குழந்தைப் போராளி - 39


மீண்டும் போராளி

தொண்டர் படைகளுக்கு ஆட்களைச் சேர்த்துக்கொள்வதற்காக NRA பல வாகனங்களை நாடு முழுவதுமே ஓடவிட்டிருந்தது. 'நயாசிஷாரா'விற்குப் போகும் வழியில் அப்படி ஒரு நான்கு சக்கர "இராணுவ அலுவலக"த்தை நான் கண்டேன்.

தொண்டர் படைக்குச் சேர்க்கப்படுபவர்கள் ஒரு மாத ஆயுதப் பயிற்சியின் பின்பாக போர்முனைகளுக்கு அனுப்பப்படுவார்கள். இந்த இடத்தில் எனது அனுபவம் எனக்குக் கை கொடுத்தது. இராணுவ நடைமுறைகள் எனக்குப் பரிச்சயமானதால் எங்கே எதைச் செய்தால் எனக்கு இலாபமுண்டு என்பது எனக்குத் தெரியும். நான் பயிற்சியின் முடிவில் போர்முனைக்கு அனுப்பப்படாததற்கு வேறொரு காரணமுமுண்டு. பயிற்சிக் காலத்தில் ஆயுதப் பிரயோகங்களிலும் அணிவகுப்புகளிலும் மற்றைய இராணுவ நுட்பங்களிலும் நான் காட்டிய திறமையைப் பார்த்து, எங்களைப் பயிற்றுவித்த கோப்ரலால் தன் கண்களையே நம்பமுடியவில்லை. இதில் எந்த ஆச்சரியமுமில்லை. எல்லாமே எனக்கு முன்பே தெரிந்த விடயங்கள் தானே! எனவே பயிற்சியாளர் என்னை உதவிக் கோப்ரலாக பதவி நியமனம் செய்து 45வது படையணிக்கு என்னை அனுப்பி வைத்தார்.

அங்கிருந்து உடனடியாகவே நான் எங்கேயிருக்கிறேன் என்பதை அம்மாவுக்கு அறிவித்தேன். ஒன்றிற்கு இரண்டு முறையாக அம்மாவிற்கு நான் செய்த நம்பிக்கைத் துரோகம் என் மனதை அரித்துக் கொண்டேயிருந்தது. அம்மாவின் கஷ்ட ஜீவனமும் அதைச் சமாளிக்க அவர் செய்து வரும் சிறியளவு பால் வியாபாரமும் என்னை வருத்தின. அப்பாவோ பெரிய பாற்பண்ணையும் மாடுகளுமாயிருக்கிறார். ஒருநாள் முழுவதும் இது குறித்துத் தீவிரமாகச் சிந்தித்த பின்பு அப்பாவுடன் ஒரு சிறிய சந்திப்பை நிகழ்த்துவதென முடிவெடுதேன்.

சிற்றன்னை பெற்றெடுத்த எனது சகோதரிகள் என்னைக் கண்டதும் மிகவும் மகிழ்ந்து போயினர். அப்பா வீட்டு விறாந்தையில் சாய்வு நாற்காலியில் படுத்திருந்தார். என்னை அடையாளம் கண்டதும் அவர் உறைந்து போனார். படபடக்கும் அவரது கண்கள் மட்டுமே அசைந்தன.ஒருவரை ஒருவர் சற்று நேரம் வரை பார்த்துக்கொண்டிருந்தோம். என் தலை கிறுகிறுத்துக்கொண்டிருந்தது."பேபி" எனக் கீச்சுக்குரலில் கூவிக்கொண்டே அப்பா எழுந்து நின்றார். பயந்தவர் போலக் காலடிகளை ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து அவர் என்னை நெருங்கினார். நான் ஆடாமல் அசையாமல் நின்றேன். முகத்தில் மிகக் குழப்பமான பாவனைகளைக் காட்டிக் கொண்டே அவர் வீட்டினுள்ளே போனார். அவர் திரும்பி வரும்போது எனக்காக ஒரு நாற்காலியைத் தூக்கிக்கொண்டு வந்தார். ஒரு மரியாதைக்குரிய விருந்தினரை வரவேற்பது போல அவரது சாய்வு நாற்காலிக்கு அருகே எனக்கு இருக்கை போடப்பட்டது. இருவருமே உட்கார்ந்துகொண்டு எதுவும் பேசாமல் ஒருவரையருவர் பார்த்துக்கொண்டிருந்தோம். பதறிப் படபடத்துக்கொண்டிருக்கும் அப்பா முதலில் கதையைத் தொடங்கட்டும் என நான் அமைதியாக உட்கார்திருந்தேன். எனது கொடுமைக்காரச் சிற்றன்னை வெளியே வந்து என்னை வரவேற்பதற்காகவும் நான் காத்திருந்தேன். சிறிது நேரத்திற்குப் பின் சிற்றன்னை கதவைத் திறந்து மெதுவாக வெளியே வந்தார். எனது கோபத்தை மிகச் சிரமப்பட்டு அடக்கிக்கொண்டே எனது உதடுகளில் புன்னகையை வரவழைத்தேன். அதன் பின்பு தான் அப்பா நிம்மதியாக மூச்சு விட்டார். அவரின் முகத்தில் இப்போது மகிழ்ச்சி ரேகைகள் தோன்றின. அப்பா, "பேபி நீ எப்போது இந்தப் பிரதேசத்துக்கு வந்து சேர்ந்தாய்?" எனக் கேட்டார். அதன் பின்பு ஒரு நசுங்கலான சிரிப்பு அவரிடமிருந்து வெளிப்பட்டது. "பொது மக்கள் இராணுவத்திடம் இம்மாதிரியான கேள்விகளைக் கேட்கக் கூடாது" என நான் சர்வ சாதாரணமாகச் சொன்னேன். மீண்டும் கதை பேச்சின்றி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தோம். சிற்றன்னை கொண்டுவந்த பாலை 'நான் ஏற்கனவே சாப்பிட்டாகிவிட்டது' என்று காரணம் சொல்லிக் குடிக்க மறுத்துவிட்டேன். உண்மை என்னவென்றால் நான் அவரை நம்பவில்லை அவரிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள நான் விரும்பவுமில்லை.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு