குழந்தைப் போராளி - 35


யுத்தக் களைப்பு

ம்பாலாவிலிருந்து பின்வாங்கிச் சென்ற எதிரிகளை உகண்டாவின் வடக்குப் பகுதிக்குத் துரத்தியடிக்க வேண்டுமென்ற கட்டளை ஐந்தாவது படையணிக்குப் பிறப்பிக்கப்பட்டது. இந்தக் கட்டளை எங்கள் எல்லோரையும் உற்சாகமிழக்கச் செய்து ஏமாற்றத்துள் தள்ளியது. கசிலிங்கி தனது ஐந்தாவது படையணியின் கட்டளைத் தளபதிப் பொறுப்பை யூலியஸ் அயினேயிடம் கையளித்துவிட்டார். யூலியஸ் அயினே தலைவர் முசேவெனி போலவே 'கீமா' இனக் குழுவைச் சேர்ந்தவர். அவர் உண்மையிலேயே மதிநுட்பம் வாய்ந்த மிகத் திறமையான தளபதி. அவர் தனது போராளிகளை முட்டாள்த்தனமாகச் சாகக் கொடுப்பதில்லை. 'கீமா' இனக்குழு ருவாண்டாவில் ஆழமான வேர்களைக் கொண்டது. உகண்டாவில் 'கீமா' இனக்குழுவினர் தமது கால்களை ஆழமாகப் பதித்திருக்கவில்லை.

கசிலிங்கி இஸ்லாமியர், NRAயை உருவாக்கியவர்களில் ஒருவர், மக்களிடம் அழியாத புகழைப் பெற்றவர். உறுதியான, ஒரு சிங்கத்தைப் போலக் கம்பீரம் கொண்ட கசிலிங்கி 'பகண்டா' இனக் குழுவினரிடம் அபரிதமான செல்வாக்கைப் பெற்றிருந்தார். அவரின் மெய்காப்பாளர்கள் எல்லோருமே அதே இனத்தைச் சேர்ந்தவர்கள் தான். கம்பாலாவின் வீழ்ச்சிக்குப் பின் போர் வடக்கு நோக்கி நகரத் தொடங்கியது. மில்டன் ஒபோடே 'லாங்கோ' இனக் குழுவைச் சேர்ந்தவர். அவர் நாட்டின் வடபகுதியைச் சேர்ந்தவராதலால் வடக்கில் குறிப்பிடத்தக்க செல்வாக்குடையவர். வடக்கிற்குச் செல்லும் வீதிகள் மிக மோசமாயிருந்தன. எங்களின் முன்னாள் ஜனாதிபதி தனது உறவுக்காரர்களை எப்போதாவது வடக்கிற்குப் போய்ப் பார்த்தாரா என எங்களுக்குச் சந்தேகமாகயிருந்தது. எது எப்படியிருப்பினும் இந்த மோசமான வீதிகள் தான் எங்களது அடுத்த போர்க்களம்

'கபு'ப் பாலத்தின் மீது நாங்கள் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராத தாக்குதலொன்று எங்கள் மீது தொடுக்கப்பட்டது. எனது தைரியமெல்லாம் சடுதியில் எங்கோ பறந்து போய்விட்டது. இந்த முறை நான் எதிரியின் குண்டுகளிடமிருந்து தப்பிக்கப் போவதில்லை என நினைத்துக்கொண்டேன். அச்சத்தால் என் மேனி சில்லிட்டுப் போனது. கற்றோங்காப் போர்முனையின் அவலம் சுமந்த நினைவுகள் தூக்கத்தில் கூட என்னை விட்டகலவில்லை. சில நாட்களாகக் 'கபு'ப் பாலத்தின் மீது நடந்த உக்கிரமான சமரின் முடிவில் எதிரிகளை முறியடித்த நாங்கள் 'கறூமா'ப் பாலம் வரை எதிர்ப்பின்றிச் சென்றோம். கம்பாலா அரசினை வீழ்த்தினால் குழந்தைப் போராளிகள் போரிலிருந்து விடுவிக்கப்படுவோம், புதியதொரு ஒளிமயமான வாழ்வு எங்களிடம் கையளிக்கப்படும் என பற்பல வாக்குறுதிகளைக் குழந்தைகளான எங்களுக்கு NRA தலைமை வழங்கியிருந்தது. ஆனால் கம்பாலா அரசு வீழ்த்தப்பட்டு இத்தனை நாட்கள் ஆகியும் எந்தக் குழந்தையும் போரிலிருந்து விடுவிக்கப்படவுமில்லை எவரும் பாடசாலைக்கு அனுப்பப்படவுமில்லை. நாங்கள் ஒரு யுத்தமுனையிலிருந்து மறு யுத்தமுனைக்கு விரட்டப்பட்டுக் கொண்டேயிருந்தோம்.

'கறூமா'வின் இயற்கை வனப்பில் நான் மனம் சொக்கிப்போனேன். போரின் கரங்களால் இதுவரை தீண்டப்படாத, சித்திரம் போன்ற அழகிய பாலம் தன்னைச் சுற்றிப் பசுமையைப் போர்த்திக் கொண்டு ஏகாந்தமாகக் கிடந்தது. கரை புரண்டோடும் நுரை பொங்கும் ஆறு பாலத்தின் கால்களைத் தழுவிச் சுழித்தோடிக்கொண்டிருந்தது. அங்கேயிருந்த அமைதி என் உள்ளத்திலும் புகுந்துகொண்டு ஏதோவோரு கணத்தில் அது போர் மீதான வெறுப்பாக மாறியது. இரத்த ஆறுகளைப் போதியளவு நான் பார்த்துவிட்டேன். இனியும் என்னால் இரத்த ஆறுகளைக் கடக்க முடியாது. நான் புதியதொரு வாழ்க்கையைத் தேடிக்கொள்ள வேண்டும். அமைதியைக் கண்டடைவதற்கு நான் முயற்சிக்க வேண்டும். இந்தத் தொடர் சிந்தனைகளின் முடிவில் நான் போராளி வாழ்க்கையிலிருந்து தப்பியோடத் திட்டமிட்டேன்.

போர்முனைக்கு அனுப்பப்படாமலிருக்க வேண்டுமாயின் நான் நோய்வாய்ப்பட வேண்டும். ஒரு சிகரட்டை உதிர்த்து வாயில் போட்டு விழுங்கிவிட்டு எனது சார்ஜனை நோக்கி ஓடிப்போய் அவரது காலடியிலேயே நான் வாந்தியெடுத்தேன். அவருக்கு எனது வாந்தியைப் பார்த்ததும் வயிற்றைப் புரட்டி அவரும் வாந்தியெடுத்தார். இருவரும் வாந்தி எடுத்து முடித்த பின்பு நான் சார்ஜனிடம் "மலேரியாக் காய்ச்சல் பரவுகிறது என்று நினைக்கிறேன்" எனச் சொன்னேன். அது சொந்தச் செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதையாக முடிந்தது. உடல் வெப்பமானியை எடுத்துத் தனது உடல் வெப்பநிலையை அளந்துகொண்ட சார்ஜன் எனது வெப்ப நிலையையும் அளந்து பார்த்தார். எனது உடலில் காய்ச்சலுக்கான எந்த அறிகுறியும் காணப்படாததால் சார்ஜன் என் கண்களை உற்றுப் பார்த்துக்கொண்டே "நீ பொய் சொல்கிறாய்...தலைமை முகாமிற்குத் திருப்பி அனுப்பப்படுவாய் என்ற எண்ணத்தில் நீ இந்தப் பொய்யைச் சொல்லியிருந்தால் அது நடக்கப் போவதில்லை" என்றார்.

ஆனால் நானும் எளிதில் எனது காய்ச்சல் நாடகத்தை விட்டு விடுவதாக இல்லை. சிறு தந்திரங்களிலும் ஏமாற்றுக்களிலும் திறமையான ஒரு தோழனின் உதவியை நான் நாடிச் சென்றேன். அவன் என்னிடம் ஒருவர் தனது மூத்திரத்தைத் தானே குடிப்பதன் மூலம் காய்ச்சலை வருவித்துக் கொள்ளலாமெனச் சொன்னான். இவன் என்னைக் கேலி செய்கின்றான் என நினைத்துக்கொண்டே அவனது முகத்தைக் கூர்ந்து கவனித்தேன். அவனின் முகத்தில் எந்தக் குறும்பும் தெரியவில்லை. யுத்தமுனைக்கு எக்காரணத்தைக் கொண்டும் செல்லக் கூடாது என்பதில் நான் மிக உறுதியாயிருந்தேன்.எனவே இந்த அருவருப்பான உபாயத்தையும் ஒருமுறை முயன்று பார்த்து விடுவதென முடிவெடுத்தேன். ஒரு சிறு பாத்திரத்துடன் மறைவிடத்திற்குப் போனேன். அதனை நிரப்புவது பெரிய பிரச்சனையல்ல, இனித்தான் சிக்கலேயிருக்கிறது. முதலாவது மிடறு குடித்ததுமே மீண்டும் வாந்தி எடுத்தேன். இதை எப்படிக் குடிப்பதாம்? இது ஏமாற்று வேலை! அவன் என்னை ஒரு மடைச்சியாக்கி விட்டான்! அவனைத் துண்டு போடும் கோபத்துடன் அவனைத் தேடினேன்.அவன் மீது பாய்ந்து பற்களால் கடித்தும் நகத்தால் பிறாண்டியும் அவனைத் தாக்கினேன். அது பார்வையாளர்களுக்கு மிகவும் விறுவிறுப்பான காட்சி. இறுதியில் மூத்த போராளி ஒருவர் எங்களை விலக்கி விட்டார். எனது இரண்டாவது பிழையையும் நான் அழுதுகொண்டே செய்தேன். அவன் என்னை என்ன செய்யச் சொன்னான் என்பதைச் சபையில் சொன்னேன். எல்லோரும் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்க எனக்காக நானே வெட்கப்பட நான் தனியிடம் தேடிச் சென்றேன். அங்கேயும் அந்த ஏமாற்றுக்காரன் என்னைத் தேடி வந்து "நாங்கள் மீண்டும் நண்பர்களாகவே இருப்போமா?" எனக் கேட்டான். இவனை மன்னிப்பதா இல்லையா என்ற யோசனையுடன் நான் தரையைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவன் பல தடவைகள் மன்னிப்புக் கேட்டதுடன் இந்தப் பிரச்சினை முடிவிற்கு வந்தது.

அடுத்த நாள் காலையில் ஒரு லொறி கறூமாவிலிருந்து கம்பாலாவிற்குச் செல்வதாகக் கேள்விப்பட்டேன். அந்தச் சந்தர்ப்பத்தினை நழுவ விடாது லொறிச் சாரதியைத் தேடிப் பிடித்து அவருக்கு எனது நிலையைத் தெரிவித்தேன். எனது நல்ல நேரம் போலும் அவரும் எனக்கு உதவுவதாக வாக்களித்தார். அடுத்த நாள் காலையில் முகாமிற்குச் சற்றுத் தொலைவில் அவருக்காகக் காத்திருந்தேன். லொறியைக் கண்டதும் அதனுள் ஒரே பாய்ச்சல், ஏதோ சொர்க்கத்தையே நோக்கிப் பயணிப்பது போல ஆனந்தத்துடன் நான் கம்பாலா நோக்கிப் பயணித்தேன். NRA யில் சேர்ந்ததிலிருந்து இன்றுவரை என்னுடன் கூடவேயிருந்த உயிர் குறித்த அச்சம் இப்போது என்னுள் முற்றாகத் தணிந்திருந்தது. சொர்க்கத்தில் கூடக் கெட்ட கனவுகள் வரும்போலும், நான் தூக்கத்தில் உளறியிருக்க வேண்டும். யாரோ எனது தலையை மென்மையாக வருடினார்கள். முதுகில் கனத்த என் சுமையுடன் லொறியிலிருந்து சடுதியிற் கீழே குதித்தேன். மீண்டும் தனியாக வீதியில் நடக்கத் தொடங்கினேன்.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு