குழந்தைப் போராளி - 40


பழிவாங்கும் திட்டம்

ன்றே நான் முகாமிற்குத் திரும்பினேன். என் கோபம் இன்னும் அடங்கவில்லை. 'ஸாடிஸ'த்தனமான அப்பாவின் துன்புறுத்தல்களை என்னால் எளிதில் மறக்க முடியவில்லை. எனது ஞானஸ்நானத்தின் போது நான் மிகவும் நேசித்த, எந்தக் குற்றமுமே செய்திராத எனது ஆட்டுக்குட்டிகளை அவர் வெட்டியதையும் நான் மறக்கவில்லை. அப்போது - எனது ஆட்டுக் குட்டிகளை வெட்டும்போது - எனக்கொரு பாடம் கற்பிப்பதாக அவர் நினைத்திருக்கலாம். ஆனால் இப்போது என்னிடமிருந்து அவர் பாடம் கற்றுக்கொள்ளப் போகிறார். இந்தப் பாடத்தின் முடிவு எனது அம்மாவுக்கு நன்மையைக் கொண்டுவரும். எனது நம்பிக்கைத் துரோகத்துக்கு நான் செய்யும் சிறிய பிராயச்சித்தமாகவுமிருக்கும்.

ஒருநாள் காலையில் நான் முகாமிற்கு வெளியே புல்வெளியில் உட்கார்ந்திருந்தேன். உடனடியாகப் போர் அபாயம் ஏதும் எங்களுக்கில்லை. யுத்தத்திற்கான தயார் நிலையில் நேரத்தைக் கடத்திக்கொண்டு இருக்க வேண்டியதுதான். இங்கும் பிரச்சினைகள் இல்லாமலில்லை. அவ்வப்போது ஏதாவது பிரச்சினைகள் வந்துகொண்டேயிருந்தன. நான் எனது துப்பாக்கியோடு புல்வெளியில் அமர்ந்திருந்தபோது பிரச்சினை என்னைத் தேடி வந்தது.

எங்கள் படையணியில் எனது பரமவைரியாய் இருந்தவன் மூஞ்சியையும் தூக்கி வைத்துக்கொண்டு ஏதோ தானே உகண்டாவின் ஜனாதிபதி என்ற தோரணையில் என் பக்கம் வந்தான். நான் உட்கார்ந்திருக்கும் இடம் தனக்கு வேண்டுமென்றும் என்னை எழுந்து போகும்படியும் சொன்னான். நான் கோபத்துடன் "முடியாது! நீ வேறு இடத்தைத் தேடிக்கொள்" என்றேன். புல்வெளியில் நிறையவே இடங்களிருந்தன. அவனது மூக்கை உடைத்து இரத்தம் காண வேண்டுமென்று நினைத்தேன். அவன் என்னைவிட வயதிலும் வலிமையிலும் கூடியவன், அவன் எனது கையைப் பிடித்துத் தூக்கி என்னை இழுத்தெறிந்துவிட்டு எனது இடத்தில் உட்கார்ந்துகொண்டான். என்னைப் போலவே அவனும் உதவிக் கோப்ரல் தான். ஆனால் நான் தனக்கு மரியாதை தரவேண்டுமென அவன் சொன்னான். இப்போது என் இரத்தம் கொதிக்கத் தொடங்கியது. என் கையிலுள்ள துப்பாக்கியைப் பற்றிய பயம் கூட அவனிடமில்லை."வயதில் பெரியவர்கள் மரியாதையை எதிர்பார்ப்பது பிழையல்ல" என்னை ஆத்திரமூட்டுவதற்கென்றே அவன் இந்த வார்தைகளைக் கூறினான்.

தன்னை யாரென்று இவன் நினைத்திருக்கிறான்? கிராமத்து முதியவர் என்றா இவன் தன்னை நினைத்துக்கொண்டிருக்கிறான்? நான் கடுஞ் சினத்துடன் அவனை உடனடியாகவே அந்த இடத்திலிருந்து போகும்படி சொன்னேன். போகாவிட்டால் இனி நான் பேசமாட்டேன்,எனது துப்பாக்கி தான் பேசும் என்றும் சொன்னேன். அவன் எனது எச்சரிக்கையைக் கணக்கெடுக்கவேயில்லை.அந்த இடத்திலேயே கல்லுப்போல உட்கார்ந்திருந்தான். எச்சரித்தது போதும் இனிச் சொன்னதைச் செய்ய வேண்டியதுதான். துப்பாக்கியை அணைத்து அவன் காலுக்கு வெடி வைத்தேன். அவனது காலிலிருந்து இரத்தம் கொப்பளிக்க அவன் பயங்கரமாக அலறிக்கொண்டே எழுந்திருக்க முயன்றான். ஆனால் அவனால் எழுந்து நிற்க முடியவில்லை. அடுத்த கணத்திதில் இராணுவப் பொலிசார் என்னைச் சுற்றி வளைத்து எனது துப்பாக்கியைப் பிடுங்கிக்கொண்டனர். எனது பரமவைரியை முதலுதவி அறைக்கும் என்னைப் படையணியின் துணைத் தளபதியின் அலுவலகத்திற்கும் தூக்கிச் சென்றனர். நான் 45வது படைப்பிரிவில் சேர்ந்த நாளிலிருந்தே அந்தத் தலைக்கனம் பிடித்தவன் எப்படியெல்லாம் என்னைச் சீண்டினான், ஆத்திரமூட்டினான் என்பதை நான் துணைத் தளபதிக்கு விளக்கிச் சொன்னேன். எனது தரப்பு நியாயங்களைக் கேட்ட பின்பு துணைத் தளபதி என்னைக் குப்பைக் குழியில் போட்டு உருட்டி எடுக்கும்படி இராணுவப் பொலிசாருக்குக் கட்டளையிட்டார். தண்டனை நிறைவேற்றப்பட்ட பின் நான் ஒரு காட்டுப் பன்றிக்குட்டியைப் போல அலங்கோலமாக நின்றிருந்தேன். எனது செய்கைக்குத் தகுந்த காரணமிருந்ததென முடிவெடுத்த துணைத் தளபதி என்னைச் சிறைக்கு அனுப்பவில்லை. பறிமுதல் செய்யப்பட்ட எனது துப்பாக்கியை ஒரு மாதம் கழித்துத்தான் திருப்பித் தருவார்கள். ஆயுதமின்றி இராணுவச் சிப்பாய்க்குச் செய்வதற்கு ஒன்றுமில்லை எனவே இப்போது எனக்கு நிறைய நேரமிருந்தது. அப்பாவை மீண்டும் சந்திப்பதென முடிவெடுத்தேன்.

முதலில் மாடுவெட்டும் ஒருவரைத் தேடிப் பிடித்தேன். அத்துடன் வெட்டிய இறைச்சியை எடுத்துச் செல்ல ஒரு வாகனத்தையும் வாடகைக்கு அமர்த்திக்கொண்டேன். நாளைக் காலையில் வாகனமும் மாடுவெட்டுபவரும் வரவேண்டிய முகவரியையும் அவர்களுக்குக் கொடுத்தேன். இந்த ஏற்பாடுகளை முடித்துக்கொண்டு பேருந்து நிலையத்திற்கு நான் வந்தபோது அங்கே எதிர்பாராத விதமாக அப்பாவைச் சந்தித்தேன்.அப்பா என்னிடம் வழவழத்துக் கதையளக்கத் தொடங்கினார். நானோ ஒற்றைச் சொற்களில் மறுமொழிகளைக் கூறிக்கொண்டு நின்றேன்.எனது சிந்தனை முழுவதும் நாளைய திட்டத்தையே சுற்றிச் சுழன்றுகொண்டிருந்தது. அப்போது அப்பா என்னிடம் கேட்ட ஒரு கேள்வி என்னை வாயைப் பிளக்கச் செய்தது. "பேபி நீ எப்போது பாட்டியையும் பண்ணையையும் போய்ப் பார்க்கப் போகிறாய்?" என அவர் கேட்டார். அவரால் எனது எண்ணங்களை எப்படிப் படிக்க முடிந்தது? உணர்ச்சிகளற்ற அவரது முகத்தை ஒருமுறை பார்த்துக்கொண்டேன். அவரது கேள்விக்கு நான் பதிலேதும் சொல்லவில்லை.

பண்ணைக்குச் சென்றுகொண்டிருக்கும் போது எனது திட்டத்தை ஒருமுறை மீட்டிப் பார்த்து எதையாவது தவற விட்டுவிட்டேனா எனச் சரிபார்த்துக்கொண்டேன். மதியத்தில் பண்ணைக்கு வந்து சேர்ந்தேன். வழியில் என்னைக் கண்ட பக்கத்துப் பண்ணையின் உரிமையாளர் உடனடியாகவே என்னை அடையாளம் கண்டுகொண்டு என்னைக் கட்டி அணைத்தார். எனது இராணுவ உடைகளைத் தொட்டுப் பார்த்துக்கொண்டே "நீ நன்றாக வளர்ந்து விட்டாய், இந்த இராணுவச் சீருடை உண்மையிலேயே உனக்கு மிகப் பொருத்தமாயிருக்கிறது" என முணுமுணுத்தார். எனது 'ஆர்மி'ச் சப்பாத்து எனது தொடையின் அரைவாசிக்கு உயர்ந்திருந்ததை அவர் கவனிக்கவல்லைப் போலும். அப்படியிருந்தும் நான் அவரின் இடுப்பளவு உயரமேயிருந்தேன். அவரின் உயரத்துக்கு நான் என்றுமே வளரப்போவதில்லை.

பண்ணை வீட்டின் முன்னே நாய்க் குட்டிகள் சகிதம் நின்றுகொண்டிருந்த எனது சகோதரன் ரிச்சட் வைத்த கண் வாங்காமல் என்னையே பார்த்துக்கொண்டு நின்றான். எனது இதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது. அந்தக் கணத்தில்தான் நான் அவனை எவ்வளவு நேசிக்கிறேன் என்பது எனக்கே புரிந்தது. தம்பி தனக்கேயுரிய நிதானமான முறையில் என்னை வரவேற்றான்.அவன் முன்பிருந்ததை விட இப்போது இன்னும் சிறுத்திருந்தான். மொத்தத்தில் எதுவித மாற்றங்களுமில்லாமல் அதே ரிச்சட்டாகத்தான் அவன் இருந்தான். இப்போதுதான் காட்டில் வேட்டையாடிவிட்டு வந்தவனைப் போல அவனது தோற்றமிருந்தது. அவனை என்னுடன் சோர்த்து இறுக்கமாகக் கட்டி அணைத்துக்கொண்டேன். அவன் தனது தலையை என் தோள் மீது சாய்தான். ஒரு நொடியில் அங்கே தோன்றிய பாட்டி எனது கைளைப் பற்றி வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். பாட்டியின் முகம் இன்னும் சூனியக்காரியின் முகமாகத்தானிருந்தது. ஆனால் இப்போது அந்த முகத்தில் ஒரு துயரப் புன்னகை ஒட்டியிருந்தது. நான் சத்தியம் செய்யக்கூடத் தயாராயிருக்கிறேன்; அன்று அவரது கண்களில் உண்மையிலேயே கண்ணீர் வந்தது.

பாட்டி பரிமாறிய உணவை நாங்கள் சாப்பிட்டு முடித்ததும் நானும் தம்பியும் வேட்டையாடப் புறப்பட்டோம். மீண்டும் எனது சகோதரனின் பக்கத்தில் இருப்பது எனக்கு மிகவும் மகிழ்வாயி ருந்தது. நாங்கள் காட்டுக்குள் நடந்துகொண்டிருந்தபோது நான் எதற்காகப் பண்ணைக்கு வந்திருக்கிறேன் என்பதைத் தம்பி அறிய முயன்றான். எங்களது உண்மையான அம்மாவிற்காகப் பண்ணையிலிருந்து சில மாடுகளையும் ஆடுகளையும் பிடித்துச் செல்லும் எனது திட்டத்தை நான் அவனுக்குக் கூறினேன்.
"களவாடவா நீ இங்கு வந்துள்ளாய்?"
"ம்!"
"அப்படியானால் நீ முட்டாள் தான்,துப்பாக்கியில்லாமல் நீ வந்திருக்கின்றாய்!"

சூரியன் மேற்கில் விழுந்துகொண்டிருந்தான். வேட்டை எங்களிருவரையும் நன்றாகக் களைக்க வைத்துவிட்டது. காடு எங்கள் இரையை ஒழித்து வைத்துவிட நாய்களும் களைத்துவிட்டன. வீடு திரும்பும்போது சோர்ந்துபோன நாய்கள் குற்ற உணர்வுடன் தங்களது எஜமானை அடிக்கொரு தடவை நிமிர்ந்து பார்த்துக்கொண்டே வந்தன. நானும் தம்பியும் கால்பந்து பற்றியும் எங்களின் வேட்டையைப் பற்றியும் பகடிக் கதைகள் பேசிக்கொண்டே வந்தோம். வேட்டையில் நாங்கள் தோற்றிருந்தாலும் எங்களுக்காகப் பண்ணையில் போதியளவு மாமிசம் காத்துக்கொண்டிருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும்.

வீடு வந்ததும் வராததுமாக நான் பாட்டியிடம் சென்று எதற்காக நான் இங்கு வந்திருக்கிறேன் என்பதைச் சொன்னேன். புதினமறியும் ஆர்வத்துடன் எனது சகோதரனும் வந்து அறையின் மூலையில் உட்கார்ந்திருந்தான். ஒரு பெரிய பாத்திரத்தினுள் கை வேலையாயிருந்த பாட்டி என்னை பார்க்கக் கண்களை உயர்த்தினாள். நான் எனது பொய் மூட்டையை இன்னொரு தரம் அவிழ்க்கத் தொடங்கினேன். பட்டியிலிருந்து எட்டு மாடுகளையும் ஏழு ஆடுகளையும் பிடித்து ஒரு வண்டியில் ஏற்றிக் கொண்டுவரும்படி அப்பா என்னை இங்கு அனுப்பி வைத்திருக்கிறார் எனப் பாட்டிக்கு 'விளக்கம்' சொன்னேன். "வழமையாக அவர்தானே இந்தக் காரியங்களைச் செய்வார் இப்போது மட்டும் ஏன் மாறி நடக்கிறது?" எனப் பாட்டி கேட்டார். ஒரு இராணுவத்தினளாக வாழ்க்கை எனக்கு ஒரு முக்கியமான பாடத்தை கற்றுத் தந்துள்ளது. எப்போதுமே கைவசம் நாங்கள் ஒரு பதிலைத் தயாராக வைத்திருக்க வேண்டும். "இராணுவம் வாகனத்தில் இருந்தால் பொலீசார் லஞ்சம் கேட்க மாட்டார்கள் அப்பாவிற்கு அந்தப் பணம் மிச்சமாகும், அப்பா உள்ளதிலேயே நல்ல மாடுகளையும் ஆடுகளையும் கொண்டுவரச் சொல்லியுள்ளார்" எனப் பாட்டிக்கு விளக்கம் சொன்னேன். பாட்டி அரைகுறை மனதோடு தலையை அசைத்துவிட்டு, இன்னும் சிரித்துக்கொண்டிருக்கும் எனது சகோதரனை முறைத்துப் பார்த்தார். எனது சகோதரன் ஏன் சிரிக்கிறான் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அவனது சிரிப்பைப் பாட்டி எப்படி எடுத்துக்கொள்வார்? அவன் வழமை போலவே தன்னைக் கேலிபண்ணிச் சிரிக்கிறான் எனப் பாட்டி எண்ணக் கூடும் என நினைத்து நான் சமாதானமானேன்.

இரவுணவின் போது பக்கத்துப் பண்ணையின் உரிமையாளர் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். அவர் பாட்டியுடன் கதைப்பவற்றை நான் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்தேன். அவர் பாட்டியிடம் சொன்ன ஒரு விசயத்தைக் கேட்டதும் என் இதயமே ஒரு கணம் நின்றுவிட்டது. உணவைச் சப்பிக்கொண்டிருந்த எனது வாய் ஆடாமல் நின்றது. பக்கத்துப் பண்ணைக்காரர் எனது தகப்பனாரை நகரத்தில் கண்டதாகவும் நான் இங்கு வந்திருப்பதை அவர் அப்பாவிற்குச் சொன்னதாகவும் பாட்டியிடம் கூறினார்.

நல்ல வேளையாகப் பாட்டியின் முழுக் கவனமும் உரையாடலில் இருக்கவில்லை. நானும் சாப்பாட்டில் கவனம் செலுத்துவது போலப் பாவனை செய்தேன். எல்லாமே திட்டமிட்டபடி நடக்கும் என எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொண்டேன். ஆனாலும் நம்பிக்கையீனம் என்னைப் பலமாக ஆட்டிப் படைத்தது. நானே எனக்குச் சொன்ன சமாதானங்கள் எல்லாம் ஒன்றின் பின் ஒன்றாகச் சரிந்து விழுந்தன.பக்கத்துப் பண்ணைக்காரர் போகும்போது கதவைப் பிடித்துக்கொண்டே என்னைத் திரும்பிப் பார்த்து "உன்னைப் பார்ப்பதற்காக உனது அப்பா நாளை காலையில் இங்கு வருகிறார்" எனச் சொல்லிவிட்டுப் போனார்.

அப்போது பாட்டி என்னைப் பார்த்த பார்வையுடன் எனது கடைசி நம்பிக்கையும் செத்துப் போனது. அவரின் கண்களில் நாள் முழுவதும் இருந்த நெகிழ்வும் அன்பும் இப்போது காணாமற் போயிருந்தன. எனது இதயம் வேகமாக அடிக்கத் தொடங்கிப் பின் ஏறத்தாழ நின்றே விட்டது. பாட்டி என்னை முறைத்துக்கொண்டே "மாட்டுத் திருடர்களை உனது தந்தை எப்படிக் கொல்வாரோ அதேபோல உன்னையும் அடித்தே கொல்லப் போகிறார்" என்றார். அச்சம் எனது மூளையையும் அங்கங்களையும் முடக்கிப்போட்டது. இப்போது நான் இங்கிருந்து ஓடித் தப்பாவிட்டால் என்றுமே நான் இங்கிருந்து மீளப் போவதில்லை என நினைத்துக்கொண்டேன். பாட்டியோ தனது மிரட்டல்களையும் பயமுறுத்தல்களையும் நிறுத்துவதாயில்லை. கடைசியில் எனது சகோதரன் ஒரு கூச்சல் போட்டுப் பாட்டியை அடக்கினான். பின்பு ஒன்றுமே நடவாதது போலத் தனது வழமையான நிதானத்துடன் என்னருகே வந்து மெல்லிய குரலில் "பறிக்கப்பட்ட உனது ஆயுதத்தை மறந்து விடாதே" எனச் சொல்லிவிட்டுப் படுக்கைக்குப் போனான்.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு