குழந்தைப் போராளி - 42



தண்டனை முகாம்

ன்னுடைய அதிர்ஷ்டம், அந்த இராணுவ அதிகாரி என்னை நினைவில் வைத்திருந்தார். என்னைக் கண்டதும் மகிழ்ச்சியடைந்தவர் உடனடியாகவே தனது சிறு படையணியில் என்னைச் சேர்த்துக்கொண்டார். எல்லையைக் கடக்கும் வாகனங்களைச் சோதனையிடுவதுதான் இந்தப் படையணியின் வேலை. அங்கிருந்த இராணுவத்தினருக்கு அரசாங்கம் சம்பளம் கொடுப்பதில்லை. ஆனாலும் பணம் சம்பாதிக்கும் பல யுக்திகளை இராணுவத்தினர் தங்கள் கைகளில் வைத்திருந்தனர். நானும் சிறிது நாட்களிலேயே பணம் "சம்பாதிக்க"த் தொடங்கிவிட்டேன். கடத்தல்காரர்கள் எல்லையைக் கடக்கும்போது கண்டுகொள்ளாமலிருந்தால் பணம் கிடைக்கும். பணமென்றால் கொஞ்ச நஞ்சமல்ல! நிறையப்பணம்! பதின்மூன்று வயதுப் பெண்ணான நான் அதை எவ்வாறு செலவு செய்வது? நான் எனது பணம் முழுவதையும் கோழிக்கே செலவழித்தேன். உகண்டாவில் கோழி மாமிசம் விலை கூடிய உணவு. காலை-மதியம்-மாலை என மூன்று வேளையும் நான் கோழியாகவே தின்று தீர்த்தேன். என் பணத்தைக் கோழி தின்றது. ஆத்திர அவசரத்துக்குத் தேவையென்று ஒரு செப்புச் சல்லியைக் கூட நான் சேமித்து வைக்கவில்லை ஏன் சேமிக்க வேண்டும்? எனது நாட்கள் நன்றாகத்தானே கழிந்துகொண்டிக்கின்றன.

எனது புதிய இனிய வாழ்க்கையில் நான் மெல்ல மெல்ல மூழ்கிக்கொண்டிருக்கையில் திடீரென ஒரு நாள் நாங்கள் எல்லோருமே படையணியின் தலைமைக் காரியாலயத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டோம். அங்கே தளபதி டேவிட் தின்யென்புஸா எங்களை விசாரணை செய்தார். விசாரணையின் முடிவில் எங்கள் மீதான இலஞ்சக் குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாயின. காட்டுப் பகுதியான நாகசொன்கொராவிலிருந்த தண்டனை முகாமிற்கு நாங்கள் அனுப்பப்பட்டோம்.

தண்டனை விதிக்கப்பட்ட எங்களது குழு டேவிட் தின்யென்புஸாவினதும் அவரது துணைத் தளபதிகளினதும் நேரடிக் கண்காணிப்பில் இங்கு கொண்டுவரப்பட்டது. நாங்கள் ஆறு மாதங்களை இந்தத் தண்டனை முகாமில் கழிக்க வேண்டும். காலை ஆறு மணியிலிருந்து மாலை ஆறுமணி வரை எலும்புகளை நொறுக்கும் கடினமான பயிற்சிகளில் நாங்கள் ஈடுபடுத்தப்பட்டோம். எங்களக்கு வழங்கப்படும் தண்டனைகளை, பயிற்சிகளை டேவிட்டே நேரடியாக மேற்பார்வை செய்தார். அவர் தண்டனை முகாமுக்கும் தலைமை முகாமுக்குமாகப் போய் வந்துகொண்டிருந்தார். நாங்கள் மைதானத்தில் தொங்கிய தலைகளுடன் அணிவகுத்து நிற்கையில் டேவிட் எங்களது தலைகளுக்கு மேலாகத் தனது பார்வையைச் செலுத்தியபடி இராணுவத்தினர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகளைப் பற்றி எங்களுக்குப் 'போதனை' செய்தார். ஒழுங்கு விதிகளை மீறினால் இவ்வாறான தண்டனைகள் தான் கிடைக்குமென்றார். எங்களின் முகங்களைப் பார்க்கக்கூட அவர் விரும்பவில்லை.

அவரின் சொற்கள் கற்களைப் போல எங்களைத் தாக்கின. எந்தவித ஈரலிப்புமில்லாத இந்த நிலம் போலவே இங்கே சொற்களுமிருந்தன. எங்களின் ஓர் எதிர் வார்த்தையே எங்களின் இறுதி வார்த்தையாவதற்கு இங்கே நிறையச் சாத்தியக்கூறுகளிருந்தன. இந்த அதிகாரிகளிற்கு எங்களது வாழ்கையின் மேல் எல்லையற்ற அதிகாரங்களிருந்தன. நாங்கள் மனிதர்களாக அல்லாமல் சடப்பொருட்கள் போல கையாளப்ப்பட்டோம். ஆம்! நாங்கள் மயிராலும் தோலாலும் போர்த்தப்பட்ட சடப்பொருட்கள். இங்கே எவராவது சுயமாகச் சிந்திக்க முயன்றால் அதற்காக அவர் தனது உயிரைக் கூட விலையாகக் கொடுக்க நேரிடலாம்.

அதிகாரிகள் துன்புறுத்தலிலும் சித்திரவதைகளிலும் கைதேர்ந்தவர்களாய் இருந்தார்கள். தண்டனை முகாமிலிருந்த பெண் இராணுவத்தினரை அவர்கள் மிக மோசமாக நடத்தினார்கள். பெண்களுக்கென்றே பிரத்தியேகமாக விதம் விதமான தண்டனை முறைகளை உருவாக்கியிருந்தார்கள். பெண் இராணுவத்தினர் பயிற்சிகளில் மட்டும் தளபதிகளையும் அதிகாரிகளையும் திருப்திப்படுத்தினால் போதாது. அவர்கள் படுக்கைகளிலும் தங்களைத் திருப்திப்படுத்த வேண்டுமென்று தளபதிகளும் அதிகாரிகளும் இயல்பாகவே எதிர்பார்த்தனர். தளபதிகளிடமும் அதிகாரிகளிடமும் அதிகாரமிருந்தது. அவர்களுக்கு என்ன தேவையாயிருந்ததோ அதை அவர்கள் வெகுசுலபமாக எடுத்துக்கொண்டனர். அவர்களது அடிமைகள் அவர்களது தேவையை நிறைவேற்றி வைத்தனர். இராணுவத்திலிருந்த மற்றைய ஆண்களுக்கும் பெண்களுக்கு என்ன நடக்கிறதென்று தெரியும். அவர்கள் எங்களை "Chakula cha wakubwa guduria" என அழைத்தனர். இதன் பொருள் "அதிகாரிகளின் எச்சில் கலயங்கள்" என்பதாகும்.

நாள் முழுவதும் கடுமையான பயிற்சியின் பின்பு மாலையில் நெருப்பைச் சுற்றி வட்டமாக உட்கார்ந்திருந்தோம். தூரத்தில் எங்களை நோக்கி கோட்பிரி என்ற இராணுவ அதிகாரி வந்துகொண்டருப்பது தெரிந்தது. அவரது நடையே அவரைக் காட்டிக்கொடுத்தது. கோட்பிரிக்கு முப்பது வயதிருக்கலாம். மிகுந்த பலசாலியான அவரை எதிரிகளின் துப்பாக்கி சற்று ஊனமாக்கியிருந்தது. அவர் துப்பாக்கிக் காயத்தால் காலை நொண்டிக்கொண்டுதான் நடப்பார். எங்களருகே வந்ததும் கோட்பிரி தனது விரலைச் சொடுக்கி என்னைத் அழைத்தார். "நீ உன்னுடைய பொருட்களையும் எடுத்துக்கொண்டு என்னுடைய குவாட்டர்ஸுக்குப் போ!" எனக் கட்டளையிட்டார். அவரது கட்டளைக்குப் பணிவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. நான் எழுந்து நடக்கத் தொடங்கினேன். அவரது மெய்காப்பாளர்கள் என்னைத் தொடர்ந்து வந்தனர். அவரது குவாட்டர்ஸுக்கு வந்தபோது நான் தங்க வேண்டிய அறையை அவரது உதவியாளன் எனக்குக் காண்பித்தான். நான் திகிலுடன் அந்த அறையில் படுத்திருந்தபோது கோட்பிரி கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தார். நான் படுக்கையிலிருந்து துள்ளிக் குதித்து எழுந்து நின்றேன். கோட்பிரி என்னைத் தன்னுடன் வரும்படி அழைத்தார். நான் சுவரைப் பார்த்தவாறு அசையாது நின்றேன். சிறிது நேரம் காத்திருந்து விட்டு அவர் போய்விட்டார்.

அடுத்தநாள் காலையில் கோட்பிரி மறுபடியும் எனது அறைக்கு வந்தார். " நீ ஒவ்வொரு நாள் இரவிலும் எனது படுக்கையறையில் இருக்க வேண்டும்!" என என்னைப் பார்த்து உறுமினார். நான் அவரிடமிருந்து தப்பிக்க முடியாது என்பதைக் காலையிலேயே சிவந்திருந்த அவரது கண்கள் சொல்லின. ஏதோ பெரிய படையணிக்கே கட்டளையிடுவதைப் போல "கட்டளையைச் சரியாக விளங்கிக்கொண்டாயா?" என அவர் என்னிடம் அடித்து முழங்கினார். நான் அவரின் முன்னே ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டு நின்றிருந்தேன். பின்பு மெல்லத் தலையசைத்து "ம்" எனக் கூறிவிட்டுக் காலைப் பயிற்சிக்குப் போனேன்.

அன்று மாலையில் பயிற்சி முடிந்ததும் கோட்பிரி என்னைச் சந்தித்தார். என்னை அவரது படுக்கையறைக்குப் போய்க் காத்திருக்குமாறு கட்டளை பிறந்தது. அவரின் படுக்கையறையில் தரை முழுவதும் பொருட்கள் அலங்கோலமாகப் பரவிக்கிடந்தன. அவற்றுக்கிடையே ஒரு 'பயனைட்' கத்தியும் கிடந்தது. நான் கத்தியை எடுத்து கட்டில் மெத்தையின் அடியில் மறைத்து வைத்துக்கொண்டேன். நான் அந்தக் கட்டிலின் மீது சாய்ந்தபோது என்மீதே எனக்கு ஆத்திரமாயிருந்தது, அருவருப்பாயிருந்தது. கோட்பிரி என்மீது பாய்ந்த போது "தூக்கத்திலேயே நீ சாகப் போகிறாய் நாயே" என மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்.ஆனால் அவரைப் பற்றிய பயம் என்னை விட்டு விலகவேயில்லை. அவருக்கெதிராகக் கத்தியை எடுக்கும் துணிவும் எனக்கு வரவில்லை. அந்த நீண்ட கத்தி கோட்பிரியை உடனடியாகக் கொல்லக் கூடியதுதான். ஆனால் முதல் குத்தே சரியாக விழாவிட்டால்? காலையும் வந்தது, நான் எதையுமே செய்யவில்லை.

மூன்று வாரங்களின் பின்பு எங்கள் படையணிக்குப் புதிய தலைவராக கப்டன் சாம் வசாவா பலிகரியே வந்து சேர்ந்தார். அவரின் மெய்காப்பாளர்களைச் சிநேகிதம் பிடிக்க நான் பெரும் முயற்சிகளைச் செய்தேன். முயற்சி திருவினையாக்கியது, ஒரு மெய்காப்பாளனின் நட்பும் எனக்குக் கிடைத்தது. வசாவா கம்பாலாவிற்குச் செல்லவிருக்கிறார் என அந்தப் புதிய சிநேகிதன் எனக்குத் தகவல் தந்தான். என்னை இந்த நாகசொன்கொரா தண்டனை முகாமிலிருந்து எப்படியாவது வெளியே அழைத்துச் செல்லும்படி நான் அவனிடம் மன்றாடினேன். தன்னால் முடிந்தளவு தான் முயற்சிப்பதாக அவன் எனக்கு வாக்குத் தந்தான். இன்னொரு மோசமான இரவை கோட்பிரியுடன் கழித்த பிறகு காலையில் வசாவாவின் இருப்பிடத்திற்குப் போனேன். மெய்காப்பாளர்கள் பிரயாண ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்தனர்.என்னுள் மகிழ்சி கரை புரண்டோடியது. எனக்காகக் காத்திருந்த எனது சிநேகிதன் என்னைக் கண்டதும் பரபரப்புடன்"வாகனத்தினுள் தாவிக்கொள்!" என்றான். நான் எனது எல்லாப் பலங்களையும் திரட்டி வாகனத்துள் ஒரே தாவாகத் தாவி விழுந்தேன். சில நிமிடங்களில் கப்டன் வசாவாவின் வாகனத் தொடரணி நாகசொன்கொராவிலிருந்து கம்பாலா நோக்கிப் பயணப்பட்டது.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு