குழந்தைப் போராளி - 6


ஏமாற்றமாகிய நம்பிக்கைகள்

உண்மையிலேயே வீடு கட்டப்பட்டது. பாட்டியின் வீட்டிலிருந்து இரண்டு கிலோ மீற்றர்கள் தூரத்தில் பெரிய வீடு. பல அறைகள், சமயலறை, அத்துடன் ஆடு மாடுகளும் எங்களுடன் வந்தன. புதிய பண்ணையின் சுற்றாடலும் பழையதைப்போலவே இருந்ததால் பெரிய மாற்றமொன்றும் இல்லாதிருந்தது.

புதிய வீட்டில் வாழ்க்கை வேறு மாதிரி இருந்தது. பாட்டி வாழைத்தோட்டத்தை முன்பு போலவே பார்த்துக் கொண் டிருந்தாலும் அம்மா அது தொடர்பாகப் பாட்டிக்கு ஏராளமான நிர்வாகக் கட்டளைகளைப் பிறப்பிப்பார். இது ஒரு முக்கியமான மாற்றம். அப்பா எங்களுடன் இருக்கவில்லை. தனது நகரத்து வீட்டிற்குப் போய்விட்டார். இந்த வீட்டில் நான், புதிய அம்மா, புதிய குழந்தை மூவரும்தான். அம்மா என்மீது அன்பும் விருப்பமும் வைத்திருந்தார் என்றே நினக்கின்றேன். மெல்ல மெல்ல நானும் மகிழ்ச்சியை உணரத் தொடங்கினேன். அத்துடன் மெதுவாக எனது தன்நம்பிக்கையும் வளரத் தொடங்கி அம்மாவிற்குப் பாட்டி வீட்டில் நடந்தவைகளையெல்லாம் சொல்லத் துணிந்தேன். எவ்வளவு கொடுமைகளை நான் தாங்க வேண்டியிருந்ததெனக் கூறி அம்மாவின் மனதில் இடம் பிடிக்க முயன்றேன்.

எனக்கு ஐந்து வயதிருக்குமென நினைக்கிறேன். அம்மா மீண்டும் கருத்தரித்தார். எனக்கு இது பற்றி ஒன்றுமே தெரியவில்லை. யாரும் இது பற்றி எனக்கு எதுவும் கூறவில்லை. எங்கு எப்படி அம்மாவின் இரண்டாவது குழந்தை - பமிலா என்ற பெண்குழந்தை- பிறக்கப்போகிறது என்பது எனக்குப் புரியாத புதிர். ஆரம்பத்தில் மகிழ்வாகவே இருந்தது. இன்னுமொரு சிறிய குழந்தையுடன் நான் இருக்கலாம், இன்னும் சிறிது காலத்தில் அம்மா இல்லாத வேளைகளில் நான் பமிலாவைக் கவனித்துக்கொள்ளலாம் என்றெல்லாம் நினைக்க உற்சாகமாகயிருந்தது.

ஒரு நாள் அம்மா வெளியே போக வேண்டியிருந்தது. எங்கு என்பது எனக்குத் தெரியாது. என்னிடம் தங்கையைப் பார்த்துக்கொள்ளவும் அவளை அழவிட வேண்டாமென்றும் சொல்லி விட்டுப்போனார். அழவிடவேண்டாம் என்றால் என்ன என்றே எனக்கு விளங்கவில்லை. எல்லாம் நன்றாகவே நடந்தது. முதலில் இருவரும் விளையாடினோம். பின்பு பமிலா நித்திரையாகிப் போனாள். சிறிது நேரத்தில் எழும்பிய பமிலா அழத் தொடங்கினாள். நான் பால் புகட்ட முயற்சித்தேன், என்னாலான எல்லாவற்றையும் செய்து பார்த்துவிட்டேன். பமிலா அழுகையை விட்டபாடில்லை. அம்மா திரும்பி வரும்வரை பமிலா அழுது கொண்டேயிருந்தாள். வீட்டிற்கு வந்த அம்மா குழந்தைக்குப் பால் கொடுக்கவில்லை என என்னைக் குற்றம் சாட்டினார். என்னை அது வெகுவாகப் பாதித்ததாயினும் - ஆத்திரத்தில் அவரின் முகம் கிட்டத்தட்ட பாட்டியின் முகம் போல் மாறியிருக்கவே - எனது நியாயத்தைச் சொல்லத் துணிவு வரவில்லை. முதலில் பமிலா அம்மாவின் முலையில் பால் குடித்துத் தூங்கிப்போனாள். பின்பு அம்மா ஒரு கடி நாயாக உருமாறி என்னைத் தாக்கத் தொடங்கினார். எனது காது மடல்கள், உதடுகளைப் பிடித்துத் திருகினார். பின் என்னைத் தூக்கித் தரையில் வீசியெறிந்தார். எனது வாயில் இரத்தம் கரித்தது. ஏன் அம்மாவிற்க்கு என் மேல் இவ்வளவு கோபமென்று எனக்குப் புரியவேயில்லை. ஆனால் பாட்டியிடம் நான் ஏற்கனவே கற்றுக்கொண்டபடி எதிர்ப்பெதுவும் தெரிவிக்காது அசையாது தரையில் கிடந்தேன்.

எனது குழந்தைத்தனமான பார்வையில் எனது சிறிய தங்கையே குற்றம் செய்தவள். அவள் அழாமாலிருந்திருந்தால் எனக்கு இந்தத் தண்டனை கிடைத்திருக்காது. அதன் பின்பு நான் எனது சகோதரியை வெறுக்கத்தொடங்கினேன். ஒவ்வொரு முறையும் அவள் அழும்போது அவளது காதுகளையும் உதடுகளையும் இறுகத் திருகவேண்டும் போலிருந்தது. ஒவ்வொரு முறையும் அவள் அழும்போதும் அவளது அழுகைக்கு எனக்குத் தண்டனை கிடைக்குமென அஞ்சினேன்.

தாயன்பு என்றுமே வற்றாது என நான் நம்பியது பிழை போலும். சில நாட்களின் பின்பு அப்பா தனது நகரத்து வீட்டிலிருந்து வந்திருந்தார். சாப்பாட்டு மேசையில், "இவள் ஒவ்வொரு நாளும் கட்டிலை நனைக்கின்றாள், கட்டில் விரிப்புக்களை மாற்றுவதே எனது முழுநேர வேலை" என அப்பாவின் மனைவி கூறினார். இது உண்மையல்ல ஆனாலும் நான் ஒன்றும் சொல்லாதிருந்தேன். நான்தானே எனது கட்டில் விரிப்புகளை மாற்றுகிறேன்... அப்பாவின் கண்களிலுள்ள கோபம் என்னை அமைதி காக்கச் செய்தது.

இரவு உணவிற்குப் பின், நான் சோபாவில் படுக்கவேண்டுமென்றும், படுக்கையை நனைத்தால் தானே நாளைக்கு என்னை உதைக்கப் போவதாகவும் அப்பா கூறினார். அந்த இரவு நான் மிகப் பரபரப்பாக இருந்தேன். படுக்கையில் கிடந்துகொண்டே, நித்திரை கொள்ளக்கூடாதெனத் தீர்மானித்தேன். ஆயினும் என்னால் நித்திரையை வெல்ல முடியவில்லை. அடுத்த நாள் காலை எழுந்தவுடன் சோபாவைத் தொட்டுப் பார்த்தேன். ஈரமாகயிருந்தது. எனக்கு வந்த அழுகையை அடக்கிக் கொண்டு சூரிய உதயத்தைப் பார்க்கக் கிளம்பினேன். அப்பா வந்து தனது நேற்றைய உறுதிமொழியை நிறைவேற்றும்வரை நான் அங்கேயே இருந்தேன். அவர் என்னை உதைத்த பின்பு நாள் முழுதும் எனக்குச் சாப்பாடு கிடைக்கவில்லை. இரவு தான் மீண்டும் சாப்பிட்டேன்.

எனது அம்மாவிற்குக் கோபம் தலைக்கேறினால் சில நாட்கள் தொடர்ந்து என்னைப் பட்டினி போட்டு விடுவார். ஒரு முறை இரவு உணவின்றி நான் படுக்கைக்குச் செல்ல நேரிட்டது. எனது வயிறு பசியால் இரைச்சலிட்டுக் கொண்டிருந்தபடியால் தூங்கமுடியாமல் போயிற்று. இரவு இரண்டு மணியளவில் என்னால் பசியைப் பொறுக்க முடியாமல் போயிற்று. நான் எழுந்து சென்று ஏதாவது உணவு தேடியே ஆகவேண்டிய நிலை. என்னைக் கரும் இருள் சூழ்ந்திருந்தது. இருளிலிருக்கும் கெட்ட ஆவிகளை எழுப்பிவிடாதிருக்க விரல்களால் என் கண்களைக் கிள்ளிவிட்டுக்கொண்டே மெதுவாக நடந்து சாப்பாட்டறைக்குச் சென்றேன். இங்குதான் இரவுணவின் மீதிகளை வைத்திதிருப்பார்கள். எனது விரல்கள் பாத்திரமொன்றைத் தொட்டதும் வாயினுள் உணவைத் திணிக்கத் தொடங்கினேன். காதுகளை எப்போதும் கூர்மையாகவே வைத்திருந்தேன். என்னை யாரும் கண்டு கொள்வதை நான் தவிர்த்தாக வேண்டும். சத்தமின்றி எனது படுக்கைக்குத் திரும்பினேன். இனிச் சிறிது நேரம் நன்றாக நித்திரை கொள்ளலாமெனெச் சிரித்துக்கொண்டே நினைத்தேன்.

அடுத்த நாள் காலையில் சாப்பாட்டறைக்குப் போவதை நான் தவிர்த்துக்கொண்டேன். அப்படியாவது இரவு நான் சாப்பிட்டதை மறைத்து விடலாமென நினைத்தேன். ஆனாலும் பாத்திரத்தினுள் நான் எடுத்த உணவு குறைந்துதானே இருக்கும்? எப்படியும் களவு தெரிந்துவிடப் போகிறதென நினைத்துக் கொண்டு களவு பிடிபடும் வரை காத்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் என்னைத் தயார்படுத்திக் கொண்டு நான் உள்ளே சென்ற போது அம்மா என்மேல் பாயப்போகிறார் என்ற எதிர்பார்ப்புடனேயே சென்றேன். எதுவுமே நடக்கவில்லை! நான் வரும் சத்தம் கேட்டுக் கொஞ்சம் பால் சூடாக்கித் தரும்படி அம்மா கேட்டார். இராப் பட்டினிக்குப் பின் காலை உணவு கேட்க எனக்குத் தைரியம் வரவில்லை. எனவே பாலை வெளியே கொண்டுவந்து காய்ச்சி எனது பாத்திரத்திலும் கொஞ்சம் ஊற்றிக் கொள்வதென முடிவெடுத்தேன். பிடிபடாமல் இருக்கவேண்டுமென்ற பயத்தில் இதை மிக விரைவாகச் செய்ய வேண்டியிருந்தது. இந்தப் பரபரப்பில் பாத்திரத்தில் சுடுபாலை ஊற்றுவதற்குப் பதிலாக அதை என் காலில் ஊற்றிக்கொண்டேன். பாத்திரம் கவிழ்ந்து நிலத்தில் விழுந்தது. நானோ எரிவில் கத்திக் கொண்டிருந்தேன்.

அம்மா கதவடியில் வந்து பார்த்தார். பார்வை என்னமோ சாதாரணமாகத்தானிருந்தது. 'உனது பெரிய வயிறு ஒருநாளில்லை ஒருநாள் உன்னை கடுமையான சிக்கலில் கொண்டு போய் விடப்போகிறது' எனச் சொல்லிக் கொண்டே சிந்திப்போன பாலிற்காக எதுவுமே சொல்லாது வீட்டினுள் சென்றார். காலில் கொப்புளம் வந்து தோல் உரிந்து விடாதிருக்க மரத்திலிருந்து இரு இலைகளைப் பறித்து எனது காலில் வைத்து எனது சட்டையில் கிழித்தெடுத்த துணியினால் கட்டிக் கொண்டேன். அழுதுகொண்டே இதைச் செய்து முடித்த நான் என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு மரத்தின் கீழ் ஆடு மாடுகளுடன் அமர்ந்துகொண்டேன்.

எனது காயமும் வேதனையும் அம்மாவை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. வேலை செய்வதற்குத் தகுதியானவளாகவே அவர் என்னைப் பார்த்தார். மூன்று நாட்களின் பின்பு அம்மா என்னை மேய்ச்சல் நிலத்தின் தொங்கலுக்குச் சென்று மாட்டுக்கன்றுகளைப் பார்த்து வரும்படி சொன்னார். மாட்டுக் கன்றுகளைத் தேடிப் புறப்பட்ட நான், எனது காலில் கட்டியிருந்த துணிக்கட்டின் மேல் வெள்ளை வெள்ளையாக எதோ தொங்குவதைப் பார்தேன். முதலில் துணியின் நூல்கள் தான் தொங்குவதாக நினத்த நான் அவற்றைத் தொடும் போது அவை புழுக்கள் என்பதைக் கண்டு கொண்டேன். பெரிதாக அலறிக்கொண்டே வீட்டை நோக்கி ஓடினேன். எனது கால் அழுகிப் போய்விட்டதென்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இருக்கவில்லை. அம்மா புண்ணிலிருந்து புழுக்களை அகற்ற உதவினார். புண் மீது பஞ்சு வைத்துக் கட்டி விட்டார். ஆனாலும் எனது பயம் என்னை விட்டுப் போகவே இல்லை. காலை இழந்து விடுவேனென்ற பயத்தில் அடிக்கடி என் காலைப் பார்த்துக்கொண்டே இருப்பேன். நல்ல வேளையாகக் கால் சீக்கிரமாகவே குணமாகியது, எனது மனப்பாரமும் என்னைவிட்டு நீங்கியது.

என்னைத் தண்டிப்பதற்காகவே அம்மா ஆடுகளை மேய்க்கும்படி கட்டளையிடும்போது அவளென்னை எவ்வளவு மகிழ்விக்கின்றாள் என்பதை அவள் அறியவேயில்லை. காலை தொடங்கி மாலை வரை என் பிரியமான ஆடுகளைப் மேய்ப்பது, அப்போது அடிகள், உதைகள், ஏச்சுக்களிலிருந்து விடுதலை எல்லாமே எனக்கான மோட்சத்தின் பரிசாகவே நினைத்துக் கொள்வேன். ஆடுகள் என் சொற்படி கேட்பதுடன் எனக்குப் பெரிதாக எந்தப் பிரச்சனையும் தருவதில்லை. ஆயினும் முகத்தைச் சுருக்கிக்கொண்டு ஆடுகளைப் மேய்ப்பது ஒரு பெரிய தண்டனை போலவே நடிப்பேன். மனதிலோ மகிழ்ச்சி கரைபுரண்டோடும். ஆனாலும் சில வேளைகளில் தனிமை என்னை வாட்டும். ஆடுகளால் கதைக்க முடியாதல்லவா! அத்துடன் மற்றக் குழந்தைகள் போலவே எனக்கும் கலகலப்பாக இருக்கவேண்டுமென்ற உள்ளார்ந்த ஆசை இருக்கத்தான் செய்தது.

ஒருநாள் காலை, அம்மா காலை உணவாகப் பாலைக் கொடுத்து, விரைவாகப் பாலைக் குடித்துவிட்டு ஆடுகளை மேய்ச்சலுக்கு இட்டுச் செல்லும்படி சொன்னார். பின்பு அவர் வெளியே போய்விட்டார். அவரது காலடிச் சத்தம் மறைந்த உடனே நான் ஓர் துண்டு இறைச்சியை என் வாயினுள் திணித்துக்கொண்டேன். தொண்டையில் சிக்கிக் கொண்ட இறைச்சியை ஒரு கோப்பைத் தண்ணீரின் உதவியுடன் விழுங்கியபடி எனது மூச்சைச் சரிப்படுத்த ஒரு நிமிடம் உட்கார வேண்டியிருந்தது. ஆடுகளும் நானும் பச்சைப்பசேலெனப் புற்கள் அடர்ந்து வளர்ந்திருந்த ஓரிடத்திற்கு வந்து சேர்ந்தோம். ஆடுகளை அங்கேயே மேயவிட்டு நான் காளான் சேகரிக்கச் சென்றேன்.காளான்கள் அவ்வளவாகக் கண்ணில் படவில்லை. திடீரென ஆட்டுக் குட்டியொன்று கத்தும் சத்தத்தை நான் அவதானித்தேன். அப்போது நான்கு குட்டிகள் ஒரு புதருக்குள்ளிருந்து வெளியே வந்தன. கண்ணில் கண்ணீருடன் கவனித்தேன். அவைகளும் என்னைப் போலவே மறிக் குட்டிகள். மந்தையுடன் அவைகளைச் சேர்த்துச் சாய்துக்கொண்டு போகும்போது எனக்கு மிகவும் மகிழ்வாயிருந்தது. இவைகள் எனது ஆட்டுக்குட்டிகள். நான் தான் இவைகளைக் கண்டு பிடித்தேன். இப்போதுதான் எனக்கு மட்டுமே சொந்தமெனச் சொல்லிக்கொள்ள ஏதோ கிடத்துள்ளது. எனது ஆட்டுக்குட்டிகள்!

மாலையில் மற்றவர்களுக்கும் இது பற்றிச் சொல்ல ஆவலுடன் காத்திருந்தேன். அவர்களும் உண்மையாகவே மகிழ்வார்கள், என்னைப் பெருமைப்படுத்துவார்கள். ஆனால் ஒருமுறை கூட அவர்கள் சிரிக்கவேயில்லை. அம்மா தான் நாளக் காலையில் புதிய ஆட்டுக்குட்டிகளை ஒருமுறை பார்க்கவேண்டுமெனச் சொன்னார். வேறொருவரும் ஒன்றும் சொல்லாதபடியால் ஆட்டுக்குட்டிகள் எனக்குச் சொந்தமா? அல்லது முழுக் குடும்பத்திற்குமா? எனக் கணக்குப் பார்க்கத் தொடங்கினேன். சிலவாரங்கள் கழித்து அப்பா வீட்டிற்கு வந்தார் அவரை வரவேற்கக் கூட எனக்கு நேரமிருக்கவில்லை. அவரின் கையைப்பற்றி ஆட்டுக் குட்டிகளிடம் அவரை அழைத்துச் சென்றேன்.

தொடரும்

குழந்தைப் போராளி - 5



5.அப்பாவின் புதுமனைவி

கிழட்டுச் சூனியக்காரி எனது கையை முறித்தது ஒரு வியாழக்கிழமையாக இருக்க வேண்டும், சனிக்கிழமை அப்பா வருவதாக இருந்தது. அவர் தனது கால்நடைகளைப் பார்வையிடவும் வேலையாட்களுக்குச் சம்பளம் கொடுக்கவும் வரவிருந்தார். சனி காலையில், பாட்டி என்னிடம் " நீ கட்டிலிலிருந்து விழுந்துதான் கையை முறித்துக்கொண்டாய் என உன் அப்பாவிடம் சொல்லவேண்டும், இல்லையேல் அப்பா நகரத்திற்குத் திரும்பியதும் உன்னை நான் உதைப்பது நிச்சயம்" என்றார்.

நான் தெருவுக்குச் சென்றபோது காரின் சத்தம் கேட்டது. இது அப்பாவாக இருக்கலாமென நான் நினைத்துக் கொண்டேன் என் கை வலித்துக் கொண்டேயிருந்தது. நான் இது வரை பார்த்திராத ஓர் கார் வந்து கொண்டிருந்தது. நீல நிற சுஸுக்கி வாகனமது. வாகனம் நின்றதும் அதிலிருந்து உயரமான மிக அழகிய பெண்ணொருத்தி கையில் வெள்ளை நிறப் பொதியொன்றுடன் கீழே இறங்கினார். பளீரெனப் பால் வெள்ளை நிறத்தில் அவரது பல்வரிசை மின்னியது. ஒர் ஆணும் இறங்கினார், அது என் அப்பா. அவர்களிருவரும் சிரித்துக்கொண்டும் பேசிக்கொண்டும் வந்துகொண்டிருந்தனர். அப்பாவின் பல்வரிசை அவர் சிரிக்கும்போது முழுவதுமாகத் தெரிந்தது. கூடிய சீக்கிரம் அப்பா அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்யப் போகிறார் என்று நான் நினைத்துக் கொண்டேன். அவர்களிருவருமே ஒருவரில் ஒருவர் மூழ்கியிருந்ததால் என்னை அவர்கள் கவனிக்கவே இல்லை.

வீட்டிற்குச் செல்லும் வழியில் எனது நீளக் கைச்சட்டையைத் தூக்கி எனது கையை அப்பாவிற்குக் காட்டினேன். கேள்வி கேட்டால் அந்தப் பொய்யைச் சொல்ல ஆயத்தமாயிருந்தேன். அவர் நீண்ட நேரமாக எனது கையைப் பரிசோதித்து விட்டு யார் எனது கையில் தடி வைத்துக்கட்டியதெனக் கேட்கப் பாட்டி எனப் பதில் சொன்னேன். அது குணமாகிவிடுமெனக் கூறிக் கொண்டே அப்பா வீட்டினுள் சென்றார். நான் வீட்டினுள் அறையின் ஒரு மூலையில் ஒடுங்கிக் கொண்டு யாராவது என்னுடன் பேசுவார்களா எனப் பார்த்துக் கொண்டிருந்தேன். யாருமே பேசாததினால் வெளியே சென்றபோது அந்த அழகிய பெண் என்னைக் கூப்பிட்டுக் "குழந்தையைச் சிறிது நேரம் தூக்கிக் கொள்கின்றாயா?" எனக் கேட்டார். குழந்தை? எந்தக் குழந்தை? சிலவேளை இவளும் பைத்தியக்காரியோ? எல்லோர் பார்வையும் என் மீதே இருந்தது. 'நான்தானே இந்த வீட்டின் ஒரே குழந்தை'யென நான் கூற, ஏதோ பெரியதொரு நகைச்சுவையை நான் கூறியது போல அவர்கள் உரக்கச் சிரிக்கத்தொடங்கினர். அந்தப் பெண் என்னைத் தன் பக்கத்தில் இருக்கச் சொல்லி என் மடியில் அந்த வெள்ளைப் பொதியை வைத்தார். அது ஒரு குழந்தை எனத் தெரிந்து கொண்டேன். அது ஆணா - பெண்ணா என நான் கேட்பதற்கு முன்னமே குழந்தை என்னை நனைத்தது, நானே தெரிந்து கொண்டேன், அது ஒரு ஆண் குழந்தை. எனது
எல்லாத் தைரியங்களையும் ஒன்று திரட்டிக்கொண்டே அந்தப் பெண்ணிடம் "நீங்கள் யார்?" எனக் கேட்டேன். "நான் உனது தாய்" என அந்தப் பெண்
பதில் தந்தார்.

சிறிது நேரத்தின் பின் நான் ஆட்டுக்குட்டிகளைத் தேடி சென்ற போது எனது மனம் நிர்மலமாயிருந்தது. என்னுள் புதிய நம்பிக்கை தோன்றத் தொடங்கியது.கடைசியில் பாட்டியின் பிடியிலிருந்து என்னைக் காப்பாற்ற ஒருவர் வந்து விட்டாரென நினைத்துக்கொண்டேன்.அப்பா, நானும் அம்மாவும் வசிப்பதிற்குப் புதிய வீடொன்றைக் கட்டப்போவதாகக் கூறினார்.இந்தச் செய்தியைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியாக அவர்கள் பக்கத்திலேயே இருந்து அப்பாவின் மிகுதித் திட்டத்தையும் கேட்டுக் கொண்டேயிருந்தேன்.

தொடரும்

குழந்தைப் போராளி - 4

சிங்கத்தின் குகையினிலே

ஆபிரிக்காவில் சிங்கம் மக்கள் மனத்தில் பயத்தை ஏற்படுத்தும் அதே நேரம், ஆச்சரியம் கலந்த மதிப்பையும் பெற்றுள்ளது. சிங்கம் பசியெடுத்தால் பயங்கரமானது. எனினும் அதன் துணிவு, பலம்,போன்றைவைக்காக ஆபிரிக்கர்கள் சிங்கத்தை மிகவும் நேசிப்பார்கள். யார் ஒரு சிங்கத்தை வெல்கின்றானோ அவன் தோற்க்கடிக்கப்பட்ட சிங்கத்தின் துணிவு, பலம் என்பவற்றின் ஒரு பகுதியைத் தனதாக்கிக் கொள்கின்றான். யார் தோற்கின்றானோ அவன் சிங்கத்திற்கு இரையாவதுடன் இருந்த இடமே தெரியாது போய்விடுவான். ஆகவே சிங்கத்துடன் உறங்குவதென்பது இயலாத காரியம். ஏற்கனவே நான் ஆடுகளுடன் படுத்துக் கொள்ள முடிவு செய்து விட்டேன்.

புளோரிடா மாமி சென்ற பின்பு எனது வாழ்க்கை ஓர் புதிய திருப்பத்தைச் சந்தித்தது. அவர் போனதுடன் நேசமும் பரிவும் போய்விட்டது. அவர் வீட்டினில் செய்த வேலைகளெல்லாம் என் தலைமேற் தான் சுமத்தப்பட்டன. எனது வயதோ மூன்றுதான். ஆபிரிக்காவிற்கும் டென்மார்க்கிற்கும் நிறைய வித்தியாசங்களுண்டு. அங்கு பார்வையே வித்தியாசம்தான். இரண்டு, மூன்று வயது நிரம்பிய குழந்தைகள் கூடப் பலமான உடலமைப்பைக் கொண்டிருந்ததனால் அவர்கள் வேலை செய்யத் தகுதியானவர்களாகக் கொள்ளப்பட்டார்கள். பெரும்பாலான ஆபிரிக்கக் குழந்தைகளின் நிலை இதுதான். நிச்சயமாகக் கிராமப்புறக் குழந்தைகளின் நாளாந்தம் இதுதான்.

துப்புரவான படுக்கை விரிப்புக்களை நானே துவைத்து மாற்ற வேண்டும், "கட்டிலில் மூத்திரம் பெய்வதை நிறுத்து!" இது எனது பாட்டி. பழிவாங்கலாக நான் கட்டிலில் மூத்திரம் விடுவேன், அவரைக் கோபப்படுத்துவதே எனது நோக்கம். பாட்டி என்னை அடிக்க அடிக்க, மனதின் நிம்மதி குலைக்கப்பட்டு, பாட்டியை எனக்குப் புரியமலேயே போக அடிகள் மட்டுமே அதிகரித்துக் கொண்டேயிருந்தன.

ஒரு பின்னேரம் பாட்டி என்னை உலுக்கினார். நான் எனது உடைகளை மூத்திரத்தால் நனைத்திருந்ந்தேன். ஒரு வெறி பிடித்த வேட்டையாடும் மிருகம் போல என்னை நோக்கிப் பாட்டி பாய்ந்தார். என் காலிலும் கையிலும் பிடித்துத் தூக்கித் தரையிலே வீசினார். "மழுக்" என்ற முறிவுச் சத்தம் எனக்குக் கேட்டது. தொடர்ந்து முழங்கையிலிருந்து கழுத்துவரை அதீதமான நோவு கிளம்பியது. எனது கையைத் தூக்க முயற்சித்தேன். ஆனால் கை மேலெழும்பாது கீழேயே தொங்கிற்று. வெண்நிறமான எலும்பொன்று தோலைக் கிழித்துக்கோண்டு வெளியே தெரிந்தது. அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டே நின்றேன். இரத்தம் வடிந்தோடத் தொடங்கியது; எனது இரத்தம்! உடனே எனது ஆடுகளின் ஞாபகம் தான் வந்தது. அவைகளை அறுக்கும்போது வழிந்தோடிய இரத்தம்! பயத்தினால் அலறத் தொடங்கினேன். எனது இறுதி நேரம் வந்துவிட்டதென நினைத்துக்கொண்டேன்.

ஆனால் பாட்டி எனக்கு மேலாகக் கத்தினாள். நான் வாயை மூடிக்கொள்ள வேண்டுமாம். பாட்டி திரும்பவும் எனது கை எலும்பைச் சரியாகப் பொருத்தினார். முறியும்போது வலித்தது போலவே இப்போதும் வலித்தது. ஆயினும் எனது வாயிலிருந்து சின்னச் சத்தமும் எழவில்லை. போய்ப் படுத்துக்கொள்ளக் கட்டளை பிறந்தது. அவர் போய்விட்டார். நான் சத்தமின்றி அழுதேன். அப்போதே மெளனமாக அழுவதற்கு நான் கற்றுக்கொண்டேன்.
தொடரும்

குழந்தைப் போராளி - 3


முதல் ஞாபகம்

எனது தந்தை ஜோண் மேற்கு உகண்டாவில் ஓர் கிராமத்தில் பிறந்தவர். அங்கு அவர் வளர்ந்து பள்ளி சென்று அதிகாரப் படிகளில் மெல்ல மெல்ல ஏறினார். தனது முதலாவது நிர்வாகப் பதவியை "கோப்பி" நிறுவனமொன்றில் பெற்றுக்கொண்டார். எனது தாயின் அறிமுகம் கிடைத்த பின்னே அவர் சட்டம் படிப்பதற்கான முடிவை எடுத்தார். பிராந்திய அளவில் எனது தந்தை ஓர் முக்கிய புள்ளி. அது தவிர பண்ணை ஒன்றினையும் நடத்தினார். பண்ணையை என் தாயார் நிர்வகித்தார்.


நான் பிறந்தவுடன் என் அம்மாவை என் தந்தை விவாகரத்துச் செய்து விட்டார். ஒருவேளை நான் ஆணாகப் பிறக்காதது காரணமாயிருக்கலாம். ஆயினும் இரண்டாவது தடவையாக எனது தாய் கருத்தரித்து எனது சகோதரன் ரிச்சர்ட்டைப் பெற்றார்.
எனது தாயார் நான் ஆறு மாதக் குழந்தையாக இருக்கும் போதே என்னையும் வீட்டினையும் விட்டு விலகுமாறு நிர்பந்திக்கப்பட்டார். எனது தாயார் திரும்பி வந்திருந்தால் அவர் ஒருவேளை தனது உயிரை இழந்திருப்பார். ஓர் ஆணுக்கும் பெண்ணுக்குமிடையிலான உறவில் பலம் பொருந்தியவரின் சட்டங்கள் தான் செல்லுபடியாகும். எனது குடும்பத்தில் என் தந்தை தனது அதிகாரத்தை வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை.

யார் யாரிற்கு என்னென்ன துன்பங்களையும் துயரங்களையும் தான் கொடுக்கின்றேன் என்பதை எனது தந்தை நன்றாக அறிந்துதானிருந்தார். தனது வாழ்க்கையைத்தான் அவர் முக்கியமாகக் கருதினாரே தவிர, மற்றவர்களுக்கு மேலாக நிற்க நினைத்த அவரால் வேறு மாதிரி நடந்து கொள்ள முடியவில்லை.

எனது தாய் என்னை விட்டுப் பிரிவதனால் ஓர் சராசரி குழ்ந்தையாக நான் வளர்வதற்கான சந்தர்ப்பத்தை என் அம்மா எனக்கு மறுக்கின்றார் என்று தெரிந்திருந்தும் -அவருக்குத் தெரிந்திருக்குமென நான் நினைக்கின்றேன்- என்னைப் பிரிவதைத் தவிர அம்மாவுக்கு வேறெந்த வழியும் இருக்கவில்லை. ஒரு மனுசியுடன் இல்லாது திருடி உண்ணும் மிருகமொன்றுடன் தான் வாழ்ந்ததாக நினைக்கும் என் தந்தையின் அதிகாரத்தின் கீழ் நான் வளர்ந்தேன். அவரைப் பொறுத்தவரை என்னை ஓர் சுமையாகக் கருதினாரென்றுதான் நான் நினைக்கின்றேன். இந்தச் சுமையிலிருந்து விடுபட அவர் என்னைத் தனது தாயார் வாழ்ந்த பண்ணைக்கு அனுப்பி வைத்தார். யாரும் எனக்கு அது என் தந்தையின் பண்ணையெனச் சொல்லவில்லை. எனது வயது கூடி வரும் போது தான் பெரிய வாழைத் தோட்டமும் நிறைய நிலங்களும் ஏராளமான கால்நடைகளும் அவருக்குச் சொந்தமானதென அறிந்துகொண்டேன்.

பாட்டி என்றால் அன்பான முதியவர் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள் என் பாட்டியைப் பார்த்திருக்க மாட்டார்கள். வயது சென்றவர்தான். ஆனால் அவர் அன்பாக என்றுமே இருந்ததில்லை. குள்ளமான உருவம், பருத்த தேகம், ஓர் சூனியக்காரியைப்போல தான் அவரது தோற்றம் இருந்தது. அவரது ஒரு கண் எப்போதுமே கண்ணீரில் மிதந்துகொண்டிருக்கும். வாய் கோணலாகவும் அவர் வாய் திறந்து ஏதாவது பேசினால் அவரின் வாய் அவரது கட்டுப்பாட்டினுள் இல்லாமலும் போய்விடும்.

நான் அவரை முத்தமிட வேண்டுமென்று யாரும் கட்டாயப்படுத்தாதவரை அவரது தோற்றம் பற்றி எனக்கு எவ்விதக் கரிசனமுமில்லை. அவரது பரிவற்ற கடுஞ் சொற்கள் தான் எனது இதயத்தைத் துளைத்தன. சிறு குழந்தையான என்னால் அவரிடமிருந்து என்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை. சுடு சொற்கள்! அவை எனக்கும் அவருக்குமிடையில் மீண்டும் மீண்டும் இரும்புச் சுவர்களாக நின்றன. எனக்கு என் பாட்டி மீதிருந்த வெறுப்பு இன்றும் என் மனதில் ஆழப் புதைந்து கிடக்கிறது. ஐந்து அறைகளைக் கொண்ட பண்ணை வீடு செங்கற்களாலும் தகரக் கூரையாலும் கட்டப்பட்டடிருந்தது. சமையலறை வழமை போல் பெரிய அடுப்புடன் வீட்டிற்கு வெளியே இருந்தது. நாங்கள் தரையில் அமர்ந்து தான் எங்கள் உணவை உண்போம். வீட்டில் மேசையோ கதிரையோ இருக்கவில்லை. இந்த ஐந்து அறைகளில் ஓர் அறையில் பாட்டியின் பெறுமதி வாய்ந்த பொருட்கள் இருக்கும். எனக்கு வாழைப்பழமென்றால் எவ்வளவு விருப்பமென்பது சொல்லி மாளாதது. வாழைப்பழச் சுவை என்றும் எனக்குத் திகட்டிப் போய்விடாது. வீட்டின் ஓர் ஜன்னல் பூசணிக்காய்கள் நிறைந்த பகுதியில் இருந்தது. நிலத்திலிருந்து தானே மேலெழுப்பியது போன்ற வட்டமான பூசணிக்காய்கள். ஆனால் பூசணிக்காய்களைச் சாப்பிடலாம் என்பது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. எனெனில் நான் பூசணிக்காயை ஒரு நாளும் சாப்பிட்டிருக்கவில்லை.

முழுப் பண்ணை வீட்டிலும் நான் தான் ஒரேயொரு குழந்தை. பக்கத்துப் பண்ணை வீட்டுக் குழந்தைகளை அரிதாகத்தான் பார்க்க முடிந்தது. நாங்கள் துற்ஸி இனத்தவர்கள். எனது தந்தை அந்த வட்டாரத்திலேயே மக்களால் அதிகமாக வெறுக்கப்பட்டவர். அதற்கான காரணமும் உண்டு. தனது அதிகாரம், படிப்பு என்பவற்றை உபயோகித்து பக்கத்து நிலச் சொந்தக்காரர்களின் நிலங்களையும் பெறுமதிவாய்ந்த உடமைகளையும் சிறிதளவு பணத்திற்கு விற்றுவிட நிர்பந்திப்பார். என்னை அவர்கள் "சின்ன ஜோண்" என அழைப்பார்கள். நிச்சயமாக அது நல்ல பெயரல்ல என்பது எனக்கு தெரியும்.

எங்கள் பண்ணையில் பருவ காலத்திற்கு மட்டும் வேலை செய்யும் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டிருப்பார்கள். பருவகாலம் முடிந்ததும் அவர்கள் போய்விடுவார்கள். அவர்களுடன் பெரிதாக எந்த உறவையும் என்னால் வைத்துக் கொள்ளமுடியப்வில்லை. பல நல்ல இதயம் படைத்தவகர்கள் அவர்களினுள் இருந்தார்கள். இன்றளவும் அவர்களின் ஞாபகங்கள் என்னில் மகிழ்வைக் கிளர்த்துகின்றன. ஆனால் நான் பண்ணைத் தொழிலாளருடன் தொடர்பு கொள்வதையோ பேசுவதையோ என் பாட்டி விரும்பவில்லை.

வேறு குழந்தைகளுடனான தொடர்பற்ற நிலையில் மிருகங்கள் எனது விளையாட்டுத் தோழர்களாயினர். பாட்டியின் சட்ட திட்டங்களில் நான் வீட்டின் அருகாமையில் பாதுகாப்பான இடத்தில் இருக்க வேண்டுமென்பது முதன்மையானது. எனக்கும் அது நன்றாகவே இருந்தது. அவரிடமிருந்து சற்றுத் தொலைவில் என்னால் இப்போது இருக்க முடியும். பண்ணையின் மிருகங்களில் ஆடுகள் முதன்மையானவை. நானும் ஆடுகளை மிகவும் நேசித்தேன். எனது ரகசியங்கள் எல்லாவற்றையும் அவைகளுக்கும் சொல்லி வைப்பேன். எனது தனிமை என்னை அழுத்தும் போதெல்லாம் ஆடுகள் எனக்குத் துணையாயிருந்தன. அன்பு, பரிவு என்பவற்றின் முழு வடிவமாக ஆடுகள் எனக்கிருந்தன.

பாட்டியின் பண்ணையில் எனது முதலாவது வருடம் இப்படிச் சென்றது. துருதுருப்பான ஆடுகள், சுவையான வாழைப்பழம், அலைந்து திரிய பரந்த நிலப்பரப்பு! தங்கு தடையின்றி என்னால் ஓடித்திரிய முடிந்தது. ஒருவேளை இங்கு தான் எனது "கட்டுப்பாடற்ற" தன்மைக்கான அடிப்படை உருவாகியிருக்கலாம். இன்றுவரை அதிலிருந்து என்னால் முழுமையாக விடுபட முடியமலிருக்கின்றது.

இந்த இனிமையான நினைவுகளுக்கு எனது தந்தையின் சகோதரியான புளோரிடாவிற்கு நன்றி சொல்ல வேண்டுமென நினைக்கின்றேன். வயது முதிர்ந்த அவரது உருவம் எனது பாட்டிக்கு நேர் எதிரானது. அழகான முகமும் வாளிப்பான தோற்றமும் கொண்டவர் எனது மாமி. மிகவும் மென்மையான அவர், தனது புறத்தோற்றம் போலவே உள்ளேயும் அழகானவர். நல்லிதயம் கொண்ட அற்புதமான பெண்மணி. என்னைப் போலவே போக்கற்ற அவர் அங்கு விரும்பப்படாத மனுஷி. எனது பாட்டி எப்போதும் அவரை உரத்த தொனியில் ஏசுவதும் கோபமாகக் கத்துவதுமாயிருப்பார். எனது மாமியோ பாட்டியின் ஏச்சுப் பேச்சிற்கு எந்தவொரு எதிர்ப்பும் தெரிவிக்காது இருப்பார். எனது பாட்டியின் கடின இதயம், நேசமற்றதன்மை, மாமியை துன்புறுத்துவது எல்லாமே நான் அவரை வெறுக்கக் காரணங்களாயிருந்தன. நான் ஓர் ஆண் பிள்ளையாயிருந்தால் நன்றாகவிருக்குமென்று
நான் சிலவேளைகளில் நினைப்பதுண்டு.


பெண் குழந்தைகளுக்கு ஒரு வழிகாட்டி தேவை. அது பெரும்பாலும் தாயாகவிருக்கும். நான் யாரை முன்மாதிரியாக எடுத்துக்கொள்வது? பாட்டியை? அன்றேல் மென்மையான எந்த விதமான உரிமைகளுமற்ற புளோரிடா மாமி? புளோரிடா மாமி மாத்திரம் தன் உரிமைகளுக்காகப் போராடுபவளாய் இருந்தால்? தனது பரிதாப நிலையைப் பலம் பொருந்தியதாக மாற்ற முடிந்தால்? ஆனால் யாரிடம் அதிகாரமிருக்கின்றதோ அவர்களே மற்றவர்களைப் பற்றிய முடிவுகளை எடுக்கலாம். யார் மற்றயவர்கள் பற்றி முடிவெடுக்கின்றார்களோ அவர்களுக்கு எல்லாம் முதல் தரமானவைகளே கிடைக்கும். இதனை நான் மிகச் சிறு வயதிலேயே புரிந்து கொண்டேன்.

புளோரிடா தனது உரிமைகளை விட்டுக் கொடுத்துக் கொண்டிருப்பதை என்னால் பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை. ஏதாவது செய்தாகவேண்டும், சரியான சந்தர்ப்பம் வாய்க்கவேண்டும். பாட்டியின் கோபத்தைக் கிளறிவிடும் முக்கியமான இரண்டு விடயங்கள்; சேகரிக்கப்பட்டுள்ள உணவைத் திருடுவது மற்றது கட்டிலில் மூத்திரம் பெய்வது. இவை இரண்டிற்கும் நிச்சயமாகத் தண்டனையாக உதை கிடைக்கும். எனது கற்பனை உலகத்தில் பொய்யான குற்றச்சாட்டொன்றை உருவாக்கி அதைப் புளோரிடா மீது திணிக்கவேண்டும். மாமி அதற்கெதிராகத் தன்னை விட்டுக் கொடுக்காது பாட்டியுடன் சண்டையிட வேண்டும். பாட்டியையும் புளோரிடா செய்யாத குற்றத்திற்காகக் கோபப்பட வைக்கவேண்டும்.

காலைப் பொழுதில் தூக்கம் கலைந்து எழுந்தபோது நன்றாகப் பிந்தி விட்டது. வீட்டில் யாரும் இல்லை. பால் சேகரித்து வைக்கும் அறைக்குச் சென்று ஒரு பெரிய குவளையில் பாலை ஊற்றிப் பாட்டியின் படுக்கை அறைக்கு எடுத்து வந்தேன். கட்டிலின் மீது பாலைச் சரித்து ஊற்றி விட்டுப் பாட்டியின் கோணலான வாயை நினைத்துப் பார்த்தேன். பாட்டி கோபத்தில் அடித்த பின்னர்-நிச்சயமாக நல்ல உதை கிடைக்குமென்பதில் எனக்கு எந்தவித சந்தேகமுமில்லை- வாய் எப்படி இருக்குமென்று நினைத்துப் பார்த்துக்கொண்டேன். பாட்டி புளோரிடாவைக் குற்றம் சாட்ட வேண்டும்; அதுவும் நடக்குமென நினைத்துக்கொண்டேன். புளோரிடாவிற்கு அடி கிடைத்த பின்பு பாட்டியின் வாய் மேற்குப் பக்கம் திரும்பியிருக்கும் அதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லாமலிருந்தது.

திடீரெனெ இந்த மகிழ்வினூடே குற்ற உணர்வும் பயமும் என்னைப் பிடித்துக் கொண்டன. இப்போது பாட்டி என்னைக் கையும் களவுமாகப் பிடித்துக்கொண்டால் என்ன நடக்குமென்பதை நினைத்துப் பார்த்தேன். இந்த நினைவு வந்ததுமே பண்ணையின் புதருகளுக்குள் நான் பாதுகாப்பைத் தேடி ஓட்டமாக ஓடினேன். ஆடுகளையும் கன்றுக்குட்டிகளையும் யோசனையுடன் பார்த்துக்கொண்டிருந்தேன். சிலவேளை இவைகளுக்கு இந்தப் பிரச்சினைக்கான முடிவு தெரிந்திருக்கலாம்.

சிறுமியாக புளோரிடா மாமிக்குத் துணிவை ஏற்படுத்த செய்த இந்தச் சம்பவம் இன்று நினைத்துப்பார்க்கும்போது வினோதமாகப்படுகிறது. அதற்கும் காரணம் உண்டென நினைக்கின்றேன். என்மேல் யாரும் அன்பு காட்டவில்லை என்ற உணர்வும் என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியாததுமாய் இருக்கலாம். எனது மூலம், எனது உடல், எனது பால்நிலை, எனது அம்மாவுக்கு நடந்தது எல்லாமே எனக்குப் புரியாத புதிராக இருந்தது. எனது கேள்விகளுக்கு யாரும் பதில் சொல்லவில்லை. யாரும் எனக்கு எதையும் விளக்கிச் சொல்லவில்லை. ஒரு குடும்பமெனில் பலவிடயங்களில் பங்களிப்புக்கள், சேர்ந்து காரியங்களைச் செய்தலென்று இருக்குமல்லவா? யாரும் என்னைச் சேர்த்துக் கொண்டு எதுவும் செய்ததில்லை. கேள்வி கேட்டால் அடி, வேலை செய்யாவிட்டால் உதை. சில வேளைகளில் ஏன் என்னை அடிக்கிறார்கள் என்பது கூட எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

புளோரிடா மாமி துணிவுள்ளவளாக இருக்க வேண்டுமென்ற எனது விருப்பத்தை இன்று நினைத்துப் பார்க்கையில் ஒரு வகையில் நான் துணிவுள்ளவளாக இருக்க வேண்டுமென்பதன் அடிப்படையில் இருந்து அவ் விருப்பம் எனக்குள் எழுந்திருக்கலாம் என்று நினைக்கின்றேன். புளோரிடா மாமி என் மீது அன்பு கொண்டிருந்தார் என்பதில் எனக்கு எந்தவிதச் சந்தேகமுமில்லை. பாட்டியைவிட அவர் துணிவுள்ளவராக இருந் திருந்தால் நிச்சயமாக நானும் நன்றாக நடத்தப்பட்டிருப்பேன். கோபக்காரியான பாட்டிக்கும் அன்பான மாமிக்குமிடையிலான சண்டை நடக்காமலேயே போயிற்று. பாட்டியின் கட்டிலில் பால் ஊற்றியதை அவர் கவனிக்கவே இல்லை. ஆனால் பால் குறைந்தது தெரிந்து அதற்காக நான் தண்டனை பெற்றேன்.

மீளப் பார்க்கும்போது என் அறியமை நம்ப முடியததொன்று. எனது உடல் பற்றி ஒன்றுமே எனக்குத் தெரிந்திருக்கவில்லை. அதனால் அது பற்றிய கரிசனை ஏதுமில்லதிருந்தது. எங்கள் வீட்டில் கண்ணாடியுமில்லை. புகைப்படங்கள் எதுவுமில்லை. நானே பல விடயங்களை என்னளவில் அறிந்து கொள்ளவேண்டியிருந்தது. அதனால் இந்த விடயங்களில் பொதுவாக சிறுவர் சிறுமியருக்குரிய இரகசியங்களை அறிந்து கொள்ளும் ஆவல் எனக்கிருந்ததுடன் வெட்கம் என்பதையே என்னவென்று அறியாதிருந்தேன்.

எனது அறியாமை பல தடவைகளில் என்னைத் தர்மசங்கடமான நிலைக்குள்ளாக்கியுள்ளது. அதிலொன்று இந்தச் சம்பவம்: நான் பாட்டிக்குச் சமையலில் உதவ வேண்டும். இது எனக்கு எவ்வாறான ஒரு விடயத்தைப் புரியவைத்தது!

வெளியே சமைப்பதற்கு நிலா வெளிச்சம் போதுமாயிருக்கும். எனினும் சில இரவுகள் வெறும் கருமை சூழ்ந்ததாயிருக்கும். மேகமூட்டங்கள் நிலவை மறைத்திருக்கும். பாட்டி என்னைக் கூப்பிட்டு சமைப்பதற்கு உதவியாக விளக்கைப் பிடிக்கச் சொன்னார். ஓர் துணி விரித்து அதன்மேல் அவர் உட்கார்ந்திருந்தார். நான் துணியின் ஓரத்தில் உட்கார்ந்திருந்தேன். எண்ணை கொதிக்கத் தொடங்கியவுடன் பாட்டி வெங்காயத்தை வெட்டத் தொடங்கினார். இதனால் அவரது இரண்டாவது கண்ணிலும் கண்ணீர் சுரந்தது. இது எனக்கு மிக வேடிக்கையாகப்பட சில நிமிடங்களில் சிரிப்புப் பொங்கி வந்தது. குடும்பத்தின் தலைமைப் பொறுப்பு மாமி புளோரிடாவிடம் இல்லாது பாட்டியிடமிருப்பது பற்றி எனக்கு மிகவும் கோபம். அதனை நான் மறக்கவில்லை, அவரது கண்ணீர் சாப்பாட்டில் விழுந்தால்? அதைச்சாப்பிடும் எங்களுக்கு நோய் வராதென்பது என்ன நிச்சயம்?

கையில் வைத்திருந்த தக்காளி தவறி விழுந்ததால் விளக்கைத் திருப்பி வெளிச்சத்தைக் காட்டுமாறு பாட்டி கேட்டுக்கொண்டார். அவரின் கால்களுக்கிடையில் தக்காளி உருண்டு போனதால் நான் தலையைக் குனிந்து தேடத் தொடங்கினேன். தேடி முடிந்து தலை தூக்க முயலும்போது கறுத்த மயிர்களுடன் கூடிய ஒரு சிறு பிராணி பாட்டியின் கால்களுக்கிடையில் புகுந்திருப்பருப்பதைக் கண்டு பயத்தில் அலறினேன். ஒன்றும் விளங்காத பாட்டி "என்ன விடயம்?" எனக் கேட்க "அங்கே ஓர் பிராணி" என நான் அலற, "ஏன் பார்த்துக்கொண்டிருக்கிறாய்? நெருப்பால் பொசுக்கிவிடு" என அவர் சொன்னார்.

உண்மையிலேயே ஓர் எலியைப் பார்த்துத்தான் நான் அலறினேன் என்பதுவே பாட்டியின் எண்ணம். அவசர அவசரமாக நெருப்புக் கொள்ளி ஒன்றை எடுத்து அந்தப் பிராணியருகில் கொண்டு செல்லப் பாட்டி "சுடாதே சுடாதே" என வலியில் அலறினார். நானோ இருண்ட மூலைக்குள் இருக்கும் அந்தப் பிராணியை நெருப்பால் சுட மீண்டும் முயற்சிக்கக் கன்னத்தில் ஓர் பலமான அறை விழுந்தது. நான் சுடும் வேலையைக் கைவிட்டதுடன் எந்தவித விளக்கமுமின்றி அங்கிருந்து துரத்தப்பட்டேன். நல்ல கூத்துத் தான்!

புளோரிடா மாமியும் இவ்வாறு "கருமயிருடன் கூடிய சிறு பிராணியை" எங்காவது ஒளித்து வைத்துள்ளாரா? என அறிய ஆவலுடன் அவரிடம் சென்றேன். மிகப் பலமாக மறுத்த அவர் எனக்கு எந்தவித விளக்கத்தையும் தரவில்லை. பெண்ணின் உடல் பற்றிய ரகசியம் மேலும் பல ஆண்டு காலங்கள் தொடர்ந்து புரியாத புதிராகவே எனக்கிருந்தது.

சில மாதங்கள் கழிந்து புளோரிடா மாமி சுகவீனமுற்று கட்டிலிலேயே காலத்தைக் கழிக்க நேர்ந்தது. உண்பதற்கோ குடிப்பதற்கோ ஏதாவது கேட்கும் ஒவ்வொரு முறையும் பெரிதாகச் சத்தம் போடுவார். நான் மிகவும் மன வேதனையடைந்தேன்.

ஓர் மாலைப்பொழுதில் கட்டிலில் இருந்து கொண்டு புளோரிடா மாமியின் கையைப் பிடித்து என்னுடன் வைத்துக் கொண்டேன். அவரிடம் எந்த மாற்றமும் தெரியவில்லை. பாட்டியிடம் சென்று கூறிய போது அவர் பாத்திரஙளைக் கழுவிக் கொண்டிருந்தாள். இது பற்றி எவ்விதத்திலும் அலட்டிக் கொள்ளவேயில்லை. தொடர்ந்து பாத்திரம் கழுவுவதிலேயே பாட்டி கவனமாக இருந்தார். இறுதியில் நான் அழத் தொடங்கினேன். அப்போதாவது பாட்டி ஏதாவது செய்வார் என்பது என் எண்ணம். ஆயினும் கிடைத்த பதில் "வாயை மூடு" என்பதுதான். பாத்திரம் கழுவும் வேலை முடிந்ததும்தான் பாட்டி வீட்டினுள் சென்றார். நானும் அவருக்குப் பின்னால் சென்றேன்.

அடுத்ததாக என் நினைவில் வருவது எனது தகப்பன் ஓர் வெள்ளைக் காரில் வாகனத் தொடரணி பின்பற்ற பாட்டியின் பண்ணைக்கு வந்து சேர்ந்தது. வீட்டினுள் அப்பா அழுதுகொண்டிருப்பதைப் பார்த்தேன். அவரைச் சூழ்ந்திருந்த அவரது சகாக்கள் செய்வதறியாதது நின்றிருந்தனர். பின்பு ஒருவர் பின் ஒருவராகப் புளோரிடாவின் அறைக்குச் சென்று திரும்பினர். அப்பா திரும்பி வரும் போது தலை தாழ்ந்து உடல் சோர்ந்து சத்தமின்றி அழுதபடி வந்ததால் முன்பிலும் பார்க்க அப்பாவை நெருங்க முடியாத ஓர் சங்கட நிலை. யாருமே என்னைக் கவனிக்கவில்லை. என்ன நடக்கின்றது என்பதை விளக்கவுமில்லை. நானும் வழமை போல ஆத்திரமும் கையாலாகாத்தனமுமான கலவையான உணர்வுடன் நின்று கொண்டிருந்தேன். அது மட்டுமில்லாது பாட்டியும் அழத் தொடங்கினார். பாட்டியின் அழுகை என்னை ஒரு தரம் உலுக்கி எடுத்தது. ஒருவேளை இது ஒரு அருமையான காட்சிப் பிழையோ? அவரின் கண்ணீர்க் கண்ணைப் பார்த்து அழுவதாக நினைக்கின்றேனோ? பாட்டியா இன்னொருவருக்காக அழுவது? பாட்டி அழுவது என்பது எனது கற்பனைக்கே எட்டாத நடப்பதற்கு எந்தவித சாத்தியமுமற்ற ஒரு விடயம்.

எல்லோரினதும் கண்ணீர் புளோரிடாவைத் திரும்ப சுய நிலைக்குக் கொண்டு வந்தது. உடனே வீட்டின் தொனி மாறி ஒலிக்கத் தொடங்கியது. அழுது கொண்டிருந்தவர்கள் மகிழ்வாக மாறியிருந்தனர். எல்லோரும் குடித்துக் கொண்டும் சிரித்துக் கொண்டும் பாடிக்கொண்டும் இருந்தனர். எனக்கோ ஒன்றும் புரியாத நிலையாயினும் நிலைமை பிடித்துத்தானிருந்தது. எனது தந்தைக்கும் அவரது நண்பர்களுக்கும் ஒருக்கால் பைத்தியம் பிடித்திருக்குமோ? வேலைக்காரனுக்கு "இரு ஆடுகளை வெட்டு" என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. ஓ! எனது ஆடுகள்... அவ ற்றின் பக்கத்திலேயே நான் நின்றேன். நான் நேசித்த ஆடுகள் கழுத்துக்கள் அறுபட்டு இரத்தம் ஓடிக் கிடந்தன.. அவைகளுக்கு நான் பெயர்கள் கூட வைத்திருந்தேன். இப்போது அழுவது என்னுடைய முறை. நான் வீட்டினுள் ஓடிச் சென்று போர்வையினுள் என்னைப் புதைத்துக்கொண்டேன். இந்தப் பைத்தியகாரக் கும்பலிடமிருந்து தப்பிக்க அதுதான் எனக்கு ஒரே வழி.

அடுத்த நாள் காலையில் புளோரிடா மாமி முன்னறையில் இருந்தார். இன்னும் அவர் சோர்வாகவே காணப்பட்டார்.அவரைச் சிறிது உற்சாகப்படுத்த நானும் அவர் பக்கத்தில் போயிருந்து "நேற்று எல்லோரும் அழுதது உங்களுக்குக் கேட்டதா?" எனக் கேட்டேன், "நான் மிக நன்றாகத் தூங்கியிருக்கவேண்டும் அதனால் ஒன்றுமே எனக்குக் கேட்கவில்லை" எனச் சொன்னார். அவரை நிமிர்ந்து பார்த்தபோது அவரின் கண்களில் கண்ணீர். எனது தந்தை அவரை நகரத்திற்கு அழைத்துச் செல்ல விரும்புவதாகவும் என்னை விட்டுப் பிரிய வேண்டியிருப்பது தனக்கு மன வருத்தமாயிருக்கின்றதென்றும் சொன்னார். இந்தச் செய்தி என்னைப் பயத்திற்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியது. நான் கெஞ்சியும் தயவாகவும் என்னுடன் இருக்கும்படி மாமியைக் கேட்டேன். எனது வேண்டுகோள் அவரை சங்கடப்படுத்தியிருக்க வேண்டும். கொஞ்ச நாட்களுக்குத்தானென அவரென்னைச் சமாதானப் படுத்தினார்.கொஞ்ச நாட்கள் என்பதன் அர்த்தமென்ன? சில நாட்கள்?ஒரு மாதம்? ஒரு வருடம்? சிறுமியான எனக்கு என்னால் விளங்கமுடியாத ஓர் கணக்கு. வழமை போல என் உணர்வுகள் என்னை உலுக்கி எடுக்க ஆடுகளைக் கன்றுகளைத் தேடி ஓடினேன். எனது பயத்தை வெல்ல ஆடு மாடுகளுக்காக நானே இட்டுக்கட்டிய பாட்டைப் பாடிக்கொண்டிருக்க மேய்ச்சல் நிலத்தில் என் கண்ணீர் துளிகள் ஒன்றின்பின் ஒன்றாக உதிர்ந்தன.

நான் வீடு திரும்பிய போது புளோரிடா மாமியுடன் அவர்கள் சென்றுவிட்டார்கள். அதன் பின்பு நான் அவரைக் காணவேயில்லை.

தொடரும்....

குழந்தைப் போராளி - 2

_____________________________________________________________________________

முதலாவது பகுதி:

களவாடப்பட்ட குழந்தைப் பருவம்

____________________________________________________

கடந்த காலத்தின் தடங்களில்

இன்று இருபத்தைந்து வயது நிறைந்த இளம் பெண்ணாகப் பாதுகாப்புடனும் அமைதியுடனும் உலகின் ஒரு பகுதியில் வாழ்வதையும், இன்று இந்தப் புத்தகத்தை எழுதி முடித்திருப்பதையும் என்னால் நம்பவே இயலாமல் இருக்கின்றது. எனது குழந்தைப் பருவத்தைப் பற்றிப் பேசப் போவதிலும், அது பற்றிய நினைவுகளைக் கோர்வைப்படுத்தி மீண்டும் ஒருமுறை அவ் வாழ்க்கையை ஞாபங்களில் மீளக் கட்டி எழுப்புவதிலும் நான் விருப்பமின்றித்தான் ஈடுபடவேண்டியுள்ளது. நினைவுகளைக் கட்டி நிறுத்துவதும் மீளப் பிடிக்குள் கொண்டுவருவதும் சந்தேகமின்றிக் கடினமானதே. நினைவுகள் நாம் நினையாத நேரங்களிலும் எதிர்பாராத வேளைகளிலும் மனதில் எழுவதாலும் வீழ்வதாலும் ஓடும் மின்னலைக் கை கொண்டு பிடிப்பதற்கு இது ஒப்பானது. நினைவுகள் கனவுகளைப் போன்றவை. தமக்கென்ற ஒரு பிரத்தியேக விதியில் இயங்குபவை.

எனது முந்திய வாழ்க்கை ஓர் போராளிச் சிறுமியாகப் பல தடங்களில் சென்றுள்ளது. அவைகளினூடு மீண்டும் நான் கால் பதித்தாக வேண்டும். ஆனால் என்னுள் இருக்கும் சிறுமி அப் பாதையினை மீண்டும் பார்ப்பதற்கு முரண்டு பிடித்தும், அழுதும் தனது எதிர்ப்பைத் தெரிவிக்கின்றாள். அந்த வாழ்க்கையைத் திரும்பச் சந்திக்க அவள் விரும்பவில்லை. அது அவளைப் பொறுத்தவரை ஒரு கெட்ட கனவு.

இன்று கூடத் தாயின்றி வளர வேண்டிய தனிமையெனும் பயம், ஈடு செய்ய முடியாத அந்த இழப்பின் துயர் பல வேளைகளில் என்னைத் துன்புறுத்தும். அன்று நான் மிகச் சிறியவளாக இருந்ததால் தாயின்றி வளர வேண்டிய நிலையின் தாற்ப்பரியத்தை என்னால் அப்போது புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த இழப்பின் துயர் என்னைத் துரத்திக்கொண்டே உள்ளது. துயரும் கையறு நிலையும் என்னைத் தாக்கி நிலைகுலையச் செய்துவிடுவன. பொதுவாக இந்த எண்ணங்களைத் தள்ளிவைக்கவே விரும்புகின்றேன். அல்லது மறந்து விட முயற்சிக்கின்றேன். ஏனெனில் அதுவே இலகுவானதாக இருக்கின்றது.

ஒரு சிறுமியாக எனது கனவுகள் என்னாவாக இருக்கும்? மற்றைய சிறுமியரின் கனவு எதுவாகவிருக்கும்? அன்பும், அரவணைப்புமென்றுதான் நான் நம்புகின்றேன். எனது தந்தையின் கனவோ அதிகாரமும் பெரிய மனிதனாவதும். ஒரு வெறி பிடித்த அரசியல்வாதியின் கனவது. தனது அதிகாரத்திற்கும் புகழுக்குமிடையில் எதுவுமே தடையாக இருக்ககூடாதென்ற இவர்களின் கனவுகளின் கைதியாக நான் இருந்தேன். அடி உதைகளிலிருந்தும் எல்லாப் பிழைகளினதும் காரணி நான் தானென்ற தவறான வாதத்திலிருந்தும் நான் தப்பியோடி விளையாடிய மற்றைய விளையாட்டுத்தான் ஆயுதமேந்திய விளையாட்டு. காலம் இவர்களின் கனவால் என்னிடமிருந்து நானே தப்பி ஓடவேண்டிய நிலைக்கு என்னைத் தள்ளியது. இவர்களின் கனவு எனது வாழ்வின் அதிபயங்கரக் கனவாக மாறியது.

இன்று எனது கனவென்ன? எல்லாவற்றிலும் முதன்மையாக எனது வாழ்க்கைப் பாதையை நானே தேர்ந்த்தெடுக்கும் சுதந்திரம். அச்சத்திலிருந்து விடுதலை, வாழ்க்கைக்கும் நேசத்திற்கும் தடைவிதிக்காத சுதந்திரம்.. இன்று இந்தக் கனவினை ஈட்ட எவ்வளவு தூரம் பயணித்துள்ளேன் என்பதை உணருகிறேன். எனது வாழ்வை எனது கைகளில் எடுத்துக்கொள்ள என்னால் முடிகிறது. ஆனாலும் எனது கடந்த காலத்தை எண்ணும் போது பல தடவைகள் ஓர் இருண்ட ஆழம் தெரியாத படுகுழியில் விழுந்து விடுகின்றேன். என் கடந்த கால வாழ்வின் ஞாபகங்களிற் பெரும்பாலானவை பயங்கரமானவை. அவைகளிலிருந்து தப்புவது கடினம். அவை எனது ஆன்மாவை வருத்துவதும், நான் எனது தாயைப் பிரிந்த உணர்வும் என்னை விட்டு என்றும் அகலாதவை. காயங்கள் மிக ஆழமானவை. கடந்த காலம் பல தழும்புகளை விட்டுச் சென்றுள்ளதால் நினைவுகளைக் கழுவி விட என்னால் முடியாதிருக்கிறது.

தொடரும்..

குழந்தைப் போராளி - 1

ஒரு சிறிய முன்னுரை... - தியோ.J


When I was a kid with a gun I felt big, I felt powerful
China Keitetsi, ex-child soldier

"என் மூளையின் செல்களில் ரீங்காரமிட்டு அதிர வைக்கும் 'இடம்! வலம்! இடம்! வலம்!' அதிகாரக் குரல்கள். பையன்களும் சிறுமிகளும் பக்கம் பக்கமாக நின்று பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தோம். இது என் வாழ்நாளில் நான் இதுவரை கேட்டோ பார்த்தோயிராத ஒன்று. அரச படையினர் மிகவும் வேறுபட்டவவர்கள், எங்களிலும் வயது கூடியவர்கள். ஆச்சரியங்களின் மத்தியில், நான் இங்கு என்ன செய்கிறேன்? எனறு நினைத்துப் பார்க்க முடியாமல் இருந்தது."

China Keitetsi ஒன்பது வயதேயான சிறுமி. உகண்டாவின் Yoweri Museveni யின் National Resistance Army -NRA- யில் (தற்பொழுது UGANDA PEOPLES DEFENCE FORCE -UPDF-என்னும் பெயரில் அறியப்படுகிறது). வலுக்கட்டாயமாகச் சேர்க்கப்பட்ட குழந்தைகளில் ஒருத்தி. கைகளில் துப்பாக்கி திணிக்கப்பட்டு, உடல்களில் குண்டுகள் கட்டப்பட்டுப் போர்க்களங்களில் முன்தள்ளப்பட்டு உலகெங்கும் பலியாகிக் கொண்டிருக்கும் இலட்சக் கணக்கான குழந்தைப் போராளிகளில் இவளும் ஒருத்தியாகப் பத்துக் கொடிய ஆண்டுகள் Yoweri Museveniயின் படையில் தனது குழந்தைப் பருவத்தைத் தொலைத்தவள்.

இவர், தனது இருபத்தைந்தாவது வயதில் தனது வாழ்வில் குழந்தைப் பருவம் தொலைந்து போனதை உணர்சிகளின் விளிம்பிலிருந்து, தனது நீண்ட வருடங்களின் மெளனத்தை உடைத்துத் தன்வரலாறாக எழுதியிருக்கிறார்.

சய்னா வேண்டப்படாத குழந்தையாக 1976ம் ஆண்டு உகண்டாவில் பிறந்தார். இவரின் தாயார் பெண் குழந்தை பெற்றார் என்றவொரு காரணத்துக்காகவே தகப்பனால் துரத்தப்பட்டார்; அவலங்கள் அவர் வாழ்கையாயின. மிகவும் கேவலமான முறையில் அவர் குடும்பத்தினரால் வதைக்கப்பட்டு வேலைக்காரியாக நடத்தப்பட்டார். எட்டாவது வயதில் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிர்பந்ததிற்க்கு சய்னா உள்ளாக்கப்பட்டார். இக்காலகட்டத்தில் உகண்டா அதிபர் Milton Oboteக்கு எதிராகப் போராடிக்கொண்டிருந்த NRA யில் சய்னா கட்டாயமாகச் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

"எனது ஒன்தாவது வயதில் UZI என்ற முதலாவது துப்பாக்கியை ஏந்தி ஆயுதப் போராளியானேன், கொலைகாரியானேன்" என்கிறார் சய்னா.

"போர்க்களங்களில் நாங்கள் எப்போதும் முன்வரிசையில் பலிக்கடாகளாக அனுப்பப்பட்டோம். என்னையொத்த வயதுடைய -ஆகக் குறைந்த வயது ஆறு- போராளிகளின் மத்தியில் ஒரு போட்டி மனோபாவமே வந்துவிட்டது. முன்வரிசையில் நின்று மிகவும் கெட்டித்தனமாகக் கொலை செய்பவர்கள், அச்சமில்லாதவர்கள், கைதிகளாக பிடிபட்டவர்களைக் கொடூரமாகச் சித்திரவதை செய்யத் தெரிந்தவர்கள் பாராட்டப்பட்டார்கள். பயந்து பின் வாங்கியவர்கள் பரிகசிக்கப்பட்டார்கள்.
எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை, எங்கள் பொறுப்பாளர்கள், உயரதிகாரிகள் எங்கள் தோள் தொட்டு பாராட்டுவதற்காக அவர்கள் எங்களைப் பார்த்துப் புன்னகைப்பதற்காக மேலும் மேலும் கொடியமுறைகளில் கொலைகளைச் செய்தோம்."

"எங்கள் அம்மாக்களை எங்களிடமிருந்து பிரித்துக்கொண்டு, கனமான துப்பாக்கிகளை எங்களுக்குக் கொடுத்தார்கள்.

எங்கள் துப்பாக்கிகள் தொலைக்கப் படுவதிலும் பார்க்க எங்கள் மரணங்களே விரும்பப்பட்டன. நாங்களும் துப்பாக்கிகளும் ஓருயிர் ஈருடலானோம். இரவுகளில் நானும் சக குழந்தைப் போராளிகளும் எங்களது உயர் அதிகாரிகளால் வன் புணர்சிக்குள்ளாக்கப் பட்டோம். அவர்கள் எங்களை Random முறையில் தெரிவு செய்து கொண்டார்கள்." என்று சய்னாவின் குழந்தைப் பருவ அவலங்கள் சொற்களாகப் புத்தகம் முழுவதும் பரவிப் பயமுறுத்துகின்றன.


"அவர்கள் எங்களுக்கு ஆயுதங்கள் வழங்கினார்கள், அவர்களது போரை எங்கள் மேற் திணித்தார்கள், அவர்கள் எங்களை எதிர்க்க, கொல்ல, சித்திரவதை செய்யப் பழக்கினார்கள், எங்களைத் தங்கள் படுக்கைகளாக்கினார்கள்."


1986 ம் ஆண்டு Yoweri Museveni யின் வெற்றிக்குப் பின்னர் சய்னா உயரதிகாரிகளின் மெய்க்காப்பளராகப் பதவி உயர்த்தப்பட்டார். பின்னர் சில காலங்கள் இராணுவப் பொலிஸ் அதிகாரியாகப் பணிபுரிந்தார். இன்னமும் பாலியல் அத்துமீறல்ககளும், பலாத்காரங்களும் அவரது உயரதிகாரிகளால் தொடர்ந்த வண்ணமே இருந்தன. இக் காலகட்டத்தில் தனது பதினைந்தாவது வயதில் முதல் முறையாகத் தன்னை மதித்து அன்பு செய்யும் உயரதிகாரி கேணல்.Moses Dragoவுக்குக் கர்ப்பபமாகிச் சய்னா முதற் குழந்தையைப் பெற்றெடுக்கிறார். சில காலங்களிலேயே கவலைக்கிடமான முறையில் கேணல்.Moses Drago மரணத்தைத் தழுவிக் கொள்கிறார்.

"எனக்குப் பதினைந்து வயதான போது, என் உடம்பை எத்தனை உயரதிகாரிகள் அதுவரையில் அனுபவித்துக் குதறிக் குலைத்திருந்தார்கள் என்று எனக்கு எண்ணிக்கை தெரியவில்லை" எனும் சய்னா தனது பதினெட்டாவதுவது வயதில் மீண்டும் கருவுற்றார். இந்த நிலையில் ஒரு உயரதிகாரியின் காம இச்சைக்கு இணங்க மறுத்தாற்காகச் சய்னா மீது அந்த அதிகாரியால் பல பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. 'எதிரிகளுக்கு ஆயுதம் விற்றார்' எனும் மிகக் கொடூரமான குற்றச்சாட்டினால் சய்னா மிகவும் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டார்.

போரினாலும், கொலைகளாலும், பாலியல் வன்முறைகளாலும் உளரீதியாகவும் உடல்ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த சய்னா தனது மூன்றே வயதான மகனை ஒரு குடும்பத்தின் பொறுப்பில் விட்டுவிட்டு, வயிற்றில் குழந்தையுடன் உகண்டாவை விட்டு வெளியேற முடிவெடுக்கிறார்.

மூன்று கிழமைகள் நீண்ட பஸ் பயணத்தில் கென்யா- தன்சானியா- ஸாம்பியா- சிம்பாவே ஊடாகச் சய்னா தென் ஆபிரிக்காவை வந்தடைகிறார். மன அதிர்சிகளில் இருந்து விடுதலை பெற சிகிச்சைக்குள்ளாக்கப்படுகிறார். இவ் வேளையில் அவர் தனது இரண்டாவது குழந்தையும் பெற்றெடுக்கிறார். சய்னாவின் உடல் மனநிலை கருதி குழந்தை ஒரு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டு வளர்க்கப் படுகிறது. தனது இரண்டாவது குழந்தை பற்றிச் சய்னா கூறும் போது "Ashleyன் தகப்பன் யாரெ ன்பது எனக்குத் தெரியாது" என்கிறார்.


நான்கு வருடங்கள் தென் ஆபிரிக்காவில் கழிகிறது. இங்கிருந்து அய்க்கிய நாடுகளின் அகதிகளுக்கான ஆணையத்தின் (UNHCR) தென் ஆபிரிக்க அலுவலகத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தி அமெரிக்காவில் தஞ்சம் புகுவதே இவரது எண்ணமாக இருந்தது. இக் காலகட்டத்தில் சய்னா உகண்டாவின் இரகசியப் புலனாய்வுப் பிரிவினரால் பின் தொடரப்பட்டுக் கைது செய்யப்பட்டார். ஆறு மாதகாலம் தண்டனை முகாமில் அடைக்கப்பட்டுத் துன்புறுத்தப்பட்டார். UNHCRன் தலையீட்டின் பேரில், நீண்ட போராட்டங்களின் பின், தனது மகனை உகண்டாவிலும், மகளைத் தென் ஆபிரிக்காவிலும் விட்ட நிலையில், 1999 ம் ஆண்டு உடலும் மனமும் முற்றாக பாதிக்கப் பட்ட நிலையில், சய்னா, அய்க்கிய நாடுகளின் அகதிகளுக்கான ஆணையத்தால் டென்மார்க்குக்கு அழைத்து வரப்பட்டார்


"முதன் முறையாகச் சுதந்திரக் காற்றை சுவாசித்தேன்" என்கிறார் சய்னா. "வந்த ஆரம்ப காலங்களில், ஏன் நீண்ட காலங்களாக "NO" என்னும் சொல்லை நான் சொல்வதேயில்லை. எங்கே நான் 'இல்லை', 'மாட்டேன்' என்று சொன்னால் முன்னர் போல மீண்டும் தண்டனைக்குள்ளாக்கப் படுவேனோ என்று பயந்ததினால் "YES SIR" என்றே எப்போதும் சொல்லி வந்தேன்."

"இங்கு என்னை ஆதரித்து வழி நடத்திய மனநல மருத்துவரினதும், சமூக சேவகர்களினதும், என்னைப் பாதுகாத்த இரண்டு டென்மார்க் குடும்பத்தினரினதும் உதவியினாலேயே நான் கொஞ்சம் கொஞ்சமாகச் சுதந்திரமாக வாழப்பழகிக் கொண்டேன்.ஆனால் எனது நீண்ட கொடிய இறந்த காலங்களில் இருந்து முற்றாக விலகிவிட முடியவில்லை. கண்களை மூடினால் கொலைகள், சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட அந்த மனிதர்களின் உயிர்ப் பிச்சை கேட்கும் கண்கள், என்னை வதைத்துக் கொண்டேயிருந்தன."

"எப்பொழுதும் பயந்தவளாக பயங்கரக் கனவுகளிலிருந்து விழித்தெழுந்தவளாக எனது இறந்த காலங்களிலிருந்து விலக இயலாமல் மிகவும் சிரமப்பட்டேன்.
எனது மனநல மருத்துவரான Birgitte Kundsen சிகிச்சையின் ஒரு பகுதியாக "உனக்கு உண்டான வலிகளை, உனது உணர்வுகளை, உன் அச்சங்களை, உன் மன ஓட்டங்களையெல்லாம் எழுது!" என்று கேட்டுக் கொண்டதன் பெயரில்- சிகிச்சைக்காக- நான் எழுதத் தொடங்கினேன். ஒவ்வொரு முறை எழுதும் போதும் என் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தோடும். என் கண்ணீர்த்துளிகள் பட்டுத் தெறிக்காத சொற்களேயில்லை" என்கிறார் சய்னா. "150 பக்கங்கள் எழுதிய நிலையில் என் மருத்துவரிடம் காட்டினேன். அவர் 'நீ Auto Biography எழுதிக் கொண்டிருக்கிறாய்' என்றார்."

சய்னாவின் இந்தத் தன்வரலாற்றை, அவர் தென் ஆபிரிக்காவில் வாழ்ந்த சொற்ப காலங்களில் பயின்ற ஆங்கில அறிவைக் கொண்டு, தனது சொந்த சொற்றொடர்களின் மூலம், அன்றாட மொழிவழக்கு உத்தியின் மூலம் நூலாகக் கொணர்ந்திருக்கிறார்.


இந் நூலை முதலில் டொச் மொழியில்
Sie nahmen mir die Mutter und gaben mir ein Gewehr எனும் தலைப்பில் வெளியிட்டார்கள். பின்னர் டெனிஷ் மொழியில் Mit liv som barnesoldati Uganda, டச் மொழியில் Ik was een kindsoldaat, ஆங்கிலத்தில் Child Soldier, செக் மொழியில் Musela jsem zabijet, பிரஞ்சில் La petite fille à la kalashnikov : Ma vie d'enfant-soldat, ஸ்பானிஷில் Mi Vida De Nina Soldado, என்ற தலைப்புகளில் மொழியாக்கப்பட்டு இப் புத்தகம் வெளிவந்துள்ளது. Miramax Pictures இப் பிரதியைத் தற்போது திரைப்படமாக்கிக் கொண்டிருக்கின்றனர்.


இன்று உலகெங்கும் 300 000 க்கும் அதிகமான குழந்தைப் போராளிகள் போர்முனைகளில் முன் தள்ளப்பட்டும் பாலியல் வதைகளுக்கு உள்ளாக்கப்பட்டும் இயல்பான குழந்தைத்தனங்கள் சிதைக்கப்பட்டும், ஏன்? எதற்கு? யாருக்கு? என்று தெரியாமலேயே சிதைந்து போகிறார்கள். ஆபிரிக்காவில் மட்டும் 120 000 குழந்தைப் போராளிகள் இருக்கிறார்கள்.

சய்னா இவர்களின் மறுவாழ்வுக்காகப் பலமாகக் குரல் கொடுத்து வருகிறார். ருவண்டாவில் வாழ்க்கையைத் தொலைத்த முன்னாள் குழந்தைப் போராளிகளுக்காகவும், ஆபிரிக்காவில் போரினால் பாதிக்கப் பட்டவர்களுக்காகவும் சய்னா மறுவாழ்வு இல்லமொன்றை UNICEF, Amnesty International, Terre Des Hommes, OXFAM, Coalition To Stop The Use Of Child Soldiers, IANSA. ஆகிய அமைப்புகளின் உதவியோடு நடாத்திவருகிறார். "நான் ஒரு பத்துப் பேருக்கு உதவி செய்தால் அவர்கள் இன்னமும் பலபேருக்கு உதவியாக இருப்பார்கள்" எனக் கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறார்.

சய்னாவின் தன்வரலாற்று நூலைத் தோழர் தேவாசுவிஸ் டொச்சிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார். இம் மொழிபெயர்ப்பு, தொடராகச் "சத்தியக் கடதாசி"யில் வெளியாகிறது.

24.05.06