குழந்தைப் போராளி - 43



அடுப்பிலிருந்து நெருப்புக்குள்

ம்பாலா வந்து சேர்ந்தவுடனேயே அம்மாவைத் தேடிப் போனேன். ஓர் அதி பயங்கரமான ஆபத்து வளையத்திலிருந்து நான் மீண்டு வந்துவிட்டாலும் அந்தப் பயங்கரத்தின் வலியும் வடுவும் இன்னும் என்னுடனேயேயிருந்தன. என் மனம் வேதனையால் குமைந்துகொண்டிருந்தது. என்னைக் கண்டதுமே அம்மா உடைந்துபோய் அழத்தொடங்கினார். அம்மா அழுவதைக் கண்டதும் நான் அதுவரை பொத்தி வைத்திருந்த வலியும் ஆத்திரமும் கழிவிரக்கமும் வெறுப்பும் வெடித்து என்னை உலுக்கி விட்டன. நான் அலறிக்கொண்டே அங்குமிங்குமாகக் குதிக்கத் தொடங்கினேன். என் கால்களால் தொம் தொம்மென நிலத்தை உதைத்துக்கொண்டே என் கைகளால் என் முகத்தில் ஓங்கி ஓங்கி அறைந்துகொண்டேன். அம்மா அழுவது எனக்குப் பிடிக்கவில்லை. அதுவும் அவர் எனக்காக அழுவது அறவே பிடிக்கவில்லை. எனது நிலை அம்மாவை அதிர்ச்சியில் உறைய வைத்தது. எங்கே அம்மா மூர்சையாகி விழுந்துவிடுவாரோ எனப் பயந்துபோய் என்னையே நான் தணித்துக்கொண்டேன். ஆனாலும் என் வலி இலேசில் தணிவதாயில்லை.

நான் அம்மாவின் வீட்டில் சிதைக்கப்பட்ட ஆன்மாவுடன் கெட்ட கனவுகளுக்குள் நொறுங்கிப்போய்க் கிடந்தேன். ஒரு மாதத்தின் பின்பு நான் மெல்ல மெல்லப் பழைய நிலைக்குத் திரும்பினேன். கோட்பிரியின் இழி செயல்கள் என் மனதில் ஏற்படுத்தியிருந்த காயங்கள் மெதுவாக ஆறி வந்தன. கெட்ட கனவுகளும் இப்போது அதிகமாக என்னை வருத்துவதில்லை. காலம் தான் மனக் காயங்கஙளை ஆற்றும் மாமருந்து என்பார்கள். என் முன்னே நீண்டு கிடந்த இருள் வெளியினுள் அம்மா ஒரு தீக்குச்சியைக் கிழித்துப்போட்டார்.

அம்மா தனக்கு ரொனால்ட் என்றொரு இராணுவ அதிகாரியைத் தெரியுமென்றார். அந்த அதிகாரி ஏதாவது ஒரு வழியில் எனக்கு உதவக்கூடும் என அம்மா நம்பினார். ஒரு மாலை நேரத்தில் அந்த இராணுவ அதிகாரியைப் பார்க்க நான் அம்மாவுடன் சென்றிருந்தேன். நானும் அம்மாவும் அதிகாரி ரொனால்டிற்காகக் காத்திருந்தபோது ரொனால்டின் மெய்க்காப்பாளனாயிருந்த ஒன்பது வயதேயான சிறுவன் குசைன் ரொனால்டின் வீட்டின் முன்னே அங்குமிங்கும் நடை போட்டுக்கொண்டிருந்தான். குசைன் தன் பிஞ்சுக் கால்களால் சிறு அடிக ளாக எடுத்து வைத்தாலும் மிக விறைப்பாக எங்கள் முன்னே நடந்து சென்றான். அவனது இராணுவ நடை ஒரு களம் கண்ட போராளியின் நடையை ஒத்திருந்தது. ரொனால்ட் தான் விரைவிலேயே தனது படைப்பிரிவுக்குத் திரும்பவிருப்பதாகவும் அங்கே 'Kabamba Training Wing'ல் என்னைத் தன்னால் சேர்த்துவிட முடியுமென்றும் சொன்னார்.

சொன்னபடியே ஒரு வியாழக்கிழமை ரொனால்டும் அவரது மெய்க்காப்பாளன் குசைனும் அவரது மனைவி யுஸ்ரினும் எங்களது வீட்டிற்கு வந்து என்னை அழைத்துச் சென்றனர். முதலில் பஸ் பயணம் அதன்பின் இரயில் பயணமென பாதி உகண்டாவைச் சுற்றியதன் பின்பாக நாங்கள் கபாம்பாவை வந்தடைந்தோம்.

