண்டு கொள்ளமுடியவில்லை அவரது கண்கள் எப்போதுமே பூமிக்குத் தாழ்ந்திருந்தன.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு