குழந்தைப் போராளி - 38


பழைய பாதை

னது படையணியை விட்டு நான் சுலபமாகத் தப்பியோடி வந்தததற்கு அதிர்ஷ்டம் என் பக்கம் இருந்ததோடு NRA இராணுவத்தின் ஒழுங்கற்ற தன்மையும் ஒரு காரணம். குழந்தைகளான நாங்கள் 'பதிவில்லாத' போராளிகள். NRA இராணுவத்தின் பல நிர்வாக அலகுகளுக்கு நாங்கள் அங்கும் இங்குமாக அனுப்பப்படுபவர்கள். எங்களை பற்றிய எந்தக் கோப்புகளோ குறிப்புகளோ அவர்களிடமில்லை. இந்த நிலையில் அவர்களால்தான் என்ன செய்ய முடியும்? ஒட்ட வெட்டப்பட்ட முடியும் மண்ணிறக் கண்களையும் கொண்ட ஒரு குழந்தைப் போராளியை அவர்கள் எங்கேயென்று போய்த் தேடுவது? எங்களின் பெயர்களோ ஊர்களோ எந்த ஆவணத்திலுமில்லை. எங்களுக்கு ஊதியமுமில்லை. ஆக மொத்தத்தில் நாங்கள் அரூபங்கள்.

ஆனால் போர் இன்னும் முடியவில்லை. எனவே இராணுவ உடைகளை விட்டு விட்டுச் சாதாரண உடைகளையே அணிவதென முடிவு செய்தேன். எனது ஆயுதத்தை எடுத்துக்கொண்டு மீண்டுமொரு முடிவு தெரியாத பயணத்திற்குத் தயாரானேன். எனது வாழ்கையை ஒரு கட்டுக்குள் கொண்டு வர வேண்டுமாயின் முதலில் எனது உணர்வுகளைச் சிந்தனைகளை ஒரு கட்டுக்குள் கொண்டு வரவேண்டும். அதன் பின்புதான் நான் புதிதாக எதையாவது ஆரம்பிக்கலாம்.

நான்கு வருடங்களின் பின்பு திரும்பி வந்த போதிலும் எனது தாயின் வீட்டை ஒரு பிரச்சனையுமின்றி என்னால் கண்டுபிடிக்க முடிந்தது.. ஆனால் அந்த வீடு வெறுமையாகக் கிடந்தது. வீட்டிலிருந்தோர் அவசர அவசரமாக வீட்டை விட்டு ஓடியது போல வீடு அலங்கோலமாகக் கிடந்தது. வீட்டின் வாசற்படியில் உட்கார்ந்திருந்து யோசித்த போதுதான் நான் ஞாபக மறதியாக எனது பயணப் பையை பஸ்ஸிலேயே விட்டுவிட்டு வந்திருப்பது என் மூளையில் உறைத்தது. அப்படியொரு குழப்பிய நிலையில் நான் இருந்தேன். பதறியடித்துக்கொண்டே புயல் வேகத்தில் பஸ்ஸைத் தேடி ஓடினேன்.

பயணப் பையில் இருந்தவற்றிலேயே பெறுமதியானது எனது ஆயுதந்தான். அது போர்முனைகளில் என்னை ஒருபோதும் கைவிட்டதில்லை. வனாந்தரங்களில் அது என் வழித் துணையாகயிருந்தது. கடந்த சில வருடங்களாக அது எனது உடலின் ஓர் அங்கமாயிருந்தது. பேருந்துத் தரிப்பிடத்தில் கேட்டவர்களெல்லாம் எனக்கு உதவத் தயாராகயிருந்தனர். ஆனால் எனது பொருட்கள் தான் எனக்குத் திரும்பவும் கிடைக்கவேயில்லை. எல்லாவற்றையும் இழந்துவிட்ட உணர்வில் நான் தத்தளித்தக்கொண்டிருந்த போது எனது தாயின் அருகாமை என்றுமில்லாதவாறு இன்று எனக்குத் தேவையாயிருந்தது. பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த பெண்ணொருத்தியிடம் எனது அம்மா பற்றிய விபரங்களைக் கூறி விசாரித்தேன். அவள் புன்னகைத்து "கவலைப்படாதே! இன்னும் சில நிமிடங்களிலேயே நீ உனது அம்மாவைச் சந்திக்கலாம். உன்னை நான் அவளிடம் அழைத்துச் செல்வேன்" என்றாள்.

நான் அந்த வீட்டினுள் நுழைந்தபோது வீட்டினுள்ளே ஒரு நாற்காலியில் அந்தச் சிறுமி அமர்ந்திருந்தாள். அவள் எனது சகோதரி மார்ஜி-பொன்பொன்ஸ். அவள் தலையிலிருந்து பாதம்வரை தோற்றத்தில் என்னையே உரித்து வைத்திருந்தாள். சில விநாடிகள் வைத்த கண் வாங்காமல் என்னையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த மார்ஜி மெதுவாக நாற்காலியிலிருந்து எழுந்து வந்து தரையில் விழுந்து எனது கால்களைக் கட்டிக்கொண்டு எனது பெயரைச் சொல்லிக் கதறினாள். நானோ என்ன செய்வதென்று தெரியாது சிலை போல நின்றுகொண்டிருந்தேன். அவளைத் தூக்கி அணைத்துக் கொள்ளவும் எனக்குத் துணிவு வரவில்லை. விம்மலுடன் தரையிலிருந்து எழுந்து நின்ற எனது சகோதரி கையைப் பிடித்து என்னை வெளியே தெருவிற்கு அழைத்து வந்தாள். நாங்கள் தெருவில் அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருக்கவில்லை. அம்மா தெருமுனையில் தோன்றினார். அவர் மிக நிதானமாக எங்களை நோக்கி நடந்து வந்தார். எங்களருகில் வந்த அம்மா எங்களிருவரையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டு சிறிது நேரம் நின்றிருந்தார். பிறகு வெகு இயல்பான தொனியில் "வாருங்கள் வீட்டுக்குள் போவோம்" என்றார்.

நாங்கள் வீட்டு முற்றத்தில் அமர்ந்திருந்து பேசிக்கொண்டிருந்தோம். அம்மாவும் மார்ஜியும் தான் அதிகமாகப் பேசினார்கள். நான் இவ்வளவு காலங்களாக எங்கேயிருந்தேன்? என்ன செய்தேன் என்பதை அறிய அவர்கள் ஆவலாயிருந்தார்கள். நான் திரும்பி வந்ததையிட்டு எனது சகோதரி தாங்கொண்ணாத மகிழ்ச்சியில் துடித்துக்கொண்டிருந்தாள்.
எனது தாயார் "மகளே என்றோ ஒருநாள் நீ என்னிடம் திரும்பி வருவாய் என்ற நம்பிக்கையினால் தான் நான் இந்தக் கிராமத்தை விட்டுப் போகாமல் இருக்கிறேன்" என்றார். "நீ ஓடிப்போன நாளிலிருந்து என்னை ஒரேஒரு கேள்விதான் அலைக்கழிக்கிறது. நீ ஏன் என்னை விட்டு ஓடிப்போனாய்?" எனக் கேட்டு அம்மா என்னைப் பரிதாபமாகப் பார்த்தார். நான் அவரை விட்டு ஏன் ஓடிப் போனேன்? நான் முதன்முறையாக எனது தாயின் கண்களை நேராகப் பார்த்துக்கொண்டே உண்மையைச் சொல்லத் தொடங்கினேன். நான் அம்மாவை விட்டு ஓடிய இரவில் அம்மாவும் அம்மாவின் கூட்டாளிகளும் என்னைத் தின்று விடுவார்கள் என நான் அஞ்சினேன் என நான் சொன்னதுதான் தாமதம் அம்மா அடக்கமாட்டாமல் வெடித்துச் சிரித்தார். அவர் கண்களில் நீர் கோர்த்தது. அந்தக் கண்ணீர்த் துளிகள் சிரித்ததால் துளிர்த்தவையல்ல. மார்ஜி கண்களைச் சுருக்கிச் சிரித்துக்கொண்டே "அம்மா செய்தாலும் செய்திருப்பார்" என்றாள். சிறிது நேரம் நாங்கள் ஒன்றுமே பேசாதிருந்தோம். முற்றத்தில் கோழியொன்று மேய்ந்துகொண்டிருந்தது. "இது நம்முடைய கோழியா?" என நான் கேட்டுக் கேட்ட வாயை மூடவில்லை அம்மா கோழியைப் பிடிக்கும்படி சொன்னார். கோழி சட்டியில் வெந்துகொண்டிருக்கும் போது அம்மா என் காதில் இரகசியமாக ஒரு பொய்யைச் சொன்னார். இந்தக் கோழியை நான் திரும்பும் வரை அவர் எனக்காகவே விட்டு வைத்திருந்தாராம். அது அன்பை உணர்த்தச் சொன்ன பொய். நான் ஓடிப் போன காலத்தைக் கணக்கிட்டால் கோழியின் வயதென்ன?

அம்மா என்மீது அன்பையும் பாசத்தையும் பொழிந்த போதும் அவரை நான் அந்நியமாகவே உணர்ந்தேன். முதலில் எனக்கு அவரைச் சரிவரத் தெரியாது, அத்துடன் எனது கடந்த கால வாழ்வில் நான் யாருடனும் கடும் நெருக்கத்தைப் பேணியதுமில்லை எவரையும் நான் சீக்கிரத்தில் நம்பியதுமில்லை. அம்மாவிடம் எப்போதுமே நகைச்சுவைக் கதைகள் கைவசமிருக்கும். ஆனால் அந்தக் கதைகளின் நம்பகத்தன்மை கேள்விக்குரியதே. ஆனாலும் கேட்பவர்களால் சிரிக்காமலிருக்க முடியாது. அம்மா சொன்ன ஒரு கதை என்னையும் எனது சகோதரியையும் சிரிப்பால் உலுக்கியது. பாப்பரசரின் தாய் துற்சி இனத்தைச் சேர்ந்தவளென்று அம்மா சொன்னார். இதைச் சொல்லும் போது ஒரு அசைக்க முடியாத உண்மையை வெளியிடுவதைப் போலவே அவரின் முகபாவனைகளிருந்தன. கேட்பவர்கள் என்ன நினைப்பார்கள் எனபது பற்றியெல்லாம் அவருக்குக் கவலையில்லை. ஆபிரிக்கப் பெண்கள் குறிப்பிட்ட வயதுகளில் சாப்பிடக் கூடாத சில உணவு வகைகளுண்டு. ஆனால் அம்மா அந்தக் கட்டுப்பாடுகளைப் பொருட்படுத்துவதே இல்லை.யாராவது அவரது உணவுப் பழக்கத்தினைக் கேலி செய்தால்,"என் முன்னே வைக்கப்படும் எதையும் நான் சாப்பிடுவேன்" என அம்மா மார் தட்டுவார். வயது வித்தியாசமின்றி எல்லோரும் அவரை விரும்பினார்கள். அம்மா என்மீது அன்பைப் பொழிந்தாலும் அதனைத் திருப்பிச் செலுத்த என்னால் முடியவில்லை. நான் பிறந்தது முதலே அன்பில்லாத வாழ்க்கையையே வாழ்ந்தது இதற்கு காரணமாயிருக்கலாம்.

எனது தாயாரின் வாழ்கையும் மிகச் சிரமமானது. அவர் கணவனை இழந்தவர். அவரின் சொத்துக்கள், இறந்த கணவனின் உடமைகள் எல்லாவற்றையுமே அவர் கலவரத்தின் போது பறிகொடுத்து விட்டார். இப்போது அவர் வசிக்கும் சிறிய வீடும் வாடகை வீடே. என்னால் அந்தச் சூழலில் இயல்பாக இருக்க முடியவில்லை. கிராமத்திலுள்ளவர்கள் சோம்பேறிகளாகவும் எதிலும் கவனமற்றவர்களுமாயிருந்தனர். ஏதாவது ஒரு வேலையைத் தன்னும் அவர்கள் நேர்த்தியாகச் செய்வதில்லை. பொறுப்பின்மையும் அசட்டையும் எங்கும் நிறைந்திருந்தன. அங்கே என் விருப்பம் போல எதுவும் அமைவதாயில்லை. யாரும் நான் விரும்பியது போல என்னை மதிப்புச் செய்யவில்லை. ஒரு போராளி சாதாரண மக்களை விடப் பலமடங்கு உயர்ந்தவர் என்பதே எங்களுக்கு ஊட்டி வளர்க்கப்பட்ட சிந்தனை. நானும் அதனை உறுதியாக நம்புவள். எனது சொற்கள் மற்றவர்களால் தட்டாமல் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியன என்பதில் எனக்கு இருவேறு கருத்துக்களில்லை. ஆனால் என் பருப்பு கிராமவாசிகளிடம் வேகுவதாயில்லை. என்னாலோ எனது போராளி முறுக்கை எளிதில் கைவிடவும் முடியவில்லை. மறுபடியும் NRA இராணுவத்திற்குத் திரும்புவதும் இயலாத காரியம். ஏனெனில் எனது ஆயுதத்தை நான் தொலைத்து விட்டேன். ஆயுதத்தைத் தொலைத்தவர்கள் கடுமையான தண்டனைக்குள்ளாவார்கள். சிலவேளைகளில் அது மரண தண்டனையாகக் கூட இருக்கும். வேறு வழியில்லை! இந்தக் கிராமத்திலேயே நான் கிடந்து அழுந்த வேண்டியதுதான்.

மார்ஜி நான் எனது பதின்மூன்று வயதில் மறுபடியும் பாடசாலைக்குச் செல்ல வேண்டுமென விரும்பினாள். இந்த விடயம் எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ஆனால் வேறு வழிகளும் இருக்கவில்லை. வீட்டில் அடைந்து கிடப்பதை விடப் பாடசாலைக்குப் போய் வருவது நல்லதுதான். பாடசாலையில் என் பெயரைப் பதிவு செய்து படிப்பும் தொடங்கியாயிற்று.

ஒவ்வொரு நாளும் வகுப்புகள் முடிந்ததும் நான் யாருடனாவது அடிதடியில் இறங்கிவிடுவேன். பொதுவாக என்னிலும் வயது கூடிய மாணவர்கள் எப்போதுமே என்னை ஆத்திரமூட்டுவார்கள். சண்டையில் பல முறைகள் தோற்றுப் போனாலும் என்னால் சண்டையை விட முடியவில்லை. நான் இரத்தம் ஒழுக வருவதைப் பார்த்துவிட்டு அம்மா பதறிப்போய் என்ன நடந்ததென்று விசாரிப்பார். நான் பதிலெதுவும் சொல்வதில்லை. அம்மா எனது நாளாந்தப் பிரச்சனைகளையும் தோல்விகளையும் அறிந்துகொண்டால் உடைந்து போய்விடுவார் என்றே நினைத்தேன்.

பாடசாலையில் நான் ஒதுக்கிவைக்கப்பட்ட ஒருத்தி. இதுவே எனது அடிப்படைப் பிரச்சினை. யாருமே எனக்கு உதவி செய்யவில்லை. நானும் யாரிடமும் உதவி கோரவுமில்லை. பாடசாலை எனக்கு நரகமாக மாறியது. நான் பைத்தியக்காரி போல அந்தச் சோம்பேறிக் கிராமத்தில் உழன்றுகொண்டிருந்தேன்.அம்மா எனக்கு உதவ முன்வந்தார். ஒரு மாறுதலுக்காக அவர் தனக்குத் தெரிந்த ஒரு தம்பதிகளின் வீட்டில் சில நாட்கள் தங்கியிருப்பதற்காக என்னை அனுப்பிவைத்தார். நான் அங்கு மிக மோசமான பாலியல் பலாத்காரத்திற்குள்ளானேன். முன்பு ஏழு வயதில் நடந்ததுபோன்றே இம்முறையும் நடந்து முடிந்தது. மீண்டும் அம்மாவிடம் வந்து வீட்டினுள்ளே கூண்டில் அடைபட்ட மிருகம் போல சுருண்டு கிடந்தேன். அமைதியில்லாது வீட்டையே வளைய வந்துகொண்டிருந்த என்னை வெளியே போய் எதையாவது செய்ய வேண்டுமென்ற வேட்கை ஆட்டத் தொடங்கியது. அம்மா வேறு நாளும் பொழுதும் என்னைப் பார்த்து மனம் வருந்திக்கொண்டிருந்ததையும் என்னால் பொறுத்துகொள்ள முடியவில்லை. அவரை மேலும் வருத்தாதிருக்க ஒரு கப்டனின் வீட்டில் வேலைக்குப் போய்ச் சேர்ந்தேன். அங்கும் என்னால் இருக்க முடியவில்லை.வீட்டு வேலைக்காரியாக என்னால்அந்த வீட்டில் தாக்குப் பிடிக்கமுடியவில்லை. அத்துடன் அந்த வேலை என்னை இழிவுபடுத்துவதாகவும் எனக்குப்பட்டது. மீண்டும் அம்மாவிடம் திரும்பி வந்தேன்.

நான் சலிப்பற்ற வேறு வாழ்க்கையைத் தொடங்கவேண்டும். காலம் என்னைத் தோற்கடித்து விடக்கூடாது. என்னைப் போன்ற இரத்தம், துப்பாக்கி,கொலை, இராணுவம் எனப் பின்னணியுள்ளவளைச் சமூகம் அவ்வளவு சுலபமாக தன்னுள் உள்வாங்கிக் கொள்ளுமா? எனக்கும் இராணுவ வாழ்க்கையைத் தவிர வேறென்ன தெரியும்? மெல்ல மெல்ல ஒரு திட்டம் என்னுள் வடிவம் பெறத் தொடங்கியது. நான் மீண்டும் இராணுவ வாழ்கையை முதலில் இருந்து தொடங்க வேண்டும். இராணுவ வாழ்க்கையில் தான் என்னால் எனது திறமைகளை முழுமையாக வெளிக்காட்ட முடிந்தது. நான் இன்னும் உயிருடன் இருப்பதே எனது திறமைக்கான மிகப்பெரிய அத்தாட்சி.

அம்மாவிடம் எனது திட்டத்தைப் பற்றிப் பேச முடியாது. ஆனால் திட்டத்தை நிறைவேற்ற எனக்குப் பணம் தேவை. முந்தைய முறை போலவே இம்முறையும் அம்மாவை விட்டுப் போகும்போது பணத்தைத் திருடிக்கொண்டு போனேன். அவரிடம் ஒரு வார்த்தை கூடச் சொல்லாது வீட்டை விட்டு வெளியேறினேன். நான் அம்மாவிற்குச் செய்யும் இந்தத் துரோகங்கள் எல்லாவற்றிற்கும் என்றோ ஒருநாள் பிராயச்சித்தம் தேடிக்கொள்வேன் என எனக்குள்ளேயே நான் சத்தியம் செய்துகொண்டேன்.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு