குழந்தைப் போராளி - 45



குடும்பச் சங்கிலி

சில நாட்களின் பின் அம்மா என்னைக் கம்பாலாவிற்குத் தனது சகோதரனொருவனிடம் அழைத்துச் சென்றார். அம்மாவின் சகோதரனுக்கு இருபத்தைந்து வயதிருக்கலாம். அவரின் பெயர் கராவெல். அவர் 21வது படையணியில் ஓர் அதிகாரியாகக் கடமையாற்றினார். உகண்டாவின் சர்வதேச விமான நிலையம் 'என்டபே'யின் பாதுகாப்புப் பணியில் 21வது படையணி ஈடுபடுத்தப்பட்டிருந்தது. உடனடியாகவே நானும் மாமாவும் ஒருவருடன் ஒருவர் ஒத்துப் போனோம். நான் மாமாவுடன் தங்கியிருப்பதைச் சொந்த வீட்டிலிருப்பது போலச் சுதந்திரமாக உணர்ந்தேன். என்னைத் தன்னுடன் வைத்திருப்பதில் மாமாவுக்கும் மகிழ்ச்சி தான் என்பதையும் தெரிந்துகொண்டேன். அவர் எல்லாவகையிலும் என்னை மரியாதையாகவே நடத்தினார்.

எனது மாமன் ஒரு திறமையான தலைவர், மிகுந்த மதிநுட்பமுள்ளவர், மிகவும் கவர்ச்சியான தோற்றம் கொண்டவர். குமரிகள் அவர் மீது படையெடுத்தனர். அவரது வாழ்கை இனிமையாகவே கழிந்தது. வாழ்க்கையைப் பற்றிய கவலையே அவரிடமில்லை. எங்கள் குடும்பத்தில் யாரிடம்தான் அந்தக் கவலையிருந்தது? இவரும் அவர்களைப் போலவே கையில் கிடைத்ததையெல்லாம் செலவழித்துக்கொண்டிருந்தார்.

ஒருநாள் நானும் மாமாவும் வீட்டின் முன்னே உட்கார்ந்து கதைகள் பேசிக்கொண்டிருந்தோம். நான் அவரது சுருண்ட தலைமுடிகளை அளைந்து விளையாடிக்கொண்டிருந்தேன். திடீரென ஓர் இளம்பெண் வேகமாக எங்கள் முன் வந்து நின்று 'இப்போது இந்தப் பெட்டை நாயும் உனது வைப்பாட்டியாகிவிட்டாளா?' எனப் பைத்தியம் பிடித்தவள் போல மாமாவைப் பார்த்துக் கத்தினாள். மாமா எந்தவிதத் தயக்கமுமின்றித் தனது பிஸ்டலை உருவி அந்தப் பெண்ணின் மார்பில் சுட்டார். 'இவள் எனது மகள்' என இரத்த வெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்த அந்தப் பெண்ணிடம் என்னைக் காட்டிச் சொன்னார். அம்புலன்ஸ் வந்து காயப்பட்ட பெண்னை எடுத்துச் சென்றது. நல்லவேளையாகக் கடுங் காயமடைந்த பெண் உயிர் தப்பினாள். கராவெல்லின் மீது எந்தக் குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை. இதிலிருந்தே இராணுவத்தினரின் வானளாவிய அதிகாரத்தைத் தெரிந்து கொள்ளலாம்.யாரிடம் அதிகாரமுள்ளதோ அவர்கள் மற்றவர்களின் வாழ்கையை நிர்ணயிக்கின்றனர்.

இந்தச் சம்பவத்தின் பின் கராவெல்லின் நடத்தை வித்தியாசப்படத் தொடங்கியது. உதாரணமாக நான் இராணுவச் சீருடை அணிவதில் அவருக்கு விருப்பமில்லை எனப் பல தடவைகள் சொன்னார். அது என்னைக் குழப்பியது. இவர் என்னிடமிருந்து எதை எதிர்பார்க்கிறார்? வேறெந்த உடையைத்தான் நான் அணிந்துகொள்வது? என்னால் நிறைவேற்ற முடியாத வேண்டுகோள்களை அவர் என்னிடம் வைக்கின்றார். அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது போல நான் சாதாரண உடைகளை அணிவதை முற்றாகவே கைவிட்டேன். இப்படியே சில நாட்கள் சென்றன. ஒருநாள் வேலை முடிந்து வந்த அவர் என்னை இராணுவ உடைகளைக் களைந்துவிட்டு வேறு உடைகளை அணியச் சொன்னார். எனது சகோதரி மார்ஜி பொன்பொன்ஸ் என்னை அழைத்துச் செல்வதற்காக அன்று மாலை அங்கே வரவிருப்பதாக மாமா சொன்னார். மார்ஜி என்னை மறுபடியும் பாடசாலையில் சேர்த்துவிட முயற்சி செய்வதாகத் தெரிந்தது. இது என்னை மிகவும் வருத்தமடையச் செய்தது. எனது சகோதரிக்குப் போதுமானளவுக்குப் பிரச்சினைகள் ஏற்கனவேயுள்ளன. அத்தோடு நானும் சேர்ந்து கொண்டால் இருவரது பிரச்சினைகளையும் நிச்சயமாக அவளால் சமாளிக்க முடியாது. ஆனால் மார்ஜி சொன்னது போலவே அன்று பின்னேரம் வந்தாள். கராவெல் என்னை எனது பொருட்களை எடுத்துக் கொள்ளும்படி சொன்னார். எனது உடுப்புக்களுக்கிடையில் இராணுவச் சீருடை ஒன்றையும் மறக்காமல் கடத்திச் சென்றேன்.

எனது கணிப்பீடுகள்கள் சரியாகவேயிருந்தன. அவளது வீட்டில் குளியலறை இல்லை. கழிப்பறையும் வீட்டிற்கு வெளியேதான் இருந்தது. இரவில் வரவேற்பறைச் சோபாவில் தான் என் படுக்கை. அது போதாதென்று வீட்டுக்காரி வேறு எனது வாழ்கையை இன்னும் துன்பமாக்கிக் கொண்டிருந்தாள். வயதிலும் உருவத்திலும் கிட்டத்தட்ட என் பாட்டியைப் போலவேயிருந்த அவள் சாதாரண தொனியில் என்றுமே கதைத்ததில்லை. இரவு பகலாகக் கத்திக்கொண்டும் குத்தி முறிந்துகொண்டுமிருப்பாள். தன்னை ஓர் அரசியைப் போல நடத்த வேண்டும் என்பது அவளது கட்சி. அவள் தனது தர்பாரில் இழிவில் உழலும் அடிமை என்ற பாத்திரத்தையே எனக்கு வழங்கியிருந்தாள். அந்த இம்சை அரசி நான் தன்னை இடையறாது மகிமைப் படுத்திக்கொண்டேயிருக்க வேண்டுமென்று ஆசைப்பட்டாள். நாளடைவில் அவளை நான் முழுமையாக வெறுக்கத் தொடங்கினேன்.

பாடசாலையிலும் எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. எனது சகோதரி கம்பாலாவின் அரச பாடசாலைகளினது எல்லாப் படிகளிலும் ஏறி இறங்கிவிட்டாள். எல்லாப் பாடசாலைகளிலும் ஒரே பதில்; காத்திருக்க வேண்டியவர்கள் பட்டியலில் எனது பெயர் பதியப்பட்டுள்ளது. இவ்வாறாக ஒரு மாதம் ஓடிப்போய் விட்டது. அதுவே எனக்கு ஒரு வருடம் போலத் தெரிந்தது. நேரமோ சவ்வு மிட்டாய் போலத் தொங்கிக்கொண்டு கிடந்தது. என்னால் வீட்டுக்குள் தனிமை நெருப்பில் அவிய முடியவில்லை. நான் இப்போது ஏதாவதொரு வழியைக் கண்டுபிடித்தாக வேண்டும். நான் கம்பாலாவிற்கு அருகாமையிலிருக்கும் இராணுவத் தளங்களின் விலாசங்களை இரகசியமாகத் தேடத் தொடங்கினேன். எனது சகோதரி என்னை ஒரு பாடசாலையில் சேர்த்துவிடத் தன்னாலான மட்டும் முயன்று கொண்டுதான் இருக்கிறாள். ஆனால் நான் பொறுமையை இழக்கத் தொடங்கி விட்டேன்.

ஒருநாள் காலையில் மார்ஜி வேலைக்குப் புறப்பட்டுச் சென்றதன் பின்னாக நான் குளிக்கத் தொடங்கினேன். குளிக்கும் போது என் கால்களிடையே இரத்தம் பெருகுவதைக் கண்டேன். ஆனால் எனது உடலில் வலியிருக்கவில்லை. நேற்று என்ன நடந்ததென்று தலையை உடைத்துக்கொண்டு யோசித்தேன். என்னால் எதையுமே ஞாபகத்திற்குக் கொண்டுவர முடியவில்லை. மண்டையைக் குடைந்து குடைந்து யோசித்துப் பார்த்தேன், எதுவுமே பிடிபடவில்லை. நேரம் செல்லச் செல்ல என்னைப் பயம் பிடிக்கத் தொடங்கியது. வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டுமென நினைத்தேன். ஆனால் வெட்கம் என்னைத் தடுத்தது. அத்தோடு எனக்கு உடலில் வலியுமில்லை. குற்ற உணர்வுடன் என்னைக் காட்டிக் கொடுக்கக் கூடிய தடயங்களைத் தோட்டத்தில் குழி தோண்டிப் புதைத்துவிட்டு மீண்டும் படுத்துத் தூங்கிவிட்டேன். நான் தூக்கம் கலைந்து எழுந்து பார்த்தபோது நான் படுத்திருந்த சோபாவில் இரத்தம் பெருகிக் கிடந்தது. நான் அச்சத்தால் உறைந்து போனேன். எனது சகோதரி என்னைக் கொல்லப் போகிறாள். நான் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டைவிட்டு ஓடிப் போனேன். பிரச்சினைகள் என் தலைக்கு மேற் போனால் நான் செய்வது அது தானே.

குழந்தைப் போராளி - 44


எதுவுமே இலவசமல்ல

ரொனால்டின் கண்களில் பட்டுவிடாமலிருக்க நாங்கள் காட்டு வழியூடாக நடந்து சென்றோம். சிறிது தூரம் தான் சென்றிருப்போம், எனக்கு வழித்துணையாய் வந்தவனின் நடவடிக்கைகளில் வித்தியாசங்கள் தோன்றுவதை நான் கவனித்தேன். தயக்கத்துடன் நான் கால்களை இழுத்துக்கொண்டு நடந்தேன். அவன் என்னுடன் பேசிய முறையும் என் சந்தேகத்தை வலுவாக்கியது. இவன் எனக்காக இரக்கப்படுபவனல்ல. காட்டு வழியில் பாதியை நாங்கள் கடந்திருந்த போது அவன் எனது கையைப் பிடித்து நிறுத்தி 'இப்போது இங்கேயே நீ என்னுடன் படுக்க வேண்டும்! நீ சம்மதிக்காவிட்டால் உன்னைப் படுக்க வைக்கும் வழி எனக்குத் தெரியும்' என்று மிரட்டினான். தான் கேட்டதைச் "செலுத்துவது" முறையானதும் மலிவானதும் என்பது அவனது நியாயம். அவனிடமிருந்து தப்பி ஓடுவதற்கான வழி ஏதாவது இருக்கிறதா எனப் பார்த்தேன். இருண்ட வனம் தனது இரகசியங்களைத் தனக்குள்ளேயே புதைத்து வைத்துக்கொண்டிருக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஓரிரு சூரியக் கதிர்கள்தான் இருண்ட காட்டுக்குள் இலைகளை ஊடறுத்து நெளிந்துகொண்டிருந்தன. எந்த அலறலும் அடுத்த மரம் வரைதான் கேட்கும். யாருமே எனது அலறலைக் கேட்டு வரப் போவதில்லை, யாருமென்னைக் காப்பாற்றப் போவதில்லை.

எனது முந்தைய இழிவுகளை எதுவித எதிர்ப்புகளும் காட்டாமல் நான் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை. ஆனால் இப்போது எதிர்த்துப் போராடுவதென்று முடிவெடுத்துக் கொண்டேன். எனது வாழ்விற்காக நான் போராடப் போகிறேன். நானும் அவனும் எதிரெதிராக ஒருவர் முகத்தை ஒருவர் உற்றுப் பார்த்தவாறே நின்றுகொண்டிருந்தோம். பயிற்சி இராணுவத்தினர் தங்கள் பயிற்சிக் காலம் முடியும் வரை எந்தவிதமான பாலியல் தொர்புகளும் வைத்துக்கொள்ளக் கூடாது என்றொரு 'விதி' இருப்பது எனக்குத் தெரியும். நான் என் குரலில் ஒரு நெகிழ்ச்சியை வரவழைத்துக்கொண்டு அவனிடம் 'நீ கேட்பதைக் கொடுப்பதற்கு எனக்கும் விருப்பம்தான் ஆனால் அதன் பின்விளைவுகளைப் பற்றியும் நீ யோசித்துப் பார்க்க வேண்டும். எனக்குச் சிபிலிஸ் நோயுண்டு. என்னுடன் பாலியல் தொடர்பு வைத்துக் கொண்டால் அது உன்னையும் தொற்றிக்கொள்ளும்' எனச் சொன்னேன். உடனேயே அவனின் பேச்சும் நடவடிக்கைகளும் தலைகீழாக மாறின. அவன் எனது வெளிப்படையான பேச்சிற்கு நன்றி கூடச் சொன்னான். மெல்ல மெல்ல என் மனம் பிரச்சினையிலிருந்து விடுபட்டு இலேசானது. அவன் என்னை ரயில் நிலையத்தில் விட்டுச் சென்ற பின்புதான் என்னை நடுக்கம் பிடிக்கத் தொடங்கியது.

அம்மாவின் வீடு நோக்கிச் செல்லும் வழி முழுவதும் நான் அழுதுகொண்டும் சிரித்துக்கொண்டும் பயணித்தேன். அந்த இரவில் எனது அம்மாவின் அரவணைப்பில் அவரது மார்பு மீது தலைவைத்து ஒரு கைக் குழந்தையைப் போலத் தூங்கினேன். அது என்னவொரு நிம்மதியான உணர்வு! என்னவொரு உன்னதமான தருணம்! நான் ஏன் வீடு திரும்பினேன் என்று அம்மாக்கு நான் எதுவுமே சொல்லவில்லை. ஏனெனில் அம்மாவே தன்னைச் சுற்றியுள்ள பிரச்சினைகளுக்குள் அமிழ்ந்து கிடக்கையில் நான் எனது சுமைகளையும் உடனடியாகவே அவரின் தலையில் ஏற்றி வைக்க விரும்பவில்லை.தவிரவும் பிரிவதும் சேர்வதும் மறுபடியும் பிரிவதுமாய் நாங்கள் வாழ்ந்துகொண்டிருந்த பரிதாப வாழ்க்கை உண்மையிலேயே அம்மாவையும் என்னையும் மனதால் முழுமையாக நெருங்க விடவில்லை, ஒரு நெருக்கமான உறவை எங்களால் வளர்க்க முடியவில்லை.