குழந்தைப் போராளி - 19


சிங்கத்தின் குகைக்குள்


ரு வாரத்தின் பின்பு பாட்டியிடமிருந்து ஒரு செய்தி வந்தது. பாடசாலைக்கு நான் இனி போகப் போவதில்லையானால் என்னைப் பண்ணைக்கு அனுப்பிவிடுமாறு பாட்டி கேட்டிருந்தார். மறுநாளே அப்பா என்னைப் பண்ணைக்கு அழைத்துச் சென்றார். பண்ணையையும் பாட்டியையும் குறித்த துன்பங்கள் நிறைந்த பழைய நினைவுகள் பயணம் முழுவதும் என்னை அலைக்கழித்தன. பண்ணையில் பாட்டி விருந்து சமைத்து வைத்திருந்தார். என்னால் சாப்பிடவே முடியவில்லை. மறுநாள் அப்பா நகரத்திற்குத் திரும்பிப் போனார். துயரிலும் விரக்தியிலும் நான் அல்லாடிக் கொண்டிருந்தபோது எனக்கு சிறிதேனும் ஆறுதலைத் தர மைக் வந்தார். மைக் பண்ணை வேலையாள். அவர் நெடுநெடுவென வளர்ந்த உயரமான மனிதர். அவர் அழகாகச் சிரிக்கும் போது அவரின் வெண்ணிறப் பற்கள் பளீரிட்டன. இவை எல்லாவற்றிற்கும் மேலாக அவர் அன்புள்ளம் கொண்டவர். மெல்ல மெல்ல மைக் மீது எனக்கு நம்பிக்கை வளரத் தொடங்கியது. இவரிடம் நான் என் கவலைகளைப் பகிர்ந்து கொள்ளலாம். இவரை நான் நம்பலாம்.

எனது சகோதரன் ரிச்சட்டும் பண்ணைக்கு அனுப்பப்பட்டான். எங்கள் வேலைகள் முடிந்ததும் நான்,ரிச்சட், மைக் மூவரும் வீட்டின் பின்னே அமர்ந்திருந்து பல கதைகளைப் பேசிக்கொள்வோம். ஒருமுறை மைக்கின் குடும்பம் பற்றி நான் கேட்டேன். தனக்குக் குடும்பம் இல்லையென மைக் சொன்னதை நான் நம்பவில்லை. குடும்பத்தைப் பற்றி அவர் கதைக்க விரும்பவில்லை. நான் விடாமல் கேட்டுக்கொண்டேயிருக்க மைக் சோர்வுடன் "அதைப் பற்றிப் பேச நான் விரும்பவில்லை" எனச் சொல்லிக்கொண்டே எழுந்து போய்விட்டார். 'மைக்கின் குடும்பமும் நமது குடும்பம் போல பிரச்சினைகள் நிறைந்ததாக இருக்குமோ?' என ரிச்சட்டிடம் கேட்டேன். இரவுணவிற்காக அழைத்த பாட்டியின் குரல் அப்போதைக்கு எங்கள் பேச்சைத் துண்டித்தது.

ஒரு நாள் அப்பா சில மனிதர்களுடன் பண்ணைக்கு வந்தார். இவர்கள் எங்கள் கால் நடைகளை வாங்கி விற்கும் வியாபாரிகள். அப்பா அன்றிரவு பண்ணையிலேயே தங்கி விட்டார். மறு நாள் மேய்ச்சல் நிலத்திலிருந்து திரும்பி வந்த ரிச்சட் மாட்டுக் கன்றொன்று காணாமற் போய்விட்டதாகப் பதற்றத்துடன் பாட்டியிடம் சொன்னான். அதைக் கேட்டதும் பாட்டி போட்ட கூச்சலால் பண்ணை வீட்டின் கூரையே பொறிந்து விழும் போலிருந்தது. வீட்டின் பின்புறத்தில் வேலியைச் சரி செய்து கொண்டிருந்த அப்பாவை நோக்கிப் பாட்டி நான்கு கால் பாய்ச்சலில் ஓடுவதைப் பார்த்தேன். அப்பா அதிலும் வேகமாக வீட்டினுள் புகுந்தார். அவரின் முகம் கடுங் கோபத்தால் விறைத்திருக்க அவர் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டார். ரிச்சட் முன்னெச்சரிக்கையாக வாசற் பக்கம் நகர்ந்தான்.

"சிங்கங்கள் மாட்டுக் கன்றினை இப்போது சாப்பிட்டு முடித்திருக்கும் இல்லையா?" அப்பா தம்பியைப் பார்த்து உறுமினார். அவரிருந்த நாற்காலி பின் நகர்ந்தது. அறையில் மயான அமைதி நிலவியது. தம்பி மூச்சுப் பேச்சில்லாமல் பொம்மை மாதிரி நின்றிருந்தான்.
"வேசி மகனே எனது மாட்டுக் கன்றைச் சிங்கத்திற்குத் தாரை வார்த்து விட்டாயே" சடுதியாக அப்பாவின் குரல் வெறியுடன் எழுந்தது. நான் பயத்தில் தரையில் மல்லாக்க விழுந்தேன். அப்பா பாய்ந்து சென்று வெட்டுக் கத்தியை எடுத்தது தான் தாமதம் தம்பி ஒரு மானைப் போல வெளியே தாவி ஓடத் தொடங்கினான். அப்பா கொலை வெறியுடன் கத்தியை உயர்த்திப் பிடித்தபடியே அவனைத் துரத்திக்கொண்டு ஓடினார். நானும் அவர்களின் பின்னால் ஓடத்தான் முயற்சித்தேன். ஆனால் அச்சத்தில் என் கால்கள் பின்னிக்கொண்டன. அப்பா எனது தம்பியை நிச்சயமாகக் கொல்லத்தான் போகிறார். நான் பாட்டியின் பக்கம் திரும்பி அவரின் முகத்தைப் பார்த்தேன். அவரின் கண்களை ஊடுருவிப் பார்க்குமளவிற்கு எனக்குத் தைரியம் இருந்தது. பாட்டியால் அப்பாவைத் தடுத்து நிறுத்த முடியும் என நினைத்தேன்.

என்னை அழுகையை நிறுத்துமாறு உணர்சியற்ற குரலில் சொன்ன பாட்டி"உனது கண்ணீர் பாலா? இல்லை இரத்தமா?" எனக் கேட்டார். அவர் என்ன கேட்கிறார் என்று எனக்கு விளங்கவில்லை. ஒன்றுமே சொல்லாது படுக்கைக்குச் சென்றேன். காத்திருப்பதைத் தவிர வேறெதுவும் செய்யாமுடியாது. சிறிது நேரங் கழித்துத் திரும்பிவந்த அப்பா இரத்தம் தோய்ந்த வெட்டுக்கத்தியை எனக்குக் காட்டித் தான் ரிச்சட்டைக் கொன்றுவிட்டதாகக் கூறினார். அந்தக் கணத்தில் அச்சம் என்னை விட்டுப் போயிற்று. எங்கிருந்தோ வந்த தைரியம் என் ஆன்மாவை நிறைத்தது. இனி இழப்பதற்கு என்னிடம் எதுவுமே இல்லை. நான் அழவில்லை.இநத உலகத்தில் இனி நான் தனியானவள் என்ற உணர்வே என்னுள் இனம் புரியாத வைராக்கியத்தை ஊட்டிற்று. இனி யாராலும், எதனாலும் என்னை அழவைக்க முடியாது. நான் படுக்கையில் கிடந்தவாறே வற்றிய கண்களுடன் ரிச்சட்டை நினைத்துக்கொண்டேன். நானும் அவனும் விளையாடி மகிழ்ந்திருந்த தருணங்களை நினைத்துப் பார்த்தேன்.

மறுநாள் அதிகாலையிலேயே நான் எழுந்து என் சகோதரனின் உடலைத் தேடிப் புறப்பட்டேன். சிறிது நேரத் தேடுதலின் பின்பு எறும்புப் புற்றின் மேல் யாரோ விழுந்து கிடப்பது போலத் தெரிந்தது. அருகே சென்று பார்த்த போது அது யாரோ அல்ல எனது தம்பி தானெனத் தெரிந்து கொண்டேன். நான் எதையும் கேட்பதற்கு முன்னமே ரிச்சட் திரும்பி தனது இரத்தம் தோய்ந்த புட்டத்தை எனக்குக் காண்பித்தான். அவன் உயிருடன் இருப்பதைக் கண்டதும் நான் அவனை இறுகத் தழுவிக்கொண்டே மனப் பாரம் அகன்றவளாகப் பெரிதாகச் சிரிக்கத் தொடங்கினேன். அவனை முத்தமிட்டேன். அவன் உயிருடன் இருப்பது எனக்கு மிக மிக முக்கியமானது. அவனை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு சிறிது உணவும் குடிப்பதற்குப் பாலும் வீட்டிலிருந்து யாருக்கும் தெரியாமல் எடுத்து வரச் சென்றேன். அதன் பின்பு அப்பாவை நான் முகத்துக்கு முகம் சந்திக்க நேரும் போதெல்லாம் கோபத்துடன் அவரைப் முறைக்க நான் மறந்ததில்லை. அவர் எங்களைவிட்டு நகரத்துக்குச் செல்லும் வரை இது தொடர்ந்தது.

குழந்தைப் போராளி - 18



சிற்றன்னையின் வெற்றி

ஹெலன் எங்களை விட்டுப் பிரிந்தும், அம்மாவைத் தேடிச் சென்றும் ஒரு வாரமாகிவிட்டது. அவளை மீண்டும் காண்பேனென்று நான் எண்ணியிருக்கவில்லை. ஆனால் அவள் மீண்டும் வந்து சேர்ந்தாள். அவள் அம்மாவைக் கண்டாளா? என்ற கேள்விக்கு அவள் முகத்திலேயே பதிலிருந்தது. தோல்வி துல்லியமாகவே அவளின் முகத்தில் தெரிந்தது. அவளின் முயற்சியும் பலனின்றிப் போயிற்று. பற்றிசியா நாட்டை விட்டு வெளியேறியிருந்தார். அவர் எப்போது திரும்பி வருவாரென்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஹெலன் முற்றோனுடனும் யூடித்துடனும் சிறிது காலம் பற்றிசியாவிற்காக் காத்திருந்துவிட்டுத் திரும்பி வந்திருக்கிறாள். இம் மறுமொழியைக் கேட்டதும் எனக்கு ஆத்திரம் பொங்கியது. "உதவி தேவையென்றால் கூனிக் குறுகிக்கொண்டு மீண்டும் வருவார்கள்" என்ற அப்பாவின் சொற்கள் என் நினைவில் வந்தன.

" நீ ஒரு நாயைப் போல இங்கே தான் சுற்றிச் சுற்றி வருவாய் என்பது எனக்குத் தெரியும்" என அப்பா ஹெலனைப் பழிக்க ஹெலன் தலையைக் குனிந்தவாறிருந்தாள். ஒரு துயரப் புன்னகை அவளின் உதடுகளில் நெளிந்தது. ஆனால் அப்பா இன்னும் தனது உரையை முடிக்கவில்லை.
"நீ எங்கும் போகலாம், ஆனால் எப்போதும் இங்கு தான் திரும்பி வரவேண்டும். உனக்கு வேறு கதியில்லை வீடென்று உனக்கிருப்பது இது ஒன்றுதான்." எனது சகோதரிகள் வீட்டை விட்டுப் போனால் அப்பாவிற்கு எந்தக் கவலையுமில்லை. ஆனால் அவர்கள் திரும்பி வந்தால் எந்த வழியிலாவது அவர்களைப் பழிவாங்கியே தீருவார்.

இரண்டு நாட்கள் எந்தவிதச் சச்சரவுகளுமின்றிக் கழிந்தன. மூன்றாவது நாள் ஒரு புகைப்படக்காரர் வீட்டிற்கு வந்திருந்தார். நான் ஹெலனிடம் நானும் அவளும் எனது சிற்றன்னை பெற்ற சகோதரிகளுமாகச் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்வோமா எனக் கேட்டேன். இதுவரை நான் புகைப்படமெடுத்துக் கொண்டதேயில்லை. படத்தில் நான் எவ்வாறு இருப்பேனென்று பார்க்கவும் எனக்கு ஆவலாயிருந்தது. ஆனால் நிலைமை வேறுமாதிரியாக இருந்தது. புகைப்படக்காரர் ஹெலனை மட்டுமே படம் பிடித்தார். புகைப்படக்காரர் போனதுமே அப்பா தனது நண்பரின் மகனொருவன் ஹெலனை மணக்க விரும்புவதாக ஒரு செய்தியைச் சொன்னார். என்னால் இந்தச் செய்தியின் உள்ளர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஹெலன் வீடு திரும்பியதையிட்டு அப்பா மகிழ்கிறாரா? அல்லது கூடிய சீக்கிரத்தில் அவளை வீட்டைவிட்டு விரட்ட முயல்கிறாரா? ஹெலனிடம் வீட்டுப்பாடத்தில் உதவி செய்யும்படி கேட்டேன். அப்போது தான் நாங்களிருவரும் நிம்மதியாகபேசிக்கொள்ள முடியும்.

"அப்பா சொன்னவனை உனக்குத் தெரியுமா?"

"நான் இதுவரை அவனைப் பார்த்ததில்லை"

"முன்பின் தெரியாத ஒருவனை மணந்து கொள்ள உனக்குப் பயமாக இல்லையா?"

'பொஸ்' என நாங்கள் அழைக்கும் கிழவன் முன்பு என்னிடம் முறை தவறி நடந்து கொண்டதை நான் நினைத்துக்கொண்டேன்.

"ஹெலன் ஆண்கள் நல்லவர்களல்ல, அவர்களை நம்பமுடியாது. நீ அவனைக் கல்யாணம் செய்துகொண்டால் நடக்கக் கூடாதவை எல்லாம் நடக்கலாம்." என்னை ஒருமுறை உற்றுப் பார்த்துவிட்டு

"எக்காரணம் கொண்டும் நான் அவனை மணந்துகொள்ளப் போவதில்லை" எனக் ஹெலன் சொன்னாள்.
அப்பாவிடமும் இதே பதிலைத்தான் ஹெலன் சொன்னாள். அதிலிருந்து அப்பா எந்த நேரமும் அவளுடன் எரிந்து விழுந்து கொண்டும் அவளைத் துன்புறுத்துவதுமாகவே இருந்தார்.
ஹெலனின் வேலைப்பழு ஏறிக்கொண்டே போனது. ஓர் ஒட்டகம் மாதிரி அவள் வேலை செய்து கொண்டிருந்தாள். நான் பாடசாலை முடிந்து வந்ததும் என்னாலான உதவிகளை அவளுக்குச் செய்தேன். அப்பா வேலையால் திரும்பி வந்ததுமே ஹெலனை உணவு தயாரிக்கச் சொல்வார். எனக்குத் தெரிந்தளவில் கணவன் மனைவியைத் தான் சமையல் செய்யச் சொல்லவேண்டும். பிள்ளைகள் தண்ணீரோ தேனீரோ தரலாம். அவரது நடத்தை ஏதோ அவரின் மனைவி செத்து விட்டாள் என்பது போலிருந்தது. துரதிர்ஷ்டவசமாக அவரின் மனைவி உயிருடன் தான் இருந்தார்.

ஒரு நாள் ஹெலன் பக்கத்து வீட்டுப் பெண்களுடன் எங்கேயோ வெளியே போயிருந்தாள். இரவுணவு தயாரிக்கும் நேரமாகியும் அவள் வீட்டுக்கு வரவில்லை. சிற்றன்னையே அன்றிரவில் முணுமுணுத்துக் கொண்டு சமையல் செய்தார். ஹெலன் திரும்பி வந்ததுமே அவர் தனது கோபத்தைக் காட்டினார். " பிசாசே எங்கே ஊர் மேயப் போனாய்?" எனச் சிற்றன்னை கொக்கரிக்க ஹெலன் கட்டுக்கடங்காத ஆத்திரத்துடன் சிற்றன்னையுடன் மோதினாள்.
"உனது கணவனுக்கு நீ தான் சமைத்துக் கொடுக்க வேண்டும். நான் அவரது மகள்... ஏன் நான் ஒவ்வொரு நாளும் அவரின் உணவைத் தயாரிக்க வேண்டும்? வாயைப் பொத்திக்கொண்டு போவதுதான் உனக்கு நல்லது." ஹெலனின் சீற்றம் சிற்றன்னையின் அகங்காரத்தைக் குறைக்காவிடினும் ஹெலன் சொல்வது ஓரளவு உண்மை எனபது அவருக்குப் புரிந்திருக்க வேண்டும்.

அப்பா வாசற்படியில் கால் வைத்திருக்கமாட்டார், சிற்றன்னை கண்ணீருடன் ஓடிப்போய் அவர் முன்னே நின்று முறையிட்டுப் புலம்பத் தொடங்கினார். நடந்ததற்கும் அவர் முறையிட்டுப் புலம்பியதற்கும் சம்பந்தமே இல்லை. அப்பா என்னைப் பார்த்து என்ன நடந்ததெனக் கேட்டார்.' நடந்த உண்மையைச் சொன்னால் நீ படாத பாடுகளைப் படுவாய்' எனச் சிற்றன்னையின் அனல் பறத்தும் கண்கள் என்னை எச்சரித்தன. இந்தச் சிக்கலிலிருந்து நான் தப்பிப்பதற்கான ஒரே வழி பொய் சொல்வதுதான். நான் இவர்களது சண்டையைப் பார்க்கவே இல்லையெனச் சாதித்தேன். இப்போது அப்பா ஹெலனைக் கூப்பிட்டார். அவளுக்குத் தண்டனை கொடுப்பதே அவரின் நோக்கம். ஹெலனோ கோபத்தின் அரசியாக நின்றிருந்தாள். ஒரு கூட்டம் தேனீக்களை உயிருடன் விழுங்கியவள் போல அவள் துடித்துக்கொண்டிருந்தாள்.
"நீ உனது மனைவியின் பொய்களை மாத்திரமே நம்புகின்றாய், நீ எப்படிப்பட்ட தகப்பன்? பிள்ளைகளைப் பற்றிய எந்தக் கவலையோ பரிவோ உனக்கில்லை, ஆனால் அடிப்பதற்கும் வதைப்பதற்கும் மாத்திரம் நீ என்றுமே பின் நிற்பதில்லை."
ஹெலனின் துணிவு என்னைப் பயத்தால் நடுங்கச் செய்தது. என்னால் நிமிர்ந்து பார்க்கவே முடியவில்லை. ஹெலனின் சீற்றத்திற்குப் பின் பெருமழை பெய்து ஓய்ந்தது போல அங்கே அமைதி நிலவியது. எனக்கு - ஏன் எல்லோருக்குமே - ஹெலன் உண்மையைத் தான் பேசிக்கொண்டிருக்கிறாள் என்பது புரிந்தது. ஒரு மாதிரியாகத் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நான் பார்வையை அப்பாவிடம் உயர்த்தினேன். அப்பாவின் முகம் ஆத்திரத்தில் உப்பி வீங்கியிருந்தது. அதுவே அந்த இடத்திலிருந்து என்னைத் துரத்தப் போதுமானதாயிருந்தது. நான் மெதுவாக அங்கிருந்து நழுவ முற்பட்ட போது ஹெலன் அப்பாவை நோக்கி
" என்னை அடிப்பதற்கு மட்டும் நினைக்காதே! நான் இன்னும் சிறு பிள்ளையல்ல, நீ என்னை அடித்தால் நானும் உன்னைத் திருப்பி அடிப்பேன். இனி எப்போதும் என்னை அடிப்பதை நினைத்தும் பார்க்காதே!" எனச் சவால் செய்தாள்.

அப்பாவின் இருண்ட பக்கத்தை என் சகோதரியைத் தவிர வேறொருவரும் வெளிச்சம் போட்டுக் காட்டத் துணிந்ததில்லை. அப்பாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. வெகு நேரமாக வெட்கத்துடன் போராடிக் கடைசியில் அவர் ஹெலனை வீட்டைவிட்டு வெளியேறும்படி கத்தினார். ஹெலனோ " முடியாது, நான் இங்கேதான் இருப்பேன். என்னைக் கொல்ல விரும்பினால் இப்போதே நீ என்னைக் கொல்லலாம்... நீ ஏன் என்னைப் பெற்றாய்? நீ எனது உண்மையான தந்தை இல்லையா? நீ எனது உண்மையான தந்தை இல்லையென்றால் எனக்கு மகிழ்ச்சி தான். நீ உண்மையான தந்தையாய் இருந்தால் நான் இங்கிருந்து போகப்போவதில்லை" எனப் பதிலுக்குக் கத்தினாள்.

அப்பா அவளைத் இழுத்துத் தரையில் வீழ்த்த முயற்சித்தார்.ஹெலன் அப்பாவை விடப் பலசாலியாயிருந்ததால் திமிறிக்கொண்டு நின்றாள். அவளைக் கீழே தள்ளிவிடும் முயற்சியில் தோல்வியுற்ற அப்பா அவளை அடிக்கத் தொடங்க அவளும் திருப்பி அடித்தாள். இருவருமாக மாறிமாறி ஆவேசத்துடன் அடித்துக்கொண்டார்கள். அதிலும் ஹெலன் பலசாலிதானென்பதை அப்பாவிற்கு கூடுதலாக அடிப்பதன் மூலம் நிரூபித்துக் கொண்டிருந்தாள். "நான் உயிருடன் இருக்கும் வரை நீ என்னை அடிப்பதற்கு நான் அனுமதிக்கப்போவதில்லை" எனச் சொல்லிச் சொல்லி அவள் அப்பாவை அடித்தாள்.

அடுத்த நாள் அப்பா ஹெலனிற்குச் சில நிபந்தனைகளை விதித்தார். அவள் அவரது மனைவியின் சொல்கேட்டு நடக்க வேண்டும். முடியாதென்றால் அவள் வீட்டிலிருக்கக் கூடாது! அத்துடன் அவரது நண்பனின் மகனைத் திருமணம் செய்துகொள்ளவும் வேண்டும். ஹெலன் முகத்திலடித்தது போல அப்பாவிற்குப் பதில் சொன்னாள்:

"உனது மனைவியின் சொல்கேட்டு நடக்க நான் தயாரில்லை, உனது நண்பரின் மகன் அவ்வளவு நல்லவனாக இருந்தால் உனது மனைவிக்கே அவனைக் கட்டி வை."

வெளியே என்னைக் கூட்டி வந்த ஹெலன் அப்பாவின் பெயர் எழுதப்பட்டிருந்த கடித உறையொன்றை என்னிடம் தந்தாள். நான் கவலையுடனும் அக் கடிதத்துடனும் வாழைத் தோட்டத்தை நோக்கி நடந்தேன். கண்ணீர் விட்டு அழுதுகொண்டே நான் அக்கடிதத்தை வாசித்து முடித்தேன். என் ஞாபக அடுக்குகளில் இவ்வாறாக அக் கடிதம் பதிவாகியிருக்கிறது:
அப்பா,
நீ எனக்குத் தந்த குழந்தைப் பருவம் மகிழ்ச்சியற்றது, அதற்கான தண்டனையை நீ பெறுவாய்.அப்பா! உலகில் இலக்கின்றி நான் அலையப் போகிறேன். அன்பே காட்டாத நீ என்னை உனது இரத்தமும் சதையுமெனச் சொல்கிறாய். நீ தானா எனது தகப்பனென்ற சந்தேகத்தை நீ என்னுள் விதைத்துவிட்டாய். நான் துயரத்துடன் தான் மரிப்பேன். ஆனால் அப்போது கூட நான் உன் பெயரை உச்சரிக்கப் போவதில்லை. நீ என்னதான் செய்தாலும் மீண்டும் என்னை நீ காணப்போவதுமில்லை. நீ இறக்கும் போது கூட உன் குற்றங்களையும் தவறுகளையும் ஒருமுறை தன்னும் கேள்விக்குள்ளாக்காமலேயே இறப்பாய். நீ எனக்களித்த வலியினை நீயும் உன் வாழ்வில் கட்டாயம் அனுபவிப்பாய்.

-- ஹெலன்

கடிதத்தை வாசித்து முடித்தவுடன் அப்பாவிடம் இதைச் சேர்ப்பிப்பதா இல்லையா என யோசித்தேன். கடிதத்தைச் சுக்கு நூறாகக் கிழிப்பதென முடிவெடுத்தேன்.
காட்டிக்கொடுப்பவள் என்று என்னால் பழிக்கப்பட்டவளே இப்போது என் மனதில் வீராங்கனையாக உயர்ந்து நிற்கிறாள். அவளின் கடிதம் என் மனதில் வரி வரியாகப் பதிந்துவிட்டது. நான் இறக்கும் வரை துயர் கொப்புளிக்கும் அந்தச் சொற்கள் அங்கே அலைந்து கொண்டேயிருக்கும். அவளின் போராட்டம் எனக்கான போராட்டமாயும் இருந்தது. ஹெலன் தனது வாழ்க்கையில் பல இன்னல்களையும் துன்பங்களையும் அனுபவித்தாலும் அவள் வீட்டுக்குத் திரும்பி வரவேயில்லை. இறுதிவரை அப்பாவிடம் எந்த உதவியும் கேட்காத அவள் திரும்பி வரும்போது இறப்பதற்காகத்தான் வந்திருந்தாள்.

நான் மீண்டும் தனித்துப் போனேன். மீண்டுமொரு சகோதரி தொலைந்து போனாள். என்னுடன் இருந்த கொஞ்ச நஞ்ச மகிழ்ச்சியும் என்னை விட்டுப் போய்விட்டது.அவள் எங்கு போனாள்? எங்கே அவளைத் தேடுவது? இதெல்லாம் எங்கே போய் முடியப்போகின்றது? அவள் மாதிரியே நானும் வீட்டை விட்டு ஓடிப்போய் விடலாமா எனத் தீவிரமாகச் சிந்தித்தேன். என்னால் ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. நாட்கள் கழிந்து கொண்டிருந்தன. என் துயரங்களும் பெருகிக்கொண்டே போயின.

ஒரு நாள் காலையில் பால்காரர் வரவில்லை. எனவே நான் பால் விற்குமிடத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. அப்பாவிடம் பணம் வாங்கிக் கொண்டேன். பால் வாங்குவதற்குச் செல்லும் வழியில் என் பாடசாலையின் அருகே இராணுவத்தினர் நின்று கொண்டிருந்தனர். எனக்குப் பயம் பிடித்துக்கொண்டது. பயத்தில் என்ன செய்வதென்று தெரியாது வேகமாக அவர்களைக் கடந்து ஓடினேன். பால் விற்பனை நிலையத்தை நான் மூச்சிரைக்க வந்தடைந்த போது நான் கொண்டு வந்த பணம் தொலைந் திருந்தது. மீண்டும் வந்த வழியே பணத்தைத் தேடிச் சென்றேன். நான் வராத பாதைகளில் கூடப் பணத்தைத் தேடினேன், கிடைக்கவேயில்லை. வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது எனது சகோதரி முன்பொரு தடவை பணத்தைத் தொலைத்ததற்காக அப்பாவிடம் எப்படி அடிபட்டாள் என்பது என் நினைவில் வந்தது. வீட்டை நோக்கிச் செல்லும் பாதையில் எனக்கு முன்னால் அச்சம் நடந்து போயிற்று.

நான் வீடு திரும்பிய போது அப்பா வேலைக்குச் சென்றிருந்தார். சிற்றன்னை பணம் தொலைந்து போனதை அறிந்ததும் "அப்பா வந்ததும் நீயாகவே அவரிடம் விசயத்தைச் சொல்லிவிட வேண்டும்" எனக் கட்டளையிட்டார். பாடசாலைக்குச் சென்ற நான் நேரத்தைக் கவனித்துக்கொண்டே இருந்தேன். அப்பா காரிலோ பஸ்ஸிலோ அடிபட்டு வீட்டிற்கே வராமல் இருக்கவேண்டுமென வேண்டிக்கொண்டேன். ஆனால் அவர் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார். சிற்றன்னை என்னை முந்திக்கொண்டாள்.

"முட்டாளே எப்படிப் பணத்தைத் தொலைத்தாய்?" நான் இராணுவத்தினரைப் பற்றிச் சொன்னேன். அப்பாவிற்கோ இராணுவம் என்ற பேச்சை எடுத்தாலே பயம். அவர் என்னை நம்பவில்லை. என்னைப் பாடசாலையிலிருந்து நிறுத்திவிடப் போவதாகச் சொன்னார். இம்முறை நான் என் கண்களைத் தாழ்த்தவேயில்லை. அவரது கண்களை நேருக்கு நேராகப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன். இப்படியே இருவரும் சில நிமிடங்கள் பார்த்துக் கொண்டே நின்றோம். கண்கள் ஆன்மாவின் வாசல்கள் என்பார்கள். ஆனாலும் எனது முட்டாள் அப்பாவால் இந்தச் சிறுமியின் ஆன்மாவைக் காண முடியவில்லைப் போலும்.

நான் படுக்கையில் கிடந்தபோது கண்ணீர் வர வேண்டுமென எதிர்பார்த்தேன். கண்ணீர் வரவே யில்லை. அப்பா தனது கல்வியைப் பெற்றுக் கொண்டார். யாரோ அவருக்காக இரங்கினார்கள். ஆனால் அவரோ எனக்கு அதைத் தர விரும்பவில்லை. நானே எனது வாழ்வை முடித்துக் கொள்வதா? அல்லது அப்பாவே தொடரும் சித்திரவதைகளுடாக அதனைச் செய்து முடிக்கும் வரை நான் காத்திருப்பதா? இந்தக் கேள்விகளின் ஆழத்தில் வாழ்வதற்கான எனது வேட்கை ஒளிந்திருந்தது.

குழந்தைப் போராளி - 17


அச்சமும் துயரும்


ந்த நாட்களில் மக்கள் இனம் தெரியாதவர்களால் கடத்தப்படுவதும் எந்தவிதத் தடயமுமின்றிக் காணாமற் போவதும் வழமையாய் இருந்தன. ஹெலன் போனதற்கு மறு நாள் குழந்தைகள் நாங்களும் அப்பாவும் விறாந்தையில் அமர்ந்திருந்தோம். முன்பின் தெரியாத இருவர் வந்து இராணுவ முகாமுக்கு உடனடியாக வரவேண்டும் என அப்பாவிற்குக் கட்டளையிட்டனர்.
"எதற்காக - என்ன குற்றச்சாட்டின் பேரில் - என்னை முகாமுக்கு அழைக்கிறீர்கள்?" என அப்பா கேட்க
"நீ அங்கு வந்ததும் அதைத் தெரிந்து கொள்வாய்!" என அவர்கள் சொன்னார்கள்.
"ஏன் நீங்கள் ஒரு வாகனத்தில் வரவில்லை? சீருடைகள் அணியவில்லை?" அப்பா கேட்டார்.
"மடத்தனமான கேள்விகளைக் கேட்காதே! உடனடியாக எங்களுடன் புறப்படு! அங்கு வந்ததும் எல்லா விளக்கங்களும் உனக்குச் சொல்லப்படும்."

அப்பாவின் கண்களில் நான் அச்சத்தைப் பார்த்தேன். மிகவும் சிறு வயதினளான நான் கூட ஆட்கள் கடத்தப்படுவது பற்றிக் கேள்விப்பட்டிருந்தேன். அப்பாவிற்கு என்ன நடந்தாலும் எனக்குக் கவலையில்லை. என்னைப் பொறுத்தவரை அவர் தண்டிக்கப்பட வேண்டியவர் குறிப்பாக ஹெலனுடன் அவர் நடந்துகொண்ட விதத்திற்காக அவர் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். வந்த இருவரில் ஒருவரைக் கவனித்தேன். அவர் தனது கண்களை இடைவிடாமல் சிமிட்டிக்கொண்டிருந்தார். அவரின் கண்கள் அவரின் கட்டுப்பாட்டிலில்லை. இது அவரை அவ்வளவு நம்பகரமானவராகக் காட்டவில்லை.

அப்பா அவர்களோடு முண்டி விட்டார். "என்னை நீங்கள் இந்த இடத்திலேயே கொன்று போட்டாலும் கவலையில்லை. என்னால் உங்களுடன் வர முடியாது" என அப்பா விறைத்துக்கொண்டு நின்றார். வந்த மனிதர்கள் இதை எதிர்பார்க்கவில்லை. என்ன செய்வதென்று தெரியாது சிறிது நேரம் அங்கேயே நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் வீட்டை விட்டு வெளியேறும் போது தாங்கள் இராணுவத்தினருடன் திரும்பி வருவதாக மிரட்டிவிட்டுப் போனார்கள். அவர்கள் அங்கிருந்து சென்றதும் அப்பா வாழைத் தோட்டத்திற்குள் சென்று மறைந்தார். விரைவாகவே அவர் சில இராணுவ வீரர்களுடன் திரும்பி வந்தார்.

அவர்கள் எங்களிலிருந்து மாறுபட்ட உடலமைப்பைக் கொண்டவர்களாக இருந்தார்கள். அந்த இராணுவ வீரர்கள் வடக்கிலிருந்து வந்திருந்தார்கள். அவர்களது கண்கள் சிவப்பாகவும் அவர்களின் சருமம் அட்டைக் கறுப்பாகவுமிருந்தது . எங்கள் வாழ்க்கை முறையில் விவசாயமும் பண்ணை வாழ்வும் முக்கியமானது போல அவர்களுக்கு இராணுவ சேவையே வாழ்க்கை முறையாக இருந்தது. எங்களை அவர்கள் "பால் குடிக்கும் சோம்பேறிகள்" என ஏளனம் செய்வார்கள். அவர்கள் ஒரு விநோதமான மொழியில் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். எங்கள் தோட்டத்தில் பறித்த மிளகாய்ப் பிஞ்சுகளைகளை அவர்கள் வாயில் போட்டு மென்றதைக் கண்ட போது என் கண்களை நான் இறுக மூடிக்கொண்டேன்.

இச்சம்பவத்தின் பின்னர் வடக்கிலிருந்து வந்தவர்களுக்கு அப்பா ஒழுங்காகக் கப்பம் கட்டிக்கொண்டிருந்தார். புதினமான தோற்றமுடைய இராவணுத்தினரைக் கண்டதிலிருந்து எனது கற்பனை புதிய தளங்களுக்குத் தாவத் தொடங்கிவிட்டது. அப்போது கூட இப்படியான இராணுவ உடையை நானும் ஒரு நாள் அணியப்போகிறேன் என்று நான் கனவிற் கூட நினைத்ததில்லை.

குழந்தைப் போராளி - 16


ஒரு கடினமான இதயம்

னது ஓடிப்போன ஒவ்வொரு சகோதரியும் வீட்டிற்குத் திரும்பி வந்தபோது ஏதோ ஒரு வகையில் தங்கள் துன்பங்களைச் சுமந்தே வந்தனர். நாங்கள் ஒவ்வொருவரும் அவரவர் சுமையைச் சுமக்க வேண்டியிருந்தது. எப்போதாவது ஒருமுறை அவர்கள் வீட்டிற்கு வருவார்கள். ஒவ்வொரு முறையும் ஒருத்தி வரும்போது ' இவள் இம்முறை என்னையும் தன்னுடன் அழைத்துச் செல்வாள்' என நம்பினேன். அவர்கள் ஒவ்வொரு முறையும் தாங்கள் எவ்வளவு சிரமங்களை வெளியே அனுபவிக்கிறார்கள் என என்னிடம் சொல்வார்கள். ஆனால் அப்பாவிடமோ சிற்றன்னையிடமோ எதுவும் சொல்ல மாட்டார்கள். எந்த விதத்திலும் அவர்களது வாழ்க்கை சிரமானதெனக் காட்டிகொள்ள அவர்கள் விரும்பவேயில்லை. தாங்கள் வெளியே சந்தோசமாக இருப்பது போல நடிப்பார்கள். ஏதோ உண்மையும் அது போலத்தான் என்றிருக்கும். அப்பாவோ மடையன் போல அவர்களை நம்பினார். நான் எனது சகோதரிகளில் ஒருத்தி வந்து என்னை விடுவித்துச் செல்வாளென்று ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்த காலங்களுக்குக் கணக்கில்லை.

அப்பாவின் நண்பரின் வீட்டில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்த நான் ஒரு வாகனம் வந்து நிற்கும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்தேன். எனது மூத்த சகோதரி ஹெலன் ஒரு நீல நிறக் காரிலிருந்து இறங்கினாள். ஹெலனா அது? அவளை என்னால் அடையாளமே காண முடியவில்லை. அவளது சப்பாத்து அழகாகவும் புது மாதிரியாகவும் இருந்தது. தலை முடியை நீளமாக வளரவிட்டிருந்தாள். சந்தோசத்துடன் அவளிடம் ஓடினேன். காருக்குள் ஒரு புதிய மனிதன் அமர்ந்திருந்தான். வழமைபோல அப்பாவும் வாசலில் வந்து நின்றிருந்தார். ஹெலன் தன்னுடன் வந்தவனைப் பற்றிச் சொல்வதற்கு முன்னமே

"காரில் இருக்கும் மனிதன் யார்?" என அப்பா கேட்டார்.

"அவரைத்தான் நான் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன்" எனக் ஹெலன் சொன்னாள்.

"அவன் என்ன மொழி பேசுகிறவன்?" அப்பா அறிய விரும்பினார்.

"கிழக்கில் இருப்பவர்"

"மேற்கில், இங்கே எனது வீட்டில் அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்?"

" நான் அவரை உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்பியதால் தான் அவர் இங்கு வந்திருக்கிறார்."அப்பா உடனடியாகவே

"நீ அவனைத் திருமணம் செய்வதில் எனக்குச் சம்மதமில்லை" என்றார்.

"அவர் என்னை நன்றாகவே நடத்துகிறார், அவரைத் திருமணம் செய்து கொண்டால் எனது வாழ்க்கை மகிழ்சியாக அமையும்" ஹெலன் வாதம் செய்தாள்.

"நீ எனது மகளாகத் தொடர்ந்தும் இருக்கவேண்டுமென்றால் அவனைத் திருமணம் செய்துகொள்ளக் கூடாது!" அப்பா பயமுறுத்தினார்.

எனது சகோதரி அழத் தொடங்கினாள். காருக்குப் போவதற்குத் திரும்பிய அவள் ஏதோவொரு பெரும் சுமையைச் சுமப்பவள் போலத் துவண்டிருந்தாள். காரின் கதவத் திறந்து கொண்டு திரும்பி அப்பாவைப் பார்த்து
"குறைந்தபட்சம் இவருக்கு முகமனாவது கூறமாடீர்களா?" என அப்பாவைக் கேட்க

"இல்லை"
என உறுமிய அவர் "ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள் அவனை நீ திருமணம் செய்வதென்று முடிவெடுத்தால் என் வாசற்படி மிதிக்கக் கூடாது" என்றார். நான் அப்பாவைப் பார்த்தேன். அவரோ அரவமேயில்லாது ஒரு பாம்பைப் போல வீட்டினுள் நுழைந்தார்.

காரில் இருந்தவனைக் ஹெலன் அனுப்பி வைத்தாள். மெதுவாக நடந்து வீட்டிற்குள் வந்த ஹெலன் அழுது கொண்டேயிருந்தாள். அவளின் நடத்தையை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. என்னுள் துக்கமும் கோபமும் மாறி மாறி வந்து போயின.
"அப்பா கோபக்காரர் என்பது உனக்கு நன்றாகவே தெரியும். வந்த மனிதனுடன் சந்தோசமாக இருந்தாயென்று நீ சொல்கிறாய், பின்பேன் என்னையும் கூட்டிக்கொண்டு அவனுடன் நீ போகவில்லை?" அவள் அமைதியாக எனக்குப் புரிய வைக்க முயன்றாள்.

"ஒரு பெண்ணிற்குத் திரும்பிச் செல்ல ஒரு வீடில்லாவிடின் அவள் தனது கணவனிடம் எந்த மதிப்பையும் பெறமாட்டாள், பின்பு அங்கு நமக்கு எந்த உரிமையும் இருக்கப் போவதில்லை"

"இனி என்ன செய்யப் போகிறாய்?"

"என்ன செய்வதென்றே தெரியவில்லை, எனக்குப் போக்கிடமில்லை..."எங்களுடனேயே இருக்குமாறு நான் அவளைக் கேட்டுக் கொண்டேன்.சிற்றன்னையின் வெறுப்புக் கொப்பளிக்கும் அதிகாரத்திற்கு அவள் தன்னை அர்பணித்துக் கொள்ள வேண்டிய பரிதாப நிலை. அன்றிரவு தூங்குவதற்கு முன்னதாகப் பற்றீசியாவைப் பற்றிச் சொல்லி அவர் எங்களுக்கு எங்களது உண்மையான அம்மாவைக் கண்டு பிடிக்கச் சிலவேளை உதவாலாமெனச் சொன்னேன். அடுத்த நாள் காலையில் ஹெலன் தலை நிமிர்ந்து துணிவாக நின்றாள். "இனி ஒரு போதும் நான் இங்கு திரும்பிவரப்போவதில்லை" எனப் போகும்போது கூறிச் சென்றாள். அவள் எங்கள் அம்மாவைக் கண்டுபிடிக்க வேண்டுமென என் உள்ளத்திலிருந்து வாழ்த்தினேன்.

அப்பா குறை கூறத்தொடங்கினார். "எல்லோரும் வீட்டைவிட்டுப் போவதும் பிரச்சனைகள் வந்ததும் மீண்டும் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு திரும்பி வருவதும் வழமையாகிவிட்டது." இன்றும் அந்தச் சொற்கள் ஏதோ நேற்றுச் சொன்னது போல எனக்கு ஞாபகமிருக்கிறது. அவரது மடைமைக்கும் குழந்தைகளை விளங்கிக் கொள்ள முடியாத தன்மைக்கும் எதிராக என்னால் தலையை ஆட்டி அதிருப்தியைத் தெரிவிக்கத்தான் முடிந்தது. அதுவும் அவரின் முதுக்குப் பின்னால்.

குழந்தைப் போராளி - 15


முதலாவது தப்பித்தல் முயற்சி

னது நிலைமை மேலும் மேலும் மோசமாகிக்கொண்டே போனது. சிற்றன்னையின் குற்றச்சாட்டுகள் ஓயந்தபாடில்லை. அப்பாவின் சித்திரவதைகள் நான் அங்கயீனமானவளாகப் போய்விடுனோ என அஞ்சுமளவுக்கு மோசமாகத் தொடர்ந்தன. நிலைமை இவ்வாறாகிப் போனதால் நாட்களைக் கவனமாக ஓட்டுவது மட்டுமின்றி, எனது மனதைத் திடமாக வைத்துக்கொள்ளவும் நான் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. நாளாக நாளாகச் சிற்றன்னையின் வெறுப்பு வளர்ந்து கொண்டே போயிற்று. எனது தம்பியைப் பொறுத்த வரையில் என்னுடன் ஒப்பிடுகையில் அவனின் நிலைமை நன்றாகவேயிருந்தது.

ஒருநாள் நான் எனது புத்தகப் பையைத் தொலைத்துவிட்டேன்.மதிய உணவுக்காக வீட்டுக்குச் சென்றிருந்தபோது அதைப் பாடசாலையிலேயே விட்டுவிட்டுச் சென்றிருந்தேன். திரும்பி வந்ததும் குழப்பத்துடன் அங்குமிங்கும் அதைத் தேடினேன். புத்தகப் பை கிடைக்கவேயில்லை. பயம் என்னைக் கவ்விக் கொண்டது. புத்தகப் பையின்றி வீடு சென்றால் என்ன நடக்குமென்பது எனக்குத் தெரியும். மற்ற மாணவர்களெல்லோரும் வீடு சென்றுவிடப் பயப்பிராந்தியுடன் அழுது கொண்டே பாடசாலையிலிருந்து வெளியே வந்தேன். அழுகை எனக்கு உதவப் போவதில்லை. வீடு செல்லத் துணிவில்லாமல் அங்கேயே நின்றேன்.

மாலையாகியிருந்தது, வீட்டில் என்ன நடக்குமென்பதை மனக்கண்ணில் பார்த்துக் கொண்டேன். திடீரென எனது சினேகிதி ரெகேமாவின் ஞாபகம் வந்தது. அவள் தனது சித்தப்பாவின் வீட்டில் தங்கிப் படித்து வந்தாள். நான் அவளைத் தேடிப் போய்க்கொண்டிருக்கையில் வழியிலேயே அவளைச் சந்தித்தேன். அவளிடம் எனக்கு உதவி செய்யுமாறு கெஞ்சினேன். அவளென்னை வாழைத்தோட்டத்தினுள் ஒழிந்திருக்குமாறும், வாய்ப்பு வரும் போது என்னைத் தனது அறையினுள் கூட்டிச் செல்வதாகவும் சொன்னாள். நான் நீண்டநேரமாக வாழைத்தோட்டத்தினுள் ஒழிந்திருந்தேன்.இறுதியாக அவள் வந்து தனது அறைக்கு என்னைக் கடத்திச் சென்றாள். அவளது அறை ஆட்டுப் பட்டியை ஒட்டியிருந்தது. அவளால் சிறிது உணவையும் தேடிக்கொள்ள முடிந்திருந்தது. நாங்கள் சாப்பிடத் தொடங்கும் போது அவளின் சித்தப்பா அவளைக் கூப்பிட்டார். அவள் தான் திரும்பி வரும் வரை சாப்பிட வேண்டாமெனக் கூறி விட்டுச் சென்றாள். அவர்களின் வீட்டிற்குத் திடீர் விருந்தினர்கள் வந்திருந்தார்கள். அவர்கள் ரெகேமாவின் அறையில் அன்றிரவு தூங்கப் போகின்றார்கள். எனவே ரெகேமா என்னை ஆட்டுப் பட்டிக்கு மாற்றினாள். அதிகாலையில் மற்றவர்கள் தூக்கத்திலிருந்து விழிப்பதற்கு முன்னதாகவே ரெகேமா ஆட்டுப் பட்டிக்கு வந்து என்னை எழுப்பிவிட்டாள்.பதற்றத்துடன் எழுந்த நான் அவளை மிகவும் நேசிப்பதாகச் சொன்னேன்.

பற்றைக் காடுகளுக்குப் போவதென்று முடிவெடுக்கும் வரை வாழைத்தோட்டத்தில் அலைந்து திரிந்தேன். பசி வயிற்றைப் பிறாண்டத்தொடங்கியது. பிச்சையெடுக்கலாம் என்ற முடிவைச் சற்றுத் தள்ளிவைத்தேன். பிரதான சாலை மிக அருகாமையிலேயே இருந்தது. அங்கு சென்று கார்களை எண்ணத் தொடங்கினேன். எனது வயிறு பசியில் உறுமுவதை எனது செவிகள் கேட்காதிருக்க ஒரு தந்திரம் செய்தேன். எனக்குத் தெரிந்த பாடல்களையெல்லாம் உரக்கப் பாடினேன். தோல்விதான் கிடைத்தது. பாடுவதைக் கைவிட்டு மல்லாந்து படுத்துக்கொண்டே எனது சக்திகளை எல்லாம் திரட்டி என் உண்மையான தாயாரை உருவகப்படுத்தும் முயற்சியில் இறங்கினேன். அதுவும் சரிவரவில்லை. வயிற்றின் கூப்பாடு பெருகிக்கொண்டே போகச் சாலையோரத்தில் நின்று கையை நீட்டிப் பிச்சை கேட்க ஆரம்பித்தேன். யாருமே என்னைக் கவனிக்கவில்லை. பழுப்பு நிறக் காரொன்று என்னருகில் வந்து நின்றது. காரை நிறுத்திய மனிதர் நான் ஏன் பிச்சையெடுக்கின்றேன்? எனக் கேட்டார். நான் நடந்தவற்றைக் கூற அவர் கொஞ்சம் சில்லறைகளைத் தந்துவிட்டு அவர் திரும்பி வரும்வரை என்னை அங்கேயே காத்திருக்கச் சொன்னார். அவர் போனவுடனேயே ஓடிச் சென்று வாழைப்பழங்களையும் சிறிய பிஸ்கட்டுகளையும் வாங்கி வந்து அமைதியான ஓரிடத்தில் உட்கார்ந்துகொண்டு சாப்பிடத் தொடங்கினேன். வாழைப்பழத்தின் தோல்களைச் சாப்பிடும் தேவையின்றியே எனது பசி அடங்கிற்று. புல்லில் கைகளைத் துடைத்துக் கொண்டே மீண்டும் வீதிக்கு வந்து அந்த மனிதருக்காகக் காத்திருந்தேன். அந்த மனிதரிடம் அப்பாவின் பெயரையும் அவர் எங்கு வேலை செய்கிறார் என்பதையும் நான் சொல்லியுள்ளேன் என்பது என் மண்டையில் திடீரென உறைத்தது. உடனே மீண்டும் ஓங்கி வளர்ந்த புற்களினூடு புகுந்து தலை தெறிக்க ஓடினேன்.இறுதியாகப் பெரிய மைதான மொன்றை வந்தடைந்தேன். இங்கு யாரும் என்னைத் தேடி வர முடியாது.

சூரியன் உச்சிக்கு வந்து விட்டான். நான் வெயிலில் மயங்கி விழக்கூடிய தருணம் வெகு தூரத்திலில்லை. வீடுவீடாகச் சென்று வேலை தேடாலாமென முடிவெடுத்தேன். எங்கெல்லாம் சென்றேனோ அங்கெல்லாம் எனது வயதையும் அப்பாவின் பெயரையும் கேட்டார்கள். நாளோ முடிந்து விடும் போலிருந்தது. நானும் எல்லா வீட்டுக்கதவையும் தட்டிவிட்டேன். யாருமே எனக்கு வேலை கொடுக்கவில்லை.

மெல்ல மெல்ல வானம் இருளத் தொடங்கியது. நான் நீதிமன்றத்திற்கு முன்னால் நின்றிருந்தேன். நீதிமன்றம் தூங்கவதற்கு பொருத்தமான இடமில்லைத் தான், ஆனால் நண்பி வீட்டிலோ விருந்தினர்கள். எனவே இங்கேயே தூங்கிவிட வேண்டியதுதான் எனத் தீர்மானித்தேன். பாடிக் கொண்டே தூங்கிப் போனோன் திடீரென்று விழிப்புத் தட்டி நான் குழப்பத்துடன் சுற்றும் முற்றும் பார்த்த போது இரவு பிரச்சினையின்றியே கழிந்து போனதெனத் தெரிந்துகொண்டேன்.

நீதிமன்றக் கட்டிடம் ஆற்றங்கரையிலேயே அமைந்திருந்தது. ஆற்றில் மிதந்து வந்த குளிர் காற்று என் சோம்பலை முறித்தது. ஆடுகளின் நாற்றம் என் உடலிலிருந்து வீசியதால் ஆற்றில் குதிக்கத் தான் ஆசையாக இருந்தது. நீச்சல் தெரியாததால் ஆற்றில் கல்லெறிந்து என்னைத் தணித்துக்கொண்டேன். ஆற்றங்கரையோரமாக நடந்து சென்றுகொண்டிருந்த போது சிறிய வீடொன்று என் கண்ணிற் பட்டது. எனது அதிர்ஷ்டத்தைக் கடைசியாக ஒரு தடவை பரிசோதித்துப் பார்த்துவிடலாமென நினைத்தேன். அந்த வீட்டு வாசலில் கொஞ்ச நேரம் தயங்கி நின்றுவிட்டுப் பின் துணிவை வரவழைத்துக்கொண்டு கதவைத் தட்டினேன்.

"உள்ளே வரலாம்" எனக் குரல் கேட்டது. கதவு திறந்து கொண்டது.

அந்த வீடடிலிருந்த மனிதர் சிரித்துக்கொண்டே என்னை வீட்டிற்குள்ளே அழைத்துச் சென்றார். அவரும் மற்றவர்கள் மாதிரியே என் பெயர், வயது, ஊரை விசாரித்தார். ஆனால் மற்றவர்கள் மாதிரியல்லாமல் அவரென்னை வீட்டினுள் அழைத்து உட்கார வைத்து விசாரித்ததால் என்னால் முடிந்தவரை அவரின் கேள்விகளுக்கு நான் பதில் சொன்னேன். "எனது மனைவி வீடு திரும்பும்வரை நீ இங்கேயே காத்திரு" என அவர் சொன்னதும் நான் அவரிடம் கேள்விகளைக் கேட்கத் தொடங்கினேன். "நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?" எனக் கேட்டேன். "வைத்தியர்" என்று பதில் வந்தது.

"ஏன் வேலைக்குச் செல்லவில்லை?"

"கால்களில் சிறு பிரச்சினை.. நான் பிறந்ததிலிருந்தே இந்தப் பிரச்சினையுள்ளது. அதனால் சிறிது ஓய்வெடுத்துக் கொள்கிறேன்."

"என்ன சொல்கிறீர்கள்? என்னைப் போலத் தானே இரண்டு கால்கள் உங்களுக்கும் உள்ளன."

"உண்மை தான் ஆனால் எனது ஒரு கால் மற்றக் காலை விடச் சின்னது."
"எந்த ஆஸ்பத்திரியில் வேலை செய்கிறீர்கள்?"

"எதற்காகக் கேட்கிறாய்?"

"எனது அப்பாவோ அல்லது சிற்றன்னையோ உங்களது ஆஸ்பத்திரிக்கு வந்தால் அவர்களுக்குப் பெரிய ஊசியாகக் குத்துங்கள். அவர்களும் ஒரு தடையாவது அழுது குழற வேண்டும்."

அவர் மெதுவாகத் தலையாட்டிக்கொண்டே என்னை உற்றுப் பார்த்தார். சிறிது நேரம் ஒன்றுமே பேசாமலிருந்த அவர் பின்பு "நீ உன் தந்தையை நேசிக்கிறாயா? எனக் கேட்டார்.

"ம்.. ஆனால் அவர் என்னை நேசிக்கவில்லை."

"உனது அப்பா இறந்துவிட்டால் நீ அழுவாயா?"

"இல்லை, அப்பாவும் சிற்றன்னையும் சேர்ந்து இறந்தால் அழ மாட்டேன், அப்பா மட்டும் இறந்து அவளிருந்தால் அழுவேன்."

எங்களது பேச்சு தடைப்பட்டது. அவரது மனைவி கையில் ஒரு குழந்தையுடன் வந்தார். அதுவொரு ஆண் குழந்தையாக இருக்க வேண்டும். அந்தப் பெண் எனது சிற்றன்னையைப் போலவே இருந்ததால் என்னைத் தனது குழந்தையைப் பார்த்துக் கொள்ளச் சொல்வார் என எண்ணினேன். அந்த எண்ணமே எனக்கு எரிச்சலூட்டியது. அவரெனக்கு வாழ்த்துச் சொல்ல நானும் எரிச்சலுடன் அவருக்குப் பதில் வாழ்த்துச் சொன்னேன். நான் வாழ்த்துச் சொன்ன தொனி அந்தப் பெண்ணுக்கு வருத்தத்தைக் கொடுத்திருக்க வேண்டும். அவர் மெதுவாக என்னைத் தொட்டு "ஏதாவது பிரச்சினையா?" எனக் கேட்டார்.

"இல்லை.. நான் உங்களது குழந்தையைப் பார்த்துக் கொண்டிருந்தேன்"

"குழந்தைகளென்றால் உனக்குப் விருப்பமா?"

"ம்.."

கணவனும் மனைவியும் என்னை வரவேற்பறையில் விட்டுவிட்டு உள்ளே ஆலோசனைக்காகச் செல்ல அவர்கள் என்ன முடிவெடுக்கப் போகிறார்களோ என்ற பதற்றத்துடன் காத்திருந்தேன்.

அந்தப் பெண் வெளியே வந்து என்னை அப்பாவிடம் தான் அழைத்துச் செல்வதாகக் கூற நான் ஒன்றும் சொல்லாதிருந்தேன். அது கட்டளையா அல்லது கேள்வியா என என்னால் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவரது கண்களைப் பார்த்தவாறே "உங்களது கணவர் என் அப்பா பற்றி ஒன்றும் உங்களிடம் சொல்லவில்லையா?" என வாய்க்குள் முணுமுணுத்தேன். பின் உரக்க "எனது அப்பாவிடம் உங்களுக்குப் பயமில்லையா?" எனக் கேட்டேன். அவர் சிரிப்பை மட்டுமே பதிலாகத் தந்தார். அன்றிரவு அழகிய படுக்கை அறையில் மிருதுவான மெத்தையில் தூங்க எனக்கு அனுமதி கிடைத்தது. எனினும் அந்தப் பெண்ணின் சிரிப்பு எனக்குக் குழப்பத்தை விளைவித்தது. நாளை எனக்கு எப்படி விடியப் போகிறது?

காலையில் எழுந்து பதற்றத்துடனும் எதிர்பார்ப்புடனும் வரவேற்பறையில் உட்கார்ந்திருந்தேன். அந்தப் பெண் படுக்கையறையிலிருந்து வெளியே வந்தார். என்னைக் கடந்து சமையலறைக்குச் சென்றவர் அங்கிருந்தபடியே "தேனீர் வேண்டுமா?" எனக் கேட்க தலையாட்டி மறுத்தேன். அவர் தனது கையிலொரு கோப்பையுடன் வந்து என்னருகே உட்கார்ந்து கொண்டார். எனக்கு வயது குறைவாக இருப்பதால் என்னை வேலைக்கு வைத்துக்கொள்ள முடியாதெனச் சொன்னார். "உனக்கு ஒரு குடும்பமுண்டு, அதனால் நீ உன்னுடைய வீட்டிற்குத் திரும்புவது தான் நல்லதென நாங்களிருவருமே நினைக்கின்றோம்." வீடு திரும்புவது பற்றி நான் பேசவே விரும்பவில்லை. "எனக்குச் சம்பளமே வேண்டாம், வேலைக்கு வைத்துக்கொள்கிறீர்களா?" எனக் கேட்டேன். ஆனால் அவரோ " நீ மனவுறுதி கொண்டவளாக இருக்கவேண்டும், அடி உதைகளுக்கு நீ பயப்படக்கூடாது, அது மட்டுமல்லாது நீ உனது சிற்றன்னையிடம் தோற்றுவிடக்கூடாது, நீ தொடர்ந்து படிக்க வேண்டும், உன்னை என் வீட்டில் வைத்துக்கொண்டால் அது எந்த வகையிலும் நான் உனக்கு உதவுவதாக இருக்காது, நீ உன் குடும்பத்தைப் பிரிந்து தனியாக நிற்பதில் எனக்குச் சம்மதமில்லை." எனச் சொல்லி முடித்தார்.

நான் இங்கு இருப்பது சாத்தியமில்லை என எனக்குத் தெளிவாகவே விளங்கிவிட்டது. அழுத கண்ணும் சிந்திய மூக்குமாக நான் அந்தப் பெண்ணின் முன்னே நின்றேன். ஓர் அதிசயம் நடந்து அவரென்னை இங்கேயே தங்கிவிடச் சொல்லமாட்டாரா எனத் தவித்தேன். என்னிடம் எனது ஆடைகளையும் பொருட்களையும் வைத்திருக்கும் ஒரு பையாவது இருந்திருந்தால் நான் உடுப்புக்களை அடுக்கும் சாட்டிலாவது சிறிது தாமதித்திருக்கலாம். இப்போதோ நான் உடனடியாகவே புறப்பட வேண்டியிருந்தது. நான் இன்னும் கொஞ்ச நேரம் அங்கே இருப்பதற்கான உபாயங்களைத் தேடத் தொடங்கினேன். பாத்திரங்களைக் கழுவி வீட்டைச் சுத்தம் செய்வதாக அவரிடம் கூறினேன்.
"கட்டாயமல்ல, அதைச் செய்வதில் உனக்கு மகிழ்ச்சியென்றால் செய்யலாம்" எனச் சொன்னார். உடனடியாக வேலையைத் தொடங்கினேன். என் எண்ணங்களை ஒழுங்குபடுத்த வேலை உதவியது. வேலைகளை முடித்துக்கொண்டு நான் புறப்படும் போது அவர் எனக்குக் கொஞ்சப் பணம் தந்து "இது உனக்கு ஏதேனுமொரு வகையில் உதவலாம், கவனமாகப் போ!" எனச் சொன்னார். என் தொண்டையிலிருந்து எந்தச் சொல்லுமே வெளியே வரவில்லை. மெளனமாக அங்கிருந்து வெளியேறினேன்.

எங்கு செல்வதென்று எனக்குத் தெரியவில்லை. எங்களது வீடிருந்த பகுதிக்கு எனது கால்கள் தாமாகவே வந்த போது வழியிலே எனது சகோதரர்களைக் கண்டேன். அவர்கள் என்னை கண்டதால் தங்களுக்கு மகிழ்ச்சி என்றுதான் காட்டிக் கொண்டார்கள். அது எனக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. காலை உணவின் போது நான் அவர்களுக்குப் பரிமாறுவேன். நானில்லாததால் அவர்களுக்கு அந்தப் பணிவிடை கிட்டியிருக்காது. அதனாலேயே நான் திரும்பி வந்ததால் அவர்கள் மகிழ்கிறார்களோ? நான் எடுத்த எடுப்பிலேயே "அப்பா என் மீது கோபமாக இருக்கிறாரா?" என அவர்களிடம் கேட்டேன். "இல்லை... அவர் உனக்கு அடிக்க மாட்டார்." எனச் சொன்னார்கள். அவர்கள் என்னை பயப்படவேண்டாமெனச் சொன்னாலும் என்னால் அதை நம்ப முடியாதிருந்தது. அவர்கள் என்னை வீட்டிற்கு கூட்டிச் செல்வதில் ஆர்வமாக இருந்தபடியால் என்னை வீட்டிற்கு அழைத்து வரச் சொல்லி அவர்களிடம் அப்பா உத்தரவிட்டிருப்பாரோ என நினைத்துப் பார்த்தேன். ஒரு தம்பி தான் வீட்டிற்குச் சென்று சிற்றன்னையிடம் பிரச்சனையின்றி நான் வீட்டிற்கு வரலாமா எனக் கேட்டு வருவதாகச் சொன்னான். போன வேகத்திலேயே அவன் திரும்பி வந்தது எனக்குச் சந்தேகத்தினை வரவழைத்தது. ஆனாலும் எனக்கு வேறு வழியேது? நான் ஒரு பிச்சைக்காரியைப் போன்றவள். இரக்கத்தை யாசித்து நிற்பவள்.

சிற்றன்னை அமைதியாகவே காணப்பட்டார். எனது விளக்கங்கள், முக்கியமாக மன்றாட்டங்கள் அவருக்குத் திருப்தியளித்திருக்க வேண்டும். தான் அப்பாவைச் சமாதானப்படுத்துவதாக என்னிடம் சொன்னார். சிற்றன்னை குத்தி முறியாதபடியால் அவரை நான் நம்பினேன். அப்பா மதியத்திற்குப் பின் வீட்டிற்கு வருவதாயிருந்தது. நான் அவரின் கேள்விகளுக்காக என்னைத் தயார்படுத்திக் கொண்டேன். ஒரு தகப்பனாக நான் திரும்பி வந்ததற்காக அவர் சந்தோசப்பட்டு வீட்டில் என்னை இருக்க அனுமதிக்கலாமென நினத்துக் கொண்டேன். ஆனால் இந்த நம்பிக்கை பொய்த்துப் போயிற்று. அப்பா வந்ததும் வராததுமாக மூர்க்கத்துடன் ஒரு சடப் பொருளைக் கையாளுவது போல என்னைத் தூக்கித் தரையில் அடித்தார். எந்தக் கேள்வியும் என்னிடம் கேட்கப்படவில்லை. எந்த விளக்கமும் அளிக்க எனக்கு அவகாசம் தரப்படவில்லை. எல்லாமே மிக விரைவாக நடந்தேறியது. எனக்கு மீண்டும் சுய நினைவு வந்தபோது எனது முகத்தில் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. நான் அறையில் வைத்துப் பூட்டப்பட்டிருந்தேன். நான் இருள்வெளியிற் கிடந்தேன். என் மனமும் இருண்டு கிடந்தது.

அடிபட்டதில் ஒரு கண் வீங்கி மூடிக்கொண்டது. அது என்னைக் கவலைப்பட வைத்தது எப்போதுமே அடிகள் விழும்போது என் கண்களைப் பாதுகாப்பதில் நான் மிகக் கவனமாயிருப்பேன். எனது சட்டையில் ஒரு துண்டைக் கிழித்தெடுத்து முகத்தில் வடிந்த இரத்தத்தில் நனைத்துக் கண்ணில் கட்டிக் கொண்டேன். இது என் கண்ணைத் திறக்க உதவுமென நம்பினேன். விலாப் பகுதியில் வலி எடுத்ததால் பயந்து அலறினேன். அப்பா ஒடி வந்து என்னைக் கண்டதும் அதிர்ச்சியில் உறைந்து நின்றார். "கடவுளே" எனக் கூவிக்கொண்டே எனது உடைகளைக் களையச் சொன்னார். என்னைக் குளியலறைக்குக் கூட்டிச் சென்று சுடுநீரால் என் இரத்தத்தைக் கழுவினார். அவரது முகத்தில் கவலையைக் கண்டதும் தான் விலாப்பகுதியில் வலியெடுப்பது பற்றிக் கூற எனக்குத் தைரியம் வந்தது. எனது உடல் முழுவதும் கன்றிப் போயிருந்தது. நாளை என்னை அவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதாகச் சொன்னார். அங்கு என்னைக் கேள்வி கேட்டால் எப்படிப் பதில் கூற வேண்டுமென்றும் சொல்லித் தந்தார். இந்த முறை மரத்திலிருந்து தவறிக் கீழே விழுந்து விட்டேனென்று சொல்ல வேண்டுமாம். பின்பு நாங்கள் கடைக்குச் சென்று எனக்குப் புதிய சப்பாத்துக்கள் வாங்கலாமாம்.

இரவு முழுவதும் நான் அழுதுகொண்டேயிருந்தேன். அந்த இரவில் அடி உதைகளை நினைத்து நான் அழவில்லை. அப்பாவின் அன்பான வார்த்தைகளை நினைத்து, என்றுமே இல்லாதவாறு என் மீது பரிவு காட்டியதை நினைத்து அழுதேன். அழுதுகொண்டே தூங்கிப்போனேன்.

நான் தூக்கம் கலைந்து எழுந்தபோது உடல் முழுவதும் வலித்தது. எழ முயற்சித்தேன், ஆனால் என்னால் அசையவே முடியவில்லை. அப்பா வந்து எனது நெற்றியைத் தொட்டுப் பார்த்தார். வெளியே போனவர் சிறிது நேரத்தில் ஒரு வைத்தியருடன் திரும்பி வந்தார். வைத்தியர் என்னைப் பரிசோதித்து விட்டு உடைந்து போன விலா எலும்புகளைச் சரிப்படுத்த என்னை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்ல வேண்டும் எனச் சொன்னார். அப்பா வைத்தியரை யோசனையுடன் பார்த்தார். பின்பு ஆஸ்பத்திரியில் என்ன சொல்ல வேண்டுமெனக் கேட்டார்.

"இந்தப் பிரச்சனையைத் தீர்க்க ஒரு வழியுண்டு, ஆனால் அதற்குக் கொஞ்சம் பணம் செலவாகும்"

"எவ்வளவு செலவாகும்?"

"நிலைமை மோசமாய் இருப்பதால் என்னால் எவ்வளவு என்று சொல்ல முடியாது, ஆனால் என் நண்பனொருவன் அங்கு வேலை செய்கின்றான், அவனால் இந்தச் சிறுமியை மீண்டும் சரியாக்க முடியும்."

நான் குணமடைந்த பின்பு அப்பா என்னைக் கடைக்கு அழைத்துச் சென்றார். என் வாழ்வில் முதன் முறையாக என்னால் சந்தோசத்தைத் தாங்க முடியாது போயிற்று. அப்பா கை நிறைய மிட்டாய்களை வாங்கித் தந்தார். எனது சந்தோசம் நீடிக்கவில்லை. அப்பா போனதும் சிற்றன்னை என்னை வீட்டைவிட்டு வெளியே துரத்தி மிட்டாய்களைச் சாப்பிட்டு முடிக்காமல் வீட்டுக்குத் திரும்பி வரவேண்டாமெனக் கட்டளையிட்டார். மாஹி சொன்னது தான் நினைவுக்கு வந்தது "இந்தப் பெண் தனது வெறுப்பைத் தனது சவக்குளி வரை எடுத்துச் செல்வாள்"

குழந்தைப் போராளி - 14


கோடை விடுமுறை

கோடைகால விடுமுறைக்காகப் பாடசாலை மூடியவுடன் அப்பா புதிய பண்ணைக்குப் பாட்டியுடன் விடுமுறையைக் கழிக்க எங்களைக் கூட்டிச் சென்றார். பிரயாணத்தின் போது அப்பா ரிச்சட்டிற்கு ஒரு குட்டிப் பிரசங்கமே நிகழ்த்தி விட்டார். ரிச்சட் பெரியவனாகி விட்டதாகவும் இனி அவன் எங்களைக் கவனித்துக் கொள்ள வேண்டுமென்பதுவும் அவரின் நியாயங்கள். ரிச்சட்டின் வயதிலே அவர் பல பொறுப்புக்களை ஏற்றிருந்ததாகவும் கூறினார். நானும் ரிச்சட்டும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.
நாங்கள் பண்ணயை அடைந்தது அப்பாவின் தலைக் கறுப்பு மறைந்ததுமே நாங்கள் மெதுவாக நழுவினோம். ரிச்சட் தேனெடுக்கப் போவோமெனச் சொன்னான். மாஹி "முதலில் நாங்கள் பிளாஸ்டிக் பைகளைச் சேகரித்துக் கொண்டால் தான் தேனீக்களின் தாக்குதல்களிலிருந்து தப்பிக்கலாம் அத்துடன் நெருப்புக் குச்சிகளும் ஒரு கத்தியும் தேவை" என்றாள். எல்லாவற்றையும் சேகரித்துக் கொண்டு காட்டை நோக்கிச் சென்றோம் .நிலவு மாத்திரமே எங்கள் பாதையில் வெளிச்சத்தைத் தீற்றிக்கொண்டிருந்தது. கடுமையான தேடலுக்குப் பின்பாக ஒரு தேன் கூட்டைக் கண்டு பிடித்தோம். தேனீக்கள் மூர்க்கமாக எங்களை எதிர் கொண்டன. தலையை மூடி நாங்கள் போட்டிருந்த பிளாஸ்டிக் பைகளில் சரமாரியாக வந்து கொட்டின. பயத்தினால் எனக்கு வியர்வை வழிந்தோடத் தொடங்கியது. தேனீக்களை எதிர்கொள்ளத் தேவையான அளவு புகையை உருவாக்குவதில் நாங்கள் முனைந்திருந்தோம். அதிர்ஷ்டவசமாக அதில் நாங்கள் வெற்றியும் பெற்றோம். எங்கள் கண்களின் முன்னே தேனடைகள். ஆனால் எங்களது அதிர்ஷ்டம் தொடரவில்லை. தேனடை முழுக்கச் சிறிய புழுகள் ஊர்ந்து கொண்டிருந்தன. நாங்கள் பெருத்த ஏமாற்றத்துடன் வீடுதிரும்பினோம்.

இரவு உணவிற்காகப் பாட்டி பால் காய்ச்சிகொண்டிருந்தார். எங்களைத் திரும்பிப்பார்த்து விட்டு ஒன்றுமே பறையாமல் மெளனமாயிருந்தார். ஒன்றில் அவருக்குக் கோபம் எல்லை மீறியிருக்கவேண்டும், அன்றேல் இனி அவரால் ஒன்றுமே செய்ய முடியாததென்று அவர் நினத்திருக்கவேண்டும். ஓர் அழகிய சிறிய வெற்றி! பாலைக் குடித்த பின்பு பாட்டிக்கு இரவு வணக்கம் கூறிவிட்டுப் படுக்கைக்குப் போனபோது சிரிப்பு எங்களின் உதடுகளில் விளையாடிக்கொண்டிருந்தது. அப்பா சென்ற பின்பு அதிகாரத்தை நாங்கள் கைப்பற்றிக் கொண்டோமென மகிழ்ந்து போனோம்.

காலையில் பால் கறப்பதற்கு மாஹி வேலையாட்களுக்கு உதவி செய்தாள். நானும் ரிச்சட்டும் கன்றுகளைப் பார்த்துக்கொண்டோம். பால் கறப்பு முடிந்ததும் ஐந்து நாய்களையும் கூட்டிக்கொண்டு நாங்கள் முயல் வேட்டைக்குக் கிளம்பினோம். துரிதமாகவே நாய்கள் முயல்களைக் கண்டுகொண்டன. முயல்களை நாய்கள் துரத்த நாங்களும் நாய்களின் பின்னே தொடர்ந்து ஓடினோம். முயலொன்று வேகமாகச் சென்று ஒரு பொந்தினுள் புகுந்து கொண்டது. ஒரு நாயைப் பொந்தின் மறுபுறத்தில் காவல் வைத்துவிட்டுப் பொந்தைத் தோண்டத் தொடங்கினோம். திடீரென பொந்தின் மறுபகுதியில் வெளிப்பட்ட முயல் மின்னல் வேகத்தில் நாயின் கால்களிடையே புகுந்து வேகமாக ஓடியது. மீண்டும் பழையபடி துரத்துதல் ஆரம்பமானது. ஓரு பெரிய சாகசத்தின் பின்பு நாய் முயலைப் பிடித்துவிட்டது. முயலை நெருப்பிலே வாட்டி நாய்களுக்குக் பிய்த்துப்போட அவை தமக்குள் சண்டைபோட்டுக் கொண்டே தின்றன. நாங்கள் முயலைச் சாப்பிடவில்லை. முயல் வேட்டை தான் எங்களுக்குப் பிடித்தமானது.

முடிவில் சகோதரர்கள் எல்லோரும் நெருப்பைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு எங்களுக்கு உடுத்திக் கொள்ள உடுப்புகள் குறைவாகவே இருப்பது பற்றியும் பணத்தை எவ்வாறு சம்பாதித்துக் கொள்ளலாமெனவும் பேசிக் கொண்டோம். ரிச்சட் ஒரு பசுவை விற்கலாமென்றான். மாஹி நாங்கள் பால் விற்கலாமென்றாள். எனக்கு வேறொன்றும் யோசனை தோன்றாததால் நான் மாஹியின் திட்டத்தை ஆதரித்தேன்.
நாங்கள் வீடு திரும்பியபோது போது பாட்டி கையில் தடியுடன் நின்றார். "நாள் முழுக்க எங்கே போய்த் தொலைந்தீர்கள்?" எனக் கோபமாகக் கேட்டார். மாஹி ஒன்றுமே சொல்லாது பாட்டியைக் கடந்து சென்றாள். பாட்டியைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். அத்துடன் பாட்டி பற்றிய பயம் மாஹியை விடக் கூடுதலாகவே எனக்குண்டு. அனுபவம் தந்த பாடத்தால் நான் அங்கேயே நின்றேன். தனது முலையொன்ன்றைப் கையிலெடுத்து அதை வானை நோக்கிப் பிடித்துக் கொண்டே பாட்டி மாகியை நோக்கி "இந்த முலையில்தான் உன் தகப்பன் பால் குடித்தான், இந்த முலையால் நானுக்குச் சாபமிடுகின்றேன்" என்று கத்தினாள்.தொடர்ந்து பாட்டி மாஹியைப் பார்த்து "நீ வீட்டைவிட்டு ஓடி வீதிகளில் அலைந்து திரிந்து தெருவிலேயே செத்துக் கழுகுகளுக்கு இரையாவாய்!" எனச் சாபமிட்டார். அவரது வற்றியுலர்ந்த முலையைப் பார்த்து நான் தலையைக் குனிந்து கொண்டேன். மாஹியோ பெரிதாகச் சிரித்துக்கொண்டே பாட்டியின் சாபத்தைத் தான் கணக்கில் எடுக்கவேயில்லை எனக் கூறினாள்.அடுத்த நாள் எங்கள் திட்டத்தை நிறைவேற்றுவதென முடிவெடுத்துக்கொண்டோம்.

காலையில் மாஹி கறந்த பால் எல்லாவற்றையும் வீட்டின் பின்னால் உயர்ந்து வளர்ந்திருந்த புற்களிடையே நாங்கள் ஏற்கனவே மறைத்து வைத்திருந்த பாத்திரத்திற்குள் ஊற்றி வைத்தோம். காலை ஒன்பது மணியளவில் பிரதான வீதிக்கு அதனைக் கொண்டு வந்து சேர்த்தோம். அங்கு ஒரு லொறிச் சாரதிக்குப் பாலை விற்றக் கூடியதாயிருந்தது. பணத்தை எங்களில் மூத்தவளான மாஹியிடம் கொடுத்தோம். மறு நாள் காலையில் மீண்டும் வீதிக்கு வந்து அவளை ஒரு மினி ரக்சியில் ஏற்றி அனுப்பிவிட்டு, அவளுக்காகக் காத்திருந்தோம்.

வெகு நேரம் கழித்து ஒரு நீலநிற வண்டி சாலையோரத்தில் வந்து நின்றது. மாஹி ஒரு சிறிய பையுடன் கீழே இறங்கி நடந்து வந்தாள். அவள் தனது புதிய அழகிய பாவாடையிலும் குதி உயர்ந்த காலணிகளுடனும் மிகக் கவர்ச்சியாயிருந்தாள். அவளின் நடையில் ஒருவித போலித்தனம் தொற்றியிருப்பதையும் நாங்கள் கண்டுகொண்டோம். " எங்களுக்கான ஆடைகள் எங்கே?" என நாங்கள் கேட்டவுடன் மாஹி தன் பையினுள் கைவிட்டு இனிப்பு வகைகளையும் கேக்குகளையும் எடுத்து எங்களுக்குப் பகிர்ந்து தந்து விட்டுப் "பணம் எல்லாம் தீர்ந்து விட்டது" எனச் சொன்னாள். பின்பு சாலையின் மத்தியில் சென்று தலையைக் குனிந்து வணங்கிவிட்டு முன்னேயும் பின்னேயும் நடக்கத் தொடங்கினாள் "நான் ஒரு 'மொடல்' போல இருக்கிறேனல்லவா?" என அவள் கேட்டாள்.எனக்கு கெக்களமிட்டுச் சிரிக்கத்தான் தோன்றியது. அவள் அப்போதுதான் பிறந்த கன்றுக் குட்டியைப் போல நேராக நடக்க முடியாது தடுமாறிக்கொண்டிருந்தாள். நானும் தம்பியும் இனிப்புகளைச் சாப்பிடுவதற்குத் தொடங்கியபோது மாஹி "நானும் இதுவரை ஒன்றும் சாப்பிடவில்லை" என்றாள். எனக்கும் தம்பிக்கும் வெறுத்துப் போய் விட்டது. தனக்கு மாத்திரம் உடுப்பும் சப்பாத்துக்களும் வாங்கிவிட்டு இப்போது எங்களிடம் இனிப்புகளையும் கேட்கிறாள். வீடு திரும்பியதும் அவளைப் பாட்டியிடம் காட்டிக்கொடுக்கப் போவதாக் கோபத்துடன் மிரட்டினோம். இப்போது அவளது கண்களில் பயம் குடிகொள்ளத் தொடங்கியது. அவள் மன்னிப்புக் கேட்டுக்கொண்டாள். ஆனால் நாங்களோ விடாப்பிடியாகச் சொன்னதைச் செய்தோம்.

வீட்டிற்கு வந்தவுடனேயே கொள்ளியை வைத்துவிட்டோம். பாட்டி ஆத்திரத்தில் கத்திக் கொண்டும் துள்ளிக் குதித்துக் கொண்டுமிருந்துவிட்டு முடிவில் வேலையாள் ஒருவரைக் கூட்டிவருமாறு என்னை ஏவினார். வேலையாள் உடனடியாகவே அப்பாவிற்கு செய்தி கொண்டு செல்லுமாறு பணிக்கப்பட்டார். மாஹியும் ஹெலன், கிறேஸ் போலவே வீட்டைவிட்டு ஓடிவிட முடிவெடுத்துவிட்டாள். அன்றிரவே அவள் போவதாகத் தீர்மானித்தாள். நாளைக் காலையில் அப்பா வரும்போது அவள் இங்கிருக்கப் போவதில்லை. இன்னுமொரு சகோதரியையும் இழப்பதை நினைக்க எனக்கு அழுகை வந்தது. அவளது முடிவை மாற்றிவிட நான் முயற்சி செய்தேன். எனது சகோதரனும் அவளைப் போக வேண்டாமெனக் கெஞ்சினான். நாங்களிருவரும் மாஹி திருடியதாகப் பொய் சொன்னோமென்று அப்பாவிடம் சொல்வதாகச் சொன்னோம். ஒன்றுக்கும் அவள் மசியவில்லை. "நீ இபோது வீட்டைவிட்டுப் போனால் உன்னால் மேற்கொண்டு படிக்க முடியாது, அதனால் நீ இங்கிருப்பதுதான் நல்லது" என மாஹியிடம் சொன்னேன்."நான் எனது முடிவை எடுத்து விட்டேன் அதிலிருந்து பின் வாங்கப் போவதில்லை" என அவள் சொன்னாள். "உன்னிடம் பணமிருக்கின்றதா?" எனக் கேட்டோம். மாஹி நேராகப் பதில் சொல்லாது "அதற்கு ஏதாவது ஒரு வழியைக் கண்டு பிடிப்பேன், கிரேஸாலும் ஹெலனாலும் முடியுமாயின் என்னாலும் முடியும்" என்றாள். ஏதோ ஒரு வகையில் சிறிதளவு பணம் அவளிடம் சேர்ந்துள்ளதென நான் நினைத்தேன். எனது கவலையும் எனக்கு மறந்து விட்டது.

இதன் பின்பு மாஹி பாட்டியைத் திட்டிக் கொண்டேயிருந்தாள் .அதிசயமாகப் பாட்டியின் மற்றைய கண்ணும் கண்ணீரில் மிதந்தது. பாட்டியின் கண்ணீர் கூட மாகியின் வசைச் சொற்களிலிருந்து தப்பவில்லை. "நான் வீட்டைவிட்டு ஓடிப்போகப் போகிறேன் என்பதைத் தெரிந்துகொள்! நீ இறந்த பிறகு உன்னைப் புதைப்பதற்குக் கூட யாரும் இருக்கமாட்டார்கள்" எனப் பாட்டியைத் திட்டிய மாஹி அன்றிரவு ஒன்றுமே சாப்பிடாது படுக்கைக்குச் சென்றாள். அடுத்த நாள் காலை அவள் போய்விட்டிருந்தாள். அப்பா மாஹியைத் தேடிக் கண்டு பிடிப்பாரென நானும் தம்பியும் நினத்துக்கொண்டோம். அவர் அப்படிச் செய்யவே இல்லை. நாங்கள் அழுதுகொண்டிருந்தோம். ஒன்றுமே சொல்லாது அப்பா எங்களைக் கடந்து போனார். மாஹி தொலைந்து போனது அவரை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. ஏதோ கோழியொன்று தொலைந்தது மாதிரித்தான் அவர் நடந்து கொண்டார்.

விடுமுறை முடிந்து நகர வீட்டிற்குச் செல்லும் நேரமும் வந்தது. சிரிப்புடனேயே சிற்றன்னை எங்களை வரவேற்றார். அது ஒரு அசாதரணமான காட்சி. தொலைந்துபோன எங்கள் சகோதரிக்காக அவர் சிரித்தித்திருக்க வேண்டும். எது எப்படியாயினும் கடைசியில் சிற்றன்னையின் விருப்பப்படியே சம்பவங்கள் நடந்தேறியிருந்தன. எங்களைத் தொலைத்து விடுவதற்கு அவரெடுத்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றிருந்தார்.
எங்களின் கடைசிப் பிணைப்பான செவிலித் தாயார் மேரியும் வீட்டைவிட்டு போகப் போகிறார் என்பதனையும் கேள்விப்பட்டோம். அவரிடம் எங்களை விட்டுப் போகவேண்டாமென அழுகையுடன் கெஞ்சிக்கூடப் பார்தோம். அவர் எங்களுக்குத் தந்த நேசமும் கருணையும் தாயினுடையதைப் போன்றது என்பது எங்களுக்கு விளங்கியுமிருந்தது. சிற்றன்னையுடன் முரண்பட்டுக்கொண்டுதான் எங்கள் அன்பான மேரி வீட்டைவிட்டு வெளியே போகிறார். காலை உணவு மேசையில் தயாராக இருந்தது. ஆனால் மேரியைக் காணவில்லை. தோட்டத்தில் தேடிப் பார்த்தோம், அவரை எங்குமே காணவில்லை. பாடசாலைக்குச் செல்லும் வழியில் அவர் எங்களுக்குச் செய்தவை பற்றியெல்லாம் நானும் தம்பியும் பேசிக்கொண்டே போனோம். ஒருவேளை பாடசாலை முடிந்ததும் அவரைக் காணக் கூடியதாயிருக்கும் என நினைத்தோம். ஆனால் நாங்கள் அதன் பின்பு எப்போதுமே அவரைக் காணவில்லை.

மேரியின் இழப்பு எனக்குப் பெரியதென்பதைச் சிற்றன்னையிடம் காட்டிக்கொள்ளாது கவனமாகவே இருந்தேன். நான் உறுதியானவள் போன்றும் மேரியின் வெற்றிடம் எனக்குப் பொருட்டேயில்லை என்பது போலவும் நாடகமாடினேன். பிரச்சினைகளில் அமிழ்ந்து விடாது தப்பி வாழ்வதற்கு உணர்வுகளை மழுங்கடிக்க வேண்டியிருந்தது. எனது பிற்கால வாழ்க்கையில் அதுவே வழமையாகவும் விட்டுவிடமுடியாத பழக்காமாகவும் மாறியிருந்தது.

குழந்தைப் போராளி - 13


காட்டிக்கொடுப்பு

எங்களில் பெரியவளான ஹெலனால் அடி உதைகளைத் தாங்க முடியாது போயிற்று. அவள் வாளிப்பான உடலமைப்பைக் கொண்டவள் . வெளுத்த சருமத்துடனும் மின்னும் பெரிய பழுப்புநிறக் கண்களுடனும் ஒரு மான்குட்டி போலக் கவர்ச்சியாக இருப்பாள். தன்னை அடி உதைகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக அவள் எங்கள் சிற்றன்னையின் உளவாளியாக மாறிப் போனாள். குழந்தைகள் என்ன செய்கிறோம், என்ன பேசிக் கொள்கிறோம் என்றெல்லாம் சிற்றன்னைக்கு உளவு சொல்லத் தொடங்கினாள். அடி உதைளுக்காக அஞ்சிய ஹெலன், எங்களில் ஒருவருக்கெதிராக மற்றவரைத் தூண்டிவிடச் சிற்றன்னையால் தான் பயன்படுத்தப்படுகிறாள் என்பதைக் கண்டு கொள்ளவில்லை. சிற்றன்னை எவ்வாறு எங்களின் எல்லா இரகசியங்களையும் தெரிந்து கொள்கிறாரென்பதை எங்களால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. மாஹி என்னைச் சந்தேகத்துடன் பார்த்தாள். நான் ஹெலனைக் கூர்ந்து கவனிக்கும் போதெல்லாம் படபடப்பில் அவளின் கண்கள் துடிக்கத் தொடங்கின. அந்த உளவாளி சிற்றன்னையின் இளைய மகளாக இருக்கலாமென்று மாஹி சொன்னாள்.


ஒருநாள் குசினியிலிருந்த நன்றாகக் கனிந்த வாழைப்பழங்கள் மீது என் கண் விழுந்தது. வயிறு புடைக்க எப்படி வாழைப்பழங்களைச் சாப்பிடுவதென்ற சிந்தனையே காலையிலிருந்து மாலை வரை என்னை அலைக்கழித்துக் கொண்டிருந்தது. சிற்றன்னையிடம் வாழைப்பழம் கேட்க முடியது. அவர் கட்டாயம் மறுத்துவிடுவார். இரவு உணவிற்காக நாங்கள் உணவருந்தும் அறையில் கூடியிருந்தோம்.அங்கேயும் வாழைப்பழங்களைக் 'கிளப்புவது' குறித்தே நான் சிந்தித்துக்கொண்டிருந்தேன்.. மற்றவர்கள் சாப்பிட்டு முடிப்பதற்குள் நான் குசினிக்குச் சென்று விறகுக் குவியலில் கிடந்த நீளமான தடியென்றை எடுத்துக்கொண்டேன். உயரத்தில் கட்டியிருந்த வாழைக்குலையைத் தடியின் உதவியுடன் உலுக்கி நான்கு வாழைப்பழங்களை எடுத்துக்கொண்டேன். வீட்டிற்குப் பின்புறம் வானம் நிறைய நட்சத்திரங்கள் கண் சிமிட்டிக்கொண்டிருந்தன.

தனிமையான ஒர் இடத்தில் இருந்து கொண்டு வாழைபழங்களைச் சாப்பிட்டபடி நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஏதோ உலகத்திற்கு வெளியேயே போய்விட்ட மாதிரி ஓர் அழகிய உணர்வு. இந்த மகிழ்வில் ஹெலன் அங்கு வந்ததை நான் கவனிக்கவில்லை. மின்னல் வானத்தில் இருந்து ஒரு கணத்தில் கீழிறங்குவது போல அவளங்கு நின்றுகொண்டிருந்தாள். சன்னமான குரலில் என் பெயரைக் கூப்பிட்டவள் "அங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்?" எனக் கேட்டாள். நான் மறைப்பதற்கு எந்தப் பிரயத்தனமும் எடுக்காமல் "உனக்கும் ஒரு வாழைப்பழம் வேண்டுமா?" எனக் கேட்டேன்.
"இங்கு என்ன செய்கின்றாய்" - ஹெலன்
"நான் வாழைப்பழம் சாப்பிடுகிறேன்"
"அப்பாவிடம் சொல்லப் போகிறேன்"
ஹெலன் என்னைப் பயமுறுத்துகிறாள் என நினைத்து நான் சிரிக்கத் தொடங்கினேன். மீண்டும் சொன்னதையே அவள் திருப்பி திருப்பிச் சொல்ல உண்மையிலேயே அப்பாவிடம் சொல்லப் போகிறாள் என்பது உறுதியாயிற்று. அடிவானத்தில் இடி முழக்கம் கேட்டது. அல்லது அது ஒரு காட்டுமிருகத்தின் ஓலமாகவும் இருக்கலாம்.


"ஹெலன் நீயும் நானும் ஒரே தாயின் பிள்ளைகள், கொஞ்சம் கருணை காட்டு இதையெல்லாம் நீ அப்பாவிற்குச் சொல்லக் கூடாது"
கடைசியாக அவளின் கையைப் பிடித்துக் கொஞ்சினேன்.. என் கன்னங்களில் கண்ணீர் வழியத் தொடங்கியது. அவளோ அசைந்து கொடுக்கவில்லை. என்னை இறுகப் பிடித்தாள். ஒரு கையைச் சுவரில் பற்றிப் பிடிக்க முயற்சித்த என்னைக் காட்டிக்கொடுக்கும் சகோதரி மறுபக்கம் இழுக்க என் கையில் வலுவில்லாது போனது. ஹெலன் ஒரு கையில் என்னையும் மறு கையில் நான் சாப்பிடத் தொடங்கியிருந்த வாழைப்பழத்தையும் பிடித்திருந்தாள். இறுதியில் அப்பாவின் முன்னால் நின்றேன். சிற்றன்னை தனது மாய்மாலக் கண்ணீரை வடித்துக் கொண்டே தான் எவ்வளவு செய்தாலும் அதை யாரும் மதிப்பதில்லை எனத் தொடங்கி முடிவுறாமல் பொய்களையும் கண்ணீரையும் உதிர்த்துக்கொண்டிருந்தார். பொய்களும் கண்ணீரும் தொடர அப்பாவின் கோபமும் அதைபோல ஏறத் தொடங்கியது. நன்றாகக் கோபம் தலைக்கேறிய நிலயில் அப்பா என்னைத் தரையில் தள்ளிக் காலால் மிதித்தார். "வாழைப்பழத்தை ஏன் திருடினாய்?" என்று கேட்டுக் கேட்டு மிதித்தார். நான் வாயைத் திறக்கவேயில்லை. நான் ஏதாவது மறுமொழி சொல்ல அதைத் தொட்டு சிற்றன்னை அப்பாவின் கோபத்தை மேலும் ஏற்றிவிடக் கூடும். பேசாமலிருப்பதே உத்தமம். எனக்கு விழும் ஒவ்வொரு அடியையும் சிற்றன்னை வெகுவாக ரசித்துக்கொண்டிருந்தார். அப்பாவும் அதைக் கவனித்திருக்கக் கூடும். பார்வையை ஒருகணம் சிற்றன்னை பக்கம் திருப்பினார். பின்பும் அடிகள் தொடர்ந்து விழுந்தன. பின்பு அப்பா படுக்கையறைக்குச் சென்று தனது நீள அங்கியைக் கொண்டுவந்தார். எனது கட்டிலின் மேல் அதனை விரித்தார். இது வழமையாக நடப்பதுதான், அன்றிரவு நான் அந்த அங்கிக்கு மேல் தான் படுத்துத் தூங்கவேண்டும்.

எப்போதும் செய்ய முடியாதவைகளைச் செய்ய நிர்பந்திக்கப்படுவதற்காகவும் அவர் என்னைச் சோதித்துப் பார்ப்பதற்காவும் அழுதேன். மெதுவாக எனக்குள்ளே பாடிக்கொண்டேன். தூக்கத்தை விரட்ட வேண்டியிருந்தது. காலை எழுந்தபோது இருதயம் கழுத்துவரை வந்து விட்டது. அங்கி ஈரமாகத் தெரிந்தது. தொட்டுப்பார்தேன் குளிர்ந்தது. தொட்டவிரலை மூக்கினருகில் வைத்துப்பார்தேன். நேற்றைய தண்டனையின் இரத்தவாடை எழுந்தது. எங்காவது ஓடிப்போய்விடலாமா? காயங்கள் என் ஆன்மாவிலும் உடலிலும் மீண்டும் மீண்டும் திறந்து கொண்டன.

ஹெலனை வரவேற்பறையில் பார்த்ததும் வெறுப்பும் ஆத்திரமும் என்னுள் தீயாக எரியத்தொடங்கியது. வெளியே அப்பாவின் வருகைக்காகக் காத்திருக்கத் தொடங்கினேன். நீண்ட நேரக் காத்திருப்பிற்குப் பின் வெளியே வந்த அவரிடம் ஒன்றுமே சொல்லாது அங்கியை நீட்டினேன். பல நிமிடங்களாகக் கையும் களவுமாகப் பிடிபட்ட திருடனை போல அவர் கண்களைத் தாழ்த்தித் தரையைப் பார்த்துக்கொண்டு நின்றார். கடைசியில் யாரையாவது கூப்பிட்டுப் பிரம்பை எடுத்து வரத்தான் சொல்லப் போகிறார். நான் எனது பார்வையைத் தாழ்த்தவே இல்லை. அவரது கண்களை நேராகப் பார்த்தேன். என் கண்களில் கண்ணீர் துளிகளாக உருண்டன. நான் அவரைக் கோபப்படுத்த முயற்சிக்கவில்லை. ஆனால் அப்பா என்னை ஒரு குழந்தையாகப் பார்க்கவும் ஒரு குழந்தையாக ஏற்கவும் வேண்டுமென்றும், அவர் என்ன செய்கின்றார் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டுமென்றும் அவருக்கு மெளனமாக உணர்த்த முயன்றேன். அவரின் கண்களில் குற்ற உணர்வையும் வெட்கத்தையும் நான் கண்டேன். அவருக்கு அப்போது அழுவதா சிரிப்பதா என்று தெரியாது இருந்திருக்கவேண்டும். அதனால் தான் அப்பா தன் கண்களை உருட்டிக் கொண்டிருக்கிறாரோ? அவரது கண்களில் என்ன செய்வதென்று அறியாத குழப்ப உணர்வு மறைந்து மறுபடியும் கோபம் தெரியும்வரை என் கண்களை அவரின் கண்களிலிருந்து நான் எடுக்கவே இல்லை. நான் சொன்ன சேதி அவருக்கு விளங்கியிருக்குமா? அல்லது உறைந்திருந்த என் இரத்தம் அவருக்கு அருவருப்பை ஊட்டியிருக்குமா?

அன்று மதியம் கழிந்த பின் நான் ஹெலனையும் மாஹியையும் வழமையாக நாங்கள் சந்திக்குமிடத்திற்கு வரச் சொன்னேன். மாஹி ஹெலனுக்குப் புரியவைக்க முயன்றாள்: "நாம் எதைத்தான் செய்தாலும் நாங்கள் ஒருபோதும் சிற்றன்னையின் ஆழமான வெறுப்பிலிருந்து தப்பிக்கப் போவதில்லை. நாமெல்லோருமே ஓரே தோணியில் தான் பயணம் செய்கின்றோம். நாம் ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுத்தால் அது சிற்றன்னைக்குத்தான் மகிழ்வைக் கொடுக்கும். அவள் எங்களைப் பார்த்துக் கேலியாகச் சிரிக்கத்தான் அது உதவும்".
ஹெலன் அழத் தொடங்கினாள். நாங்கள் அவளை விட்டுவிட்டு வத்தாழைக் கிழங்குப் பாத்திகளைத் தேடிக் கிழங்குகள் பிடுங்கச் சென்றோம். சிறிது நேரத்தில் அங்கு வந்த ஹெலன் இனித்தான் ஒருவரையும் காட்டிக் கொடுக்கப்போவதில்லை என எங்களுக்குச் சத்தியங்கள் செய்து கொடுத்தாள்.

நகர வீட்டில் வாழ்க்கை இவ்வாறு நகர்ந்து கொண்டிருந்தது. ஒருநாள் இறைச்சி வாங்கப் போன ஹெலன் வெறுங்கையுடன் திரும்பி வந்தாள். காசு தொலைந்து போய்விட்டதென்று அழுதுகொண்டே ஹெலன் மாஹியிடம் சென்றாள்.இன்னும் சிற்றன்னைக்கு விசயம் தெரியாது. என்ன செய்வதென்று தெரியாத நிலை. மாஹி ரிச்சட்டையும் என்னையும் சேர்த்துக் கொண்டு தீவிர ஆலோசனை நடத்தினாள். ரிச்சட் வீதியில் பிச்சை எடுக்கலாமென்று முன்மொழிய நாங்கள் பிச்சையெடுக்கச் சென்றோம். பல மணி நேரங்கள் சென்றும் போதியவளவு பணம் சேரவில்லை. கூனிக் குறுகிக் கொண்டு எல்லோரும் வீடுவந்து சேர்ந்தோம். ஹெலன் சிற்றன்னையிடம் விசயத்தைச் சொல்ல அவர் "என்னால் ஒன்றுமே செய்ய முடியாது அப்பா வரும் வரை காத்திரு" எனச் சொல்லி விட்டார். மாலை, அப்பா வந்ததும் ஹெலன் அவர் முன்னே போய் நடுங்கியபடியே நிற்க முகத்தில் அறைகள் விழுந்தன. அவள் தொலைத்த பணம் அவளின் பாடசாலைக் கட்டணத்திற்குச் சமனாயிருந்தது. எனவே அவளை இனிப் பாடசாலை அனுப்ப முடியாது என அப்பா முடிவாகச் சொல்லி விட்டார். ஹெலன் தரையில் முழந்தாளிலிருந்து அப்பாவிடம் மன்னிப்புக்காக மன்றாடினாள். எந்த மன்றாட்டத்தாலும் அப்பாவின் முடிவை அசைக்க முடியாது போயிற்று. நாளையிலிருந்து அவள் வாழைத்தோட்டத்தில் வேலை செய்ய வேண்டும். நாங்கள் பாடசாலை செல்ல பரபரப்பாக இருக்க அவள் மண்வெட்டியைத் தேடி ஓடிக்கொண்டிருந்தாள்.

நீண்டகாலமாக இந்த நிலை மாறவே இல்ல. ஹெலன் வேலை செய்தேயாக வேண்டியிருந்தது. காற்றப் போல அவள் வீட்டிலிருப்பது தெரியாமலே இருந்தது. ஒருநாள் நான் பள்ளியிலிருந்து வீடு திரும்பிய போது ஹெலன் வீட்டை விட்டு ஓடிப்போயிருந்தாள். அப்பாவின் முகம் எந்த உணர்வையும் காட்டவில்லை. "எல்லோரும் நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள் உங்கள் அம்மா மாதிரியே உங்களது சகோதரியும் ஒரு முட்டாள்". இது ஹெலன் வீட்டைவிட்டு சென்றதற்கான அவரது விளக்கம். தொடர்ந்து அவர் சொன்னார், "நீங்களெல்லோருமே வீட்டை விட்டுப் போனாலும் எனக்குக் கவலையில்லை". எனக்கு ஒன்று தெளிவானது, எங்களது தந்தை எங்கள் அம்மாவை வெறுப்பது போலவே குழந்தைகள் எங்களையும் கடுமையாக வெறுக்கிறார். வாழ்க்கை எங்களுக்கு எதனைத் தரப்போகிறது? அது எங்களை எங்கே கொண்டுபோய் நிறுத்தப்போகிறது? எங்களது எதிர்காலம் எவ்வாறு இருக்கப் போகிறது? ஒன்றுமட்டும் நிச்சயம், எங்கள் எல்லோரது வாழ்க்கைப் பாதையும் ஒன்றாகத்தான் இருக்கும்.

குழந்தைப் போராளி - 12


மாஹியின் கலகம்

நான் மறுபடியும் வீட்டிற்குத் திரும்பி வந்தபோது மாஹியும் ஹெலனும் பாடசாலை விடுதிக்குத் திரும்பிவிட்டதாக மேரி சொன்னார். ஒரு வாரத்தின் பின்னர் எல்லாம் பழைய மாதிரியே இருந்தது. எனது தம்பி தனது பழைய நண்பர்களுடனும் நான் எனது பழைய எதிரிகளுடனும் சேர்ந்து கொண்டோம்.

தனிமை என்னை அழுத்தியது. முன்னைய எனது சினேகிதர்களெல்லாம் வேறு இடங்களுக்குப் போய் விட்டார்கள். புதிய சினேகிதர்களைத் தேடுவது எளிதாகயிருக்கவில்லை. நான் எப்போதும் தனியாகவே இருந்தேன். பின்பு மூன்றாவது வகுப்பில் படிக்கும் இரு சகோதரிகளைச் சந்தித்தேன். யூடித், முற்றோன், இருவரும் அழகிய கழுத்துப்பட்டைகளும் சப்பாத்துகளும் அணிந்திருந்தனர். கைச் செலவிற்கும் அவர்களிடம் தாராளமாகப் பணமிருந்தது. முழுப் பாடசாலையும் அவர்கள் மீதே கண்ணாக இருந்தது. அவர்கள் என்னை அவ்வளவு சுலபமாகச் சினேகிதியாக ஏற்றுக்கொள்ளவில்லை. நானாகத் தான் அவர்களிடம் போனேன். அவர்களும் என்னுடன் ஏனோதானோ என்றுதான் பழகினார்கள்.

ஒருநாள் அவர்களது அம்மா பாடசாலைக்கு வந்திருந்தார். பற்றிசியா என்பது அவரின் பெயர். 'எனது அப்பாவை அவருக்குத் தெரியுமென்பது' என்னை ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. அதுமட்டுமல்ல, எனது உண்மையான அம்மாவையும் அவருக்குத் தெரிந்திருந்தது. என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை, நான் துடித்துக்கொண்டிருந்தேன். அவரின் பிள்ளைகள் "இவளின் அம்மா இருக்குமிடம் தெரியுமா?" எனக் கேட்கச் சிரிப்பையே பதிலாகத் தந்தவர் அவர்கள் போன பின் அம்மாவின் முகவரியை எனக்குத் தந்தார். நான் எந்தக் காரணத்தைக்கொண்டும் அப்பாவிற்கு முகவரியைக் காட்டக் கூடாதென்பது அவரது கட்டளை. நான் அவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்து கொள்வது எனத் தீர்மானித்தேன். மீண்டும் மீண்டும் அவரென்னை எச்சரித்ததால் முகவரியைக் கவனமாக மறைத்து வைத்தேன். மிகவும் சிரத்தை எடுத்து விடுமுறைக்கு வரும் சகோதரிகள் கூடக் கண்டுபிடிக்க முடியாதபடி அம்மாவின் முகவரியை மறைத்து வைத்தேன்.

பாடசாலை விடுதியிலிருந்து வீடு திரும்பிய எனது சகோதரி மாஹி எங்கள் எல்லோரையுமே ஆச்சரியப்படுத்தினாள். சிற்றன்னையை எதிர்த்து ஒரு பெரிய பெண் போல மாஹி நடந்து கொண்டாள். எங்கள் சிற்றன்னை நாளுக்கு நாள் உடலால் மெலிந்து போனாலும் தகப்பனுக்கும் பெண்மக்களுக்குமான இடைவெளியைப் பெருக்குவது அவளால் முடிந்த காரியமாகவே இருந்தது. ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் எனது சகோதரிகள் அடி வாங்கினார்கள். மாஹி மாத்திரம் அடி உதைகளுக்கு அஞ்சவில்லை. அடி விழ ஆரம்பித்தவுடனேயே ஹெலன் அலறத் தொட்ங்கிவிடுவாள். அடிக்கவேண்டாமென மன்றாடுவாள். மாஹியோ பல்லைக்கடித்துக்கொண்டு கடைசிவரை பொறுமையுடன் அடிகளைத் தாங்குவாள். அடிகளை வாங்கியபின் "ஒரு காரணமுமின்றி எனக்கு மீண்டும் மீண்டும் அடிக்கிறாய்" என அப்பாவை முகத்துக்கு முகம் பார்த்துக் கூறுவாள். அப்பா அடிக்கத் தொடங்கியதும் சிற்றன்னை தளபாடங்களை நகர்த்தி அப்பா அடிப்பதற்கு இடைஞ்சலில்லாமல் இடவசதி செய்து கொடுப்பதையும் நான் கவனித்துள்ளேன்.

குழந்தைப் போராளி - 11


சாவும் துரத்தப்படுதலும்

1982ல் உகண்டாவின் ஜனாதிபதியும் சர்வாதிகாரியுமான மில்டன் ஒபோடே பல்வேறு அரசியற் பிரச்சினைகளைச் சந்திக்கத் தொடங்கினார். NRA (National Residency Army) எனப்படும் போராட்ட அமைப்பு துற்சி இனக்குழுவினரதும் மேற்கு உகண்டாவில் ஒரு பகுதியினரதும் ஆதரவைப் பெற்று நாட்டின் பல பகுதிகளிலும் ஒபோடேயின் அரசுக்கு எதிரான ஆயுதக் கிளர்ச்சிகளை நடத்தியது. அரசியலில் தனக்குப் பாதகமான விளைவை துற்சிகளின் ஆதரவைப் பெற்ற NRA ஏற்படுத்துவதைக் கண்ட ஒபோடே உகண்டாவிலிருந்து துற்சிகளை விரட்டியடிக்கும்படி பொதுமக்களைத் தூண்டினார். பிரச்சனைகளுக்குத் தீர்வுகளைக் காண்பதை விட்டுவிட்டு இந்தக் குறுக்குவழி மூலம் அரசியல் எதிர்ப்பின் மூச்சுக் காற்றை அறுத்துவிடலாமென அவர் நம்பியிருக்க வேண்டும். தானே பிரச்சினைகளின் மூலகாரணமாக இருக்கலாம் என்ற எண்ணம் அவருக்கு வரவே இல்லை. பெரும்பாலான ஆபிரிக்க நாட்டுத் தலைவர்கள் போலவே அதிகாரத்திற்கான வேட்கை அவரிடமும் இருந்தது. அதேயளவு மிகப்பெரிய செல்வந்தனாக வேண்டுமென்ற பேராசையும் அவருக்கிருந்தது. அதிகார வெறி கொண்ட எல்லாத் தலைவர்களுமே தங்கள் பைகளை நிரப்பிவிட வேண்டுமென்ற வெறி கொண்டவர்களாக இருக்கின்றனர். அவர்கள் நிரப்ப நினைத்த பைகளில் ஓட்டைகள் இருந்தன போலும்.

ருவண்டாவின் கொலைகார இராணுவத்தினரிடம் துற்சிகளைத் துரத்திவிடுவதன் மூலம் தனது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியாது என்பதை அவர் என்றுமே புரிந்து கொள்ளவில்லை. உகண்டாவிலிருந்து துற்சிகளை வெளியேற்ற எடுத்த முடிவு அவரின் அரசியற் தவறுகளில் மிகப் பெரிய தவறாக உருவெடுத்தது. NRAயின் பலம் பெருகப் பெருக தானே அமைத்துக்கொண்ட தனது சிம்மாசனத்தில் இறுதிவரையில் கோலோச்சுவதற்கான சாத்தியங்கள் மில்டன் ஒபோடேவுக்கு அருகத் தொடங்கின. ஒபோடே மதுவில் மூழ்கத் தொடங்கினார். விஸ்கி அவரது சிந்தனையை ஆளத்தொடங்கியது. அவரது கையெட்டும் தூரத்தில் எப்போதும் விஸ்கிப் போத்தல் இருந்து கொண்டேயிருக்கும். அவரின் கீழ் அணி திரண்டவர்கள் அவரின் கோரிக்கையை நிறைவேற்றுவதில் முனைப்பாகவே நின்றனர். அவர்கள் ஒபோடேயின் படையினரின் நேரடியான ஆதரவுடன் துற்சிகளை விரட்டியடித்தனர்.

துற்சியினரின் வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டன. கால்நடைகள் அழித்தொழிக்கப்பட்டன. வீடுகள் எரிந்து தரைமட்டமாயின. பெண்கள் மீது பாலியல் வல்லுறவுகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. இருதயத்தை உருக்கும் குழந்தைகளின் ஓலம் எவரின் காதுகளையும் எட்டவில்லை. அரசு ஒன்றுமே செய்யாது வேடிக்கை பார்த்தது. துற்சிகள் உகண்டாவிலிருந்து ருவண்டாவிற்குத் துரத்தியடிக்கப்பட்டபோது துற்சிக் குழந்தைகள் தாய் தந்தையரிடமிருந்து பிரித்தெறியப்பட்டுத் திக்குத்திசை தெரியாமல் ருவண்டாவில் எங்கெங்கோ அலைந்து திரிந்தனர். சிறுமிகளும் பாலியல் வல்லுறவுகளிலிருந்து தப்பவில்லை. ருவண்டாவில் மரணம் துற்சிகளுக்காக நிச்சயமாகக் காத்திருந்தது. மரணம் அவர்களின் கவலையாக இருக்கவில்லை. பயம்! மரணத்தின் முன் கொடூரமான சித்திரவதைகளுக்கு ஆளாகப்போகும் பயமே என்ன செய்தென்று தெரியாத நிலையில் NRA யில் அவர்களைச் சேரவைத்தது. இவ்வாறு இணந்து கொண்டவர்கள் சிறு தொகையினரல்ல, ஆயிரக்கணக்கில் சேரத் தொடங்கினர்.

ஜனாதிபதி மில்டன் ஒபோடே நாட்டுக்கு விடுத்த செய்தியின் சாரம் பின்வருமாறிருந்தது: "உகண்டாவில் அமைதியையும் ஒருமைப்ப்பாட்டையும் காக்க இந்த நடவடிக்கை அவசியமானது". உகண்டாவின் அயல் நாடுகள் இந்த நடவடிக்கெதிராக எந்தக் கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை. ஏனெனில் பல ஆபிரிக்க நாட்டுத் தலைவர்கள் இவ்வாறான நடவடிக்கைகளை ஏற்கனவே தமது நாடுகளில் மேற்கொண்டிருந்தார்கள் அவர்களது நடவடிக்கைகள் ஒபோடேவினதுடன் ஒப்பிடுகையில் சிறியதாகவும் குரூரத்தில் குறைந்ததாகவுமிருப்பினும் அவர்களால் ஒபோடேவைக் குற்றஞ் சாட்ட முடியவில்லை. ஏனெனில் முதலில் அவர்கள் அவர்களின் சொந்த நடவடிக்கைகளுக்குப் பதில் கூற வேண்டியிருக்குமல்லவா?

துற்சிகள் 'இடிஅமீன் காலத்தில் இந்தியர்களின் நிலை' போன்ற நெருக்குவாரத்திற்கு உட்படுத்தப்பட்டனர். இந்தத் துன்பங்கள் எனது குடும்பத்தின் மீதும் விரிந்தன. நான் துற்சி இனத்தவள். நாடெங்கும் துற்சிக் குடும்பங்களுக்கு என்ன நடந்ததென்பதை நான் அறிந்தபோது, விரைவில் எனது தந்தைக்கும் அவரின் மனைவிக்கும் இதே துன்பங்கள் நேரிடப்போகின்றதென்பதை நினக்க ஒரு பக்கம் எனக்கு மகிழ்வாகவுமிருந்தது. பழி தீர்ப்பது எவ்வளவு இனிமையானது! ஆனால் நானும் இந்தத் துன்பங்களிலிருந்து தப்பிக்க முடியவில்லை. நான் நினைத்தது போலப் பழிவாங்கல் அவ்வளவு இனிமையாகவும் இருக்கவில்லை.

இன்று நினைத்தாலும் அந்தப் பயங்கரமும் அதன் பின்விளைவுகளும் என்னை உலுக்கி எடுக்கின்றன. பொஸ் (Boss) என்று நான் அழைக்கும் மனிதர் வழமையாக எங்களது வீட்டைத்தாண்டிச் செல்வபர். அவர் எங்களது சிறிய நகரத்தின் ஆளுனர். என்னையோ அல்லது எனது சகோதரிகளில் ஒருத்தியையோ தனது காமப் பசிக்கு இரைபோடுவதற்கு அவர் தருணம் பார்த்திருந்தார். இவரின் தொல்லைகள் தொடங்கியதிலிருந்து நாடகள் எனக்கு நரகமாக மாறிவிட்டன. இந்த மனிதர் என்னக் குறிவைத்துவிட்டார். ஒவ்வொரு முறையும் இந்த மிருகத்தின் விகாரப் பார்வைக்கு முன்னே நான் கூனிக்குறுகிப் போய்விடுவேன்.

ஒருநாள் இந்தக் கிழவர் ஒதுக்குப்புறமாயிருந்த குண்டுகள் விழுந்து பாழடைந்திருந்த கட்டிடத்திற்குள் வலுக் கட்டாயமாக என்னை இழுத்துச் சென்றார். என்ன நடந்ததென்பதை யாருக்காவது சொன்னால் என்னைக் கொன்றுவிடப்போவதாகப் பயமுறுத்தினார். அப்போது எனக்கு ஏழு வயதுதான், ஆயினும் நான் எனது குடும்பதிற்கு இதைப்பற்றிக் கூறினாலும் கூறாவிட்டாலும் இந்தப் பாலியல் துன்புறுத்தல்கள் என்மீது தொடருமென என் உள்ளூணர்வு எனக்குச் சொல்லிற்று. இது எனது மரணம் வரை தொடரலாம்.

எனது தந்தை அரசின் முடிவை அறிந்தவுடன் பண்ணைக்குச் சென்றார். அங்கு எவற்றைக் காப்பாற்றிக்கொள்ள முடியுமோ அவைகளைக் காப்பாற்ற முயன்றார். பண்ணைக்குச் செல்லும் வழியில் அவரது வேலையாள் ஒருவரைச் சந்தித்துள்ளார். அவரும் துற்சி இனத்தைச் சேர்ந்தவர்தான். வேலையாள் அவரை அங்கு போகவேண்டாமென எச்சரித்துள்ளார். என்னால் இப்போதும் தெளிவாக நினைத்துப் பார்க்க முடிகின்றது... எனது நண்பி சோபியாவுடன் நான் விளையாடிக்கொண்டிருக்கும் போது அப்பா தனது வேலையாள் ஒருவருடன் கையில் ஒரு பையுடன் மட்டுமே வருவதைக் கண்டேன். உடனேயே பண்ணையில் நிலமை மோசமாகிவிட்டதென்பதைத் தெரிந்து கொண்டேன். எங்கள் பண்ணையின் அயலவர்களுக்கு எனது அப்பா விரும்பத்தகாதவர் என்பதும் எனக்குப் புரியும். எனது தந்தைக்குச் சொந்தமாகப் பெருமளவு நிலங்களுண்டு, அத்துடன் சட்டம் படித்தவர். அதுவே அவரின் மிகப் பெரிய பலம். அவரின் இந்த அதிகாரநிலை அயலவர்களைத் துன்புறுத்தி அவர்களது நிலங்களில்லிருந்து வெளியேற்ற அவருக்குப் பெரிதும் உதவியது. இவையெல்லாம் இப்போது அவருக்கெதிராகத் திரும்பலாம். அவரை எதிர்பவர்களுக்கு இப்போது பயமில்லை. ஏனெனில் சந்தர்ப்பம் அவர்களின் கைகளைப் பலப்படுத்திவிட்டிருந்தது. பசித்த சிங்கம் போல அவர்கள் இவர் மீது பாயத் தயாராக இருந்தனர். இவர் உதவி செய்தவர்கள் கூட இவரை எதிர்த்தனர். அப்பாவின் கன்றுகளைக் கைப்பற்றியவர்களும் ஆடுகளைக் கவர்ந்து சென்றவர்களும் அவரின் உதவிகளைப் பெற்றவர்கள்தான். வீட்டைக் கொள்ளையடித்தனர், வாழைத்தோட்டத்தையும் அழித்தொழித்தனர். "துற்சிகள் மீண்டும் திரும்பி வரக்கூடாது! அப்படியும் மீறி வந்தால் கொல்லப்படுவார்கள்!" இதுவே அவர்களது முழக்கம்.

அவர்கள் மாடுகளை விரட்டிவிட்டுக் கன்றுகளை ஓட்டிச் சென்றனர். கன்றுகளைப் பாதுகாக்க முயன்ற சில பசுக்களைக் கொன்றனர். வயல்களிலும் வீட்டிலும் அப்பாவைத்தேடி அவர்கள் கொலைவெறியுடன் அலைந்தனர். எங்கள் இரு பண்ணை வீடுகளையும் அந்தக் கூட்டம் அழித்தது. கல்லின் மேல் கல் நில்லாத அழிவு. அப்பாவின் மேல் உள்ள வெறுப்பு அங்கே தீயாய்க் கொழுந்து விட்டெரியலாயிற்று. எங்கள் அயலவர்கள் அப்பாவின் நிலத்தைத் தங்களுக்குள்ளே பங்கு போட்டுக் கொண்டனர்.

நான் எனது நேசமான ஆடுகளை நினைத்துக் கொண்டேன். வேலையாட்கள் எனது அப்பாவினதோ பாட்டியினதோ கையோ காலோ போய்விட்டதென்று சொல்லியிருந்தால் ஒருவேளை நான் மகிழ்ந்திருப்பேன். மாறாக நான் இப்போது எனது பிரியமான ஆடுகளை இழந்துவிட்டேன்.

அப்பா உடைந்து போய்விட்டார். என்ன செய்யலாமென்றே அவருக்குத் தெரியாது போயிற்று. ஒரு கையைக் காற்சட்டைப் பையினுள்ளும் மறுகையைத் தலைமேலும் வைத்துக்கொண்டு வீட்டைச் சுற்றி நடந்து கொண்டேயிருப்பார். பின்பு வரவேற்பறையில் உட்கார்ந்து கண்ணீர் வடிப்பார். தானே தனக்குள் பேசிக்கொண்டிருந்த அவர் வெறிபிடித்தவராய் வீட்டுப் பொருட்களையெல்லாம் அடித்து நொருக்கியதை நான் ஜன்னலிற்குள்ளால் பார்த்தேன்.

சில நாட்கள் கழித்து எனது சகோதரிகள் பாடசாலை விடுதிகளிலிருந்து வந்து சேர்ந்தனர். அப்பாவின் நண்பர்களின் வீடுகளில் பாதுகாப்பாக அவர்கள் விடப்பட்டனர். நானும் தம்பி ரிச்சட்டும் அப்பாவுடன் தொலைவிலுள்ள புதிய பண்ணையொன்றிற்குப் போவதாக முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவு பற்றி முதலில் யாரும் எங்களுக்கு எதுவுமே கூறவில்லை. பண்ணையை நோக்கிய பிரயாணத்தில் அப்பாவின் கண்களில் ஆறாத ஆத்திரம் கண்ணீராகப் பெருகியது. எல்லாக் கோபங்களையும் அவர் எங்கள் மீதுதான் தீர்த்துக்கொண்டார். பண்ணையை நோக்கிய பிரயாணம் எல்லையில்லாது நீண்டுகொண்டே சென்றது. நரகத்திற்குப் போவது போலயிருந்தது. நான் அப்பாவைப் பார்ப்பதற்கு முகத்தைத் திருப்பினால் அவர் எனது முகத்தில் காறியுமிழ்ந்தார். இடையிடையே தனது சொத்துக்களைக் கொள்ளையடித்தவர்களைத் திட்டுவார்.அவரின் சொத்துக்களுக்கும் எங்களுக்கும் எந்தவித சம்மந்தமுமில்லாதது போல அவரின் சொற்கள் எனது செவிகளில் ஒலித்தன.

இன்று அதனை மீட்டிப் பார்க்கையில், ஒரு சிறுமி அவளைச் சூழ்ந்திருந்த எல்லாப் பிரச்சினைகளுக்கு நடுவிலும் தனது பட்டறிவினை வளர்க்கவே முயன்றாள்.. எது நல்லது? எது தீயது? என மனம் பகுத்துணர முயன்றது. அப்பா தனது ஏட்டுக் கல்வியிலும் சொத்துச் சேர்ப்பதிலும் பெரிய திறமையாளராக இருந்தது போல ஏன் அவரால் தனது குடும்பத்தைப் புரிந்து கொள்ளமுடியவில்லை? தனது குழந்தைகளப் புரிந்து கொள்ளவில்லை? அப்பா மீண்டும் மீண்டும் எனது தாயை ஏசிக்கொண்டே வந்தார். "ஒன்றுக்குமே உதவாத பெண் ஜென்மம், எல்லாமே பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தையைப் பெற்றுப்போட அவளுக்கு வக்கில்லைல்லை, இன்று நான் தனியாக நிற்கிறேன்".

எனது நம்பிக்கை புத்துயிர் பெற்றது. தனது பலவீனமான ஒருகணத்தில் அப்பா எனது உண்மையான தாயார் பற்றிக் கூறுகிறார். நான் எனது கண்களையும் காதுகளையும் அகலத் திறந்து வைத்தேன். அம்மா எங்கே இருக்கின்றார்? எனது ஆன்மா அம்மாவினுள் புகுந்து கொள்ள முயன்றது. மூடிய கண்களுக்குள் வெள்ளை மேகத்தை வானத்தில் உருவாக்கினேன். சிலவேளை அங்குதான் அம்மா இருக்கிறாரோ? எங்களை இந்தப் பயணத்தில் வழி நடத்தும் நட்சத்திரம் அம்மாவாகத் தான் இருக்க வேண்டும். எங்களிருவரையும் இணைக்கும் வழிகாட்டி நட்சத்திரம் அப்பாவாக இருக்கலாம்.

அப்பா புதிய பண்ணையில் தம்பியையும் என்னையும் விட்டு விட்டுத் திரும்பினார். பழைய பண்ணை மாதிரி இது அழகான பண்ணையல்ல. எனது பாட்டி இப்போதும் கொடுமைக்காரியாகத்தான் இருந்தார். நானும் ரிச்சட்டும் முயல்களை வேட்டையாடுவோம். ஒவ்வொரு தடவை முயலை அடிக்கும்போதும் பாட்டியையே வென்றதாக நாங்கள் குதித்தோம். எங்கள் சந்தோசத்தைப் பாட்டியால் தடுக்கமுடியவில்லை.

ஒருநாள் எங்கள் முயல் வேட்டை ஒன்றிலிருந்து பண்ணை திரும்பியபோது எங்களது சிற்றன்னை அங்கிருந்தார். இனிப் பண்ணையில் நாங்கள் மாத்திரமே வேட்டைக்காரர்களாக இருக்க மாட்டோமென நினைத்துக்கொண்டேன். இரண்டு நாட்கள் கழித்து அப்பா பண்ணைக்கு வந்து சேர்ந்தார். பின்னேரம் வேலையாட்களைக் கூட்டி இந்தப் புதிய சிறிய பண்ணையில் அவர்களுக்குப் போதியளவு வேலை இல்லயெனவும் அவர்களை வேலை தேடச் சொல்லியும் அறிவுறுத்தினார். சற்று நேரம் கழிந்து என்னையும் தம்பியையும் நகர வீட்டிற்குச் செல்ல ஆயத்தமாகுமாறு சொன்னார். காலை உணவாகச் சில கோப்பைகள் பால் குடித்து விட்டு அப்பாவும் அவர் மனைவியும் அவசர அவசரமாகத் தங்களது பொருட்களை ஒன்று சேர்த்தனர். நானும் தம்பியும் அதனை பார்த்துக்கொண்டிருந்தோம். எங்களிடம் எடுத்துச் செல்ல எந்தப் பொருட்களும் இருக்கவில்லை.

குழந்தைப் போராளி - 10


















அம்மாவின் உண்மை முகம்

நான் அடுத்த நாள் நகரத்திற்குச் சென்றபோது மூன்று சிறுமிகளும் ஒரு சிறுவனும் என்னை வரவேற்றனர். நான் அவர்களைக் கேள்விக்குறியுடன் பார்க்க அப்பா "இவர்கள் உனது சகோதரர்கள்" எனச் சொன்னார். அவர்களது அழகிய ஆடைகள் என்னை ஈர்த்தன. அவர்களது உடை அவர்களைப் பகட்டானவர்களாய்க் காட்டிற்று. முதல் பார்வையிலேயே அவர்களை நான் வெறுப்பாகப் பார்த்திருக்கவேண்டும். என் விநோதமான சகோதரர்கள் விநோதமான கேள்விகளைக் கேட்டனர்.
"முற்றெஸி உன்னை எப்படி நடத்துகிறார்?"
"முற்றெஸி" இந்தச் சொல்லை நான் கேள்விப்பட்டதே இல்லை. எனவே எதுவும் விளங்காது அவர்களைப் பார்த்து முற்றெஸி என்றால் என்ன அர்த்தமெனக் கேட்டேன்.
" முற்றெஸி" என எல்லோரும் பதிலளித்தனர்.
"உங்கள் அம்மாவைச் சொல்கிறீர்களா?" என அவர்களைக் கேட்டேன்.
"இல்லை,அவர் எங்களது அம்மா அல்ல, அவர் பெயர் முற்றெஸி"
"சரி யார் எங்களது அம்மா?" என அவர்களைக் கேட்டேன். அவர்களுக்கும் அம்மா எங்குள்ளார் என்று தெரியவில்லை.
"எங்களுக்குத் தெரிந்தது முற்றெஸி அம்மா அல்ல என்பது தான்"

நான் எவ்வாறு கீழ்தரமாக நடத்தப்படுகிறேன் எனச் சொன்னதும் அவர்களுக்குக் கவலையாய்ப் போயிற்று.
"இங்கு உங்களைப் பார்க்க வரும்போது அவர் உங்களை மோசமாக நடத்துவாரா"? எனக் கேட்க "இல்லை" என்று சொன்னார்கள்.

நான் சிறிது தனியாகச் சென்று யோசிக்க வேண்டியிருந்தது. அவர் எனது உண்மையான தாயில்லை என்பதை ஏற்றுக் கொள்ளும் போது அவரின் கோபச் செயல்களும் மூர்க்கமும் என் நினைவில் வந்து போயின. எனது இதயத்தில் தாய் என்பதை மாற்றி வளர்ப்புத் தாய் எனப் பதித்துக்கொண்டேன். இரண்டு நாட்கள் கழிந்து இன்னுமொரு சகோதரியும் வந்து சேர்ந்தாள். இவள் எனக்கு மூத்தவள். அவளின் பெயர் அனெற். எனது தந்தைக்கும் நயின்டோவின் அம்மாவிற்கும் பிறந்தவள் தான் இந்த அக்கா. இவளும் எனது இதயத்தில் ஓர் இடத்தைப் பிடித்துக்கொண்டாள். மற்றைய எனது சகோதரிகளுக்கு - சகோதரி கிறேஸைத் தவிர - அனெற் ஒரு வேண்டப்படாதவள். கிறேஸ் அமைதியும், மிக மன உறுதியும் கொண்டவள். யாராவது நியாயத்திற்குப் புறம்பாக நடந்து கொண்டால் மிகத் தீவிரமாகத் தனது எதிர்ப்பைத் தெரிவிப்பாள். மற்றச் சகோதரிகளின் கூட்டான நடவடிக்கைக ளுக்கு எதிராக என்னால் எதுவும் செய்ய முடியவில்ல. ஏன் அனெற்றை அவர்கள் துன்புறுத்துகிறார்கள் என என்னால் சரிவரப் புரிந்து கொள்ள முடியாதிருந்தது. ஒவ்வொரு நாளையும் அனெற் அழுகையிலேயே வாழ்ந்தாள். நானோ ஒன்றும் செய்யமுடியாது தவிக்க வேண்டியிருந்தது. எங்களைக் கவனித்துக் கொண்ட செவிலித்தாய் மேரி அனெற்றுக்கு ஆறுதல் சொல்வது என் மனதிற்குச் சற்றே நிம்மதியைக் கொடுத்தது.

எனது புதிய உலகம் எனக்குப் பிடித்திருந்தது. குறிப்பாக எனது சகோதரனுடன் நல்ல உறவைக் கொண்டிருந்தேன். எனது சகோதரிகள் தங்கள் பாடசாலை விடுதிகளுக்குத் திரும்பிச் செல்ல நான் சகோதரன் ரிச்சட்டுடன் அவன் படித்துக்கொண்டிருந்த பாடசாலையில் முதலாம் வகுப்பை ஆரம்பித்தேன். அங்கு ரிச்சட் என்னை 'பேபி' என்று மற்றவர்களுக்கும் சொல்லி வைக்க பிரச்சினைகள் உருவாகி, என்னை 'பேபி' என்பவர்களுடன் சண்டை பிடித்து அநேகமாக ஒவ்வொரு நாளும் கீறல்களுடனும் காயங்களுடனும் நான் வீடு திரும்ப வேண்டியிருந்தது.

நானும் சகோதரனும் தனியாக நகர வீட்டில் விடப்பட்டிருந்தோம். செவிலித் தாயார் மேரி எங்களை அன்பாகக் கவனித்துக் கொண்டிருந்தார். திடீரென அப்பா தன் மனைவியுடனும் அவரின் குழந்தைகளுடனும் வந்து சேர்ந்தார். இப்போது இன்னுமொரு ஆண்குழந்தை புதிதாக வந்திருந்தது. பாடசாலை முடிந்ததும் புதிய சகோதரனைப் பார்துக்கொள்ளும் வேலை என் தலைமேல் விழுந்தது. விளையாடவோ சண்டையிடவோ நேரமில்லாது போயிற்று. எனக்கு வந்த கோபத்தில் சிறியவனை எங்காவது தொலைத்துவிட வேண்டும் போலிருந்தது. நான் குழந்தையைப் பார்த்துக் கொள்ள முடியாததற்குச் சாட்டுகளை யோசிக்கத் தொடங்கினேன்.

ஒரு நாள் குழந்தையுடன் வீட்டிற்கு வெளியே உட்கார்ந்திருந்தேன் மற்றக் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். எனக்கு விளையாட முடியவில்லயே என்ற ஆத்திரம்! சின்னவனின் பெருவிரலைப் பிடித்துக் கிள்ளினேன். அவன் வீறிட்டு அழத் தொடங்க எனக்குப் பயம் பிடித்துக் கொண்டது. கிள்ளிய அடையாளம் தெரிந்து விடுமோ? அவனது அம்மா வெளியே வந்து பார்ப்பாரோ? மறுபக்கத்தில் அவள் வெளியே வந்து பார்த்துக் குழந்தையை வாங்கிக் கொண்டால் நான் விளையாடப் போகலாம். இரண்டும் நடக்கவில்லை. இம்முறை குண்டிப்பகுதியில் ஒருதரம் கிள்ளக் குழந்தை மீண்டும் அழத் தாயார் வந்து வாங்கிக்கொண்டார். என்னிலும் ஒருபடி அவர் மேலே போய் என்னைக் குழந்தையின் சாணத்துண்டுகளைத் துவைக்கும்படி சொல்லிவிட்டார். எல்லாக் குழந்தைகளும் என்னக் கேலி பண்ணிச் சிரித்தார்கள். இது என்னை மேலும் ஆத்திரமூட்டியது. நான் அவர்கள் எல்லோரையும் வெறுத்ததுடன் ஒரு சின்ன விடயத்திற்கும் மூர்க்கத்தோடு அவர்களுடன் அடிதடியில் இறங்கத் தொடங்கினேன்.

ஒருநாள் சாணத்துண்டுகளைத் துவைத்துக்கொண்டிருக்கும்போது காய்ந்த மலம் கருகப்பொரித்த முட்டைத்துகள்கள் போல எனக்குப் பட்டது. அதில் சிறிதளவு எடுத்துச் சென்று உப்புத்தூவி எனது சகோதரர்கள் இம்மனுவேலுக்கும் ரேய்க்கும் கொடுத்தேன். அவர்கள் இன்னும் வேண்டுமெனக் கேட்க எனது சிரிப்பை அடக்க முடியாது தொடர்ந்து சிரித்துக்கொண்டே நாளைவரைக் காத்திருக்கவேண்டுமெனக் கூறினேன்.

எல்லவற்றிற்கும் மேலாக எனது சகோதரிகள் தங்கள் பாடசாலை விடுதிகளிலிருந்து திரும்பி வந்து எனது வேலையைப் பொறுப்பெடுத்துக்கொள்ள வேண்டுமென்பது எனது ஆசை. அதற்கு இன்னும் சில வாரங்கள் நான் பொறுத்திருக்க வேண்டியிருந்தது.

அப்பாவின் மனைவி தான் சுகயீனமாக இருக்கிறாரெனப் பாசாங்கு செய்து கொண்டு கட்டிலிலேயே காலத்தைக் கழிப்பார். அல்லது அப்பாவைத் தூண்டிவிட்டு அவரது பெண்களுக்கு உதை கிடைக்கும்படி செய்வாள். அனேற்றும் கிறேசும் நல்ல நண்பிகளாகவும் எல்லா நேரமும் ஒன்றாகவே இருந்ததற்கும் இது கூடக் காரணமாயிருக்கலாம். ஒரு சனிக்கிழமை காலையில் அவர்கள் இருவரும் காணாமற் போனார்கள். காத்திருந்துவிட்டு அப்பாவும் அவர்களைத் தேடிப் போனார். அவர்கள் திரும்பி வரவேயில்லை. இப்போதாவது அப்பாவின் கண்கள் திறந்துகொள்ள வேண்டுமென நான் மனதார விரும்பினேன். அவரின் மனைவியின் உண்மையான சொரூபத்தை அவர் கண்டறிய இதுவே பொருத்தமான நேரமாக எனக்குப்பட்டது.

எனது சிற்றன்னையின் குழந்தைகள் பாடசாலை செல்லத் தொடங்கினர். ஒவ்வொருவரும் இரண்டு சோடிச் சப்பாத்துக்களை வைத்திருந்தனர். என்னிடமோ நல்ல உடை ஒன்று கூட இல்லை. நான் சிற்றன்னையிடம் ஒரு உடுப்பு வாங்கித்தரும்படி கேட்க அவரென்னை அப்பாவிடம் அனுப்பினார். ஒரு பின்னேரத்தில் அப்பா வரவேற்பறையில் இருந்து கொண்டு சுங்கான் புகைத்துக்கொண்டிருந்தார். திடீரென அவரின் முகத்தில் புன்னகை தொற்றியது. நான் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எனது விருப்பத்தைச் சொன்னேன். சிரித்துக் கொண்டே நாளை எனக்கொரு அழகான உடை வாங்குவது பற்றி யோசிப்பதாகச் சொன்னார். இரவு முழுவதும் என்னால் உறங்கமுடியவில்லை. அடுத்த நாள் பகலும் விரைவில் கழிவதாக இல்லை. மாலை, அப்பா வருவது தெரிந்ததும் அவரின் முன் போய் நின்றேன். ஒரு சிறிய பொதியை அவர் என்னிடம் தந்தார். நான் அவர் என்னை அந்தப் பொதியைப் பிரிக்கச் சொல்லும்வரை மரியாதையாகக் காத்திருந்தேன். பொதியைச் சுற்றியிருந்த காகிதத்தைக் கிழிக்க ஒரு கறுத்த உடை வெள்ளைக் கோடுகளுடன் வெளியே வந்தது. கறுப்பில் வெள்ளைக் கோடுகள் பளிச்சென்று தெரிந்ததுடன் அதன் வடிவமைப்பு மார்புப் பக்கத்திதும் முதுகுப் பக்கத்திதும் மிகத் தாழ்வாக இருந்தது. ஏமாற்றம் எனது முகத்தில் எழுதி ஒட்டப்பட்டது. எடுத்ததெற்கெல்லாம் அடிக்கும் அப்பா சிறிது ஓய்ந்துள்ளார். பழையதை மீண்டும் கிளறிவிடுவேனோ என்ற பயத்தில் ஒன்றும் சொல்லாது தனியாகச் சென்று அழத் தொடங்கினேன். என்னைத் தொடர்ந்து வந்த என் சகோதரி மாஹி "நீ அந்த உடையில் மிக அழகாக இருக்கின்றாய், அத்துடன் அது மிக நாகரிகமான உடை" என்றும் சொன்னாள். அந்த உடையில் நான் பாதி நிர்வாணமாகவும் பரிதாபமாகவும் இருந்தேன்.ஆனால் எனது உடலை என் விருப்பத்திற்கு மாறாக மற்றவர்கள் பார்ப்பதற்கெதிரான எனது போராட்டம் தோற்றுப் போய்விட்டதென்பது இன்று எனக்குப் புரிகிறது.

குழந்தைப் போராளி - 9


புதிய கவலையும் புதிய நம்பிக்கையும்
அப்பா தனது மனைவியின் தாய் ஜேனிற்குப் பண்ணையில் ஒரு வீட்டை ஒதுக்கியிருந்தார். ஜேன் தனது மகள்களுடனும், ஒரு மகனுடனும் சில பசுக்களுடனும் அங்கு குடியேறினார். பெண் பிள்ளைகளை நான் சின்னம்மா என்றும் ஆண்பிள்ளையை மாமா எ ன்றும் அழைக்கவேண்டும். அவர்களோ என்னையொத்த வயதினராகத்தான் இருந்தனர். அம்மாவின் சகோதரிகள் அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வருவார்கள். அவர்களுடன் அம்மா நன்றாகவே கதைப்பார். ஆனால் மிரட்டல் பார்வை பார்ப்பதைத் தவிர அம்மா வேறெதுவும் என்னுடன் பேசுவதில்லை. அது என்னை மிகவும் வருத்தியது. வெறுக்கப்பட்ட, வேண்டப்படாத ஒரு தொற்றுநோய் போல நான் ஒதுக்கப்பட்டேன்.

இந்த உணர்வே வெறுப்பைத் திருப்பிக் கொடுக்கும் தன்மையை என்னுள் தூண்டிவிட்டது. நான் எப்போதும் அன்பையே செலுத்தும் சிறுமியாக இருந்த போதிலும் எனது குடும்பம் எனக்கு எந்தவிதத்திலும் நேசத்தைத் திருப்பி அளிக்கவில்லை. இவ்வுணர்வு என்னுள் அலை மோதிக்கொண்டேயிருந்தது. ஏதாவதொரு வடிகால் கிடைக்காவிடில் நான் நிலை தடுமாறவேண்டிய நிலை உருவாகிக்கொண்டிருந்தது. என் வாழ்வு நேசத்திற்காகவும் அரவணைப்புக்காகவும் தவிக்கும் ஒரு பரிதாப வாழ்நிலையாக இருந்தது. எனது தாகத்தினை எவ்வாறு தணிப்பதென்று தெரியாது நான் நிலைதடுமாறினேன். ஒரு சுவரில் முதுகு பதியக் கைகால்களை என் விதி கட்டிவைத்திருந்தது. ஒரு பக்கத்தில் அம்மாவும் மற்றைய பக்கத்தில் நானுமாக இழுபறிப்பட்டுக்கொண்டே என் ஆன்மாவைக் காப்பாற்றிக் கொள்ளவும் பலப்படுத்தவும் நான் முயன்றுகொண்டிருந்தேன். என்றோ ஒரு நாள் என் விலங்குகள் தெறித்து விழத்தான் போகின்றன. இங்கிருந்து ஒடிவிட வேண்டும். இம்முயற்சியில் என் வாழ்வே பறிபோனாலும் நான் ஒடிவிட வேண்டும்.

ஒரு பிற்பகல் நேரம் ஜேன் வீட்டிற்கு வந்து அம்மாவிடம் புலம்பிக் கொண்டிருந்தார். மாட்டுச் சாணங்களைச் சேகரிக்க அவருக்கு உதவ யாருமில்லை என்பதும் தனது குழந்தைகள் இந்த வேலையைச் செய்தால் அவர்கள் பாடசாலைக்குப் பிந்திப்போக நேரிடும் என்பதும் அவர் கவலையாய் இருந்தது. அம்மா நாளைக் காலையில் என்னை அங்கு அனுப்புவதாகச் சொன்னார். இவ்வாறு இந்த வேலையும் தொடங்கியது. இந்த வேலையைப் பல வாரங்களாக நான் தொடர்ந்து செய்தபோது தான் ஒன்றை கவனிக்கத் தொடங்கினேன். என் கால்கள் உருமாறத் தொடங்கின. பின்னேரங்களில் களைப்பின் காரணமாக நான் கால்களைக் கழுவாமல் விட்டுவிடுவதுண்டு. இப்போது கழுவும் போது ஒட்டி உலர்ந்த சாணம் கால்களில் தோலையும் உரித்துக்கொண்டு வந்தது. கல்லால் தேய்த்துக் கால்களைக் கழுவினால் கால்களில் கறுப்பாகப் புள்ளிகள் தோன்றின. அத்துடன் இரத்தமும் வடியத் தொடங்கியது. இப்போது ஜேனின் பிள்ளைகளுக்காகவும் நான் அடிமை வேலை செய்தாக வேண்டியுள்ளது. நான் அவர்களையும் தீவிரமாக வெறுக்கத் தொடங்கினேன். ஒருநாள் அம்மா தனது அம்மாவிற்கு ஒரு கூடை வாழைப்பழங்களைக் கொண்டுசென்று கொடுக்கும்படி எனக்குக் கட்டளையிட்டார். வாழைப்பழக் கூடையை வாங்கிய ஜேனின் பெண்கள் அதனைப் பார்துவிட்டு நான் சில வாழைப்பழங்களைச் சாப்பிட்டு விட்டதாகக் குற்றம் சாட்டினர். நான் கோபத்தோடு அவர்களின் குற்றச்சாட்டை மறுக்க அவர்கள் என்னைத் தரித்திரம் பிடித்தவளெனச் சொன்னார்கள். "இங்கு வராவிட்டால் பட்டினி கிடக்கவேண்டிய நீங்கள் எனது அப்பாவின் உணவைச் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்" என ஆத்திரத்துடன் கூறினேன். இரு சிறுமிகள் கத்திக்கொண்டே என்பின்னே ஓடி வர நானும் விடாது திட்டிக்கொண்டே மயிரிழை வெளியில் தப்பி ஓடிவந்தேன்.

நான் வீட்டிற்கு வந்த போது அம்மா அங்கிருக்கவில்லை. எனவே நான் சிறிது களைப்பாறிக் கொள்ளலாமென நினத்தேன். திரும்பிப் பார்க்கும்போது என்னத் துரத்திக் கொண்டு வந்த இரு சிறுமிகளும் தூரத்தே வந்து கொண்டிருப்பதைக் கண்டேன். குசினிக்குள் ஓடிச் சென்று வாழைப்பழங்களை அள்ளிக்கொண்டு அப்பாவின் கட்டிலுக்கு அடியில் ஒழிந்து கொண்டேன். வயிறு நிறைய வாழைப்பழங்களைத் திணித்துக்கொண்டு அப்படியே உறங்கிப்போனேன். திடீரென அப்பாவின் குரல் எனது தூக்கத்தைக் கலைத்தது. இவர் நகரத்திலல்லவா இருக்கவேண்டும்? கனவு காண்கிறேனோ? ஒரு வழியாக வெளியே நழுவி இப்போது தான் வெளியேயிருந்து அறைக்குள் வருவதுபோல் வந்தேன். அவருக்கு முகமன் கூறிவிட்டு யாரும் கட்டிலுக்குக் கீழே கிடக்கும் வாழைப்பழத்தோல்களைக் கண்டுவிடக் கூடாது என மனதினில் வேண்டிக் கொண்டே வீட்டிற்கு வெளியே வந்தேன்.

வீட்டுத் தரையை எப்போதாவது சுத்தமாக்கும் அம்மா அடுத்த நாளே தோல்களைக் கண்டு கொண்டார். மற்றக் குழந்தைகளெல்லாம் பாட்டியிடம் போய் விட்டதால் சந்தேகம் முழுவதும் என்மீதே விழுந்தது. தோற்குவியல் சற்றுப் பெரியதாகவே இருந்தது. அதனால் அம்மாவே தோல்களை அங்கு போட்டு விட்டதாகக் குற்றஞ் சாட்டினேன். அம்மா கடுகடுப்பாக என்னப் பார்த்துக் கொண்டு நின்றார். இறுதியில் நான் அப்பாவைப் பரிதாபமாகப் பார்தேன். தனது தலையை ஆட்டிய அவர் என்னை அமைதியாகப் பார்த்தார். "யார் இந்தப் பழங்களைச் சாப்பிட்டதென்று சொன்னால் நான் உன்னை அடிக்கப் போவதில்லை" எனச் சொன்னார். வேறு வழியின்றி உண்மையைச் சொன்ன நான் இரு சிறுமிகளும் என்னைத் து ரத்தி வந்த செய்தியையும் சொன்னேன். ஏதோ சொல்ல வாயெடுத்த அப்பா ஒன்றுமே சொல்லாது என்னை அங்குவிட்டுவிட்டு அறையை விட்டு வெளியேறினார். உள்ளே வரவேற்பறையில் அப்பா அம்மாவிடம் அவரது தாயைப் பண்ணையைவிட்டுப் போகும்படி கேட்கப் போவதாகச் சொல்ல அம்மா ஏறக்குறைய மயக்கமே அடைந்துவிட்டார். அப்பாவின் எண்ணத்தை அம்மா மாற்ற முயற்சி செய்வதை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்பாவோ பிடிவாதமாகத் தன் முடிவிலேயே நின்றிருந்தார். எனது உணர்வுகளெதையும் மறைக்காமல் எனது வெற்றியைக் காட்ட அம்மாவின் பக்கம் மிதப்பாகத் திரும்பினேன். அம்மாவின் மீதான அப்பாவின் கோபம் எல்லைமீறிய போது நான் ஒரே ஓட்டமாகக் கட்டிலைத் தேடி ஓடினேன்.

அலறல் சத்தங்கள் கேட்டுக்கொண்டிருந்தன. இருவரும் சண்டையிடுவதைப் பார்த்தேன். அம்மா தோற்றுக்கொண்டிருந்தார். கதவருகே அம்மா விழுந்து கிடந்தார். அவளது அலறல் பயங்கரமாக இருந்ததால் நான் காதுகளைப் பொத்திக் கொண்டேன். அப்பா தனியாகப் படுக்கறைக்குச் செல்ல அம்மா அடுத்த நாள் வரை கதவருகே தரையிலேயே கிடந்தார்.

நான் நித்திரை விட்டெழுந்து பார்க்கும்போது அப்பா மீண்டும் நகரத்திற்குப் போய்விட்டிருந்தார். எனது வளர்ப்புத்தாய் தனது முகத்தில் ஒர் ஈரத்துணியுடன் நின்றிருக்க ஒரு சத்தமும் செய்யாது நான் வெளியே சென்று வானத்தில் பறவைகள் அமைதியாகப் பறந்து செல்வதைப் பார்த்துக் கொண்டு நின்றேன். வருடம் முடியும் தருவாயில் அப்பா மீண்டும் பண்ணைக்கு வந்தார். மாடு வெட்டுபவர்களை அழைத்துவரும்படி அப்பா எனக்குக் கூற நான் வெளியே புறப்பட்டேன். மாடு வெட்டுபவர்களில் ஒருவரை வழியிலேயே சந்த்திதேன். இருவருமாகச் சேர்ந்து மற்றயவரையும் தேடிச் சென்றோம். இருவருமே எத்தனை மிருகங்கள் வெட்ட வேண்டியிருக்குமெனக் கேட்டனர். அதில் ஒருவர் சப்புக் கொட்டிக்கொண்டே வந்தார். ஏறத்தாழ ஒரு மணித்தியாலத்தின் பின்னர் இருவருடனும் வீடு திரும்பினேன். அப்பா அவர்களை மாடுகள் பக்கம் அழைத்துச் செல்ல மாடு வெட்டுவதைப் பார்ப்பதில் எந்த ஆர்வமுமில்லாத நான் தோட்டத்தில் இலைகளைச் சேகரிக்கத் தொடங்கினேன்.

சில மணித்தியாலங்களின் பின் நான்கு விருந்தினர்கள் வந்தனர். நால்வரில் ஒருவர் மிக வித்தியாசமாயிருந்தார். அவரின் தோல் ஓர் ஒளிக்கற்றை போல் வெண்மையாக இருந்தது. அவர் போகுமிடமெல்லாம் அவரை என் பார்வை தொடர்ந்து கொண்டேயிருந்தது. ஏனெனில் நான் அப்படி ஒருவரை இதுவரை கண்டதில்லை. அவரின் அருகில் செல்வதற்காக எல்லா முயற்சிகளையும் செய்து கொண்டிருந்தேன். அவரின் அருகாமையில் சென்று ஏன் அவர் இவ்வளவு வெளுப்பாக இருக்கிறார் என அறிய வேண்டும்! அவரின் பழுப்பு நிறக்கண்களும் பெரிய காதுகளுடன் கூடிய அவரது முகமும் பெரிய மூக்கின் கீழ் வளர்ந்த மீசையும் என்னைக் கவர்ந்தன. அவரை என்னால் தொட்டு விட முடியும். கிள்ளினால் தோல் கழன்று விரலோடு வந்து விடுமோ?

ஒளிவீசும் தோல்களுடைய மனிதர் என் எண்ணங்கள் முழுவதையும் ஆட்கொள்ளத் தொடங்கினார்.

மாலையில் அவர்கள் விருந்தினை முடித்துச் செல்லும்போது ஒழுங்குபடுத்துவதும் கழுவுவதுமாக எனக்கு வேலைகளை விட்டுச் சென்றனர். அப்பா வேலை செய்யும் என்னையே பார்த்துக் கொண்டு நின்றார். பின்பு நாளை என்னை நகரத்திற்குக் கூட்டிச் செல்வதாகக் கூறிச் சிரித்துக் கொண்டே போனார். விவரிக்க முடியாத மகிழ்வுணர்வு புயலாக என்னுள் வீசியது. சிரித்துக்கொண்டே என்ன செய்வதென்று தெரியாது நான் நிற்க, அவரின் மனைவி அவரை உள்ளே அழைத்துச் சென்றது எனக்கு ஆறுதலாகவேயிருந்தது. அன்றிரவு என் கனவுகள் வழமையைவிட ஒளி பொருந்தியதும் அழகானதுமாயிருந்தன.


குழந்தைப் போராளி - 8

குடும்ப இரகசியம்

நான் மரத்தினடியில் இருந்து குளிர்ந்த மெல்லிய காற்றை அனுபவித்துக் கொண்டிருந்தபோது ஓர் இளைஞன் என்னை நோக்கி நடந்து வருவதைக் கண்டேன். எங்கள் கண்கள் சந்தித்துக் கொண்டன. என்னைத் தொடுமளவு தூரத்தில் நின்று கொண்டு எனக்கு முகமன் கூறிய அவன் எனது நலம் பற்றி விசாரித்தான். 'நான் நன்றாக இருக்கின்றேன்' எனக் கூறிய போது என் கண்கள் அவன் கண்களை ஊடுருவிக்கொண்டேயிருந்தன. 'உனது அப்பா வீட்டில் இருக்கிறாரா?' என அவன் கேட்டான். எனக்கு அப்பாவே இல்லை எனச் சொல்ல நினைத்த நான் அறிமுகமில்லாத இவனிடம் அதைச் சொல்லக் கூடாதென நினைத்துக் கொண்டு அவனைச் சிறிது காத்திருக்கும்படி கேட்டேன். நான் வீடு செல்ல எத்தனிக்கும் போது அவன் எனது பெயரையும் பாட்டி எங்களுடன்தானா இருக்கிறார்? எனவும் கேட்டான். நான் பாட்டி எங்களுடனில்லாது வேறு வீட்டிலிருக்கிறார் என்றவுடன் அவன் முகத்திலே மாறுதல் எற்பட்டது. அவனின் கண்கள் பிரகாசித்து ஒளிர்ந்தன.

ஓர் இளைஞன் இங்கு வந்திருப்பதாகவும் அவன் அப்பாவுடன் பேசப் பிரியப்படுவதாகவும் சொன்னவுடன் "அவனை இங்கு வரச் சொல்" என்றார் அப்பா.நான் அவனை அழைத்து வந்தபோது, அவனை அடையாளம் காண முயற்சிப்பதுபோல அப்பா யோசனையுடன் தனது நெற்றியைச் சுருக்கியவாறு வாசற் கதவருகே நின்றுகொண்டிருந்தார். அப்பா அவனை வரவேற்றவிதம் எனது ஆவலைத் தூண்டி விட்டது. நான் ஒழிந்திருந்து இவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்களெனக் கவனித்தேன்.
"ஏன் இங்கு வந்தாய்?" அப்பா கேட்டவுடனேயே அந்த வாலிபன் அழத்தொடங்கினான்.
" நான் எங்கு போவதென்று எனக்குத் தெரியவில்லை" திக்கியபடி அவன் பதில் சொன்னான்.
"இங்கு வரவேண்டாமென நான் உனக்குக் கூறியுள்ளேன், என் வந்தாய்?"
"எனக்கிருக்கும் ஒரே சகோதரன் நீதான்" என்று அந்த இளைஞன் மெதுவாகச் சொன்னான். சகோதரன் என்ற சொல்லைக் கேட்டதும் இந்த வாலிபன் எனது சித்தப்பா என எனக்குத் தெளிவாகியது. அதனால் இன்னும் என் காதுகளைக் கூர்மைப்படுத்திக் கொண்டு ஒரு சொல்லைத்தானும் விட்டுவிடாமல் உன்னிப்பாகக் கவனித்தேன். எனது தந்தை அவனைத் திட்டிக் கொண்டே அந்த இடத்தை விட்டு உடனடியாகப் போகும்படி கூறினார்.
"நான் எங்கு போவது? தயவு செய்து எனக்கு உதவி செய்" என வாலிபன் அப்பாவைக் கெஞ்சினான்.

கையறுநிலை எனக்கு நன்றாகவே தெரிந்ததொரு உணர்வு. அவனுக்காக எனது இருதயம் நெகிழ்ந்து போனது. சித்தப்பா எவ்வளவுக்கெவ்வளவு கெஞ்சினாரோ அந்தளவுக்கு அப்பாவின் பிடிவாதமும் வளர்ந்தது. இறுதியாகச் சித்தப்பா முழந்தாளிட்டுத் தனக்கு இங்கே இடமளிக்கும்படி கேட்டார். நான் சத்தமின்றி அழுது கொண்டே வெளியே ஒடினேன். சில நிமிடங்களின் பின் சித்தப்பா வீட்டை விட்டு வெளியேறினார். என்ன நடந்ததென்று தெரியவில்லை. அறிந்து கொள்ள நான் அவர் பின்னால் ஓடினேன்.
"சித்தப்பா, சித்தப்பா" என நான் கூப்பிட்டதும் அவர் நின்றார்.
"உனது அப்பா தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டாரா?"
"இல்லை.. நான் இங்கு வந்ததே அவருக்குத் தெரியாது"
"பின்பேன் வந்தாய்?" எனச் சித்தப்பா கேட்க, என்னால் முடிந்த உதவிகளை அவருக்குச் செய்ய நான் தயாராகவுள்ளேன் எனச் சொன்னேன். அதைகேட்டுப் புன்னகைத்த அவரிடம் அவரின் பெயரைக் கேட்டேன். தனது பெயர் நயின்டோ (மூக்கு எனப் பொருள்படும்) என்றார் சித்தப்பா. அப்போது தான் அவரது பெரிய மூக்கைப் பார்த்தேன். நாங்களிருவரும் உட்கார்ந்து கொண்டோம் "ஏன் அப்பா உங்களை விரட்டிவிட்டார்" எனச் சித்தப்பாவிடம் கேட்டேன்.
" நீ ஒரு சிறுமி, அதை உன்னால் புரிந்து கொள்ள முடியாது" மென்மையான குரலில் சித்தப்பா சொன்னர்.
அவர் சொன்னால் என்னால் புரிந்து கொள்ள முடியுமெனெச் சொன்ன நான் அவர் கண்களைப் பார்த்ததும் அவர் எதையும் சொல்லத் தயாரில்லை என்பதைப் புரிந்து கொண்டேன்.
" நான் என்னைப் பற்றிச் சொல்லவா?" எனக் கேட்டேன். "அது நல்லது" எனச் சித்தப்பா சொன்னார். நாங்கள் இருவரும் நெருக்கமாக அமர்ந்து கொண்டோம்.
"உங்களை மட்டும் அப்பா வெறுக்கவில்லை, என்னையும் வெறுக்கின்றார் என்பது உங்களுக்குத் தெரியவேண்டும்" என்ற ஆரம்பத்தோடு எனது கதையைக் கூறத் தொடங்கினேன். எவ்வாறு நான் நடத்தப்படுகிறேன் என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது அழுகை என்னை முடக்கியது. என்னால் பேச முடியாமல் போகச் சித்தப்பா தனது கையை நீட்டி எனது கண்ணீரைத் துடைத்துவிட்டார். சிறிது நேரம் கழித்து அவர் தன்னைப் பற்றிக் கூறத் தொடங்கினார். அப்பாவின் இழிவான நடத்தை பற்றியெல்லாம் அவரின் கதையில் வந்தது.

எனது தந்தைவழிப் பாட்டன் தனது மனைவியை (பாட்டியை) விவாகரத்துச் செய்ததுடன் எனது தந்தையையும் வீட்டை விட்டுத் துரத்தி வீட்டிற்கு என்றுமே திரும்பிவரக்கூடாதென்று தடையுத்தரவும் பிறப்பித்திருந்தார். பதின்நான்கு வயதில் எனது தந்தை அதே சுற்று வட்டரத்திலுள்ள ஒரு செல்வந்தக் குடும்பத்தினால் தத்தெடுக்கப்பட்டார். எனது பாட்டன் மீண்டும் திருமணம் செய்து எனது நயின்டோ சித்தப்பாவைப் பெற்றார். நயின்டோ பிறந்து சிறிது காலத்தில் எனது பாட்டன் நோயுற்று மரணமானார். சொத்துக்களை அவர் தனது புது மனைவிக்கும் மகன் நயின்டோவிற்கும் கொடுத்திருந்தார். எனது தந்தைக்கு அவரின் சொத்தில் எந்தப் பங்கும் கிடைக்கவில்லை. சித்தப்பா அப்போது வயதில் குறைந்தவராக இருந்ததால் சொத்துக்களின் பராமரிப்பை அவரின் தாயார் கவனித்துக்கொண்டார். இவ்வளவு சொத்துக்களிருந்தும் சித்தப்பா ஏன் அப்பாவிடம் கையேந்தி நிற்க வேண்டுமெனெ நான் கேட்க 'உனது அப்பா என் சொத்துக்களையெல்லாம் களவாடி விட்டார்' எனச் சித்தப்பா பதில் சொன்னார்.

"எங்கள் தந்தையின் மரணச்சடங்கிற்கு உனது அப்பாவும் வந்திருந்தார். வந்தவர் எனது அம்மாவிடம் அவளில் தான் காதல் கொண்டுள்ளதாகச் சொல்லி அவளைத் தான் திருமணம் செய்து கொள்வதாகவும் பொய் வாக்குறுதி அளித்திருக்கிறார். இதற்கிடையில் எனது தாய் மீண்டும் கருவுற்றார். சொத்துக்களைத் தன் பெயருக்கு மாற்றி எழுதுமாறு உனது தந்தை கேட்க எனது தாயாரும் அவ்வாறே செய்தார்.

நான் ஆடாது அசையாது கதையைக் கேட்டுக்கொண்டிருந்தேன். சொத்துக்கள் கைக்கு வந்து சேர்ந்ததும் அப்பா தனது சுயரூபத்தைக் காட்ட ஆரம்பித்தார் முதலில் சிறிய நயின்டோவை வீட்டை விட்டுத் துரத்தியதோடு நயின்டோவின் தாயார் ஒரு பெண் குழந்தையைப் பெற்றதும் அவளையும் துரத்திவிட்டார். இந்த இடத்தில் சித்தப்பா கதையை நிறுத்தி அழத் தொடங்கினார். நான் இவருக்கு எவ்வாறு உதவலாமென யோசிக்கத் தொடங்கினேன். சடுதியாக எனக்கொரு வழி தென்பட்டது. எனது ஞானத்தாயும் அவரது கணவரும் பரிதாபத்துக்குரிய எனது சித்தப்பாவின் நிலையைப் புரிந்து கொள்வார்கள். அவர்களால் சிலவேளை சித்தப்பாவுக்கு உதவ முடியலாம். என்னை எனது குடும்பம் எவ்வாறு நடத்துகிறது என்பதும் அவர்களுக்குத் தெரியும்.

நான் ஞானத்தாய் பற்றிச் சொன்னவுடன் சித்தப்பாவின் கண்களில் நம்பிக்கை துளிர்விடத் தொடங்கியது. இருவரும் சிறுகுன்றின் சாலையில் ஏறி எனது ஞானத்தாய் வீட்டை நோக்கி நடந்தோம். சித்தப்பா தனது அழுகையை நிறுத்திச் சிரித்துக்கொண்டே என்னக் கட்டியணைத்துக்கொண்டார். இதற்கிடையில் நானெனது தாயார் பற்றிச் சித்தப்பாவிற்குக் கூறினேன். எனது தாய் என்ற சொல்லை இரண்டாம் முறை கூறும் போது "அவர் உனது உண்மையான தாயாக இருக்க முடியாது" எனச் சித்தப்பா கூறினார். நானோ கோபத்திலும் வெறுப்பிலும் அவர் இப்படிக் கூறுகிறாரென நினைத்துக்கொண்டேன்.

எனது ஞானத்தாய் தனது மகன்களில் ஒருவருடன் தோட்டத்தில் உட்கார்ந்திருந்து துணியொன்றைத் தைத்துக்கொண்டிருந்தார். அவரது அன்பான புன்னகை எங்களது வரவை அவர் விரும்பியதாகக் காட்டிற்று. அழகிய பூக்கள் பதித்த கோப்பையில் எங்களுக்குப் பால் தரப்பட்டது. அது எனக்கு மிகவும் பிடித்தமானதாயிருந்தது. எங்கள் வீட்டிலும் இவ்வாறான அழகிய கோப்பைகள் இருப்பினும் நான் பிளாஸ்டிக் கோப்பையைத்தான் உபயோகிக்க வேண்டியிருந்தது.

நான் ஞானத்தாயாருக்கு நிலைமையை விபரிக்கத் தொடங்கினேன். சித்தப்பா ஒன்றுமே பேசாது தனக்கு நன்மை கிடைக்குமென்ற நம்பிக்கையுடன் உட்கார்ந்திருந்தார்.சித்தப்பாவைச் சில நாட்கள் தனது வீட்டில் தங்கியிருக்கும்படி கேட்டுக்கொண்ட ஞானத்தாயார் எனது தகப்பனாரின் நடத்தை பற்றிக் குறை கூறினார். இதைக்கேட்டதும் எனது சித்தப்பா மிக மகிழ்வாகச் சிரித்துக் கொண்டார். நானும் புன்னகைத்தேன். நாங்களிருவரும் அப்பாவின் மீதான சிறிய வெற்றியைச் சாதித்திருந்தோம். இனி ஒரு போதும் நான் சித்தப்பாவைப் பார்க்கப்போவதில்லை என்று என் உள்ளுணர்வு சொல்லிற்று. அப்பாவின் கண்களில் இருந்த வெறுப்பினால் சித்தப்பா இனி ஒரு போதும் எங்களைத் தேடி வரமாட்டார் என எனக்குப்பட்டது.

நான் வீட்டுக்குச் செல்ல வேண்டியிருந்ததால் சித்தப்பாவைக் கண்ணீருடன் பிரிந்து சென் றேன். வீட்டில் அம்மா உணவை மேசை மேல் வைத்திருந்தார். அப்பா வரும் நேரங்களில் மாத்திரம் நான் வயிறு நிறைய உண்ண அம்மா அனுமதிப்பார். ஆனால் அன்றிரவு நான் கவலையாக இருந்தபடியால் எவ்வளவு முயன்றும் என்னால் சாப்பிட முடியவில்லை. ஒவ்வொரு முறையும் நான் அம்மாவைப் பார்க்கும்போது மேலும் உணவு தட்டில் விழுந்தது.என்றாவது ஒருநாள் சித்தப்பாவை விரட்டியது போல் அப்பா என்னையும் விரட்டினால் நான் என்ன செய்யப்போகிறேன்?

இந்த எண்ணம் என்னை அலைக்கழிக்கத் தொடங்கியது. பயம் மிகவும் அதிகமாகி இறுதியில் நான் வெளியே சென்று சாப்பிட்ட உணவையெல்லாம் வாந்தி எடுக்கும்படியாகிவிட்டது. பின் தொடர்ந்து வந்த அப்பா எனனைப் பிடித்து உலுக்கித் தரையில் தூக்கியெறிந்துவிட்டு " நீ என்ன இழவைச் சாப்பிட்டாய்?"எனக் கூச்சலிட்டார்ர். அம்மா பின்னால் நின்றுகொண்டு "நான் எவ்வளவு தான் சாப்பிடக் கொடுத்தாலும் இவள் போதாதென்று மாம்பழங்களையும் வாழைப்பழங்களையும் திருட்டுத்தனமாகச் சாப்பிடுகிறாள். இவளால் நான் உங்களை விட்டுப் பிரிந்து போக நேரிடும்.. நீங்கள் அவளை வைக்குமிடத்தில் வைக்கவேண்டும்!" என்று முணுமுணுத்தார். அம்மா அப்பாவை எப்படி உருவேற்றி விடுகின்றார் என்பதைக் கண்டு கொண்டேன். அப்பாவின் கண்களில் பசு மாட்டிற்காகச் சண்டையிடும் காளையின் பார்வை மின்னியது. என்ன நடக்கப்போகிறது என்பதைப் பார்க்காமலிருக்கக் கண்களை மூடினாலும் அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை ஊகித்துக் கொண்டேன். சுவரின் மீது அவரென்னைத் தூக்கி வீசியபோது 'அப்பா உங்களால் வஞ்சிக்கப்பட்ட சித்தப்பாவின் கண்ணீர் என் மனதைத் தொட்டது' எனச் சொல்ல நினத்தேன். எல்லாம் முடிந்தபின் இருளில் அழுது கொண்டே சித்தப்பா சொன்னதை யோசித்துப் பார்த்தேன். எனது உண்மையான தாயார் இவரில்லை என்பது மெதுவாக எனக்குப் புலனாயிற்று. இப்போது சித்தப்பாவை முழுமையாக நம்பினேன்.

அடுத்தநாள் காலையில் அப்பாவின் பிள்ளை வளர்ப்புமுறை எவ்வளவு கடினமானதெனத் தெரிந்தது. என் உடல் முழுவதும் நோவும், வாயில் இரத்தப் பிசுபிசுப்பும், உடையெல்லாம் இரத்தக்கறையுமாயிருந்தது. ஆனாலும் நான் உடைகளை மாற்றவில்லை. அப்பா இதைப் பார்த்து என்மேல் இரக்கபடவேண்டுமென நினைத்தேன். குளிர்ந்த நீரில் என்னைக் கழுவிக்கொண்டு வீட்டைச் சுற்றி எனது துப்பரவு செய்யும் வேலையை ஆரம்பித்தேன். சூரியன் உதித்தது, அத்துடன் வெப்பமும் மெதுமெதுவாய் அதிகரிக்க எனக்குத் தலை சுற்றத் தொடங்கியது. விடாது நான் எனது வேலையைத் தொடர்ந்தேன். தொடர்ந்தும் சித்தப்பாவையும் அவருக்கு நடந்ததையும் நினைத்துக் கொண்டிருந்தேன். அதுவே எனக்கும் நடக்கலாமென்ற பயமும் என்னைத் தொடர்ந்தது. பசியான சிங்கத்தின் கால்களில் என் சித்தப்பா அகப்பட்டுக்கொண்டது போல எனது மூளைக்குள் படம் ஓடத்தொடங்கிப் பின் எல்லாமே கருமையானது.

எனக்கு உணர்வு வந்த போது நான் ஒரு மரத்தடியில் கிடந்தேன். யாரோ என்னை ஒரு துணியால் மூடியிருந்தார்கள். நான் எப்படி இங்கே வந்தேனென்று எனக்குத் தெரியவில்லை. அப்படியே சிறிது நேரம் கிடந்தேன். சில வேளை அப்பா என்னை வந்து பார்கலாம். சிறிது நேரத்தின் பின்பு துணியை உதறிவிட்டு எழுந்து கொண்டேன். எங்கு போகலாம்? தாகத்திற்கும் பசிக்கும் எங்கு உணவும் நீரும் கிடைக்கும்? எனது அப்பாவின் மனைவியிடம் சென்று மாட்டுக்கன்றுகளைப் பார்த்து வருவதாகச் சொன்னேன் அவர் ஒரு பதிலும் கூறவில்லை.

மாட்டுக்கன்றுகளைப் பார்ப்பதற்குப் பதிலாக வாழைத்தோட்டத்தை நோக்கி நடந்தேன். வாழைப்பழங்களைத் தேடி மரங்களிடையில் வந்த போது திடீரென உலர்ந்த சருகுகளின் மீது யாரோ நடந்து வரும் காலடியோசை கேட்டது. அதே வேளையில் ஓரளவு பழுத்திருந்த வாழைக்குலை ஒன்றையும் கண்டேன். கவனமாகப் பழங்களைப் பறித்து உண்பதற்காகச் சத்தமின்றித் தரையில் உட்கார்ந்தேன். காலடிகள் இப்போது என்னை நெருங்கி வந்தன. எனது உடையில் தேவையானளவு பழங்களைப் பொதிந்து கொண்டேன். மெதுவாக எழுந்து போக நினைக்கையில் அப்பா இன்னும் மூவருடன் கதைத்தவாறே தோட்டத்தில் வந்துகொண்டிருப்பதைப் பார்த்தேன். அவர்கள் என்னை நோக்கி நடந்து வந்தனர். நான் வளைந்து வளைந்து ஓடத் தொடங்கினேன். ஒரு வாழைப்பழத்தைத் தன்னும் இழக்காது, அவர்களிடம் பிடிபடாமல் என்னால் தப்ப முடிந்தது. அன்றிரவு அப்பாவும் அவர் மனைவியும் இது பற்றி என்ன பேசிக்கொள்கின்றார்கள் எனக் கவனித்தேன். "சிலவேளை அது ஒரு நாயாக இருந்திருக்கலாம்" அம்மா சொன்னார்.

உனது கண்ணீரை நான் துடைக்கவில்லை என் அன்பான சித்தப்பாவே! நீ எங்கிருந்தாலும் என் நேசம் உன்னைத் தொடர்ந்து வரும் அது எனக்குத் தெரியும். எனது இதயத்தால் உன்னை என் கனவுகளில் காண்பேன். எனக்குத் தெரியும் நீயும் என்னை உன் இதயத்தில் சுமப்பாய். ஆனால் உன் ஆன்மா எங்குள்ளது என்று எனக்குத் தெரியாது.

எனது கண்ணீர் உன் கவலைகளுக்காக விழும்
எனது ஆன்மா உன்னிடமும் உனது சொற்கள் என்னிடமும்.

தொடரும்..