முதலாவது வாரம் எல்லாம் சுமுகமாகவே இருந்தது. ஒவ்வொரு நாள் காலையிலும் படுக்கையில் மூத்திரம் பெய்ததற்காக ரொனால்டின் சிறிய மெய்காப்பாளன் யுஸ்ரினிடம் அடி வாங்குவான். நித்திரையில் மூத்திரம் போனதற்காக ஒரு முறை புருசனும் பெண்சாதியுமாகச் சேர்ந்து குசைனை உதைத்தார்கள். ஓர் உறுதியான குழந்தைப் போராளி சாதாரண பெண்ணால் தண்டிக்கப்படுவதைக் காண எனக்கு வேதனையாயிருந்தது. குசைனில் நான் என்னையே கண்டேன். படுக்கையை ஈராமாக்கியதற்காக நானும் செம்மையாக உதைபட்டது என் நினைவுக்கு வந்தது. வளர்ந்தவர்களையும் விடத் தீவிரமாகவும் மனவுறுதியுடனும் போராடும் போராளிக் குழந்தைகள் கூடச் சராசரிக் குழந்கைளைப் போலவே படுக்கையை நனைக்கத்தான் செய்வார்கள். நான் குசைனுக்காகப் பரிதாப்பட்டேன். அவனுக்குக் கிடைக்கும் தண்டனைகள் என்னுள் பழைய ஞாபகங்களை உசுப்பிவிட்டன. எனக்கு யுஸ்ரின் மீது கோபம் மூண்டதெனிலும் கோபத்தினை அடக்கி வைக்க வேண்டிய நிலையில் நான் இருந்தேன். குழந்தைப் போராளிகளைக் கேவலமாக நடத்துவது தொடர்பான எனது அனுபவங்கள் என் ஞாபகத்தில் அழியாமல்தான் இருந்தன. எனது குழந்தைப் பருவத்தில் நான் நடத்தப்பட்ட விதமும் இங்கு குசைன் நடத்தப்படும் விதமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவைதான். எனினும் என்னால் என்ன செய்ய முடியும்? இப்போது என்னிடம் எந்த அதிகாரமுமில்லை. நான் எந்தவிதப் பலமுமற்றவள். நாங்களே எங்களைப் பலமில்லாதவர்கள் என உணர்வது மிக மிக இழிவானது. இந்த இழிவுணர்வே இப்படியான சந்தர்ப்பங்களில் எங்களை மேலும் மேலும் தாழ்த்திவிடும். என்னால் குசைனுக்கு எந்த உதவியையும் செய்ய முடியவில்லை என்பதை வெட்கத்துடன் நான் ஒத்துக்கொள்ள வேண்டியிருந்தது.

இரண்டு கிழமைகள் கழிந்து போயின. ரொனால்ட் ஏன் இன்னும் என்னை இராணுவத்தில் பதிவு செய்யவில்லை என்ற கேள்வி என்னை அலைக்கழித்துக் கொண்டேயிருந்தது. நான் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு இது பற்றி ரொனால்டிடம் கேட்டபோது நான் அவரது மெய்காப்பாளர்களில் ஒருத்தியாக இருப்பதாகவும் அப்படியே இராணுவத்தில் பதியப்படுமென்றும் சொன்னார். நான்கு கிழமைகள் போயின. யுஸ்ரின் எனக்கும் குசைனுக்கும் ஏவும் சில்லறை வேலைகளை இராணுவத்தினளான என்னால் ஏற்றுக்கொள்ள முடியாமலிருந்தது. இராணுவ நடைமுறைகளுக்கும் அவள் ஏவும் வேலைகளுக்கும் எந்தவிதத் தொடர்புமில்லாதிருந்தது. யுஸ்ரினிற்கு நாள் முழுதும் கட்டிலில் கிடப்பதைத்தவிர வேறொன்றிலும் நாட்டமில்லை. அதுவும் அலுத்துவிட்டால் வீட்டிம் முன்னே ஒரு நாற்காலியைப் போட்டுக்கொண்டு உட்காருவாள். கண்ணாடியில் தன் முகச் சுருக்கங்களை ஆராய்ந்துகொண்டே மணிக்கணக்கில் அசையாது உட்கார்ந்திருப்பாள். நாளாக நாளாக எனக்கு அவள் மீதான வெறுப்பு அதிகரித்துக்கொண்டே வந்தது. யாராவது அவளைச் சுட்டுக் கொன்றால் கூட நன்றாயிருக்குமென எண்ணிக்கொண்டேன். முன்பு பாட்டி வீட்டிலும் எனக்கு இதே வெள்ளிடிதானே!

எனது வழமைப்படி நான் இங்கிருந்து ஓடிப்போய் இராணுவத்தின் இன்னுமொரு படையணியில் சேர்ந்திருப்பேன். அது மிகவும் இலகுவான காரியமும் தான். முன்பே நான் சொன்னது போல நாங்கள் எந்தப் பதிவுகளிலும் இல்லாதவர்கள். ஆனால் இந்தமுறை நிலைமை வேறு மாதிரியிருந்தது. இங்கே எண்ணிக்கையில் குறைந்தளவே இராணுவத்தினர் இருந்ததால் யாராவது ஒருவர் காணாமற் போனாலும் உடனே தெரிந்துவிடும். யுஸ்ரின் வீட்டு அடிமையாய் நான் இருக்க விரும்பாததால் ஏதாவதொரு மாற்று வழியைக் கண்டுபிடிப்பதில் நான் மும்முரமாக ஈடுபட்டேன்.

யுஸ்ரின் தனது பெற்றோரைப் போய்ப் பார்த்து வருவதென முடிவு செய்தாள். இந்தச் செய்தி எனக்குச் சற்று நிம்மதியைக் கொடுத்தது. அவளையும் அவளது மூஞ்சியையும் கொஞ்ச நாட்களுக்கு நான் பார்க்க வேண்டியிருக்காது. அவள் ஒரு வாசலால் வெளியே செல்ல மறு வாசலால் என்னைத் தேடி ஆபத்து உள்ளே நுழையலாயிற்று.

ரொனால்ட் வீடு திரும்பியதும் ஒரு நாற்காலியில் அமர்ந்துகொண்டு என்னையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். நான் முள்ளின் மீது நிற்பவள் போல் அவரின் முன்னே நின்றிருந்தேன். சிறிது நேரம் இப்படியே போயிற்று. பின்பு அவர் குசைனை அழைத்து ஏதோ சொல்லி வெளியே அனுப்பினார். அவன் வெளியே போனதும் வாசற் கதவைத் தாளிட்டார். நான் ரொனால்டிடம் வசமாகச் சிக்கியிருக்கிறேன் என்பதைப் புரிந்துகொண்டு எனது சகல அங்கங்களும் ஒடுங்கிப்போயின. நான் முன்பு யாருடனாவது படுத்துக்கொண்டேனா என ரொனால்ட் அறிய விரும்பினார். எனது இதயத் துடிப்பு எகிறியது. அவருக்கு சொல்வதற்காக நான் ஒரு பதிலைக் கண்டுபிடிப்பதற்கு முன்னதாகவே ரொனால்ட் என்னைத் தூக்கிப் போய்க் கட்டிலில் எறிந்தார். நான் உதவி கோரிக் கூச்சலிட்டேன். அவரென்னை மெளனமாக்கினார். தனது அருவருப்பான கையால் அவர் எனது வாயைப் பொத்திப் பிடிக்க நான் மூச்சுத் திணறிப்போனேன். தனது வேலை முடிந்ததும் எழுந்துபோன அவர் கட்டிலில் கேவிக்கொண்டிந்த என்னைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.
குசைன் திரும்பி வந்தபோது நான் கட்டிலின் ஒரு மூலையிலிருந்து சத்தமில்லாமல் அழுதுகொண்டிருந்தேன். ரொனால்டினது அழுக்குக் கை என் வாயை இன்னும் பொத்தியிருப்பதுபோல நான் உதடுகளை இறுக மூடிக்கொண்டு அழுதேன். குசைன் எனக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக என் தோளின் மீது கையை வைத்தான். அவனுடைய தொடுகை என்னுள் அமுங்கிக் கிடந்த அழுகையை வெடித்துச் சிதறப்பண்ணியது. நான் அவனிடம் ஓலமிட்டு அழத் தொடங்கினேன். எனது தலை, முலை, யோனி எல்லாவற்றிலிருந்தும் வலி கிளம்பியது. நடந்து முடிந்த சம்பவத்தை நினைக்கும்போது அவமானம் என் முகத்தில் ஓங்கி அறைந்தது. குசைன் என்னைத் தேற்றியபோதும் என்னால் அழாமலிருக்க முடியவில்லை.

நான் நடந்ததைச் சொன்னபோது அதைப் புரிந்துகொண்ட விதத்தில் அவன் தன் வயதுக்கு மீறிய மன முதிர்சியுடையவன் என்பதைக் குசைன் வெளிப்படுத்தினான். அந்தச் சிறிய 'முகண்டா'ச் சிறுவன் நான் தைரியமாக இருக்கவேண்டுமெனச் சொன்னான். இதுபற்றி இங்கே எவரிடமாவது முறையிடுவதால் எனக்கு எந்த நியாயமும் கிடைக்கப்போவதில்லை. பெண்கள் விடயத்தில் அநேகமாக எல்லா அதிகாரிகளுமே மிக மோசமானவர்களாயிருந்தார்கள். நான் இனிமேலும் இங்கிருக்க முடியாது. நாளைக் காலையில் நான் இங்கிருந்து ஓடிவிடப்போவதாகக் குசைனிடம் சொன்னேன். குசைனைத் தனியனாக இந்த மிருகங்களிடம் விட்டுவிட்டுச் செல்வது எனக்கு வருத்தமளித்தது. ரொனால்டிலும் பார்க்க உயர் தரத்திலுள்ள ஒரு இராணுவ அதிகாரியிடம் சென்று அவரிடம் மெய்க்காப்பாளனாகச் சேர்ந்துகொள்ளுமாறு குசைனுக்கு ஆலோசனை சொன்னேன். தன்னிலும் வலியவர்களிடம் ரொனால்டால் முண்ட முடியாது.

அடுத்த நாள் காலையில் ரொனால்ட் வெளியே சென்ற பின் நான் நல்ல மனிதரென நம்பிய நாற்பது வயதுடைய ஒரு சார்ஜனைப் போய்ப் பார்த்தேன். நான் கண்ணீருடன் நேற்று நடந்தவற்றை விபரித்தபோது அவர் துயரம் தோய்ந்த முகத்துடன் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார். அவர் இராணுவப் படிநிலையில் ரொனால்டுக்கு கீழேயுள்ளவர். அவருக்கு ரொனரல்டிடம் பயமிருந்தது. எனினும் அந்த உன்னதமான மனிதர் எனக்கு உதவுவதென்று முடிவெடுத்தார். அவர் என்னை அவரது மனைவியிடம் அழைத்துச் சென்றார். எனக்கு உதவினால் தாங்களும் ஆபத்தில் சிக்க வேண்டியிருக்குமென முதலில் அவரது மனைவி தயங்கினாலும் அவரது அச்சத்தை அவரது கருணை வென்றது.

சார்ஜன் வீட்டில் பொந்து போன்ற ஒரு சிறிய அறையுள் நான் ஒளிந்திருந்தேன். அடுத்த நாள் காலையில் எனக்கு உணவு கொண்டுவந்த சார்ஜனின் மனைவி ரொனால்ட் என்னை மும்முரமாகத் தேடிக்கொண்டிருப்பதாகவும் எக்காரணத்தைக் கொண்டும் ஒளிந்திருக்கும் அறையை விட்டு வெளியே வர வேண்டாமெனவும் சொன்னார். அன்று மாலையே என்னைத் தேடி ரொனால்ட் சார்ஜனின் வீட்டிற்கு வந்தார். நான் அங்கே வரவேயில்லை எனச் சார்ஜன் ரொனால்டிடம் சாதித்தார்."நீ சொல்வதை நம்ப முடியாது நான் உனது வீட்டைச் சோதனை போடப்போகிறேன்" என ரொனால்ட் சார்ஜனிடம் சத்தம் போடுவதை நான் கேட்டேன். கட்டிலின் அடியில் ஒளிந்துகொண்டிருந்த நான் ரொனால்ட் ஒவ்வொரு அறையாகப் புகுந்து வரும் காலடி ஓசையைக் கேட்டுக்கொண்டிருந்தேன். என் முன்னால் அவரது பூட்ஸ் கால்கள் நின்றன. அச்சத்தால் என் இரத்தம் தண்ணீராய்ப் போனது மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு இமைகளைக் கூட அசைக்காமற் கிடந்தேன். தேடுதலில் தோல்வியுற்ற ரொனால்டின் கால்கள் மெல்லத் திரும்பின. அந்த நரகத்தில் கூடக் ஒருகுருட்டு அதிர்ஷ்டம் என்னோடிருந்தது. நான் சார்ஜனின் வீட்டுக்குத் தஞ்சம் தேடி வந்திருந்த மூன்றாவது நாள் காலையில் சார்ஜன் எனக்குக் கொஞ்சப் பணம் தந்து என்னை எனது அம்மாவிடம் அனுப்பி வைத்தார். புகையிரத நிலையம் வரைக்கும் எனக்குப் பாதுகாப்பாகத் தன்னுடைய நம்பிக்கைக்குரிய ஓர் இளைய இராணுவ வீரனையும் அனுப்பி வைத்தார்.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு