குழந்தைப் போராளி - 33




எரிந்து கொண்டிருக்கும் நேரம்

ருநாள் காலை அணிவகுப்புடன் எங்களின் விடுமுறை முடிவுக்கு வந்தது. அணிவகுப்பின் முடிவில் நாங்கள் மீண்டும் யுத்த முனைகளுக்குச் செல்ல வேண்டும் என்பது எங்களுக்கு நினைவுபடுத்தப்பட்டது. அணிவகுப்பு முடிவடைந்ததும் போராளிகள் குழுக்களாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். நாங்கள் கடந்து வந்த யுத்த களங்களைப் பற்றி நாங்கள் பேசினோம். இப்படிப் பேசிப் பேசியே எங்களது அச்சத்தை வெல்ல முயன்றோம். ஒருவருக்கு மற்றவர் தைரியத்தைச் சொல்லிக்கொண்டோம். நாங்கள் சந்தித்த கடைசிப் போர்தான் நடந்தவைகளுக்குள் மிகவும் கடுமையான போர் என்பதாய் நாங்கள் சொல்லிக்கொள்வோம். அந்தப் போரிலேயே உயிர் தப்பிய நாங்கள் நடக்கவிருக்கும் சிறிய யுத்தமான 'கற்றோங்கா' போரில் உயிர் தப்புவது நிச்சயமென ஒரு தருக்கத்தைக் கற்பித்துக்கொண்டோம்.

கற்றோங்கா தாக்குதலை யார் நெறிப்படுத்துவது என்பதை ஒன்றில் முசேவெனி அல்லது ஸலிம் சலேம் அறிவிக்க வேண்டும். ஐந்தாவது படைப்பிரிவின் தலைமை அதிகாரியும் போர் அனுபவங்கள் நிறைந்தவருமான அகமட் கசிலிங்கியிடம் எங்களது படையை வழி நடத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. கற்றோங்காவை நோக்கி நகர்ந்து அங்கிருந்து சர்வதேச விமான நிலையமான 'என்டபே'யைக் கைப்பற்ற அவர் முசேவெனியால் பணிக்கப்பட்டார். யுத்த முனைக்குப் புறப்படுமாறு எங்களுக்கும் கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

குழந்தைப் போராளிகளெல்லாம் தயார் நிலையில் அணிவகுத்து நின்ற்னர். குழந்தைப் போராளிகளின் முன் வரிசையில் நான் எனது Uzi துப்பாக்கியுடன் நின்றிருந்தேன். எங்ளிடமிருந்த சுறுசுறுப்பு வளர்ந்தவர்களிடம் இருக்கவில்லை. வாகனம் ஓட்டுவோர் அங்குமிங்குமாக அலைந்து கொண்டு வாகனங்களைச் சரி பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் விடியற் காலையிலேயே மூக்கு முட்டக் குடித்திருக்கிறார்கள் எனபது அவர்களின் கண்களிலே தெரிந்தது. அதிகாரிகளோ அப்போதுதான் துயில் கலைந்திருந்தனர். எழுந்த வீச்சிலேயே அவர்களும் மதுவை நன்றாகக் குடித்திருந்தனர். முஸ்லிம்கள், முஸ்லிம் அல்லாதவர்களென்ற பாகுபாடுகள் இல்லாமல் எல்லோருமே குடி வெறியில் இருந்தனர். நாங்கள் கற்றோங்காவை நோக்கி நகரத் தொடங்கினோம்.

நாங்கள் இலக்கை வந்தடைந்த பின்பும் எங்களால் தாக்குதலை ஆரம்பிக்க முடியவில்லை. மதுவின் சாரம் தளபதிகளின் தலைகளிலிருந்து இறங்கும் வரை நாங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.எங்களுக்கும் எதிரிகளுக்கும் இடையில் 'கற்றோங்கா' ஆறு அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றின் குறுக்காகக் கட்டப்பட்டிருந்த பாலத்தின் மறு முனையில் அரச படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். எங்களது வரவை எதிர்பார்த்து அவர்களின் பீரங்கிகளின் வாய்கள் பாலத்தை நோக்கி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.பீரங்கிகளின் வாய்களுக்கு நேராக குழந்தைப் போராளிகளின் படைப் பிரிவை எங்களின் தளபதிகள் நிறுத்தி வைத்திருந்தனர்.

சில மணி நேரங்களில் துப்பாக்கிச் சண்டை ஆரம்பமாகிவிட்டது. பாலத்தின் ஒரு முனையில் நாங்களும் மறு முனையில் இராணுவமுமாகப் போரிட்டுக் கொண்டிருந்தோம். ஆனால் யாருமே அந்தச் சிறிய பாலத்தைக் கடப்பதற்கான முயற்சியை எடுக்கவில்லை. அது உண்மையிலேயே தற்கொலைக்குச் சமமானது. நான்கு மாதங்களாகப் போர் எவருக்கும் வெற்றி தோல்வியில்லாமல் தொடர்ந்துகொண்டிருந்தது. நான்காவது மாதத்தின் முடிவில் உடனடியாகப் பாலத்தைக் கைப்பற்றித் தொடர்ந்து முன்னேறுமாறு எங்களின் படைத் தளபதி அகமட் கசிலிங்கிக்குத் தலமைப் பீடத்திலிருந்து கட்டளையிடப்பட்டது.

இந்தக் கட்டளை பிறப்பிக்கப்பட்டதை அறிந்ததும் அந்தச் செய்தியை என்னால் நம்பவே முடியாமலிருந்தது. ஆனாலும் அந்தச செய்தி முற்றிலும் உண்மைதான். தலைவர் முசேவெனி அல்லது அவரது சகோதரருக்குத்தான் இந்தக் கட்டளையைப் பிறப்பிக்கும் அதிகாரம் இருந்தது. நாங்கள் எவ்வாறான ஒரு பொறிக்குள் சிக்கியிருக்கிறோம் என்பதை அவர்கள் இருவரும் நன்றாகவே தெரிந்து வைத்திருந்தார்கள். எங்களின் உயிர்களைப் பற்றி அவர்களுக்கு என்ன கவலை? வெற்றிக்காக எத்தனை குழந்தைகளை வேண்டுமானாலும் நரபலி கொடுக்க அவர்கள் ஆயத்தமாயிருந்தார்கள்.
பாலத்தைக் கைப்பற்றுவதற்கான சமர் ஆரம்பமாயிற்று. நாங்கள் பீரங்கிகளின் வாய்களுக்குள் நுழைந்து புறப்பட்டோம். என்னைச் சுற்றி மனிதர்கள் ஈசல்களாய் எரிந்து வீழ்ந்தனர். பிணங்களின் நடுவில் நின்று எங்களின் தளபதி "முன்னேறு!- எல்லோரும் முன்னோக்கிச் செல்லுங்கள்!" என உறுமிக் கொண்டிருந்தார். துப்பாக்கி குண்டுகள் சரமாரியாகப் பறந்து கொண்டிருக்க கிரனேட்டுகள் அதிர்ந்து வெடித்துக்கொண்டிருந்தன. என் தோழனொருவன் வெடி வாங்கி விழுந்ததை நான் கண்டேன். அவனை நாங்கள் "ஸ்ரிக் கொமாண்டோ" என அழைப்போம். அவன் உதவி கேட்டுக் கெஞ்சியது எல்லோரது காதுகளிலும் விழுந்தது. எங்களில் ஒருவரால் கூட அவனுக்கு உதவ முடியவில்லை. "முன்னேறு" என்ற கட்டளை எங்களது பிடரிகளைப் பிடித்துத் தள்ளியது.

ஆச்சரியம்! எதிரியைப் பின்வாங்க வைத்துவிட்டோம்! ஆனால் எவ்வளவு உயிர்களைப் பறிகொடுத்து விட்டோம்! இறந்து கிடந்த எதிரிகளின் உடல்களை எனது தோழர்கள் கைகளால் அறைந்தும் கால்களால் உதைத்தும் கத்திகளால் கீறியும் தங்களது ஆத்திரங்களைத் தணித்துக்கொண்டிருந்தனர். எதிரிகளைப் போலவே எனது தோழர்களும் பெருமளவில் இறந்து போயிருந்தார்கள். ஆனாலும் நான் அழ மறுத்தேன். எனது உணர்சிகளை நான் எனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். ஒரு துளி கண்ணீர் கூட என்னை முற்றாக நிலை தடுமாறச் செய்து விடலாம். எனது விழிகளிலிருந்து கண்ணீர் விழவில்லை என்றாலும் எனது உணர்வுகள் எனது தோழர்களைப் போலவே மரித்துப் போய்விடவில்லை.

பெரும்பாலான குழந்தைப் போராளிகள் கொலைகளைச் செய்வதிலும் சித்திரவதைகளைப் புரிவதிலும் இன்பம் காண்பவர்களாகத் தங்களை மாற்றிக் கொண்டதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஒரு கொடூரமான சித்திரவதையுடன் கூடிய மரண தண்டனையை நிறைவேற்றிய பின் குழந்தைப் போராளிகள் கூடி நின்று ஒன்றுமே நடவாதது போல சர்வ சாதாரணமாகப் பேசிச் சிரித்துக்கொண்டிருப்பார்கள். தங்களுள்ளேயே 'ரம்போ' ,'சொக் நொறிஸ்' எனப் பட்டங்களையும் வழங்கிக் கொள்வார்கள். இந்தப் போக்கு எனக்கு ஒத்து வருவதாயில்லை. மற்றவர்கள் மீது இரங்கும் எனது குணம் எனக்கே என் மேல் கோபத்தை வருவிக்கும். எதிரிகள் மேற் கூட இரக்கம் காட்டும் எனது குணத்தைப் பற்றி நான் ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டியிருந்தது. ஏனெனில் எனது தோழர்கள் என்னைச் சூழவர இறந்து கிடந்தனர். ஒன்றில் எனது தனி மனித உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்கும் தூய சிறுமியாக நானிருக்க வேண்டும். அல்லது முற்று முழுவதாக உணர்வுகள் மரத்துப் போன ஒரு மனித வெடிகுண்டாக நானிருக்க வேண்டும். இந்த இரண்டில் நான் எந்த நிலையை எடுப்பது? இப்படியானதொரு நிலையில் என் போன்ற ஒரு சிறுமிக்கு சரியாக முடிவெடுக்கும் பக்குவம் இருக்குமா?

இபோதெல்லாம் AK 47 துப்பாக்கியுடன் ஒவ்வொரு குழந்தையும் மூன்று ரவைக் கூடுகளை அணிந்து கொள்கிறார்கள். சிலர் ஆறு ரவைக் கூடுகளைக் கூடக் கட்டியிருப்பார்கள். இந்தச் சுமையைப் பற்றி எங்களுக்கும் கவலையில்லை. எங்கள் தலைவர்களுக்கும் கவலையில்லை. எந்தப் பாரத்தைச் சுமந்தாவது என்ன வித்தை காட்டியாவது தலைமையின் கவனத்தைப் பெற்று விடுவதில் குழந்தைகள் கண்ணும் கருத்துமாயிருந்தார்கள். கனமான இந்தத் துப்பாக்கிகள் எங்களுக்குத் தாயின் அரவணைப்பைப் போன்றன. நாங்கள் உயிரை விட்டாலும் விடுவோமே தவிர ஒரு கணமும் துப்பாக்கியை விட்டுப் பிரிய மாட்டோம். துப்பாக்கி இல்லாத நாங்கள் முழுமையற்ற பிறவிகள். உங்களின் இந்த அவல நிலை குறித்து உங்கள் தளபதிகள் கொஞ்சமேனும் கவலை கொள்வதில்லையா? என நீங்கள் கேட்கக் கூடும். அவர்கள் முசேவெனியின் விருப்பங்களைப் பிழை படாமல் நிறைவேற்றும் கவலைகளில் மூழ்கிக் கிடந்தார்கள்.

குழந்தைப் போராளிகள் முசேவெனியின் கண்டுபிடிப்பு. அவர் தனது மந்திரக்கோலை ஆகாயத்தை நோக்கி நிமிர்த்திப் பிடித்து "போர்" எனக் கட்டளையிடுவார். குழந்தைப் போராளிகளும் போரிடுவர். மீண்டும் மீண்டும் அவரின் கறுப்பு வெள்ளை மந்திரக்கோல் ஆகாயத்தை நோக்கி உயர்ந்து கொண்டிருந்தது. "குழந்தைகளே உங்களால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை எனக்குக் காட்டுங்கள்" என எங்களின் தலைவர் புன்னகைப்பார்.

1 மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

பெரும்பாலான குழந்தைப் போராளிகள் கொலைகளைச் செய்வதிலும் சித்திரவதைகளைப் புரிவதிலும் இன்பம் காண்பவர்களாகத் தங்களை மாற்றிக் கொண்டதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஒரு கொடூரமான சித்திரவதையுடன் கூடிய மரண தண்டனையை நிறைவேற்றிய பின் குழந்தைப் போராளிகள் கூடி நின்று ஒன்றுமே நடவாதது போல சர்வ சாதாரணமாகப் பேசிச் சிரித்துக்கொண்டிருப்பார்கள். தங்களுள்ளேயே 'ரம்போ' ,'சொக் நொறிஸ்' எனப் பட்டங்களையும் வழங்கிக் கொள்வார்கள்.

Sat Aug 26, 06:17:00 PM 2006  

Post a Comment

<< முகப்பு